இந்தத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பு , பல ஆண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எடுத்திருக்கக் கூடிய ஒரு முடிவைத்தான் இந்தத் தீர்ப்புப் பிரதிபலிக்கிறது. இதன் அக்கறை நிலத்தின் உரிமை மற்றும் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ஒரு கோயிலைக் கட்டுவது என்பதுதான். மத அடையாளங்களோடு சம்பந்தப்பட்ட அரசியலோடு பின்னிப் பிணைந்த பிரச்சனை இது, கூடவே வரலாற்று ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டுவருவது. வரலாற்று அமசங்கள் இங்கே எழுப்பப்பட்டன, ஆனால் பின்னர் தீர்ப்பில் அது புறக்கணிக்கப்பட்டது.ஒரு குறிப்பிட்ட இடத்தில்தான் முற்றிலும் புனித அல்லது அரை புனித நபர் ஒருவர் பிறந்தார் என்றும் அந்தப் பிறப்பை நினைவுகூற அங்கு புதிதாக ஒரு கோயிலைக் கட்டவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது இந்து நம்பிக்கையின் வேண்டுகோளுக்கு செய்யப்பட்டிருக்கும் எதிர்வினை. அந்தக் கோரிக்கைக்கு ஆதாரமாக எந்தவொரு சான்றும் இல்லாதபோது இத்தகையத் தீர்ப்பை ஒரு நீதிமன்றம் வழங்குமென எவரும் எண்ணவில்லை. ராமரை இந்துக்கள் தெய்வமாக வணங்குவது உண்மைதான். ஆனால் அவரது பிறப்பிடத்தைத் தீர்மானிப்பதற்கு ஒரு நீதிமன்றத்துக்கு இதுவே போதுமானதாகிவிடுமா? மிகப்பெரும் வரலாற்றுச் சின்னமொன்றை வேண்டுமென்றே இடித்துத் தகர்த்து அந்த இடத்தைக் கைப்பற்றுவதற்கு இந்த நம்பிக்கையொன்றே போதுமானதாகிவிடுமா?பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலொன்று அந்த இடத்தில் இருந்ததாகவும் அதை இடித்துத்தான் அங்கு மசூதி கட்டப்பட்டதாகவும் எனவே அங்கு கோயிலொன்றைக் கட்டுவதற்கு நியாயமிருக்கிறதென்றும் இந்தத் தீர்ப்புக் கூறியிருக்கிறது. இந்தியத் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியையும் அதன் அடிப்படையில் அது சொன்னதையும் மற்ற வரலாற்றறிஞர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக மறுத்தபோதிலும் அதை அப்படியே நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. இது அந்தத் துறை குறித்த ஆழ்ந்த அறிவும் தேர்ச்சியும் தேவைப்படும் ஒரு பிரச்சனை. இதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடையே கருத்து மாறுபாடு நிலவும்போது ஒரு தரப்பினரின் கருத்தை மட்டும் அதுவும் மிகவும் கொச்சையான விதத்தில் ஏற்றுக்கொள்வதென்பது இந்தத் தீர்ப்பின்மீது நம்பிக்கை வைப்பதற்கு உதவியாக இல்லை. தாம் ஒரு வரலாற்று நிபுணர் இல்லை எனவே வரலாற்று அம்சங்களின்மீது தான் கவனம் செலுத்தவில்லை எனக் கூறியிருக்கும் ஒரு நீதிபதி கூடவே இந்த வழக்கில் முடிவெடுக்க வரலாறோ தொல்லியலோ தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் பிரச்சனையே அந்த நிலம் குறித்த வரலாற்றுத்தன்மை மற்றும் கடந்த ஆயிரம் ஆண்டுகளைச் சேர்ந்த வரலாற்றுச் சின்னங்களைப் பற்றியதுதான். ஒரு அரசியல் தலைமையால் தூண்டப்பட்ட கூட்டம் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதும் நமது பண்பாட்டு மரபின் பகுதியாக இருந்ததுமான மசூதி ஒன்றை வேண்டுமென்றே இடித்துத் தகர்த்தது. நமது பாரம்பர்யத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்தக் குற்றத்தையும், அங்கிருந்த மசூதி வேண்டுமென்றே இடிக்கப்பட்டதையும் கண்டிக்கவேண்டுமென்று இந்தத் தீர்ப்பின் சுருக்க உரையில் எதுவும் சொல்லப்படவில்லை. மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்தான் புதிய கோயிலின் கருவறை - அதாவது ராமரின் பிறப்பிடம் என்று யூகிக்கப்படும் இடம் - அமையப்போகிறது. அங்கு இருந்ததாக சொல்லப்படும் கோயிலை இடித்ததைக் கண்டிப்பார்களாம் அதுவே அங்கு புதிய கோயிலைக் கட்டுவதற்கான நியாயத்தைத் தருகிறது என்பார்களாம், ஆனால் அங்கிருந்த மசூதியை இடித்ததைப் பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்களாம். வசதியாக அதை இந்த வழக்கின் எல்லைக்கு அப்பால் வைத்துவிட்டனர். இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னை ஒரு சமூகக் குழுவாகச் சொல்லிக்கொள்ளும் எவராலும் வழிபடப்படுகிற முழு அல்லது அரை புனிதத் தன்மைகொண்ட எவரோ ஒருவர் பிறந்த இடம் எனச் சொல்லி எந்த நிலத்தையும் உரிமைகோரலாம் என்ற முன்னுதாரணம் இந்தத் தீர்ப்பால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பொருத்தமான சொத்து எங்காவது இருந்தால், அங்கு ஒரு பிரச்சனை கிளம்பினால் இப்படி இன்னும் எத்தனையோ ‘ ஜன்மஸ்தான்’கள் எதிர்காலத்தில் உருவாகலாம். வரலாற்றுச் சின்னமொன்றை வேண்டுமென்றே இடித்துத் தரைமட்டம் ஆக்கியதை நீதிமன்றம் கண்டிக்காவிட்டால் மேலும் அப்படிப் பலவற்றை இடிப்பதை யார் தடுக்கமுடியும்? வழிபாட்டு இடங்களின் தனமையை மாற்றி அமைப்பதற்கு எதிராக 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் அண்மைக்காலமாக செயலிழந்து கிடப்பதைப் பார்க்கிறோம். வரலாற்றில் நடந்தது நடந்ததுதான். அதை மாற்றமுடியாது. ஆனால், என்ன நடந்தது என்பதை அதன் முழுப் பரிமாணத்தோடும் சூழலோடும் புரிந்துகொள்வதும்; நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் அதை நோக்குவதும் அவசியம். தற்கால அரசியலை நியாயப்படுத்துவதற்காக நாம் கடந்தகாலத்தை மாற்றமுடியாது. இந்தத் தீர்ப்பானது வரலாற்றின்மீதான மரியாதையை அழித்துவிட்டது, வரலாற்றை மத நம்பிக்கையால் பதிலீடு செய்ய முயற்சிக்கிறது. இந்த நாட்டின் சட்டமானது நம்பிக்கைகளை அடிப்படையாககொண்டதல்ல, அது ஆதாரங்களை அடிப்படையாககொண்டது என்ற நம்பிக்கை நிலவும்போதுதான் உண்மையான ஒற்றுமையும் சமாதானமும் சாத்தியமாகும்.
நன்றி : தி இந்து 02.10.2010
No comments:
Post a Comment