2ஜி அலைக்கற்றை தொடர்பான பிரச்சினை இப்பொழுது ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரிகள், அ.இ.அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு எதிராக மக்களைத் திருப்பிடக் கிடைத்திட்ட கிடைத்தற்கரிய அரசியல் ஆதாயமாகக் கருதினார்கள்.
இதற்குப் பார்ப்பன ஊடகங்கள் பெரும் துணை புரிந்து வந்திருக்கின்றன; உண்மையைத் தலைகீழாகத் திரித்து வெளியிட்டன.
இந்த நிலையில் 24.11.2010 அன்று சென்னை தியாகராயர் நகரில் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் தமிழ் ஊடகப் பேரவை சார்பில் ஆ. இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் நடத்தப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டம்தான் பொய்யின் முகத்திரையைக் கிழித்த முதற்கட்ட நடவடிக்கை யாகும்.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில்தான் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், ரமேஷ் பிரபா (கலைஞர் தொலைக்காட்சி) ஏ.எஸ். பன்னீர் செல்வம், தமிழ் மய்யம் ஜெகத்கஸ்பார் போன்றவர்கள் இந்தப் பிரச்சினையின் ஆணி வேர் வரை சென்று பொய் பிரச்சார மாய்மாலத்தை அம்பலப்படுத்தினார்கள்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் திராவிடர் கழகத்தின் முயற்சியால் இத்தகு உண்மை விளக்கப் பிரச்சாரம் பொதுக் கூட்டங்கள்மூலம் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட்டன.
அதற்குப் பிறகுதான் மத்திய அமைச்சர் கபில்சிபல், மத்திய திட்டக்குழுத் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா போன்றவர்கள் வெளிப்படையாக கருத்துகளைக் கூற ஆரம்பித்தனர்.
மத்திய அமைச்சராக இருந்துகொண்டு தணிக்கை அதிகாரிகள் எப்படி விமர்சனம் செய்யலாம் என்று பிரச்சினையைத் திசை திருப்பியது ஒரு கூட்டம்; அதன் எதிரொலி உச்சநீதிமன்றத்திலும் கேட்க முடிந்தது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் ஒரு வினாவை எழுப்பினார்.
தணிக்கை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன் றத்தில் வைக்கப்படுவதற்கு முன் எப்படி ஊடகங்களில் அது வெளியாயிற்று? அதற்குக் காரணமானவர்கள் யார்? உரிய முறையில் அதுபற்றி விசாரணை நடத்தி யிருக்க வேண்டாமா?
குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டிய தணிக்கை அதிகாரி குற்றப்பத்திரிகை படிக்கும் இடத்தில் இருப்பது எப்படி என்ற வினா மிக முக்கியமானதாகும்.
மேலும் ஒரு வினாவை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்றைய கூட்டத்தில் எழுப்பினார்.
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக பி.ஜே.தாமஸ் என்பவர் நியமிக்கப்பட்டது குறித்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையராக தாமஸ் நியமிக்கப்பட்டதானது மத்திய அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும்; இதைக் கேட்பதற்கு உச்சநீதி மன்றத்திற்கு ஏது அதிகாரம் என்ற பதில் மிகவும் சரியானதே!
அதே பதிலை உச்சநீதிமன்றத்தில் ஆ.இராசா விஷயத்திலும் மத்திய அரசு அளித்திருக்கவேண்டாமா என்ற வினாவை எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர்; உச்சி முடியைக் குலுக்கியது போன்ற நியாயமான வினாவாகும் அது!
அலைக்கற்றை வரிசையை ஏல முறையில் விடுவதா - முதலில் வந்தவர்க்கு முதல் உரிமை என்ற முறையில் விடுவதா என்பது அரசின் கொள்கை முடிவாகும். அதில் தலையிட தணிக்கை அதிகாரிக்கு அதிகாரம் உண்டா? உச்சநீதிமன்றத்திற்குத்தான் அதிகாரம் உண்டா? அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று இதற்கு முன் பலமுறை இதே உச்சநீதிமன்றம் கூறியது உண்டே!
இன்னொரு முக்கிய கருத்தாழமான பிரச்சினை உண்டு. அலைக்கற்றைப் பிரச்சினையில் ஓர் அரசின் அணுகுமுறை எத்தகையது? அரசுக்கு இதில் வரு மானம் என்று பார்க்கக் கூடாது; மாறாக மக்களுக்கு எந்த அளவு நன்மை என்பதுதான் முக்கியமாகும்.
ஆ.இராசா அவர்கள் பொறுப்பேற்றபோது வெறும் 30 கோடி பேர் வாடிக்கையாளர்கள் என்றிருந்த நிலை அவரின் நிருவாகத்தினால் 70 கோடியாக உயர்ந்ததே - இது பொதுமக்களுக்குக் கிடைத்த பலன் - பயன் அல்லவா!
1999 இல் சராசரிக் கட்டணம் நிமிடத்துக்கு ரூபாய் 17, 2004 இல் ரூபாய் 3, 2010 மார்ச்சில் நிமிடம் ஒன்றுக்கு 57 பைசா. இன்று வெறும் 30 பைசா - இது எத்தகைய சாதனை!
இந்தக் கட்டணக் குறைவால், நுகர்வோருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடியையும் தாண்டுமே - இதில் நஷ்டம் என்பது எங்கிருந்து குதித்தது?
இழப்பு என்பது வேறு; ஊழல் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.
இதுகுறித்து திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள 2ஜி அலைக்கற்றை - உண்மை என்ன? பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள் எனும் 84 பக்கங்கள் கொண்ட நூலை (கி. வீரமணி அவர்களால் தொகுக்கப்பட்டது) நாடெங்கும் பரப்பவேண்டியது உண்மையை விரும்பும் ஒவ்வொருவரின் கடமையாகும்.
http://viduthalai.in/new/page-2/1622.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment