தீபாவளியானாலும், சூரசம்ஹாரம் ஆனாலும், இராமாயணக் கதையானாலும் அவற்றின் அடிப்படை நீரோட்டம் என்பதெல்லாம் அரக்கர்களை - அசுரர் களை - அழிப்பதுதான்.
யார் இந்த அரக்கர்கள் - அசுரர்கள்? வரலாற்று ஆசிரியர்கள் பி.டி.சீனிவாச அய்யங்காரிலிருந்து பண்டித ஜவகர்லால் நேரு, விவேகானந்தர் உள்பட கூறியிருப்பது எல்லாம் - இந்த அரக்கர்கள், அசுரர்கள் என்பவர்கள் எல்லாம் திராவிடர்கள்தாம்; ஆரிய, திராவிடப் போராட்டமே இராமாயணம் என்று விரிவாக எழுதி வைத்துள்ளனர். மகாவிஷ்ணு என்னும் இந்து மதக் கடவுள் எடுத்த அவதாரங்கள் எல்லாம் அசுரர் களை - அரக்கர்களைக் கொல்லத்தான். இரணியனை, இராவணனைக் கொன்றதும் அப்படியே! இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நவராத்திரி என்பதும் அரக்கர்களை அழித்ததாகக் கூறப்படும் கதைதான். மாலைமலர் வெளியிட்டுள்ள நவராத்திரி சிறப்பு மலர் என்ன கூறுகிறது?
அரக்கர்களான சும்பன், நிசும்பன் ஆகிய இருவரும் சகோதரர்கள். அக்கிரமத்தின் உச்ச கட்டமாய் அட்டகாசம் புரிந்த இவர்களது ஆட்சியில் மக்கள் மிகவும் துன்புற்றனர். இது பற்றி சிவன், விஷ்ணு, பிரம்மாவிடம் தேவர்கள் முறையிட்டனர். மூம்மூர்த்தி களும் மகாசக்தியை தோற்றுவித்து. தங்களது ஆயுதங்களை அளித்தனர். சக்தி அழகிய பெண் உரு வத்தில் பூலோகத்தில் வலம் வந்தாள். அரக்க சகோத ரர்களின் வீரர்களான சண்டன், முண்டன் இருவரும், அழகிய பெண் உருவத்தில் இருக்கும் சக்தியைப் பார்த்தனர். தங்களது அரசர்களுக்கு ஏற்றவள் இவள் தான் என எண்ணி சக்தியிடம் தங்களது அரசர்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத் தினர். அப்போது சக்தி, யார் தன்னை போரிட்டு வெல்கிறார்களோ, அவர்களைத்தான் மணப்பேன் என்று சபதம் செய்திருப்பதாகக் கூறினான்.
இதைக்கேட்டு கோபமான சண்டனும், முண்டனும், தேவர்கள், அரக்கர்கள் அனைவருமே எங்களது அரசர் களுக்கு அடிமை; சாதாரண பெண்ணான நீ எம் மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வந்து விடு என்று மிரட்டினார்கள். அதற்கு சக்தி, இதை உங்கள் அரசர் களிடம் போய் சொல்லுங்கள், அவர்கள் என்ன செய் கிறார்கள் என்று பார்ப்போம் என்று கூறினாள். ஆத்திர முற்ற சும்பனும், நிசும்பனும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினார்கள். அவர்கள் அனைவரையும் சக்தி அழித்தாள். அதில் ஒரு அரக்கன் பெயர் ரக்தபீஜன். இவனது உடலிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இன்னொரு ரக்தபீஜனாக உருவெடுத்தது.
உலகமே ரக்தபீஜர்களாக நிறைந்தது. உடனே சக்திதேவி, சாமுண்டி என்ற காளியை தோற்றுவித்து, வாயை அகலமாகத் திறந்து ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள். தேவியின் கட்டளையை சாமுண்டி நிறைவேற்ற, இறுதியில் தனது ரத்தமெல்லாம் வெளியேற ரக்த பீஜன் இறந்தான். சும்பன், நிசும்பனையும் சக்தி தேவி அழித்து தர்மத்தை நிலை நாட்டினாள். இதையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.
- என்கிறது மாலைமலர் சிறப்பு மலர்.
இதில் அறிவுக்குப் புறம்பான சமாச்சாரங்கள் இருப்பது ஒரு புறம் இருக்கட்டும். அரக்கர்கள் என்பவர்கள் யார்? அவர்களையும் படைத்தவர்கள் இவர்கள் கூறும் கடவுள்கள்தானே! அவர்களை ஏன் படைக்க வேண்டும் - பின் அந்தக் கடவுள்களே சண்டையிட்டு அழிக்க வேண்டும்?
இவற்றிற்கு எந்தக் கொம்பனாலும் விடை சொல்ல முடியாதுதான். பக்தியின் பெயரால்தான் மூடத்தனமாக நம்பும் நம்பிக்கையைப் பயன்படுத்தி இப்படி எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள். மக்களும் நம்பி, பண்டிகைகளாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்பொழுது பூதேவர் என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர் என்று தந்தை பெரியார் அவர்கள் இராமாயணக் குறிப்புகள் எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இப்பொழுது நடப்பது கூட அரசியல் போராட்டம் அல்ல; ஆரியர், திராவிடர் போராட்டமே என்று பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஆச்சாரியாரே (ராஜாஜியே) வழிமொழிந் தும் கூறியிருக்கிறார்.
தேவர்கள் - அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று திருவொற்றியூரில் (18.9.1953) பேசியிருக்கிறார்.
காந்தியாரைக் கொன்றதற்காக யாரும் மலர்ச் சியுடன் விழா கொண்டாடுவதில்லை. வேண்டுமானால் பார்ப்பனர்கள் கொண்டாடலாம் - அதன் நோக்கம் வேறு.
பாதிக்கப்பட்ட சமூகம் அத்தகைய நாள்களில் சில உறுதி மொழிகள் எடுத்துக் கொள்வதுதான் பொருத்த முடையதாக இருக்க முடியும்.
அன்றைக்குச் சூழ்ச்சியால் எங்கள் இனத்தவர் களை அழித்த பார்ப்பனர்களே, இனியும் உங்கள் சூழ்ச்சிக்குப் பலியாக மாட்டோம் - பணிந்து விடவும் மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்வது தான் தன்மானத்திற்கும், பகுத்தறிவிற்கும் அழகே தவிர, பாதிப்புக்குக் காரணமானவர்களோடு சேர்ந்து பாதிக்கப்பட்டவனும் குதூகலிப்பது, களியாட்டம் போடுவது, விழா கொண்டாடுவது நமது இழிவை நாமே போற்றுவதாகவும், பாதிப்புக்குக் காரணமானவர் களுக்கு மேலும் வசதி செய்து கொடுப்பதுமேயாகும்.
திராவிடர்கள் சிந்திப்பார்களாக!
No comments:
Post a Comment