Pages

Search This Blog

Tuesday, October 26, 2010

பெரியாரின் தொலைநோக்கு திருமணமில்லாத வாழ்க்கை!

மேல்நாடுகள் பலவற்றில் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகின்றனர். அதனால் அவர்கள் ஒன்றும் கெட்டுவிடவில்லை.

திருமணம் என்பது கூட நமக்குத் தெரிய நம் சரித்திர ஆதாரங்கள், வாழ்வு முறைகள், மற்ற ஆதாரங்கள் மூலம் (நமக்கு) தமிழர்களுக்கு இருந்தது என்று சொல்ல முடியாது.
இப்படி ஒரு காரியம் இருந்தது என்று பகுத்தறிவிற்கேற்ப ஆதாரத்தோடு சொல்ல முடியாது. நாம் இல்லை என்று சொல்வதற்கு என்ன ஆதாரமிருக்கிறது என்று கேட்கக் கூடும். இது போல் ஆணும், பெண்ணும் சேர்ந்து சில சடங்குகள் செய்து, அவர்கள் கணவன் - மனைவியாக வாழ்ந்தார்கள் என்பதைக் குறிக்கத் தமிழில் எந்த சொற்களும் இல்லை. கல்யாணம், - விவாகம், - கன்னிகாதானம்,- சுபமுகூர்த்தம் என்பதெல்லாம் தமிழ்ச் சொற்கள் அல்ல என்பதோடு, இச்சொற்களும், இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதாக இல்லை. தமிழனுக்கு இம்முறை இருந்திருந்தால் அதற்கான ஒரு சொல் இருந்திருக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியின் அடிப்படையெல்லாம் பெண்ணை ஆணுக்கு அடிமையாக்குவது, ஆணுக்குத் தொண்டு செய்ய, அவனைக் காப்பாற்ற, அவன் வேலைகளைக் கவனிக்க ஒரு வேலைக்காரியை நியமிப்பது என்பதேயாகும். தாலி கட்டுவதன் கருத்தே ஆணுக்குப் பெண் அடிமை என்பதை வெளிப்படுத்தக் கூடிய ஒரு சாதனமேயாகும். பெண்கள் தங்களின் இழிவை இன்னும் உணராமலே இருக்கிறார்கள். தங்களைக் காப்பாற்ற ஓர் ஆண் எஜமானன் வேண்டுமென்றே கருதுகின்றனர். பெண்கள் தாங்களே தாலி கட்டிக் கொள்ள ஆசைப்படுகின்றார்கள். அவர்கள் இழிவை ஒழிக்க முற்பட்டால் அவர்களே அதை எதிர்ப்பார்கள்.

நம் பெண்கள் தங்களுக்கு இருக்கும் இழிவையும், குறையையும் உணராமலிருக்கின்றார்கள். தாங்கள் ஆண்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டியவர்களாகத் தங்களைக் கருதுகின்றார்களே தவிர, சுதந்திரமுள்ள மனித ஜீவனென்று தங்களைக் கருதுவதில்லை.

மற்றவர்கள் அவர்கள் இழிவினையும், குறையினையும் நீக்க முயற்சிக்கும் போது அதனை எதிர்க்கவும் செய்கின்றனர். சுமார் 100 வருடங்களுக்கு முன் வரை நம் நாட்டில் ஒரு பழக்கமிருந்தது. கணவன் இறந்து விட்டானென்றால் அவனோடு சேர்த்து அவனுடைய மனைவியையும் கட்டி உயிரோடு அவளையும் சேர்த்துக் கொளுத்தி விடுவார்கள்! இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர்! வெள்ளைக்காரன் வந்த பின் தான், இப்படிச் செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றவுடன் தான், இப்பழக்கம் மறைந்தது. இப்போது எந்தப் பெண்ணும் தன் கணவனுடன் தன்னையும் சேர்த்து எரிக்க-வில்லை என்பதற்காகக் குறைபட்டுக் கொள்-வதில்லை. அதனால் எந்தப் பெண்ணும் கெட்டுப் போவதில்லை. அதுபோலத்தான் இப்போதும் பெண்கள் இந்தத் திருமணம் என்பதன் கொடுமையினை உணராமலிருக்-கின்றார்கள். இன்னும் 40, 50 வருடங்களில் திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக ஆக்கப்படலாம். பெண்கள் தாங்களே திருமணம் செய்து கொள்ள முன்வர மாட்டார்கள். தாங்களே தங்களுக்கு வேண்டிய துணைவரைத் தேர்ந்-தெடுத்துக் கொள்வார்கள்.

நான் முன்னே குறிப்பிட்டபடி தமிழர்-களாகிய நமக்கு இந்தப் பழக்கம் - திருமணம் செய்து கொண்டு வாழ்வது என்கிற பழக்கம் இருந்தது கிடையாது. இடையிலே தோன்றியது தானாகும்.

தமிழ்ப் புலவர்கள் நமக்குத் திருமணம் இருந்தது என்பதற்கு எதையோ இரண்டு, மூன்று கவிதைகளை எடுத்து ஆதாரமாகக் காட்டு-கின்றனர். அவை அறிவிற்கும், நடப்-புக்கும் பொருந்தக் கூடியனவாக இல்லை. ஒன்று பெண்ணைப் பெற்றவன் பெண்ணோடு சேர்த்து ஒரு காளையை வளர்ப்பானாம். அந்தப் பெண்ணைக் கட்டிக் கொள்ள வருகிறவன், அந்தக் காளையை அடக்கினால் தான் அவனுக்கு அந்தப் பெண்ணைக் கொடுப்-பானாம்! இன்னொன்று, பெண்ணைக் கட்டிக் கொள்ள ஆசைப்படுகிறவன் காட்டிற்குச் சென்று ஒரு புலியைக் கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து அவளுக்கு அணிவித்து அவளைப் பெற வேண்டுமென்பது! மற்றொன்று, நந்தவனத்தில் ஆணும், பெண்ணும் தற்செயலாகச் சந்தித்து, அதன் மூலம் காதலுண்டாகி வாழ்வது என்பதாகும். இதுதான் நம் இலக்கியங்கள் என்பதில் கூறப்பட்டிருப்பவை ஆகும். இவை எப்படி நடக்கக் கூடும் என்பதை நீங்களே சிந்திக்க வேண்டும். இவையெல்லாம் கற்பனைக்குச் சரியாக இருக்கலாமே ஒழிய, நடப்பிற்குப் பயன்படக் கூடிய காரியங்கள் அல்ல.

நான் 1928 முதல் இந்த முறையில் சுயமரியா-தைத் திருமணம், பகுத்தறிவுத் திருமணம் என்னும் பெயரால் நடத்திக் கொண்டு வருகின்றேன். 40 வருடங்களாக இந்த முறையில் பல ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்றிருந்தும், இதுவரை இருந்த ஆட்சிகள் யாவும் பெரும்பாலும் பார்ப்பனர்-களுடையவும், பார்ப்பன அடிமை-களுடை-யவும் ஆட்சியாக இருந்த காரணத்தால் இம்முறையானது இதுவரை சட்டப்படிச் செல்லாததாகவே இருந்தது. இப்போது அமைந்துள்ள ஆட்சியானது பகுத்தறிவாளர்-கள் ஆட்சியானதால், இவர்கள் வந்ததும் முதல் காரியமாக சுயமரியாதைத் திருமணத்தை சட்டப் பூர்வமாக்கி இருக்கின்றார்கள்.

இம்முறையில் திருமணம் செய்து கொள்ளும் மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் முட்டாள்தனமான, மூட நம்பிக்கையான கருத்துகளைப் பின்பற்றாமல் பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டும். சிக்கனமாக வரவிற்குள் செலவிட்டுப் பழக வேண்டும். அதிகமான குழந்தைகள் பெறக் கூடாது.

வரவிற்கு மேல் செலவிடுவதும், அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதுந்தான் மனிதனைக் கவலையில் ஆழ்த்தக் கூடியதாகும்.

ஆடம்பரமான வாழ்வு வாழ ஆசைப்படக் கூடாது. கூடிய வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும்.

(10.3.1968 அன்று கோவை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை) விடுதலை 30.3.1968.
http://unmaionline.com/2010/october/01-15/page04.php

No comments:


weather counter Site Meter