சபரிமலை அய்யப்பன் கோயில் - மகர ஜோதி என்பது அசல் பித்தலாட்டம் - பக்தியின் பெயரால் மக்களை மோசடி செய்யும் திட்டமிட்ட சூழ்ச்சி - கபட நாடகம் என்பது அம்பலமாயிற்று.
1973ஆம் ஆண்டிலேயே கேரள மாநிலப் பகுத்தறி வாளர்கள் 24 பேர் நேரில் சென்று உண்மையைக் கண்டறிந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர். கேரள மாநில அரசு அவர்களைக் கைது செய்தது. பகுத்தறிவாளர் கள் எந்தக் குற்றத்தையும் செய்துவிடவில்லை என்று கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.
1980ஆம் ஆண்டிலும் ஒரு முறை பகுத்தறிவாளர்கள் பொன்னம்பலமேடு சென்று வழக்கமாக ஜோதி தெரியும் திசைக்கு மாறாக எதிர்த் திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி பக்தர்களைச் சிந்திக்கச் செய்தனர்.
கேரள மின் வாரியத்தைச் சேர்ந்தவர்கள்தாம் சூடத்தைக் கொளுத்திக் காட்டுகின்றனர் - அது ஒன்றும் தெய்வ சக்தியல்ல என்று அய்யப்பன் கோயில் தந்திரி, தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் உட்பட வெளிப்படையாக ஒப்புக் கொண்டனர். ஏடுகளில் எல்லாம் இந்தச் செய்தி வெளியானது.
முதல் அமைச்சர் ஈ.கே. நாயனாரும் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பிறகும் தேவஸ்வம் போர்டு தலைவர் சி.கே. குப்தனும், கேரள அற நிலையத்துறை அமைச்சர் ஜி. சுதாகரனும் உண்மையை ஒப்புக் கொண்டு விட்டனர். மூன்று நாள்களுக்கு முன்பும் சபரிமலை கோயில் சம்பந்தப்பட்டவர்களால், மகர ஜோதி இயற்கையானது அல்ல - மனிதர்களால் செய்யப்படும் ஏற்பாடு என்று கூறியுள்ளனர். தற்போதைய திருவாங்கூர் தேவஸ்தான தலைவர் ராஜகோபால் நாயர் கூறியுள்ள தகவல் மிக முக்கியமானது. பொன்னம்பலமேட்டில் தெரியும் விளக்கு மனிதர்களால்தான் ஏற்றப்பட்டு வருகிறது. முற்காலத்தில் இங்கு ஆதிவாசிகள் வாழ்ந்தார்கள். இவர்கள் மகர விளக்குத் திருவிழாவைக் கொண்டாடி வந்தனர்.
அன்றைய தினம் மாலையில் தீபம் ஏற்றுவது வழக்கம். இப்பொழுது ஆதிவாசிகள் இல்லை. இருந்தாலும் அந்த வழக்கம் தொடர்கிறது. இதுபற்றி நீதிமன்றத்தில் அறிக்கை அளிப்போம் என்று அவர் கூறியுள்ளார் (ஆதாரம்: மாலை முரசு 22.1.2011 பக்கம் 3)
அய்யப்பன் கோயிலுடன் தொடர்புடைய பந்தளம் அரண்மனை நிருவாகக் குழுவின் தலைவர் பி. ராமவர்மராஜா கூறியதாவது:
பொன்னம்பலமேட்டில் ஆதிவாசிகளால்தான் தீபம் ஏற்றப்பட்டது. இது அவர்களுடைய விழா. இதற்கும் அய்யப்பன் கோயிலுக்கும் சம்பந்தம் இல்லாமல்தான் இருந்தது. பின்னாளில்தான் கோவிலுடன் இணைத்து விட்டனர். மகரவிளக்கு பூஜை யன்று அய்யப்பன் கோவிலில் நடக்கும் தீப ஆராதனைதான் முக்கியமானது. அதற்காகப் பந்தளம் அரண்மனையில் இருந்து திரு ஆபரணங்கள் எடுத்து வரப்படும்.
இந்த ஆபரணங்கள் யாவும் மகர விளக்குப் பூஜையன்று மாலையில் அய்யப்பனுக்குச் சாத்தப்படும். அதன்பிறகு, தீப ஆராதனை நடக்கும் - இதுதான் மிகவும் முக்கியமானது.
ஆனால் இதன் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் மகர ஜோதி அமைந்துவிட்டது. ஆகவே, பந்தளம் அரண்மனை இதற்கு முக்கியத்துவம் அளிக்காது இவ்வாறு பந்தளம் அரண்மனை நிருவாகக் குழுவின் தலைவர் கூறியுள்ளார். (ஆதாரம்: மாலைமுரசு 22.1.2011)
சரி, அய்யப்பன் சேவா சங்கம் என்ன கூறுகிறது?
மகரஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவது என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும், இதை நாம் பக்தர்களின் நம்பிக்கையின் அடையாளமாகத்தான் பார்க்க வேண்டும்.
இந்தத் தீபம் கோவில் நிருவாகத்தால் ஏற்றப்பட்டாலும் இதைக் காண வரும் பக்தர்களுக்கு கோவில் நிருவாகமும் அரசாங்கமும் பாதுகாப்புத் தர வேண்டும் என்று அய்யப்ப சேவா சங்கத்தில் தேசியத் துணைத் தலைவர் டி. விஜயகுமார் கூறியுள்ளார். இதுவும் அதே மாலைமுரசு செய்தியாகும்.
மகரஜோதி உண்மையானதல்ல, முதல் அமைச்சரே ஒப்புக் கொண்டு விட்டார், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும் ஆமோதித்து விட்டார் - கோயில் தந்திரியும் ஆமாம் போட்டு விட்டார். தேவஸ்வம் போர்டு தலைவரும் தயக்கம் இல்லாமல் ஏற்றுக் கொண்டு விட்டார். அய்யப்ப சேவா சங்கமும், மகர ஜோதி மனிதர்களால் ஏற்றப்படுவதுதான் என்று ஒப்புக் கொண்டு விட்டது.
மோசடி என்று அப்பட்டமாகத் தெரிந்த ஒன்றை மேலும் அனுமதிப்பது பல மடங்கு மோசடி அல்லவா? மக்களின் பக்தி நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை ஏமாற்றும் கடைந்தெடுத்த பித்தலாட்டம் அல்லவா?
அரசு துணை போகலாமா என்பதுதான் இன்றைய கேள்வி. அதுவும் உயர்நீதிமன்றமே சந்தேகத்தை எழுப்பிய பின்னர் உண்மையை வெளிப்படுத்தி, அந்த மோசடியைத் தடை செய்வது தானே யோக்கியமான செயல்?
மத விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்பது நேர்மையான பதில் ஆகாது;
கோயிலுக்குள் சாராயம் காய்ச்சினால், கஞ்சா விற்பனை நடந்தால் இந்தப் பதிலைச் சொல்லுவார்களா?
தவறு - மோசடி எங்கு நடந்தாலும் அதனைத் தடுக்க வேண்டியதும், மோசடி செய்தவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதும் ஓர்அரசின் கடமையாகும்.
மத விவகாரம் என்பதற்காக ஒரு மோசடியை அனுமதித்தால் அது நாளடைவில் மக்கள் மத்தியிலும் மோசடிச் செயல்கள் பெருகிட ஊக்குவிப்பதாகத்தான் ஆகும்.
உச்சநீதிமன்றத்தில் இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தின் பொறுப்பாளர் சேனல் எடமருகு இதுகுறித்து வழக்குத் தொடர்ந்துள்ளார். கேரள உயர்நீதிமன்றத்தைத் தொடர்ந்து உச்சநீதிமன்றமும் நாட்டில் நேர்மை தலைதூக்கிட நல்லது செய்யும் என்று எதிர்பார்ப்போம்!
http://viduthalai.in/new/page-2/1960.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
FOR MORE DETAILS CLICK AND READ
அய்யப்பனுக்கு கூட்டம் சேர்க்க செய்யப்படும் ஒரு செப்படி வித்தையை ஒரு ஆன்மிக மோசடியை அம்பலப்படுத்துகிறோம்.
உண்மை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்,
........
Post a Comment