Pages

Search This Blog

Monday, January 31, 2011

மேலவன்னிப்பட்டு வழிகாட்டுகிறது டாக்டர் கி.வீரமணி எடைக்கு எடை 10 ரூபாய் நோட்டு அளிப்பு

உரத்தநாடு ஒன்றியம் மேல வன்னிப்பட்டு என்னும் ஒரு சிறிய கிராமத்தில் நேற்று (30-1-2011) நான்கு விழாக்களை இணைத்து ஒரு பெருவிழா நடைபெற்றது.

தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம், டாக்டர் கி.வீரமணி நூலகம் ஆகியவற்றின் திறப்பு விழாக்களும், தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை 10 ரூபாய் நோட்டு அளிப்பும் தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையே ஈர்த்த ஒன்று என்பதில் அய்யமில்லை.

தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் எடைக்கு எடை பரிசுப் பொருள்கள் குவிக்கப்பட்டதுண்டு. ஆனால், எடைக்கு எடை ரூபாய் நோட்டு அளிப்பது என்பது இதுதான் முதல் தடவை என்பதால் பொதுமக்களின் கவனம் அந்தப் பக்கம் சுழன்றது.

தங்களின் மதிப்புக்கும், அன்புக்கும், வழிகாட்டுதலுக்கும் உரிய தலைவருக்கு பரிசுப் பெருள்கள் கொடுப்பது என்பது இயல்பானதே என்றாலும், தந்தை பெரியார் அவர்களுக்குத் தொண்டர்கள் வகைவகையாக ஆசை தீரப் பொருள்களை வழங்கியது போல உலக வரலாற்றில் வேறு எவருக்கும் வழங்கப்பட்டதில்லை.

மாட்டு வண்டி, டயர், கைத்தறிப் போர்வைகள், அரிசி, வெல்லம், வெங்காயம், காய்கறி என்று விதவிதமாகப் பொருள்களை வழங்கினர்.

1957 நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சாவூரில் ஜாதி ஒழிப்பு ஸ்பெஷல் மாநாடு ஒன்றை தந்தை பெரியார் நடத்தினார்.

அந்த மாநாட்டில்தான் எடைக்கு எடை வெள்ளி ரூபாய் நாணயங்கள் அளிக்கும் துலாபாரம் நடந்தது. கொடுக்கப் பட்ட தொகை ரூ. 7704 ஆகும். அந்தக் காலத்தில் இது பெரிய தொகையே! பல லட்சம் மக்கள் கூடிக் கண்டு களித்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உணர்ச்சித் தீப் பிழம்பு வெடித்துக் கிளர்ந்த மாநாடு அது!

ஜாதி ஒழிப்புக்கான திட்டம் தந்த மாநாடு. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதி அகற்றப்படவேண்டும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அவகாசமும் அளிக்கப்பட்டது. அதற்குள் அரசமைப்புச் சட்டத் தைத் திருத்தாததால் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டப் பகுதியைக் கொளுத்துவது என்று அறிவிக்கப்பட்டது.

நவம்பர் 26 (1957) அந்தப் போராட்டம் மநடைபெற்றது. 10 ஆயிரம் பேர் பங்கு கொண்டனர். 15 பேர்களைக் காவு கொண்டது.

பரிசுகளைப் பெற்றுக் கொண்ட தந்தை பெரியார் மகிழ்ச்சி அடைந்தாலும், தனது நிலை எத்தகையது என்பதில் தெளிவாகவே இருந்தார்.

ஒரு கால கட்டத்தில் என் கூட்டங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்கள், பாம்பைக் கூட்டத்தில் விட்டுக் கலைக்கச் செய்ய முயன்றவர்கள், கழுதைகளின் வாலில் வெடிகளைக் கட்டி, தீவைத்து கூட்டத்துக்குள் விரட்டி விட்டவர்கள் எல்லாம் உண்டு. அதே மக்கள் அல்லது அவர்களின் சந்ததியினர் இப்பொழுது பரிசுப் பொருள்களை வாரித் தருகின்றனர் என்றால் அதன் பொருள் என்ன?

தந்தை பெரியார் சிந்தித்தார் - சிந்தித்துப் பரிசுகளைக் கொட்டிக் கொடுத்த அந்தப்  பொது மக்களைப் பார்த்து ஒரு வினாவை எழுப்பினார்.

நான் என் கொள்கையில் பல்டி அடித்தேனா? அல்லது  உங்களுக்கு நல்ல புத்தி வந்தது என்று காட்டிக் கொள்கிறீர்களா? என்ற வினாவை எழுப்பி அதற்கு விடையும் தந்தார்.

நான் என் கொள்கையில் மேலும் மேலும், நாளும் நாளும் தீவிரம் அடைந்துதான் வருகிறேன். என்னிடம் சமரசம் இல்லை. அப்படியென்றால் உங்களுக்கு நல்ல புத்தி வந்து விட்டது என்று இப்பொருள்களை எனக்கு அளித்ததன் மூலம் காட்டிக் கொள்கிறீர்கள் என்றாரே பார்க்கலாம். அதற்கும் இந்நாட்டு மக்கள் கைதட்டி ஆரவாரித்து மகிழ்ச்சியைப் புலப்படுத்தினர்.

1938 நவம்பர் 13 இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெரியார் என்று பட்டம் கொடுக்கப்பட்ட மாநாட்டிலேகூட பெண்களே இந்தி எதிர்ப்புப் போரில் குதியுங்கள் என்று அழைப்புக் கொடுத்தார்.

நமது தலைவர்கள் நாம் அளிக்கும் பொருள்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வார்கள்தான்; அதற்காக புகழ் மயக்கத்தில் வீழ்ந்துவிடக் கூடியவர்கள் அல்லர்.
அது போலவே தமிழர் தலைவருக்குத் தங்கம், வெள்ளி உள்பட பொருள்களைக் குவித்துக் கொடுத்தாலும், அந்தப் பொருள்களை ஆக்க ரீதியான பணிகளுக்குத்தான் பயன் படுத்தி வருகிறார்.

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் வந்ததும், டில்லியில் பெரியார் மய்யம் நிலை கொண்டதும் இந்த அடிப்படையில் தான்.

மேலவன்னிப்பட்டில் கழகத் தொண்டர்களின் கடும் முயற்சியினால் எடைக்கு எடை அளிக்கப்பட்ட தொகை ரூபாய் 8 லட்சமும். எதற்குப் பயன்படும் என்பதை அந்த விழாவிலேயே அறிவித்தார்.

நம் நாட்டு அறிவியல் சாதனங்களான தொலைக் காட்சிகள், ஊடகங்கள் ஆகியவை அறிவியல் வளர்ச்சிக்கு, முற்போக்குச் சிந்தனைக்குப் பயன்படாமல், மூட நம்பிக்கைகளை, பிற்போக்குத் தனங்களை மக்கள் மத்தியில் திணிப்பவைகளாக உள்ளன.

இந்த அறிவு நாணயமற்ற  தன்மையிலிருந்து மக்களை மீட்க, மூட நம்பிக்கைகளை ஒழிக்க, சமத்துவச் சிந்தனைகளைத் தட்டி எழுப்பிட பெரியார் தொலைக் காட்சி உருவாக்குவது எனும் திட்டம் கழகத்திடம் உண்டு.

அந்தத்  திசையில் நாம் முக்கியமான அடியை எடுத்து வைக்க மேலவன்னிப்பட்டில் அளிக்கப்பட்ட ரூ. 8 லட்சம் நிதி பயன் படுத்தப்படும் என்று தமிழர் தலைவர் வெளியிட்ட அறிவிப்பானது - உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள், தமிழர்களுக்கு அப்பாற்பட்ட வேறு நாடுகளைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள், மனித நேய மாண்பாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை, ஆர்வ அலைகளைத் தட்டி எழுப்பிடும் என்பதில் அய்யமில்லை.

ஆனாலும் இந்தத் தொகையெல்லாம் கூட யானைப் பசிக்குச் சோளப் பொரி போன்றதுதான். ஒரு தொலைக் காட்சி தொடங்குவது என்றால் இந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய அளவில் நிதி தேவைப்படும்.

விழாவில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் மானமிகு ராஜகிரி கோ. தங்கராசு அவர்கள் குறிப்பிட்டது போல, மேலவன்னிப்பட்டு தொடங்கிக் கொடுத்ததை மற்ற மற்ற பகுதிகளிலும் தொடர வேண்டியது அவசியமாகும்.

பொருள் - பொருள் பொதிந்த வார்த்தையாகும். அதற்கான பொருளைக் கொடுத்த வன்னிப்பட்டு கிராமத்தைப் பாராட்டுகிறோம்.

பகல் - இரவு பாராமல் உழைத்த கழகக் கண்மணிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
http://viduthalai.in/new/page-2/2487.html

No comments:


weather counter Site Meter