திராவிடக் கொள்கை - கோட்பாடு என்பவை -
1. அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே!
2. பாலின சமத்துவம்
3. சமுகநீதி
4. பகுத்தறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பொருந்தாத கடவுள், மதம் மற்றும் இவற்றைச் சார்ந்த ஆன்மா, மோட்சம், நரகம், பழக்க வழக்கம், மூடத்தன நெடியேறும் முன்னோர்க் கூற்று உள்ளிட்டவற்றை மறுப்பது.
5. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை, எதையும் கேள்விக்கு உட்படுத்தி ஆய்வின் அடிப்படையில் ஏற்பதும் அல்லது மறுப்பதுமான புத்தாக்க உருவாக்கம்.
6. பேதம் பேசும் இந்துத்துவா கோட்பாட்டை எதிர்ப்பது.
7. அறிவியலை ஏற்பதுடன், அது மனித குலத்தின் நலனுக்கு - வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கவேண்டுமே தவிர, கேடாக அமையக்கூடாது.
8. தீண்டாமை - அதற்கு மூல வேரான ஜாதி - ஜாதிக்கு அரணான கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், இதிகாசம், புராணங்களை - பழைமைவாத குலப்பெருமைகளை எதிர்த்து அழிப்பது.
9. ஏற்றத் தாழ்வுள்ள இந்த சமுக அமைப்பில் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சமுகநீதி வழங்குவது - தனியார் துறை, பொதுத் துறை, அரசுத் துறை அனைத்திலும்.
10. ஆண் எஜமானன் - பெண் அடிமை என்ற தற்போதைய நிலைக்கு மாறாக பாலின சமத்துவம், எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராக கல்வி, உத்தியோகம், அரசியல், பொருளாதார நிலைக்கு உத்தரவாதம்.
11. தற்போதைய நிலையில் வழிபாட்டில், அர்ச்சகத் தன்மையில் ஆண்களுக்குள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் தேவை - இது எல்லா மதங்களுக்குமே!
12.. ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின் நுகர்வுக்கும் உரியவர்களே!
13. கிராம - நகர பேதம் கூடாது.
14. மதங்களைக் காரணம் காட்டி ஏற்றத் தாழ்வுகளை நிலை நிறுத்தும் போக்கு முற்றாக மாற்றி அமைக்கப்படுதல். எந்தக் காலத்திலோ, யாரோ சூழ்ச்சியாக ஆதிக்கத்தை நிலை நிறுத்த எழுதிக் குவித்த அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நிராகரித்தல்.
15. ஒவ்வொரு இனத்துக்குமான மொழிக்குரிய மதிப்புப் பேணப்படுதல் - இதில் ஒரு மொழி, இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்துவதற்கு அறவே இடம் தராமை. கால வளர்ச்சிக்கு ஏற்ப மொழியில்
விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு மாற்றம் கொணர்தல். பன்மொழிகள் கொண்ட இந்தியாவில், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தில் எட்டாம் அட்டவணையில் இடம்பெற்ற மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழி என்பது உறுதிப்படுத்தப்படுதல். அகில இந்திய அளவில் தொடர்பு மொழி என்பது ஆங்கிலமே!
16. பொருளாதார நிலையில் மனிதனுக்குத் தேவையான அடிப்படைகள் பூர்த்தி செய்யப்படல்; இதற்கு அரசே முழுப் பொறுப்பு ஏற்றல்; பணக்காரன், ஏழை என்ற பேதத்தைக் குறிக்கும் சொல்லாடலுக்கே இடமில்லாது செய்தல். தொழிலாளி - முதலாளி என்ற பேதமின்றி ‘பங்காளி’ எனும் தன்மை நிலைநிறுத்தப்படுதல்; சுருக்கமாக சொல்லப்போனால், வருண பேதம், வர்க்க பேதம், பாலியல் பேதமற்ற ஒப்புரவு சமுதாயம் உருவாக்கப்படுதல்.
17. ஒரு மொழி, ஓர் இனத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மொழிகள், இனங்களுக்கான உரிமை, பண்பாடு, பங்களிப்பு, வளங்களுக்கிடையே பாரபட்சமற்ற, ஆதிக்கமற்ற சமன்பாட்டை நிலை நிறுத்துதல்; மாநிலங்களுக்கான தன்னாட்சி உரிமை நிலைப்படுத்தப்படுதல்.
18. அரசுக்கும், மதத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத உண்மையான மதச்சார்பின்மை நிலைப்பாடு.
19. ஜாதி ஒழிக்கப்படும் காலகட்டம் வரை அனைத்துப் பிரிவினருக்கும் சகல இடங்களிலும், துறைகளிலும் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவம்.
20. கல்வி என்பது எல்லோருக்கும் அடிப்படை உரிமை. விஞ்ஞான மனப்பான்மைக்கு விரோதமான எதுவும் கல்வியில் இடம்பெறாமை, வளர்ச்சித் தத்துவம், சிந்தனையூற்றம் - விடாமுயற்சி, ஊக்கம் தரும் தன்மை இவற்றோடு உலகப் போட்டிக்குத் தயாரிப்பான கல்வி முறை, ஒழுக்கம் பொதுச் சொத்து என்ற வார்ப்பு, பாடத் திட்டங்கள்; தகுதி திறமையை அளவிட மனப்பாட மதிப்பெண் முறைக்குப் பதிலாக செய்முறை, வினையூக்கத்தை உள்ளடக்கிய அறிவியல் அடிப்படையில் அமைந்த தொழில்நுட்பம் உள்ள கல்வி முறை.
21. கடவுள் நம்பிக்கைக் கொண்டோர், கடவுள் நம்பிக்கையற்றோர் - இரு நிலையில் உள்ளவர்களுக்கும் பிரச்சார உரிமையுடன் கூடிய சமநிலைச் சட்டங்கள் உருவாக்கப் பாடுபடுதல்.
22. குழந்தை வளர்ப்பில் முழுக்கவனம், உடல், மூளை வளர்ச்சிக்கான உணவு, சூழல், தூய்மை, அறிவுத் தூண்டல், நற்பழக்கம் பேணப்படுதல்.
23. முதியவர்களை அக்கறையுடன் உரிய மதிப்புடன் பாதுகாத்தல்.
24. சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு.
25. ஆணோ, பெண்ணோ 20 வயதுக்குமேல் எந்த வயதில் திருமணம் செய்துகொள்வது என்பதை அவர்களின் முடிவுக்கே விட்டுவிடுதல்.
திருமணம் என்பதில் வேறு யாருடைய தலையீடோ, குறுக்கீடோ கூடாத நிலை.
வயது அடைந்த ஓர் ஆணும் - பெண்ணும் இணைந்து வாழ்தலில் மூன்றாவது மனிதனுக்கு இடம் என்பது அத்துமீறிய நடவடிக்கையே!
குழந்தைப்பேறு குறித்த முடிவில் பெண்ணுக்கு மட்டுமே பிரத்தியேக உரிமை.
26. மரண தண்டனையை ரத்து செய்தல்.
27. கருத்துரிமை, பிரச்சார உரிமைக்கு தடையற்ற நிலை.
28. கலை கலைக்காக என்பதை ஏற்க இயலாது - மனிதத்தையும், சுயமரியாதைக் கருத்துருவையும் கொண்டதாக ஆக்கப்பூர்வமாக அமைதல் வேண்டும்.
29. ‘அனைவருக்கும் அனைத்தும்’ அமைந்து, சமுகத்தின் நுகர்வுக்கான விரிந்த இலக்கு நோக்கி நடக்கட்டும் இந்த வையம்.
30. மனிதன் தானாகப் பிறக்கவில்லை - எனவே, தனக்காக வாழக்கூடாதவன் என்ற சமுக நோக்கு - தொண்டறப் பண்பு!
31. ஆடம்பரம் தவிர்ப்பு - சிக்கனப் பெருவாழ்வு!
32. குருதி உறவு என்பதையும் கடந்து மனிதனுக்கு மனிதன் நேச உறவு - சகோதரத்துவம், சமத்துவம் பேணலே மனிதனுக்குப் பகுத்தறிவு இருப்பதின் பலனாகும்.
33. சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு
கடவுளை மற - மனிதனை நினை என்னும் சுயமரியாதை சமத்துவ உலகம் மலரட்டும்! மலரட்டும்!!
‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’, ‘உலகமே ஒரு குடும்பம்’ என்னும் பரிணாம நிலை வளரட்டும்!
பகைமை, ஆதிக்கம், ஆக்கிரமிப்பு போன்ற கொடிய நோய்களற்ற, ஆரோக்கியமான புத்துலகம் புரட்சியுகமாக பூத்துமலர நமது பயணங்களும், திட்டங்களும் அமையட்டும்!
ஆசிரியர் கி.வீரமணி
தமிழர் தலைவர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment