Pages

Search This Blog

Sunday, October 10, 2010

நவராத்திரியின் வரலாறு அறிவுக்கு பொருந்துமா ? - தந்தை பெரியார்

நவராத்திரி என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் - இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில வருடங்களில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர்கள் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்கால மும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம். இதில் புருஷர்கள் கொலு முதலியவைகளைக் கவனியாவிட்டாலும் நவராத்திரியைக் கொண்டாடுகிறார்கள். வேதபாராய ணம், சூரிய நமஸ்காரம் முதலியவைகளை நடத்த பார்ப்பனர்களை ஏற்படுத்தி, இந்த ஒன்பது நாளில் நமது வீடு வேத கோஷத்தில் நிறைந்து மங்களகரமாகும் படியாகச் செய்ய வேண்டுமாம். ஆனால் இந்த விதி பார்ப்பானுக்கும், அதிகாரம் படைத்த இராஜாக் களுக்கும், பணம் படைத்த வைசியனுக்கும் மாத்திரமாம்; மற்றவர்கள் பக்தியோடு சுந்தரகாண்டம் பாராயணம் செய்து முடித்து பார்ப்பனனுக்குச் சாப்பாடு, தட்சணை கொடுத்து, ஆசீர்வாதம் பெற வேண்டுமாம்.



நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் புருஷர்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாச மிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடைய வர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ஆயுத பூசை என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண் டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங் களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடு கிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள். இந்த வேடிக்கைகளைப் பார்க்கவே அநேகர் மைசூருக்குப் போவது வழக்கம். இதனால் கடவுள் பக்தி பரப்பும் தொழிலையுடைய பார்ப் பனரும் இவ்வுற்சவத்தால் தங்களுக்கு இலாபமிருப்ப தால் அவர்களே ஊர் ஊராய் நவராத்திரி உற்சவத்தைப் பற்றி விளம்பரப்படுத்துவார்கள். நிற்க; இதைச் சைவர், ஸ்மார்த்தர், வைஷ்ணவர், மாத்வர் முதலிய எல்லா மதத்தவர்களும் கொண்டாடக் காரணம் என்னவென் றால், கல்வியும், ஆயுதமும் அதற்குக் கற்பிக்கப்பட்ட தேவதையான துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்று சொல்லப்பட்டவர்கள் - ஒவ்வொரு மதத்தினுடைய தெய்வங்களின் அம்மன்களானதனாலும், இந்து மதத்தவர்களுக்கெல்லாம் இது சம்பந்தப்படுத்தப்பட்ட புராணக் கதைகளிலிருப்பதாலுமேயாகும். துர்க்கை முதலிய அம்மன்களை வைஷ்ணவர்கள் பூசிக்கா விட்டாலும், இது சம்பந்தமான கதைகள் அவர்களி டையேயும் உண்டு. மற்றவர்கள் சரஸ்வதி பூசையன்று துர்க்காலட்சுமி ஸரஸ்வதீப்யோ நம என்று கூறி பூசை தொடங்குவார்கள்.

முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தி யாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங் களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கருத்தைக் கொண்டே இவர்கள் இந்த உற்சவத்தைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய உற்சவத்திற்கும் மூடநம்பிக்கை களுக்கும் புராணக் கதைகளுக்கும் பாமரர்களே பங்காளிகள். படித்தவர்களுக்கு இதில் வயிறு வளர்க்கும் பிரத்தியட்ச அனுகூலமிருந்தாலும் கூட இதுபோன்ற கதைகளைப் பற்றிய விவகாரங்கள் எழும்போது, தங்களுக்கெல்லாம் வேறு கருத்தை இதில் பெரியவர்கள் அமைத்திருக்கிறார்கள் என்று எதற்கும் தத்துவ நியாயம் சொல்வதுபோல், இதற்கும் ஒரு ரகசிய அர்த்தம் உண்டாம்! வேத பாராயணம், கோயிலில் நடக்கும் பூசை, ஆராதனைகள், ஒன்பது நாளும் பார்ப் பானுக்குப் போடும் சோறு, அம்மன் விழித்தவுடன் செய்யும் தானம் முதலியவைகளால் பாமரர்களுக்கு இகலோக சுகம் சித்திக்க வேண்டுமாம். அதனால் மனம் சுத்தப்பட்டுப் பின்னால் மோட்சத்திற்கு வருவார்களாம். படித்த பண்டிதர்கள் இந்த ஆடம்பரத்தில் சோறும் தட்சணையும் வாங்கிக் கொண்டாலும் அவர்கள் சொல்லும் உள் கருத் தென்னவென்றால் மகிஷாசூரன், அவன் பரிவாரங்கள் முதலியவைகள் என்பதை அஞ்ஞானமும் அதன் காரியங்களுமாகவும், பார்வதியை சித் சக்தியாகவும் அது பரம்பொருளாகிய ஆத்ம ஸாக்ஷாத்கார விசேடத்தால் அஞ்ஞானத்தை வேரறுப்பதாகவும் கொள்ள வேண்டுமாம். துர்க்காலட்சுமீ சரஸ்வதீப்யோ நம என்னும் மந்திரத்தைப் பார்ப்பானிலிருந்து அம்மனையே பிரதானமாகப் பூசிக்கும் சங்கரமடத்து சாஸ்திரிகள் வரையிலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரையிலும், தங்கள் லவுகீக சுகத்திற்காக அவர்களை வேரறுக்கிறார்களே ஒழிய, அவர்களது அஞ்ஞானத்தை வேரறுப்பதாகத் தத்துவார்த்தம் சொல்லும் சமயவாதிகளெல்லாம் மகிஷாசூரனிடமல்லவா (அதாவது ஆசையில்) மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்?

முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண் டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற் சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்.

இதை நம்பி நடக்கும் நம்மைவிட, மற்றத் தேசங்களில் எல்லாம் சரஸ்வதி எந்நாளும் திருப்தியோடு கூடின சந்தோஷத்துடன் இருக்கிறாள். நம் தேசத்தில் வருடத் திற்கு ஒருநாள் தான் கண்ணைத் திறந்து திருப்திப்படு கிறாள். இதற்குக் காரணம், பார்ப்பானுக்குக் கொடுப்பது சரியாகக் கொடுக்கப்படுகிறதா? என்று பார்ப்பதற்காகவோ அல்லது பூசையின் திருப்திக் குறைவாலோ அல்லது நம்மிடம் ஆயிரமாயிரம் வருடமாக வாங்கியுண்ட நன்றி கெட்ட குணத்தை மறைப்பதற்கோ அல்லது தன்மொழி யான சமஸ்கிருத இலக்கணத்தைத் தன் முதற் பிள்ளைகள், மற்றப் பிள்ளைகளுக்கு எங்கே சொல்லி வைத்து விடுவார்களோ என்னும் அஞ்ஞானத்தாலோ என்பதை நாம் அறியோம்.

கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெண்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்துருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்லப்படு கின்றது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

கிரேதாயுகம் முதற்கொண்டு, இதுநாள் பரியந்தம் செய்த பூசைகளும், மந்திரங்களும், அதைச் செய்த ஜன சமூகங் களும், நம் நாடும், அதை ஏற்றுக் கொண்ட தெய்வங்களும் அய்ந்நூறு வருடங்களாக அன்னியர் படையெடுப்பால் சின்னாபின்னப் பட்டு, வெள்ளைக்கார மந்திரத்தால் வெளியேற்றப் பட்டிருக்கையில், நமது சரஸ்வதியும், லட்சுமியும், பார்வதியும் அவர்களுக்குப் பூசையும், அதற்காகப் பார்ப்பனனுக்குப் பணமும், தட்சணையும் எதற்கு? என்று குடிஅரசு கேட்டு விட்டால், சமயவாதியும், சாஸ்திரவாதியும், அது சமயத்தை அடியோடு தூஷிக் கின்றது என்று சொல்லுவதனாலும், படித்தவர்கள் என்பவர்களான ஆங்கில, சரித்திர, சயின்ஸ், பி.ஏ., எம்.ஏ.,வாதிகளுக்குப் புத்தி இருக்கிறதா? இல்லையா? என்று தான் கேட்கிறோம்!

மேலும், விஜயதசமி அன்று சிவன் கோயிலில் பரிவேட்டை உற்சவம் என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று பகவான் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக் களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர். என்றாலும், இதற்கும் உள்கருத்துண்டாம். உள்கருத்தை வைத்து வைத்துத்தான் நம் நாடு உள்ளேயே போயிற்று. பாமரர்களுக்கு உள்கருத்து ஸ்தூலமாகவும், படித்தவர் களுக்குச் சூட்சமமாகவும் இருப்பதாகச் சொல்லு கிறார்கள். (எந்தச் சூட்சுமமும் பாமரர்களைப் படித்தவன் ஏமாற்றவே உபயோகப்படுகிறதே ஒழிய, காரியத்திற்கு ஒன்றும் உபயோகப்படுவதில்லை). அதாவது, நெருப்பி லடங்கிய வன்னி மரத்தையே ஆத்மாவோடு கூடிய தேக மாகவும், அம்பை ஞானமாகவும், வேட்டையில் அம்புவிடு வதை ஞானோபதேசமாகவும், மரம் எரிந்து விழுவதை கரும சம்பந்தமானவைகளை ஞானத்தணல் சுட்டு வெண் ணீறாக்குவதாகவும் கொள்ள வேண்டுமென்பார்கள். இந்த உள்கருத்து உபதேசம் கேட்டுத்தான் ராஜவம்ச மெல்லாம் நடுத்தெருவில் நின்றதான வடதேசத்துக் கதைகள் அநேகம்.

மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர்ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆரிய பரிவேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்து விட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்த புரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத் தார்களே ஒழிய, சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத் திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெண்சாதி யும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத்தென்று, அங்கு சயனித்துக் கொண்டி ருப்பதாக இப்பொழுதும் சொல்லுகிறார்கள்.

கடவுளையும், பெரியவர்களையும் தூஷிக்கிறவர்கள் காட்டும் ஆதாரங்களையும், அதன் நியாய வாதங்களை யும் கூட்டி ஆலோசியுங்கள். சரஸ்வதியைக் கொலு விருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ் வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.

நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானிய மல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் புண்ணிய தீர்த்தத்தில் கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் மேனாட்டில் குடிபுகுந்த காரணம் என்ன? என்பதை வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும். ஏ சரஸ்வதி! மேனாட்டில் உனக்கு என்ன மரியாதை இருக்கிறது? உன்னைப் படித்து எறிகிறார்கள்; காலில் மிதிக்கிறார்கள்; செருப்புக் கட்டுகிறார்கள்; மலம் துடைக்கிறார்கள்; உன் பெயர் சொல்லுவதில்லை; நீ ஒருத்தி இருக்கின்றாய் என்றுகூட நினைப்பதில்லை; உனக்குப் பூசை இல்லை; புருஷன் இல்லை; வீணை இல்லை; எல்லா வித்தைக்கும் அவர்கள் தாங்களே எஜமானர்கள் என்கிறார்கள். எனவே நீ செய்வது நியாயமாகுமா? என்று நாங்கள் சொல்லி விட்டால், உன் பாஷையான சமஸ்கிருத இலக்கணத்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படாதென்று நீ சொன்னதாகச் சொல்லும் சாஸ்திரிகளே எங்களை நாஸ் திகர்கள் என்று சொல்கிறார்கள். உன் முதற்பிள்ளையான பார்ப்பனர்களின் தாசிப் பிள்ளை, அடிமை, வேலையாள், ஒழுக்கமற்றவன் என்று எங்களில் படித்த உணர்ச்சியற்ற பண்டிதர்களையும்கூட நீ சொல்லியிருப்பதாக உன் முதற் பிள்ளைகள் சொல்லும் ஏட்டைக்கூட கிழித்தெறியாமல் சற்றும் விசுவாசமற்றுப் போனாயே என்று நாங்கள் சொல்லிவிட்டால், தூஷித்தவர்களாகி விடுவோமா? நீயே சொல்லு!

நீ வாசம் செய்யும் மேனாட்டில் உனக்குப் பூசை யில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையு மில்லை. பஞ்சமும் படியாமையுமுடைய இந்த நாட்டின் பேரில் மாத்திரம் உனக்கு வந்த வயிற் றெரிச்சல் என்ன? உன் முதற் பிள்ளைகளுக்கெல்லாம் உன் பேராலேயே அளித்தளித்து ஆண்டியானோமே என்று நாங்கள் சொல்லுவதாலேயே உன் பக்த கோடி கள், உன் புருஷனுடைய பிரம்மலோகத்திற்கும் உன் மாமனுடைய வைகுண்டத்திற்கும் உன் பாட்டனும் மகனு மான சிவனுடைய கைலாசத்திற்குப் போகும் கதவுகளை (சமயதூஷணையால்) சாத்தினவர்களாகி விடுகிறோ மாம். நீயும் உன் குடும்பத்துப் பெண்களும் குடிபோயி ருக்கும் நாட்டில் உங்கள் புருஷர்களுக்குக் கோயில் கிடையாது. கும்பாபிஷேகமில்லை. அப்படியிருக்க, நீங் களில்லாத நாட்டில் உங்களுக்குக் கோயிலும், கும்பாபி ஷேகமும், பூசையும் எதற்கு? இருக்கிற கோயில்களில் நீங்கள் குடியிருந்தால் போதாதா? காணிக்கையையும் நிறுத்தி, கும்பாபிஷேகத்தையும் விட்டு, கோயிலுக்கு எழுதி வைப்பதையும் நிறுத்திப் பணத்தையெல்லாம் படிப்பிற்கே வைத்துவிட்டுப் போங்கள் என்றால், பாமர மக் களுக்காக ஏற்பாடு செய்து வைத்த சமய ஒழுக்கங்களை யெல்லாம் தடுத்து மோட்ச வாசலை அடைக்கும் தாசர்க ளென்று எங்களை ராஜீயவாதிகள் கூடச் சொல்லலாமா?

ஆச்சாரிகளுக்கும், குருக்களுக்கும் அதைச் சேர்ந்த பார்ப்பனர்களுக்கும் கொடுப்பதை நிறுத்திவிட்டுப் பக்கத்து ஏழைக்குப் படிப்பும், தொழிலும் கற்பியுங் களென்றால் ஆச்சாரிகளையும், பெரியவர்களையும் நாங்கள் குற்றம் சொல்லுகிறவர்களாகி விடுவோமா? அறுப்பறுக்கும் காலத்தில் கருக்கரிவாள்கூட ஒரு மூலையில் கவலையற்றுத் தூங்குகிறதே! வருண பகவானுக்கும் சூரிய பகவானுக்கும் ஏற்பட்ட சண்டையில் வருண பகவான் முறியடிக்கப்பட்டு, ஓடி மறைந்த விட்டானே! சூரியனே இப்போது கழனியில் உள்ள எல்லாவற்றையும் காய்ந்து தொலைத்து விட்டானே! உன் ஆயுதங்களுக்குக் காட்டிலும் கழனியிலும்கூட வேலை யில்லை என்றால், பின்னை கருமார் வீட்டிலும் வேலை என்ன? எனவே வேலையில்லா ஆயுதத்திற்குப் பூசை ஏன்?

சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலு வால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? அவரவர்கள் முயற்சியும், கடமையும், எந்தக் கஷ்டத்திலும் செய்து முடிக்கும் தைரியமும் இருந் தால் எல்லா லட்சுமியும் அங்கே வந்து தீர்வார்கள். இதுவே உலக அனுபோகமும் சாஸ்திரத்தின் கருத்துமாகும்.

2 comments:

Senthil Murugan said...

Thanjavur Maharajavin vaarisu indrum rajavukku uriya mariyadhayudan vazhndhu varugirar......

ranjiesittar said...

மேலை நாடுகளில் புத்தகங்களைக் காலில் மிதிக்கவில்லை. பழம் பெரும் புத்தகங்களை அரும் பெரும் பொக்கிஷமாக கண்ணாடிப் பேழைகளில் பாதுகாத்து வருகிறார்கள். காலத்தால் சிதைவுற்று உடைந்த காதத்துண்டுகளாக இருப்பவற்றைக் கூட பல சிரமத்தோடு பலவகையான திரவங்களால்க் கழுவி ஒட்டிப் பின் பிரதி எடுத்துப் பார்ப்பவர்க்குத் தருகிறார்கள். மூலப் பிரதி சாதரணமான எவருக்கும் தரப்படுவதில்லை.காலால் புத்தகத்தை மிதித்தால் கல்வி போய்விடுமா சரஸ்வதி போய்விடுவாளா... சரஸ்வதி என்ற கற்பனைக் கடவுளை விட்டுவிட்டு கல்வியைப் பார்ப்போம். காலில் இருக்கும் அழுக்கு முக்கியமான ஒரு இடத்தில் எழுத்தே தெரியாமல் படிந்துவிட்டால், ஒரு பக்கம் மட்டுமல்லாமல் பலவற்றை காலில் இருக்கும் எண்ணையோடு சேர்ந்த அழுக்கு நாசம் செய்துவிட்டால், பரீட்சையில் சித்தியடைய முடியாது.
வள்ளுவர் எழுதிய திருக்குறள் அடங்கிய ஓலைச் சுவடிகளைப் பாதுகாத்திருக்காவிட்டால், வாழ்க்கைக்குரிய அரும் பெரும் பொக்கிஷம் உலகத்திற்கு கிடைத்திருக்காது. அதை ஒரு தமிழ் கவி எழுதினார் என்ற பெருமையும் தமிழுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
மேலைநாட்டுக்கு சரஸ்வதி சென்றுவிட்டாள்... ஆம் நான் அதை ஆமோதிக்கிறேன்.
ஒரு சிறிய உதாரணம்.: Adobe Photoshop என்ற மென் பொருள் நிழல்ப்படங்களை திருத்தியமைக்க உதவும் உலகிலேயே ஒரு சிறந்த மென் பொருளாகும். அந்த மென் பொருளை பல இந்தியர்களும் சேர்ந்துதான் உருவக்கியிருக்கிறார்கள். அதை உருவாக்கியவர்களில் இரண்டாவதாக வருபவர் சீதாராமன் நாராணன் என்பவராகும்.
இதிலிருந்து நான் சொல்ல வருவது என்ன வென்றால், நம் நாடுகளில் படித்தவர்களெல்லாம் மேலைநாடுகளுக்கு வேலை செய்கிறார்கள். அதனாலும்தான் மேலைநாடுகள் தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. நாசாவில் பணிபுரியும் மேல் மட்ட அதிகாரிகளின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் தெரியும் எத்தனை இந்தி இலங்கையர் அங்கே பணி புரிகிறார்களென.

இது இப்படி இருக்க எங்கேயும் இல்லாத கற்பனைக் கடவுள்களை வீணே இழுப்பது நன்றன்று. அர்த்தமுள்ள இந்துமதம் என்ற புத்தகத்தில், (நான் அவற்றை இன்றைக்கு 30 வருடங்களாக பாதுகாத்து வருகிறேன்.) ஓரிடத்தில் கண்ணதாசன் மனத்தை எவ்வாறு ஒருவழிப் படுத்தலாமென எழுதுகையில், இப்படி எழுதியிருக்கிறார். "கடவுளை நினைப்பது துதிப்பது எல்லாமுமே மனதை ஒரு வழிப்படுத்தத்தான். உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருந்தால், உன் தாயை நினைத்துக் கொண்டு ஒரு மணி நேரமிரு, அல்லது உனக்குப் பிடித்த ஏதாவதொன்றை நினைத்துக் கொண்டிரு. மன ஒருமைப்பாடுதான் முதலில் வேண்டும்". மனம் ஒருநிலையில்லாது கலாசாலை செல்பவன், அங்கே விரிவுரையாளரின் உரையைக் கவனிக்காது, எங்கேயோ Hollywood அல்லது Bollywood அழகிகளை மனத்திரையில் நிறுத்தி அதில் இலையித்துப் போயிருந்தால், அவனது கல்வியும் கெட்டு செலவழித்த பணமும் இல்லாது போய்விடும். இதனால்த்தான் மன ஒருமைப்படுத்தும் தியானம் கடவுள் வழிபாடு முக்கியமானது.
கடவுள் வழிபாடு எனும் போது, இன்னும் ஒன்று ஞாபகம் வருகிறது.
வினாயகர் முன் நின்று தோப்புகரணம் போடுவோமே..
அது இன்று மேலைநாட்டவரும் செய்கிறார்கள். இதனால் பலவகையில் மூளைக்குப் பயிற்சி எனச் சொல்கிறார்கள். Brain Yoga என எழுதினால்ப் போதும் தேடல் இயந்திரம் ஆயிரக்கணக்கான தளங்களையும் காணொளிப் படங்களையும் கொண்டுவரும். நம் நாடுகளில் இது மறைந்து வருகிறது. காரணம் கல்லுப் பிள்ளையாருக்கு இதைச் செய்வதால் என்ன நன்மை எனக் கேட்கும், தம்மை பகுத்தறிவாளர் என சொல்லிக் கொள்பவர்களால்த்தான்.
இந்தியாவின் பாரம்பரியமான யோகசனத்திற்கே அமெரிக்கர்கள் உரிமை பெற்று வருகிறார்கள் என்பது மன வேதனைக்குரிய செய்தி. இதெல்லாம் எங்களது அறியாமையாலும் ஆங்கில மோகத்தாலும் வந்திருக்கும் கொடுமை.
நன்றி
வணக்கம்.


weather counter Site Meter