ஆர்.எஸ்.எஸின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தையும், இந்துக்களையும் தொடர்பு படுத்த முடியாது. பயங்கரவாதம் மற்றும் இந்துக்கள் என்ற சொற்கள் நேர் எதிரான முரண்பாடான பொருள் கொண்டவை. ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்த முடியாது. அயோத்தி விவகாரத்தில், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு, குறிப்பிட்ட யாருக்கும் எதிரானதல்ல. எனவே, காவி பயங்கரவாதம் எனக் கூறுவதை நிறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருக்கக் கூடியவர் இவ்வாறு சொல்லியிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த இந்துத்துவா அமைப்பின் தலைவர் அவ்வாறு கூறவே கடமைப்பட்டவராகிறார்.
காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்ல என்று அவர்கள் சொல்லவில்லையா? நாதுராம் கோட்சேயின் சகோதரன் கோபால் கோட்சேயும், கோபால் கோட்சேயின் மனைவியும் அதனைத் திடமாக மறுத்துள்ளனரே! இருந்தாலும் கோட்சே ஆர்.எஸ்.எஸ். காரன் அல்ல என்று மறுத்துத் தீரவேண்டிய கட்டாய நிலை அவர்களுக்கு.
காந்தியாரைச் சுட்டுக் கொல்லுவதற்கு முன் நாதுராம் கோட்சே என்ன செய்தான்? தன்னை ஒரு முசுலிம் என்று திரித்துக் காட்டிக் கொள்வதற்காக சுன்னத் செய்து கொண்டிருக்கிறான் - தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு இருக்கிறான். இப்படி கடைந்தெடுத்த பித்தலாட்டம் - மோசடியை இவர்களைத் தவிர வேறு யார்தான் செய்ய முடியும்?
பயங்கரவாதத்தையும், இந்துத்துவாவையும் தொடர்புபடுத்த முடியாதாம் - அப்படியானால், 1992 டிசம்பர் 6 அன்று 450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலிம் மக்களின் வழிபாட்டுத் தலத்தைப் பட்டப் பகலில் பா.ஜ.க. தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ்.காரர்களும், விசுவ இந்துபரிசத்தினரும், பஜ்ரங் தள் உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பலும் வன்முறை கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கினார்களே - அதற்கு என்ன பெயராம்?
இவர்கள் எல்லாம் இந்துத்துவாவாதிகள் அல்லர் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறப்போகிறாரா?
இவர்களின் இந்துத்துவா கதாநாயகனான இராமன், தவம் செய்த சூத்திரன் சம்புகனை வாளால் வெட்டிக் கொன்றானே - அதற்குப் பெயர் வன்முறை யல்லாமல் - நன்முறை என்று பட்டம் கட்டப் போகிறார் களா?
இந்து மதக் கடவுள்களின் கைகளில் எல்லாம் வாளாயுதம், வேலாயுதம், அம்பு, வெட்டரிவாள், கதை, சங்கு சக்கரங்கள் எல்லாம் இருக்கின்றனவே - இவை பலாத்காரத்தின் சின்னங்கள் அல்லவா - கொலை காரக் கருவிகள் அல்லவா!
சண்டை போடாத இந்து மதக் கடவுள்கள் உண்டா? கொலை செய்யாத சாமிகள் உண்டா?
தன் உற்றார் உறவினர்களைக் கொல்ல முயன்ற அர்ச்சுனனுக்கு அறிவுரை புகன்று அவர்களைக் கொல்லுமாறு போர்க்களத்தில் அறிவுரை புகன்றானே - அவர்களின் பகவான் கிருஷ்ணன் - அதற்கு என்ன பெயராம்!
யாகம் செய்யாதவனுடைய (சூத்திரன்) பொருள் அசுரர் பொருளாகும். ஆகையால், அதைக் கொள்ளை யிடுவது தர்மம் (மனுதர்மம் அத்தியாயம் 7, சுலோகம் 24) என்கிறதே இந்து மத சாத்திரம் - இந்தக் கொள்ளையிடுவது என்பதன் பொருள் என்னவோ!
செல்வம் உள்ள சூத்திரன் வீட்டில் சிறிதும் தயங் காமலும், கேளாமலும் பலாத்காரத்தினாலும் கொள்ளை யிடலாம்!
(மனுதர்மம் அத்தியாயம் 11, சுலோகம் 13)
பலாத்காரத்தினாலும் கொள்ளையிடலாம் என்ப தற்குத் தனி அகராதியை மோகன் பகவத்துகள் தயார் செய்து வைத்துள்ளார்களோ!
வர்ணாசிரமப்படி நடக்கவில்லையானால், பிராம ணர்கள் ஆயுதம் எடுத்து சண்டை செய்யவேண்டும்.
(மனுதர்மம் அத்தியாயம் 8, சுலோகம் 348)
மனுதர்மம் (வர்ணாசிரமம்) முறைப்படி ராஜ்ய பரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை, அந்தத் தண்டத்தைக் கொண்டே -மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாம்.
(மனுதர்மம் அத்தியாயம் 6, சுலோகம் 26)
இவை எல்லாம் பலாத்காரம், பயங்கரவாதம், வன்முறை என்ற பட்டியலில் வராது என்று வெளிப் படையாகச் சொல்லிவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்த முடியாது என்று சொல்லட்டும்!
வன்முறை நடவடிக்கைகளுக்காக மூன்று முறை தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். என்பதை மறைக்க அடேயப்பா, இத்தனைப் பொய்புரட்டுப் பேச்சா?
http://www.viduthalai.periyar.org.in/20101020/news07.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment