கம்யூனிஸ்ட் நாடு என்று முத்திரை குத்திக் கொள்ளும் சீனா திசை தடுமாறி எங்கேயோ பயணித்துக் கொண்டு இருக்கிறது. பொருளா தாரக் கண்ணோட்டத்தில் முதலாளித்துவத் திசையில் அது செயல்படுவது ஒருபுறம் இருக்கட்டும்.
அடிப்படைக் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களி லிருந்து சிதறிப் போய்விட்டது என்பதுதான் பரிதாபத்திற்குரியதாகும்.
சீனாவில் மதத் தலைவர்களின் மாநாடு இத்திங்கள் 24, 25 ஆம் தேதிகளில் நடை பெறவுள்ளதாம்.
400 மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள் இதில் பங்கேற்க உள்ளனராம். சீன அரசால் நடத்தப்படும் சீன அயல்நாட்டு நண்பர்கள் சங்கம் இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளது.
இதில் கலந்துகொள்ள வாழும் கலை என்னும் அமைப்பை நடத்தி வரும் சிறீ ரவிசங்கருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இந்த நிகழ்ச்சி உதவப் போகிறதாம்.
ஒரு நாட்டின் உறவு ஆன்மிகத்தால்தான் ஏற்படும் என்பது 2010 ஆம் ஆண்டின் மார்க்சியத் தத்துவம் போலும்!
அண்மையில் சீனாவின் பெய்ஜிங் நகருக்குச் சென்று வந்த - பெங்களூரு வாழும் கலை ஆசிர மத்தின் யோகாசிரியர் அமோல்ஜி, சீனாவில் ஆன்மிக உணர்வு தலை எடுத்திருப்பது குறித்து கூறியுள்ளார்.
பொருள் முதல் வாதத்தை முன்னிறுத்தி சித்தாந்த உணர்வைத் தூண்டி மக்களைப் பக்குவப்படுத்த கடமைப்பட்டுள்ள சீன அரசு - அதற்கு நேர் எதிரான திசையில் ஓடுவது - ருசியாவுக்கு ஏற்பட்ட கதி சீனாவுக்கும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தன்னம்பிக்கையை முன்னிறுத்தி - முதலாளித்துவ முதலைகளை முகவரியில்லாமல் ஆக்கவேண்டிய கடப்பாடு உள்ள ஓர் அரசு, ஆன்மிக முதலைக்குத் தீனி போடும் ஒரு வேலையில் இறங்குவது இரங்கத்தக்கதாகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் பாசிஸ்ட் ராஜபக்சேவுக்குக் கைலாகு கொடுத்ததன்மூலம் சீனாவின் நிறம் சிகப்பு அல்ல என்ற கருத்து ஏற்கெனவே உருவாகிவிட்டது.
மக்களின் மனப்பான்மை என்பது மிகவும் முக்கியமானதாகும். இதில் சீனா கோட்டை விட்டுவிடக் கூடாது என்று எச்சரிப்பது முற் போக்குச் சிந்தனையாளர்களின் கடமையாகும்.
சீனாவில் ஆன்மிக மாநாடு என்ற தகவல் வந்து அதன் ஈரம் காய்வதற்குள்ளாகவே அடுத்த ஒரு தகவல் - மூடநம்பிக்கையின் கைபிள்ளை யாக சீன அரசு தவழ ஆரம்பித்துள்ளது என்பதாகும்.
4 என்ற எண் அதிர்ஷ்டம் இல்லாதது என்றும், சீன மொழியில் நாலு என்பது சாவு என்பதுபோல் ஒலிப்பதாகவும், இந்தக் காரணத்தால், வாகனங்களின் எண் பலகையில், அதிர்ஷ்டம் இல்லாத 4 என்ற எண் நீக்கப்படு வதாகவும் வெளிவந்துள்ள தகவல்தான் அது.
எந்த அளவுக்கு செஞ்சீன அரசு பிற்போக் குத்தனத்தின் கடைகோடிக்குச் சென்று இருக் கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? இன்னும் சிலர் அங்கு 7 என்ற எண்ணையும் வெறுக்கிறார்களாம்.
உலகின் பல நாடுகளில் 13 என்ற எண்ணை வெறுப்பதுண்டு. அவை எல்லாம் முதலாளித்துவ சாயலை உடையவை.
அய்ரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் 13 என்ற எண்ணை விரும்புவதில்லை; 12 ஆவது மாடிக்கு அடுத்து 14 என்று போட்டுக் கொள் வார்களாம். சிலர் 12-க்குப் பிறகு 12-ஏ என்று குறிப்பிடுவதுண்டாம்.
இந்தக் கேடுகெட்ட நிலை சீனாவுக்கும் வரவேண்டுமா? ஏன் இந்த நிலை? வெறும் அரசோடு நின்றுவிட்டு, கட்சியின் சித்தாந்தங் களை, கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பும் கடமையைச் செய்யத் தவறிய எந்த ஆட்சிக்கும், எந்தக் கட்சிக்கும் இந்த நிலைதான் ஏற்படும் - எச்சரிக்கை!
http://www.viduthalai.periyar.org.in/20101022/news08.html
No comments:
Post a Comment