Pages

Search This Blog

Thursday, April 17, 2014

யஜுர் வேதத்தில் ஆரிய பார்ப்பனர்களின் யாக கூத்துகள்

(பசுவதைக்காக நீலிக் கண்ணீர் விடும் சங்கராச்சாரியார்கள் இந்து மத சாஸ்திரங் களில் பசுவைக் கொன்று யாகம் நடத்துவது குறித்து அலங்காரமாகப் பேசப்படுகிறதே - இதற்கு என்ன பதில்) (அய்தரேயப் ராஹ்  மணம் பஞ்சிகா  2காண்டம் 6)

பொருள்: யாகத்திற்கு கொண்டு வந்த பசு மரணத்தைக் காண்கிறது; மரணத்தி னின்றும் தேவர்களைக் காண்கிறது. தேவர் கள் பசுவைப் பார்த்து: நாங்கள் உன்னை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லு கின்றோம் என்பார்கள். பசு கொல்லப்பட்டபிறகு அதன் சதையை அறுத்தெடுக்க வேண்டிய முறை மந்திரமாவது:-

அந்த ரே வோஷ் மாணம் வாரயத்வா திதி பசுஷ் வேவதத் ப்ராணன் தாதி ஸ்யேன மாஸ்ய வக்ஷ க்ருணுதாத் ப்ரசஸா பாஹு சலா தோஷ்ணீ கஸ்யபேவாம் ஸாச்சித் ரேஸ்ரோணீ கவவேஷாரூஸ்ரேக பர் ணாஷ்டீ வந்தாஷட்விம் சதி ரஸ்ய வங்கா யஸ்தா அனுஷ்ட யோச்யா வயதாத்; காத்ரம் காத்ரமஸ் யானூனம்.
(அய்தரேயப் ராஹ் மணம் பஞ்சிகா 2 காண்டம் 6)

பொருள்: மார்பிலிருந்து பருந்தின் வடிவத்தில் சதையை அறுத்தெடுக்க வேண்டும். பின் கால்களிலிருந்து இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். முன் கால்களிலிருந்து அம்பு வடிவமாக இரண்டு துண்டுகளை அறுத்தெடுக்க வேண்டும். தோளிலிருந்து ஆமையின் வடிவமாக இரண்டு துண்டுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தந்த அவயவங் களிலிருந்து இருபத்தாறு துண்டுகளை அறுத்தெடுத்த பின் எல்லாவற்றையும் அறுத்தெடுத்துக் கொள்க.
பசுவின் மல மூத்திரம் முதலியவை தரையில் புதைக்கப்பட வேண்டும். அதற் குப் பிரமாணம்:-

உத்ய கோஹம் பார்த்திவம் (அய்த ரேய பஞ்சி 2 கா6)

பசுவைக் கொல்லும் போது ஹோதா என்னும் புரோகிதன் சொல்ல வேண்டியது:-
அத்ரிகோ சமீத்வம் ஸுசமீ சமீத்வம்

சமீத்வ மத்ரிகா அத்ரிகா அத்ரகா உர் இதித்ரிர்ப் ரூயாத்
(அய்த பஞ்சிகா 5 காண்டம் 7)

பொருள்: நன்றாக அடித்துக் கொல், கொல், கொல். அடிப்பதை நிறுத்தாதே. அஸ்நாரக்ஷ ஸம்ஸ்ருஜதாத் இத்யாஹ (ஜத... காண்டம் 7)

உதிரத்தை (இரத்தம்) ராட்சதருக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லு கிறார். அதன்பின் வபாஹோமம் செய் யச் சொல் லுகிற மந்திரம்:-

தஸ்ய வபாமுத்கித்யாஹரந்தி தாமத் வர்யு: ஸ்ருவேணாபிதா ரயன்னாஹ
(ஜத... கண்டம் 12)

பொருள்: பசுவின் வபா என்னும் கொழுப்பை எடுத்த அத்வயு என்பவன் ஸ்ருவம் என்னும் பாத்திரத்தில் வைக் கின்றான்.

ஸர்வமாயுரேதிய ஏவம் வேத பொருள்: எவனொருவன் இதை இவ்வாறு அறிகின்றானோ (இந்த யாகத்தை நடத்துகிறவன்) அவன் நெடு நாள்கள் உயிரோடிருப்பன்.

வபாயாமா ஹுதாயாம் ஸ்வரக்கோ லோக: ப்ராக்யாயத. பொருள்:   கொழுப்பை சேமித்தால் ஸ்வர்க்கலோகம் கிடைக்கும்.


ஸோக்நேர் தேவயோன்யாம் ஆஹு திப்ய: ஸம்பூய ஹிரண்ய சரீர உனர்தவ: ஸ்வர்க்கம் லோகமேதி

பொருள்: அக்கினியில் தேவயோனியில் ஆஹுதி கொடுப்பதால் யாகம் செய்பவன் பொன்னாலாக்கப் பெற்ற சரீரத்தையுடை யவனாய் மேலே சுவர்க்க லோகத்தை அடையா நிற்பன்.

பசுவைக் கொலை செய்து அதன் சதையை முப்பத்தாறு பங்குகளாகப் பிரிக்க வேண்டும். இதை முறைப்படி உணர்ந் தவன் சுவர்க்கத்தை அடைகின்றான். இவ்வித யாகமானது ரிஷிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் இறந்து போனபின் தேவர்கள் கீழிறங்கி வந்து இந்த யாகவிதியை உபதேசித்தார்கள் என்று கீழ்க்குறித்த மந்திரம் சொல்லுகிறது.

தத் ஸ்வர்க்காஸ்ச லோகானாப்னு வந்தி ப்ராணேஷு சைவதத் ஸ்வர்க்கேஷு ப்ராதி திஷ்டம் தோயித ஏதாம் பசோர் விபக்திம் ஸ்ரௌத ரிஷிர் தேவபாகோ விதாஞ்சகார கிரிஜாய பாப்ரவ்யாயா மனு ஷ்ய: ப்ரோவாச (ஜத.. பஞ்சிகா 7 காண்டம் 1)

12-04-2014 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 2
http://www.viduthalai.in/page2/78575.html

Sunday, September 29, 2013

பார்ப்பன அயோக்கியத்தனம்

அகில இந்திய பிராமண சம் மேளனம் என்பதாகப் பேர் கொண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு மூலை கிராமத்தில் வக்கீல் பார்ப்பனர், உத்தியோகப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், காப்பிக்கடை பார்ப்பனர், தூதுவப் பார்ப்பனர் ஆகிய பலதிறப்பட்ட சுமார் 100 உருப்படிகள் கூட்டம் கூடி ஒன்று சேர்ந்து அகில இந்தியப் பிராமண சம்மேளனம் என்பதாகப் பேர் வைத்துக் கொண்டு பல தீர்மானங்கள் செய்து இதை இந்தியாவிலுள்ள இந்துக் கள் என்று சொல்லப்படும் 25 கோடி மக்களுக்குக் கட்டுப்பட்டதாக கருதும் படி சூழ்ச்சி  செய்து இருக்கிறார்கள். அங்கு நடந்த தீர்மானங்களையும் மகாநாட்டின் வரவேற்பு அக்கிராசனர் மகாநாட்டின் தலைவர் ஆகியவர்கள் பிரசங்கங்களும் படித்துப் பார்த்தால் உண்மையான கலப்பற்ற பார்ப்பனரல் லாதார்களின் இரத்தம் கொதிக்காம லிருக்கவே முடியாது. அவ்விருவர் பிர சங்கத்திலும் ஒற்றுமையாகக் காணப் படும் விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இத்தேசத்தில் இந்துக்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும் சத்திரியரும் வைசியரும் கிடை யாது என்றும் பேசியிருக்கிறார்கள், சத்திரியரும் வைசியரும் இந்நாட்டில் இல்லை என்பதைப் பொறுத்தவரையில் நமக்கு சந்தோஷமே. நாமும் அப்படித் தான் தீர்மானித்திருக்கிறோம். மற்றபடி யார் யார் தங்களை சத்திரியர்கள் என்றும் வைசியர்கள் என்றும் எண்ணிக் கொண்டு பார்ப்பனர்களைப் போல் பூணூல் போட்டுக்கொண்டு திரிகிறார் களோ அவர்கள் பார்ப்பனர்களிடம் போய் கெஞ்சி தங்கள் சத்திரிய வைசிய உரிமைகளைக் காப்பாற்றிப் பார்ப் பனர்களின் சத்திரியர் மக்கள் அல்ல என்பதை நிருபித்துக் கொள்ளட்டும். நமக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. ஆனால் பார்ப்பனர்கள் தவிர மற்றவர் கள் சூத்திரர்கள் என்று சொன்னது தான் நமக்கு மிகுதி ரத்தத் துடிப்பையும் உண்டாக்குகிறது.
பார்ப்பனர்கள் இந்த நாட்டுக்குக் பிழைக்க வந்தவர்கள் என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறோம். அவர்கள் ஒரு இழிந்த ஜாதியார் என்பதிலும் யாருக்கும் ஆட்சேபனை இருக்க நியாயமில்லை. நமது அகாரதிகளிலேயே ஆரியர் என் றால் மிலேச்சர் என்று குறிப்பிடப்பட்டி ருப்பதும் அதுவும் அவர்களால் ஒப்புக் கொண்ட அகராதிகளில் காணப்படு வதும் அவர்களது நாகரிகமோ அவர் களால் எழுதி வைத்திருக்கும் வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி புராணம், இது களால், அவர்கள் தமிழ் மக்களாகிய நமது நாகரிகத்திற்கு எவ்வளவு கீழ்பட்டது என்பதும் அருவருக்கத் தக்கது என்பதும் ஆராய்ச்சி உள்ளவர் களுக்கு நன்றாகத் தெரியும் அதாவது பார்ப்பன ஸ்திரீகள் விபசாரம் செய்து விட்டால் கர்ப்பம் தரிக்காமலிருந்தால் வீட்டிற்குத் தூரமானவுடன் அந்தத் தோஷம் தீர்ந்து விடுகிறது என்ற பராசர ஸ்மிருதி பிராயச் சித்த காண்டம் 1வது காண்டம் 2வது சுலோகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. அதே சுலோ கத்திற்கு விரிவுரை எழுதுகை யில் பிராமண ஸ்திரீ சூத்தி ரனைப் புணர்ந்து விட்டால் மாத்திரம் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமென்றும் அதுவும் தினம் ஒரு கவள அன்னம் வீதம் 15 நாளைக்கும் குறைத்துக் கொண்டு வந்து 16ல் நாள் முதல் தினம் ஒரு கவள அன்னம் வீதம் உயர்த் திக்கொண்டு வந்து விட்டால் போதுமானது என்று இருக் கிறது இதுதான் பிராமண ஸ்திரீகளின் விபசாரத்திற்குப் பிராயச்சித்தம். மற்றபடி கர்ப்பம் தரித்து விட்டால் மாத்திரம் மிகவும் தோஷமான தென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதே ஸ்மிருதி பிராயச்சித்த காண்டம் 7வது அத்தியாயம் 23வது சுலோகத்தில் பூமியானது எப்படியோ அப்படியே ஸ்திரீகளுமாகையால் அவர்கள் தூஷிக்கத் தக்கவர்கள் அல்லர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதன் விரிவுரையில் பூமியை யார் தொட்டாலும் உபயோகப்படுத்தினாலும் எப்படி சுத்தி செய்வதன் மூலம் அங்கிகரிக்கப் பட்டிருக்கிறதோ அப் படியே ஸ்திரீகளும் சண்டாள சங்கமம் செய்த ஸ்திரீகளும் பிராயச்சித்தம் செய்து அங்கீகரித்துக் கொள்ளலாம் என்று எழுதி இருக்கிறது.
அன்றியும் எருமை, கழுதை, ஒட்டகம் இவைகளையும் புணரும் பிராமணன் ஒரு நாள் உபவாசமிருப்பதால் சுத்தனா கிறான் என்று அதேஸ்மிருதி அதே அத்தியாயம் 14வது சுலோகத்தில் சொல்லியிருக்கிறது. இது போலவே தனது தாயையும் குமாரத்தியையும் சகோதரி முதலியவர்களையும் புணரும் படியான திலும் அறிந்தும் அறியாமலும் நிலையாகவும் நடந்துகொள்ளும் விஷ யத்திலும் பிராயச்சித்தங்கள் சொல்லி இருக்கிறது. இப்பிராயச்சித்தங்களில் பெரும் பாலும் பிராமணருக்குக் கொடுக்க வேண்டியதும் பட்டினி முதலியவை இருக்க வேண்டியதுமான சாதாரண பிராயச்சித்தங்களேதான், இன்னும் அதுகளில் உள்ள ஆபாசங்கள் அநேகம். இவற்றை நாம் எடுத்துச் சொன்னதின் கருத்து என்னவென்றால் எப்படிப்பட்ட யோக்கியர்கள் நம்மை சூத்திரர்கள் அதாவது பார்ப்பனர்களுடைய வைப் பாட்டி மக்கள், பார்ப்பனருக்குத் தொண்டு செய்யக் கடவுளால் பிறப்பிக் கப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள் என்பதைக் காட்டவும் நமது நாகரிகங் களுக்கும், அவர்களது நாகரிகங்களுக்கும் உள்ளவித்தியாசத்தைக் காட்டி யார் உயர்ந்தவர்கள் யார் தாழ்ந்தவர்கள் என்பதைக் காட்டவுமேதான் எடுத்துக் காட்டி இருக்கிறோம்.
தற்காலம் நமது நாட்டில் உள்ள மக்களின் உணர்ச்சியும் அதனால் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியையும் நன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிற பார்ப்பனர்கள் பார்ப்பன மகாநாடு கூட்டி நாம் பிராமணர்கள்தான் மற்ற வர்கள் நமது வைப் பாட்டி மக்கள்தான், சண்டாளர்கள்தான் என்பதாகத் தீர்மானம் செய்திருப்பதாக வெளிப்படுத் துவார்களானால், அவர்களின் தைரியத்யும் அயோக்கியத்தனத்தை யும் என்னவென்று சொல்வது இன் னமும் அம்மகாநாட்டில் தீர்மானித்து இருக்கும் தீர்மானப் பிரகாரம் ஒவ்வொரு கிராமத்திலும் பார்ப்பனிய சபைகளும் பிரசாரங்களும் நடைபெற வேண்டுமென்றும் பார்ப்பனரல்லாதார் கோரும் சீர்திருத்தங்களை யெல்லாம் கண்டித்தும் தீர் மானங்கள் செய்யப்பட்டி ருப்பதுடன் மகாத் மாவின் சமூகத்திருத்தக் கொள்கை களையும் கண்டித்துப் பேசப் பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்திற்கு அரசாங்க உத்தியோகஸ் தர்களும் நீதி நிர்வாக இலாக்காகளில் தீர்ப்புச் சொல்லக்கூடிய அதிகாரி களும் சம்பந்தப்பட்டிருப் பார்கள் என்றால் நமது சுயமரியாதையைப் பொருத்த அல்லது சுயமரியாதை விஷ யம் சம்பந்தப்பட்ட விஷயங் களில் இவர்களுடைய தீர்ப்பு கள் எப்படி இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? என்று கேட்கிறோம். இந்தக் கூட்டத்தார் தானே அரசிய லிலும் நமக்குச் சுயராஜ்ஜியம் வாங்கிக் கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாங்கிக்கொடுக்கும் சுயராஜ் ஜியமும் நமது பெண்கள் மலையாளம் போல் அவர்களுக்கு வைப்பாட்டிகளாக இருக்கத்தானே அல்லாமல் வேறு என்ன விதமான சுயராஜ்ஜியம் இவர் களால் வரக்கூடும், என்பது நமக்கு விளங்கவில்லை.
மகாத்மா கேட்கும் சுயராஜ்ஜியமே இந்த பார்ப்பனர்களுக்கு தேசத் துரோகமாய் பார்ப்பனத்துரோகமாய் இந்து மதத் துவேஷமாய் போய்விட்டது. இப்படியிருக்க நம்மவர்கள் இதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் இனியும் வயிற்றுப் பிழைப்புச் சண்டையே அதாவது பார்ப்பனர்கோரும் சுயராஜ் ஜியச் சண்டையே பலமாகக் கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்தப் பாழும் சுயராஜ்ஜியத்தினால் யாருக்கும் என்ன பலன் கிடைக்கப்போகிறது. என்பது இன்னமும் பாமர மக்கள் அறியாததே நமது நாட்டில் துர திஷ்டமாயிருக்கிறது, அறிந்திருந்தால் இந்தப் பார்ப்பனசம்மேளனக் கொடுமை இன்னும் நமது நாட்டில் உயிர் வைத்துக் கொண்டிருக்க நியாயமே இல்லை. ஆதலால் பார்ப்பனரல்லாத மக்களே! இந்தப் பார்ப்பனக்கொடுமையில் இருந் தும் அவர்களது வைப்பாட்டி மக்கள் என்கிற இழிகையில் இருந்தும் தப்ப என்ன ஏற்பாடுகள் செய்யப் போகி றீர்கள்? கிராமங்கள் தோறும் சுய மரியாதைச் சங்கங்கள் ஏற்படுத்தி பார்ப்பனக் கொடுமையை ஒழிப்பது தவிர நமக்கு வேறுகதியில்லை, சுயராஜ்ஜியப் பேச்சு பேசிக்கொண்டு பார்ப்பனர்கள் காலுக்கு முத்தமிட்டுத் தேசத்தின் பேரால் பிழைப்பவர்கள் பிழைக்கட்டும் சுயமரியாதையில் கவலை யில்லை. உள்ளவர்கள் இந்த வேலை பார்த்தால் போதும்.
- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 19.06.1927

29-09-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2

Saturday, September 21, 2013

தாழ்த்தப்பட்டவரை கொச்சைப்படுத்தினாரா தந்தை பெரியார்?

தந்தை பெரியார் தேவைக்கான உச்சக்கட்டம் இது. வரலாற்றுப் போக்கால் ஆரியத்தை, வருணாசிரமத்தை வைதீ கத்தை வீழ்த்தி புத்தம் எழுந்தது. பிற் காலத்தில் பக்தி மார்க்கம் சூழ்ச்சியால் கோலோச்சி பவுத்த சமண மார்க்கங் களைச் சாய்த்தது.
பல நூற்றாண்டுகளுக்குமுன் பவுத்தமும், சமணமும் தோற்ற இடத்தில் தந்தை பெரியார் என்ற ஒரு வரலாற்றுப் பெருமான் எழுந்தார்.
ஆரியத்தின் ஆணி வேர் பக்க வேர், சல்லி வேர்களை சொல்லிச் சொல்லி வெட்டி வீழ்த்தினார்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச் சாரம் பெரு வெள்ளமானது; - சூறாவளி யாகச் சுழன்றது; சுனாமியாக வீறு கொண் டது. தந்தை பெரியார் தமிழ்நாட்டில் மூட் டிய தீ இந்தியா முழுமையும் ஒடுக்கப் பட்ட மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந் திருக்கிறது.
சூத்திரா என்ற அமைப்பு உத்தர பிரதேசத்தில் உதித்தது. இராமனுக்கு அங்கும் செருப்படி விழுந்தது. டில்லியில் பெரியார் மய்யம் எழுந்தது. கொல் கத்தாவில் பெரியார் மய்யம் தேவை என்ற விண்ணப்பம் தமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்காவின் சிகாகோவை தலைமை மய்யமாகக் கொண்டு எண்டிசையும் ஈரோட்டு வேந்தரின் சிந்தனைச் செல் வங்கள் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.
யானைக்கு மதம் பிடித்தாலும் ஆபத்து; - மனிதனுக்கு மதம் பிடித்தாலும் ஆபத்தோ, ஆபத்து! உலகம் மத யானை யின் அச்சுறுத்தலால் பெரும் அபாய வட்டத்துக்குள் சிக்கி மூச்சுத் திணறுகிறது.
மத அடிப்படைவாதிகள் அனைத்து மதங்களிலும் மூர்க்கமாக எழுந்துள்ளனர். இந்தியாவில் இந்துத்துவா என்னும் காவிக் கூட்டம் திரிசூலத்துடன் புறப்பட் டுள்ளது.
அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை ராமஜென்ம பூமி என்று கூறி காவிப் படையினர் துவம்சம் செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் அமைந்த காவி ஆட்சி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித் தது - தலைகளைச் சீவியது. கர்ப்பிணிப் பெண்களைக் கூட சூறையாடியது.
இந்தியாவையே குஜராத் தாக்க துடித்துக் கொண்டு நிற்கிறது. வரவிருக் கும் 2014 மக்களவைத் தேர்தலில் வென்று டில்லி கோட்டையில் காவிக் கொடியை ஏற்றலாம் என்று எச்சில் ஊறி எகிறிக் குதிக்கிறது.
புத்தரை வீழ்த்தி வைதிகம் புத்துணர்வு பெற்றது போல - பெரியாரியத்தை வீழ்த்தி மீண்டும் ஆரியம் அரியாசனத்தில் அமரும் ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதற்குப் பெரும் தடை தந்தை பெரி யாரியல்தான். அதனை நிர்மூலப்படுத் தாமல் தாம் நினைத்தது நடக்கப் போவ தில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டுள்ளனர். பவுத்தத்தை வீழ்த்தியது போல பெரியாரியலையும் வீழ்த்தி விட வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.
இந்தியாவில் 70 சதவிகித ஊடகங்கள் பார்ப்பனர்கள் கைகளில்; இணையதளம் வேறு சேர்ந்து கொண்டு இருக்கிறது. பொய்யை விதைத்து பொய்யை அறுவடை செய்யும் கும்பலாயிற்றே! விதைக்காது விளையும் கழனியாயிற்றே!
தந்தை பெரியார் மீது அவதூறுகளை ஆவேசமாக அள்ளி வீசுகிறார்கள். எந்த வகையிலாவது பெரியாரியலைப் பலகீனப்படுத்த முடியாதா என்பதில் படாதபாடு படுகிறார்கள்.
பெரியார் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? பறச்சி ரவிக்கை போட்டதால் தான் விலைவாசி ஏறி விட்டதாகப் பெரி யார் பேசி இருக்கிறார் என்று பொத்தாம் போக்கில் புழுதி வாரி, தூற்றுகின்றனர்.
பெரியார் எங்கே பேசினார்? எப்பொ ழுது பேசினார்? என்ற விவரங்கள் கிடை யாது. மானாங்காணியாக எழுதுகிறார்கள்.
இந்த அக்கப் போர் குற்றாச்சாற்று தந்தை பெரியார் காதிலும் விழுந்தது.
இதற்குத் தந்தை பெரியாரே பதில் கூறியிருக்கிறார்.
நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும் அதை ஒழிப்பதற்காகச் சொன்னதுதான்; எலெக்சன் நேரத்திலே இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாகச் சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள், அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஒட்டுப் போடாதீர்கள் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். நான் சொன்னது உண்மைதான் நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கைப் போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போடக் கூடாது அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது;
இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன்; இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும்.  நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே யாகும்.
- (சென்னை அயன்புரத்தில் 11.12.1968 மாலை 7.15 மணி அளவில் நடைபெற்ற வேலூர் நாராயணன் அவர்களின் பாராட்டு விழாவில் பேசுகையில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து இந்தப் பகுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது).
(ஆதாரம்: விடுதலை 15.12.1968 பக்கம் 3).
உண்மை இவ்வாறு இருக்க, ஒடுக்கப் பட்ட மக்களுக்காக வைக்கம் வரை சென்று போராடி அதற்காக இருமுறை சிறை வாசமும் கண்டு வந்த வைக்கம் வீரர் பெரியார் அவர்களை கொச்சைப் படுத்துகிறார்கள் என்றால் அவர்கள்தான் கொச்சை மனிதர்கள்; உண்மையைக் காலில் போட்டு மிதித்து பொய்மையில் வயிறு வளர்க்க ஆசைப்படும் அற்பப் பேர் வழிகள்.
தீண்டாதார் எனும் தலைப்பில் 1928 நவம்பர் 8ஆம் தேதி வெளிவந்த குடி அரசில் தந்தை பெரியார் எழுதிய தலை யங்கம் என்ன கூறுகிறது?
தீண்டாதார்
பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமான தென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம். ஏனெனில் அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத் திலோ மற்றும் பல பொதுவாழ்க்கையிலேயோ அவர்கள் முன்னேறவில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5-ல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப்புலிகளுக்கு இதைப்பற்றிக் கவலையிராதுதான். பொறுப்புள்ள பொதுமக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத்துரோகமென்று மாத்திரம் சொல்லுவதற்கில்லை.
இன்னும் எவ்வளவோ பெரிய பாவிகளென்றுதான் சொல்லவேண்டும் சுமார் 25 வருடங் களுக்கு முன்பாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டிருக்குமேயானால் இன்றைய தினமும் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப் பிராய பேதங்களும், ஒற்றுமை யின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும் பிரா மணக்கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா?தெருவில் நடக்கக்கூடாத மனிதனும், கண்ணில் தென்படக்கூடாத மனிதனும், அவனவன் மதத்தை அறியக் கூடாத மனிதனும், அவனவன் தெய் வத்தைக் காணக்கூடாத மனிதனும் இந்தி யாவில் இருக்கக்கூடுமாவென்பதை யோசிக்க வேண்டுவதோடு பொது நோக் குடைய ராஜீய மகாநாட்டில் இதை வலி யுறுத்தி அமுலுக்குக் கொண்டுவரும்படி செய்யவேண்டியது தேசபக்தர்களின் கடமையென்பதை வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். - குடிஅரசு தலையங்கம் - 08.11.1925
பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்றவரும் பெரியார் (குடிஅரசு 11.10.1931)
ஜாதி இழிவு இன்னும் வெளிப் படையாக சூளுரைத்து நிற்கக் கூடிய இடம் கோயில் கருவறையே! அந்த இடத்திற்குத் தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினரும் சென்று அர்ச் சனை செய்யும் உரிமை சட்ட ரீதியாக வர வேண்டும் என்ற கருத்தைச் சொன் னது மட்டுமல்ல; - அதற்காக தம் இறுதி மூச்சு அடங்கும் வரை - அதற்கான களத் திலேயே நின்று மரணத்தைத் தழுவிய தலைவரைப் பார்த்து பன்னாடைகள் புலம் புவதும், புறம்போக்குகள் சபாஷ் போடு வதும் வெட்கக் கேட்டின் எல்லையே!
- மின்சாரம்
21-09-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1

Wednesday, September 4, 2013

சிவன் கன்னத்தில் உதித்தவனாம் விநாயகன்

இந்த அகோர விநாயகர் விழாவிற்குப் பெயர்தான் விநாயகர் சதுர்த்தி முற்காலப் பெண்கள் இதனை விநாயக சவுத்தி - என்பர். இதற்கு வேதியப் புரோகிதர் இட்ட பெயர் சங்கட ஹரசதுர்த்தி விரதம். ஆவணி மாதம், சதுர்த்தி விரதம், ஆவணி மாதம், கிருஷ்ண பட்சம் சதுர்த் தியில் கைக்கொள்ள வேண்டியது. பொன் முதலியவற்றால், (இப்போது களிமண்) கணேச திருவுருவம் செய்து, கலசம் வைத்து, ஆவாகித்து விநாயகர் (சக்தி), அந்தச் செம்புக்குள் புகுந்து கொள்ளச் செய்து, சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்து, பூசித்து, கணேசரை நோக்கி, தமது சங்கஷ்டம் (சங்கடம் - கஷ்டங்கள்) நீக்க வேண்டி, பலகாரங்களும் மற்றும் கொழுக் கட்டை, சுண்டல், வடை, பொரி கடலை, பழம், தேங்காய் வைத்துப் பூசிப்பது. இப்படி கந்தமூர்த்தியால் (விநாயகர் தம்பி கந்தன் அண்ணனுக்கு பிரச்சாரம்) ரிஷிகளுக்குக் கூறப்பட்டது. பின்னர் கிருஷ்ணனால் (மாமன் மருமக னுக்குப் பிரச்சாரம்) பாண்டவருக்குக் கூறப்பட்டது - இது புராண விளக்கம்.
கொழுக்கட்டை ஏன்?
விநாயகன் சிறுவனாக இருந்தபோது, சில ரிஷிகளிடம் விஷமம் செய்தானாம். அவர்கள் இவனைப் பிடித்து, தூணில் கட்டிப் போட்டனராம். பின்னர் அவர் யாரென அறிந்து, விடுவித்து மோதகம் (கொழுக்கட்டை) கொடுத்து அனுப்பின ராம். அது முதல் விநாயகருக்கு கொழுக் கட்டைப் படையல் போட்டு பூசை செய்யப்படுகிறதாம்.
யானைக்குப் பச்சரிசி, தேங்காய் வெல்லம் கலந்து உருண்டை உருண்டை யாக உருட்டி கவளம் கவளமாய் கொடுத்து, விழுங்கச் செய்வது வழக்கமாயிற்றே. இதன்படி திருகல் தேங்காய், வறுகடலைத் தூள், வெல்லக் கூட்டு (பூரணம்) வைத்து பச்சரிசி மாவுக் கொழுக்கட்டைகள் யானைத் தலைப் பிள்ளையாருக்கும் விருப்ப உணவாக்கப்பட்டதா?
இவர் பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட மர்மம் என்ன? யானைப் பசி என்பது அடங்காத பெருந்திண்டிப்பசி. யானை வயிற்றுப் பிள்ளையாருக்கு பெரும் திண்டி ஓயாது தேவைப்பட்டதா? இதனைச் சமாளிக்க, கள்ளக் கடத்தலில் வல்லதான பெருச்சாளியின் உதவியைத் தேடிக் கொண்டாரோ? கஜாயர் என்பதும் இவருக்குப் பட்டம் - கச்சாயம் என்ற வெல்லக் கூட்டு அரிசி மாவு பணியாரத் துக்கும் கஜாயர் என்ற பெயருக்கும் தொடர்புண்டோ?
தோப்புக்கரணம்
பிள்ளையார் முன், பக்தர்கள் எனப்படுபவர்கள் நின்று காதுகளை, கைமாறிப் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவதும், நெற்றியில் (தலையில்) குட்டிக் கொள்வதும் முன்னர் வழக்கம். (இப்போது மிக சொற்பமானவர்) இப்படி ஏன் செய்கிறார்கள் என்பதற்குரிய ஒரு புராணப் புனைச் சுருட்டுக் கதை -கஜமுகாசுரன் (இவனும் விநாயகருக்குப் போட்டியாக, யானை முகத்துடன் பிறந்த வனா?) இந்திரன் முதலிய தேவர்களைப் பிடித்து, தன் முன் நிற்க வைத்து, தலையில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போடச் செய்தானாம். விநாயகர் அந்த கஜமுகா சுரனை அழித்தாராம்.
இந்த அசுரன் சாகும் முன் - தன் முன் இந்திரன் முதலியவர்கள் தோப்புக்கரணம் போட்டதும், தலையில் குட்டிக் கொண் டதும் நீடிக்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டானாம். (தேவர்களுக்கு அவமான நினைவுக்குறி!) இதன்படி விநாயகர், தன்னைக் கும்பிடுபவர்கள் இப்படித் தன் முன் தோப்புக்கரணம் போடவும் தலையில் குட்டிக் கொள்ளவும் கேட்டுக் கொண்டாராம். இதனால் விநாயக பக்தர்களும் இப்படிச் செய்து வருகிறார்களாம். இது தோல்வி அடிமைத் தனத்தை ஒப்புக் கொள்ளும் அவமான - தண்டனையல்லவா? இதைச் செய்வதால், இதில் என்ன பக்தியும், மனிதர்களுக்குத் தொடர்பும் இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
அசுரன், இந்திராதிகளை அவமானப் படுத்த, தண்டிக்க தோப்புக்கரணம் போடச் செய்தான். மனித பக்தர்கள் இப்படித் தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொண்டால், தங்களைத் தாங் களே அவமானப்படுத்திக் கொள்வதும், தண்டித்துக் கொள்வதும் ஆகாதா?
இந்திரன் முதலிய தேவர்கள் கஜமுகா சுரன் முன் இப்படிச் செய்ததை விநாயகர் முன் பக்தர்கள் என்பவர்கள் செய்வதென் றால், விநாயகரையும், அசுரனையும் ஒன்றாகக் கருதுகின்றனரா?
இந்தப் பிள்ளையார் தன்னைக் கும் பிடும் மாணவர்களுக்கு முத்தமிழ் அறிவு ஊட்டுவது வெறும் கட்டுக்கதை என்பது உலகறிந்த உண்மை. இப்படித் தமிழறிவுக் குப் பதிலாக, மாணவர்களுக்கு அவமான, தண்டனை முறைதானா பிள்ளையாரால் மாணவர்களுக்குக் கிடைத்த பலன்? பிள்ளையாரிடம் தமிழ் கற்றுக் கொடுக்கக் கேட்டதற்கு, தண்டனை போலும், துவக்கப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவர்களை இப்படிக் காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போடச் செய்வது!
சதுர்த்தி என்றால்...?
சதுர்த்தி என்ற சொல்லுக்கு, அகராதிப் பொருள் - நான்காம் திதி (நாள்); திரும ணத்தில் நான்காம் நாள் அனுஷ்டிக்கும் நோன்பு.
சதுர்த்தி அறை - திருமணத்தில் நான் காம் நாள் இரவு மணமகனும் மணமகளும் கூடும் அறை.
அருள்பெற குறுக்கு வழி
கணபதி தானம் - நூறு கழஞ்சு பொன்னில் கணபதியின் திருவுருவம் விதிப்படி செய்வித்து, வித்தியேசுவரர், (படிப்புச்சாமி) திக்குப்பாலகர்கள் இவர்களுக்கு நடுவில் சிவலிங்கம் தாபித்து, பூசித்து, எட்டு குண்டம் அமைத்து, அக்கினி காரியம் செய்து (ஓமத்தீ வளர்த்து, தூபதீபம் காட்டுதல்); எழுவர் பிராமண ஸ்திரீகளை அவர்கள் புருடருடன் பூசித்து, ஆடையணி கொடுத்து, பிராமணருக்கு (பொன்சிலை) தானம் செய்வதாகும்.
(இதனால் வரவுக் கணக்கு பார்ப்பனப் பெண்களுக்கும் அவர்கள் மூலம் புருடர்களுக்கும், செலவுக் கணக்கு இப்படிப் பொன்சிலை செய்து பூசைகள் நடத்தியவர்களுக்கு)
திடீர்ப் பிள்ளையார்
கணபதிபற்றிய விஷயம் ஆரிய மத வேதங்களிலோ, தமிழகத்தில் சங்க நூல்களிலோ இல்லை.
பவுத்தாயண தர்ம சூத்திரம் போன்ற ஆரிய மொழி நூல்களில் இந்த விநாயகரை மனிதருக்கு இடையூறுகளை உண்டாக் கும் பூதம் (வேதாளம், பிரம்ம ராட்சசன், இருளன், மாடன், கருப்பன்) என்றுள்ளது. இது விளைவிக்கும் கேடுகளிலிருந்து தப்ப வழி சாந்தியாகம் என்றும் கூறப்பட் டுள்ளது.
விநாயகருக்கு தூமகேது என்றும் பெயர். தூமகேது நட்சத்திரம் தோன்றி னால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடு விளையும் என்பர் இந்த பவு ராணிகர்களே. இதிலிருந்து இந்த விநாயகரைக் கும்பிட்டால் - பார்த்தால் கேடு விளையும் என்று அவர்களே ஒப்புக் கொள்வதாகவில்லையா?
இவ்விதம் முதலில் விக்கினம் செய்ப வராகக் கற்பனை செய்யப்பட்ட உருவமே, பின்னர் விக்கினத்தை நீக்கும் சாமியா கவும் அறிவிற்கும், படிப்புக்கும் ஆதிகர்த் தாவாகவும் கருதப்பட்டார். இது உறுதிப் பட்ட - பண்பட்ட அறிவாளர் செயலாகுமா?
பக்த தமிழர்கள் கடிதம் கணக்கு முதலியவை எழுதத் துவங்கினாலும் தலைப்பில் பிள்ளையார் சுழி போடுகிறார் களே - எதற்கு? எழுதுவதற்கு இந்த விநாயகர் விக்கினம் (தடை) செய்வார் - அறிவுத் தடுமாற்றத்தை உண்டாக்குவார் என்ற கற்பனைப் பயத்தாலா? இப்படிப் பிள்ளையார் சுழி போடாமல், பிற மதத் தினர் - இந்துக்களில் சைவர்கள் என்பவர் களிலும் கூட கோடானுகோடி பேர் கடிதங் களும், கணக்குகளும் எழுதுகிறார்களே - தப்பும் தவறும் நேரிடுகிறதே?
தோன்றிய காலம்
கணபதியின் சிற்பம் முதல் இரண்டாம் நூற்றாண்டில்தான் அரைகுறையாக உருவகப்படுத்தப்பட்டது. நான்காம் நூற்றாண்டில்தான் முழு உருவமும், உறுப்புகளும் அளித்தனர் என்பது சிற்பக் கலைஞர் கணிப்பு, பின்னர் பலவகை உருவங்களில் - உட்கார்த்திருத்தல், நடனமாடுதல், பெண்களைத் தழுவிக் கொண்டிருத்தல் முதலிய உருவங்களில் தீட்டப்பட்டன.
முதலில் வடக்கில், அய்ந்து வெவ்வேறு உருவப் பிள்ளையாக இருந்து, பின்னர் அய்ந்து தலைப் பிள்ளையாராக்கப்பட்டார். கணேசனி என்ற பெண் உருவத்தோடும் (விஷ்ணு பெண்ணாகி - ரிஷிகளிடம் பிள்ளைகள் பெற்ற கதைக்கு இது திறமைப் போட்டி போலும்) சில சமயம் பைரவ அம்சத்தோடும் (பைரவன் என்று பெயருள்ள அப்பனான சிவனுக்குப் போட்டி?) பெருச்சாளி வாகனத்தின் மேல் உட்கார்ந்திருந்தும் மயில் (தம்பி கந்தனுக்குப் போட்டி?) தவளை, ஆமை முதலிய வாகனங்களிலும் அமர்ந்தும் உருவமாக அமைத்தனர். பிள்ளைக்கறி சமைத்து பார்ப்பனத் துறவிக்கு விருந்து வைத்த சிறுத் தொண்ட நாயனாரின் மாமியார் ஊரான திருச்செங்காட்டாங்குடி விநாயகருக்கோ, யானை முகம் நீக்கப்பட்டு மனித முகம் தரப்பட்டுள்ளது.
விநாயகர் யானைமுகம் பெற்ற கதையை நம்பாமலோ, பிற மதத்தினர் நையாண்டி செய்ததைக் கண்டோ, இப்படி மனிதமுகப் பிள்ளையார் சிலை செய்து வைத்துக் கொண்டனர் போலும்.
பெருங்குடும்பி பிரம்மச்சாரி
கணபதி நிரந்தர பிரம்மச்சாரி - தாயைப் போல அழகான பெண்ணைத் தேடியபடி, பெண்கள் தண்ணீருக்கு வரும் கிணற்று மேட்டிலும், ஆற்று மேட்டிலும் உட்கார்ந்திருக்கிறார் என்பது ஊரார் பேச்சுக்கதை. ஆனால் அவர் மடிமேல், சக்தியை அமர்த்திக் கொண்டு, வல்லப (சக்தி) கணபதியாக இருக்கிறார் என்றே அவரது அத்தியந்த பக்தி மதத்தினராக காணபதர் கூறுகிறார்.
கணபதி அறிவையும், பயனையும் தருவதால், அவருக்கு புத்தி, சித்தி என்ற தேவிகளும் க்ஷேமம், லாபம் என்று புதல்வர்களும் இருக்கிறார்கள் என்கிறது மற்றொரு புராணம், தென்னாட்டில் சித்தி - புத்தி ஆலிங்கன விநாயகருக்கு ஆலயங்கள் இருக்கின்றனவாம். இந்த கணபதி - பிள்ளையார் எல்லா இடங்களி லும் - கிணறு - குளம் - ஆற்றங்கரைகளி லும், சந்துக்கள், தெருக்கள், கோவில் முன்னணியிலும் இருப்பதால், மற்ற சாமிகளைவிட அதிகமான பூசையும் பெறுவதாக பக்தர்கள் பெருமைப்பட்டுக் கொள்வர். அர்ச்சகர் - தட்சணைத் தொல்லை இல்லாமல் இலவச தரிசன சாமி என்பதால் தாராளமாக பலர் கும்பிட வாய்க்கிறது போலும்!
இத்துடன், ஆவணி மாத வளர்பிறை நான்காம் நாள் (சதுர்த்தி) விநாயகர் (இயற்கைக்கு முரணான முறையில்) பிறந்து வைத்த நாளாகக் கொண்டு பண்டிகை நடத்துகிறார்கள். இவரை அன்று கும்பிடுகிறவர்களுக்குக் கிடைக் கும் பலன் எப்படியிருந்தாலும் இவரது அலங்கோலக் களிமண் பொம்மைகளால் களிமண் பாண்டத் தொழிலாளர்களுக்கும் கடலை, பொரி, தேங்காய், பூ வியாபாரி களுக்கும் கொழுத்த வருவாய் கிடைக் கிறது - கண் கண்ட பலன்? - அவ்வளவு தான். பூசை போட்டவர்களுக்கோ, ஆற்றில், குளத்தில் கடலில் காசைக் கரைக்கின் றனர் - மண்ணுப் பிள்ளையார்களை அவற் றில் போட்டுக் கரைத்துவிடுகிறார்கள். குழந்தைகளுக்கு கொழுக் கட்டை கடலை, பொரி, பழம் கூடுதல் வருமானம்.
பிறந்த கதைகள்! சிரிப்பானி!
ஒரு காலத்தில் சிவமூர்த்தியும் பிராட்டி யும் நந்தவனத்துச் சித்திர மண்டபத்தில் எழுதியிருந்த ஆண் - பெண் யானை களைப் பார்க்க அவற்றினின்றும் கசமுகர் தோன்றினார்.
(அபிதான சிந்தாமணி)
(கண்ணால் பார்த்தாலும் சுவர் சித்திரம் மனிதப் பிள்ளை பெறச் செய்யும் மாயமந்திரமா?) பிரதம மகா சிருட்டியில் சிவமூர்த்தியின் திருக்கண்டத்து உதித் தவர் பிள்ளையார்.
(அபிதான சிந்தாமணி)
- உடுமலை சித்தன் என்கிற பி.வி. ராமசாமி

04-09-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2

Sunday, September 1, 2013

அண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா? அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்?

அண்ணா திமுக, அண்ணா திமுக என்று ஒரு கட்சி இருக்கிறது. அக்கட்சிக்கு நமது எம்.ஜி.ஆர். நமது எம்.ஜி.ஆர். என்ற நாளேடு ஒன்று இருக்கிறது.
அதற்குத் திடீரென இனமானம், தன்மானம், சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கை மீது பாசம் பொங்கிப் பிரவாகித்து விட்டது.
திமுக ஆதரவில் நிறைவேறிய உணவு மசோதாவை வரவேற்கிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறிவிட்டாராம்.
கலைஞர் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே ஒருகணம் நடுக்கம், அச்சம் (ஞாடியை) இவர்களுக்கு ஏற்படுவதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதா, என்ன?
கலைஞர் கட்டினார் என்பதற்காக தலைமைச் செயலகத்தை இழுத்து மூடவில்லையா? கலைஞர் ஆட்சி உருவாக்கியது என்பதற்காக அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தைத் தூக்கி எறிய ஆசைப்படவில்லையா?
புரட்சிக் கவிஞர் பெயரில் அமைந்த நூலகத்தின் கதி என்ன? செம்மொழிப் பூங்கா என்னவாயிற்று? துறைமுகம் - மதுரவாயல் சாலை எனும் மிகப்பெரிய திட்டம் கைவிடப்படவில்லையா? சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்லவில்லையா?
இந்த மக்கள் நலத்திட்டங்களையெல்லாம் தீர்த்துக் கட்டிய ஆட்சி இது - ஒரே காரணம் இவையெல்லாம் மானமிகு கலைஞர் சம்பந்தப்பட்டது என்பதுதான். திமுக ஆதரவுடன் நிறைவேறிய உணவு மசோதா என்ற வார்த்தைகள் வந்து விட்டதாலேயே விட்டேனாபார் என்று வில்லை எடுக்கிறது இந்த அண்ணா திமுக ஏடு. தமிழர் தலைவரைப் பார்த்து கருப்புச் சட்டை ஒரு கேடா என்றும் கேள்வி கேட்கிறது. அண்ணா பெயரில் ஆன்மீக ஏடு நடத்துவதுதானே அண்ணா திமுக!
சின்ன வயதில் வெண்ணெய் திருடி வாலிப வயதில் பெண்ணைத் திருடியவன் பற்றி அண்ணா எழுதியது இந்த கோலிவிளையாட்டுச் சிறுவர்களுக்குத் தெரியுமா?
அத்தகைய அண்ணாவின் பெயரைக் கட்சியிலும் கொடியிலும் வைத்து கொண்டு கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்துக் கூறும் கூட்டத்துக்கு கருப்புச் சட்டை பற்றிப் பேசவோ, அண்ணா பெயரைப் பயன்படுத்தவோ, உச்சரிக்கவோ முதற்கட்டத்திலேயே தகுதி உண்டா! பெண்களும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் பாவ யோனியிற் பிறந்தவர்கள் என்று கீதை (அத்தியாயம் 18 சுலோகம் 44) கூறுகிறது என்பதை அறிவாரா அதிமுக பொதுச் செயலாளர்? அறிந்துதான் கீதையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிக்கை வெளியிடுகிறாரா? பூணூலின் மகத்துவத்தைப் பற்றி நமது எம்.ஜி.ஆர். படம் போட்டு விளக்குகிறது என்றால், திராவிட இயக்கத்திலே பூணூல் புகுந்துவிட்டது என்றுதானே பொருள்?
அண்ணா திமுகவா, அக்கிரகார திமுகவா? அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் நமது எம்.ஜி.ஆர்? நீங்கள் கொடுப்பது நெத்தியடி என்றால் நாங்கள் கொடுப்பது புத்தி அடி!
01-09-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 8

ஆதி திராவிடர் சுயமரியாதை மகாநாடு _ தந்தை பெரியார்

தந்தை பெரியார் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லைவனத்தில்) ஆதி திராவிட சுயமரியாதை மகாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானமாவது:
ஆறரைக் கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது, இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதின் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும், இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியா மலிருக்கும் படியும், சர்க்கார் தஸ்தா வேஜூகளிலும் எங்களை இந்துக்கள் என்ற பதவியிலிருந்து நீக்கி விடும் படிச் சர்க்காரையும், சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது என்ப தாகத் தீர்மானித்திருக்கின்றது.  திருவாங்கூர் ராஜ்ஜியத்திலும் சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக முது குளத்தூர் என்கின்ற இடத்தில் கூடிய ஒரு எஸ்.என்.டி.பி. யோகத் தில்  அதாவது ஈழவ சமுதாய மகா நாட்டில் இதை அனுசரித்த ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது, இந்து மதத்தில் மனித சுதந்திரம் இல்லாததால் இம் மதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போய் விடவேண்டும் என்பதாகும்.
இத்தீர்மானம் ஒன்று வரப் போவதாகத் தெரிந்து சில கிறிஸ்தவ பாதிரிகளும், ஆரிய சமாஜிகளும், புத்தமதப் பிரமுகர்களும் அக் கூட்டத்திற்கு வந்திருந்து தங்கள் தங்கள் மதத்தின் பெருமையை எடுத்துச் சொன்னார்கள்.
திரு ஈ.வெ. ராமசாமியும், அம்மகா நாட்டுக்குப் போயிருந்தார். தீர் மானத்தை ஆதரித்துப் பேசியபோது, இது சமயம் வேறு மதத்திற்குப் போக வேண்டியதில்லை. இனியும் சிறிது காலம் பார்க்கலாம் என்றும், அப்படி மதம் மாறுவதாயிருந்தால் மகமதிய மதத்திற்குப் போவது நல்லது என்றும், ஏனெனில், மதத்தின் பேரால் மக்கள் இப்போது மகம்மதிய மதத்தைக் கண்டால் தான் பயப் படுகிறார்கள் என்றும், அதில் பெண்கள் விஷயம் தவிர, மற்ற வழிகளில் உண்மையான சர்வ சுதந்திரமும் இருக்கிறது என்றும், நமது நாட்டில் உள்ள கிறிஸ்தவ மதம் வரவர பார்ப்பன மதம் மாதிரியாகி வருகின்ற தென்றும், அதிலும் ஜாதி உயர்வு பாராட்டப்படுகிறது என்றும், ஆரிய சமாஜம் என்பது பார்ப்பன மதத்தின் வேறு ஒரு ரூபமே ஒழிய வேறில்லை என்றும், பவுத்தக் கொள்கைகள் இப்போதுள்ள மற்ற எல்லா மதங்களின் கொள்கைகளை விட மேலானது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றும், ஆனாலும் பார்ப்பன மதத்தை அடக்கி நமது நாட்டிற்கு உண்மையான விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமானால் இது சமயம்  மகமதிய மதத்தினால் தான் முடியுமென்றும் பேசினார். பிறகு அவர் சொன்ன படியே இப் போது மதம் மாறவேண்டிய தில்லை என் தீர்மானிக்கப்பட்டது. இப்போது ஆதிதிராவிட மகாநாட்டிலும் சரி யாக அதே போல் இல்லா விட்டா லும், இந்து மதத்திலிருந்து விலகிக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட் டிருக்கின்றது. அப்படியானால் இனி அவர்கள் என்ன பெயரில் அழைக்கப் படுவது என்று சிலர் கேட்கலாம். ஒரு பெயராலும் அழைக்க வேண்டிய தில்லை என்றும், அவசியமானால் இந்தியன் என்று அழைக்கலாம் என்றும் சொல்லுவோம். மேலும் சர்க்காரில் குறிக்க ஏதாவது ஒரு பெயர் வேண்டாமா என்றால், அதற்காக இப்போது இந்தியாவில் உள்ள 20 கோடி இந்துக்கள் என்பவர் களை எப்படி அரசியல் முறையில் மகம்மதியரல்லா தவர்கள் என்று அழைக்கப்படுகின்றதோ, அது போல் 61/2 கோடி தீண்டப்படாத மக்கள் என்பவர்களை இந்துக்களல்லாத வர்கள் என்று அழைக்கலாம் என்று சொல்லுவோம்.
பார்ப்பனரல்லாதவர்களும், மகமதியரல்லாதவர்களும் இருக்கும் போது இந்துக்களல்லாதவர்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது என்றும், அதனால் எவ்வித இழிவும் ஏற்பட்டுவிடாது என்றும் சொல்லுவோம். அப்படி ஓர் இழிவு ஏற்படுவதாயிருந் தாலும் இந்துக்கள் என்ற பெயரை வைத்துக் கொண் டிருப்பதன் மூலம் ஏற்பட் டிருக்கும் இழிவை விட அதிகமான இழிவாய் விடாது என்பது நமது அபிப்பிராயம்.  இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லாத நிலையில்,  அதன் பேரில் மக்கள் அழைக்கப்படுவது மிகவும் அக்கிரமமான செய்கையா கும். அப்படியிருக்க, அதன் பேரால் மனிதனின் உரிமை களை மறுத்து கோயில், குளம், தெரு, பள்ளிக்கூடம் முதலியவற்றின் உரிமை களை மறுப்பது எல்லாவற்றை யும் விட அக்கிரமும் அயோக் கியத்தனமுமாகும். சாதாரணமாக, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதைப் பற்றி நாமே தனித்து சொல்லுவதாகவும், அதைப் பற்றிய படிப்பு சிறிதும் இல்லை என்றும், அதுவும் பார்ப்பனர்கள் மீது துவேஷத்தால் சொல்லுவதாகவும் சிலர் சொல்லுகின்றார்கள்.
ஆனால், இப்போது நமது நாட் டில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வல் லவர் என்றும், சமய ஆராய்ச்சியில் தேர்ந்தவர் என்றும், மிக்க நுண் ணிய அறிவுடையவர் என்றும் பல் லோராலும் மதிக்கப்படும் உயர்திரு வாளர் திருநெல்வேலி கா. சுப்பிர மணியபிள்ளை எம்.ஏ., எம்.எல்., அவர்கள் சுமார் 7, 8 வருடங்களுக்கு முன் செந்தமிழ்ச் செல்வி என்னும் புத்தகத்தில் எழுதி இருப்பதை இங்கு அப்படியே எழுதுகின்றோம்.
முதல் முதல் மக்கள் உள்ளத்தே பதிய வேண்டியது யாதெனில், இந்து மதம் என்ற ஒரு சமயம் உண்மையில் கிடையாது என்பதும், இந்து மதம் என்பது இந்தியா நாட்டிலுள்ள மக்களின் சமயம் என்று கொள்ளப் படும் சிந்து நதிக் கரையில் உள்ளவர் களைக் குறிக்கும் ஹிந்து என்ற பாரசீகச் சொல்லை கிரேக்கர் இந்து என வழங்க, அவர் வழக் கத்தைப் பின்பற்றி மேலை தேசத்தார் யாவரும் இந்நாட்டிலுள்ளாரை இந் துக்கள் எனவும், இந்நாட்டை இந் தியா எனவும் வழங்கலாயினர். இந்து என்ற சொல் இப்பொருளில் ஆரியம், தமிழ் என பண்டைய இரு மொழி நூல்களிலும் கிடையாது.
இந்நாட்டிலே சமயங்களைப் பற்றிச் சிறிதும் அறியாதவர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று கூறுவார்கள்.  அய்ரோப் பியம், அமெரிக்கம், ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னாரது சொற்களும், நாகரிகங் களும் குறிக்கப்படுவதே யல்லாது சமயம் குறிக் கப்படாமை போல, இந்து என்ற சொல்லும் இமயம் முதல் குமரி வரையில் உள்ள மக்களின் நாகரி கத்தைக் குறிப்பதேயன்றி சமயத்தைக் குறிப்பதன்று. இக்கருத்தைச் சுவாமி விவேகானந்தரும் தமது சொற்பொழிவு பலவற்றி லும் சுட்டிக் காட்டி உள் ளார்.  . . ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்தாதல், தலைமை ஆசிரியரை வைத்தாதல், அருள் நூலை வைத்தாதல் எழுது வது முறை. . . கிறித்து மதமும், மகம் மதிய மதமும் தங்களது தலை வரின் பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டுள் ளன. அவ்வாறே புத்த மதமும் ஆருகத முமாம். ஆனால் இந்து என்ற சொல்லோ சமயக் கருத்து யாதொன்றையும் குறித் தில்லை.
இக்குறிப்பில் திரு பிள்ளை அவர்கள் சுவாமி விவேகானந்தரும் இதே அபிப்பிராயம் கொண்டதாகக் கூறியிருக்கிறார். எனவே இப்படி ஓர் அர்த்தமே இல்லாத வார்த்தையின் பேரால் மதம் என்று ஒன்றைக் கற் பித்துக் கொண்டு, சமயத்திற் கேற்றபடியெல்லாம் கொள்கை களைச் சொல்லிக் கொண்டு, 20 கோடி மக்களையும், பல வளப்பமுள்ள ஒரு பெரிய தேசத்தையும் பாழாக்கி வருவதை இனியும் எத்தனை காலத்திற்கு மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பது என்பது விளங்கவில்லை.
இதைப் பற்றி மற்றொரு சமயம் டாக்டர் எஸ். சுப்பிரமணிய அய்ய ரான ஒரு பார்ப்பனர் அவர்கள், காமன்வீல் என்ற பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-
இந்துக்களின் தற்கால நிலை மையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாகச் சீர்குலைந்து அலங் கோலப்பட்டு இடிந்து பாழாகிக் கிடக்கும் மதம் இந்து மதம் என்றும், பழைய கோட்டை அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்கு படுத்தி முட்டுக் கொடுத்துப் பழுது பார்த்தாலும் பயன்படாது. தயவு தாட்சண்யமின்றி நெட்டித் தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதி அடிப்படை களின் மீது நமது தற்கால அவசியத் திற்கும்,  உபயோகத்திற்கும் ஏற்ற தாகச் சாதாரணமான புதுக்கட்டடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்று தோன்றுகின்றது என்று எழுதி இருக்கின்றார்.
இன்னும் அநேக பெரியோர் களும் ஆராய்ச்சியாளர்களும் இதே அபிப்பிராயம் கொண்டிருக்கின் றார்கள். இந்நிலையில் குழந்தை மணத்தைத் தடுக்கவும், மக்கள் தெருவில் நடக்கவும், சாமிகளின் பேரால் கோயில்களில் நடக்கும் விபச்சாரத்தனத் தைத் தடுக்கவும், சிறு குழந்தைகளைப் படுக்கை அறையில் தள்ளுவதை ஒழிக்கவும் செய்யப்படும் முயற்சிகளை இம் மாதிரி ஒரு பொய் மதம் தடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் எந்த விதத்தில் மானமும், வீரமும், யோக்கியமும் உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்.
எனவே, ஆதிதிராவிட மக்கள் தங்களை எப்படி இந்துக்கள் என் கின்ற பதிப்பில் பதியக்கூடாது என்கின்றார்களோ, அது போலவே நாமும் சொல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஏனெனில் இந்துக்கள் என்கின்ற பதிப்பில் நம்மைப் பதிந்து கொள்ள நாம் சம்மதிப்பதனால், நமக்கு ஆதி திராவிடர்களை விடக் கீழான நிலையான சூத்திரன் என்கின்ற பதவிதான் கிடைக்கின்றது. அதை நீக்கிக் கொள்ள இதுவரை எந்தச் சீர்திருத்தக்காரரோ, சட்டசபைப் பிரதிநிதியோ, வேறு எந்தச் சமூகத் தவரோ  முயற்சித்ததாகத் தெரிய வில்லை. ஆஸ்திகம் போச்சு கடவுள் போச்சு மதம் போச்சு  சமயம் போச்சு புராணம் போச்சு கலை போச்சு என்று கூப்பாடு போட்டுக் கூலி பெற நம் நாட்டில் ஆட்கள் மலிந்து கிடக்கின்ற தேயல்லாமல், மானம் போச்சு, மனித உரிமை போச்சு, மிருகத்திலும் கீழாச்சு என்று சொல்லி மனிதத் தன்மை பெற யாரையும் காணோம். எனவே நாமும் ஆதி திராவிட சகோதரர்கள் போலவே நம்மையும் இந்து என்னும் தளையில் இருந்து பிரித்துவிடு என்று கேட்கும் நாள் சீக்கிரத்தில் வரும் என்றே கருது கிறோம்.
- தந்தை பெரியார் அவர்கள் கட்டுரை (`குடிஅரசு, 21.7.1929)
01-09-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2

Sunday, August 25, 2013

மதமும் சாமியும் - தந்தை பெரியார்

இன்று நான் குறிப்பிட்ட நேரத் திற்கு வந்து சேர்ந்து விட்டேன். ஆனாலும் மிக்கக் களைப்போடு வந்திருக்கிறேன். சரியாக 24 மணி நேரம் இரயிலில் பிரயாணம் செய்து விட்டு - 10, 15 மைல் மோட்டாரிலும் வந்திருக்கிறேன். ஆகையால் இன் றைய விஷயத்தைப் பற்றி நான் சரிவரப் பேசமுடியா தென்றே கருது கிறேன். அன்றியும் அதிக நேரமும் பேசமுடியாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
நிகழ்ச்சிக் குறிப்பில் எனக்கு இன்று குறிப்பிடப்பட்டிருக்கும் விஷ யம் "இந்தியப் பொருளாதாரம்" என்பதாகும். இது என்னைக் கேட்டுப் போட்டதல்ல என்றாலும், எந்தத் தலைப்பிலானாலும் என்னுடைய சங்கதி ஏதோ அதைத்தான் சொல் லுவது என் குணம் என்பது நீங்களும் தலைவரும் அறிந்ததேயாகும். ஆனா லும் பொருளாதாரம் என்னும் தலைப்பும் மிக்க நல்ல தலைப்பே யாகும். இதன் மூலம் எனது சங் கதியைச் சொல்ல முடியாவிட்டால் பின் எதன் மூலம்தான் சொல்லக் கூடும்? ஆனால், எனக்கிருக்கும் கஷ்டமெல்லாம் அதிக நேரம் பேசமுடியாதென்பதேயாகும். ஆதலால் மன்னிக்கக் கோருகின்றேன்.
சகோதரர்களே! பொருளாதாரம் என்கின்ற வார்த்தை நம்ம நாட்டில் தற்காலம் உள்ளதுபோல் முன் காலத் தில் இருந்ததாகச் சொல்ல முடியாது. முன்காலத்தில் எல்லாம் பொருளை உடைத்தாயிருக்கவும், பணம் காசைக் கையாளவும் சிலருக்கே உரிமை இருந் தது. மற்றவர்களுக்குத் தானியம் தவிர வேறு ஒன்றும் பெற உரிமை கிடையாது. நாட்டு வழக்கிலும் பணங் காசு - புழக்கமும் கிடையாது. எல்லா வாழ்க்கையும் பண்டமாற்றை அடிப் படையாகக் கொண்ட தாகவே இருக் கும். ஒரு பண்டத்தைக் கொடுத்து மற்றொரு பண்டத்தை வாங்கிக் கொள்ளுவார்கள். கைத்தொழில் காரர்கள், கூலியாள்கள், ஏவான்கள் எல்லோருக்கும் தானியமே கொடுப் பது வழக்கம். மந்திரிகளுக்கும் அரசன் பூமி மானியம் விடுவதே தவிரப் பணமாக ஏதும் கொடுப்ப தில்லை. எனக்குத் தெரிய 40,50 வருஷங் களுக்கு முன் வேஷ்டி கொடுப்பவன், உலோகப் பாத்திரம் கொடுப்பவன், நகை செய்து கொடுப் பவன். தோட்டங்களுக்குக் கலப்பை, ஏர், செய்து கொடுப் பவன், செருப்புத் தைத்துக் கொடுப்பவன், சுவர் வைப் பவன் முதலிய வர்கள் எல்லோரும் தானியம் தான் வாங்கிக் கொள்ளு வார்கள். சில ஆட்களுக்கு வருஷத் திற்கு இவ்வளவு என்று இருக்கும்.
பெருத்த மிராசுதாரர்களிடம் பார்த் தாலும் தானியத்தைத் தான் பூமியில் பெரிய பெரிய குழிகள் ஆழமாக வெட்டி, போட்டு வைத்திருப்பார்கள். பண்டமாற்றைத் தவிர சாதாரண ஜனங்கள் பணமாய்ப் பார்ப்பது மிக்க அபூர்வமாகவே இருக்கும். பெருத்த மிராசுதாரர்களிடமும், அரசாங்கப் புழக்கம் முதலியவற்றிலும் பணம் புழங்கினதானாலும் அதுவும் மிகச் சிறு நாணயமாகத் தான் இருக்கும். ரூபாய் என்கிற பெயர் கூட இந்த நாட்டுப் பாஷையல்ல. நாணயமும் அல்ல. சின்னப்பணம் அதாவது ரூ 1க்கு 10 கொண்டதாக இருக்கும். விலை பேசுவதிலும் எத்தனை பணம் என்றுதான் கேட்பார்கள். செல்வ முள்ள வனையும் பணக்காரன் என்று தான் சொல்லுகின்ற வழக்கம் இன்றும் உண்டு. அரசியல் அபராதம் முதலியவற்றிலும் 100 பணம் 200 பணம் 500 பணம் என்று பணக் கணக்கில் தான் கணக்குச் சொல்லு வதாகும். சமீப காலம் வரை கூட மலையாளத்தில், திருவாங்கூர் - கொச்சி ராஜ்ஜியத்தில் சிவில் கோர்ட் டில் ரூபா என்று பிராது போடுவ தில்லை. 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிராது போடுவதா னாலும் அதைப் பணமாகப் பெருக்கி அந்தப் பண எண்ணிக் கையைக் காட்டித்தான் பிராது போடும் வழக்கம் இருந்து வந்தது. சில இடத்தில் இன்றும் இருக்கிறது.
ஆகவே ரூபாய் என்பதும், பவுன் என்பதும் வெளிநாட்டு நாணயங்கள். அவை நம் நாட்டிலே புழங்கக் கூடிய நிலை ஏற்பட்டதே பொருளாதார நிலையில் நம் நாடு முன்னையை விடச் சற்று உயர்வடைந்தது என் பதைக் காட்ட அறிகுறியாகும். எனவே பொது வாகப் பார்த்தால் பொருளா தாரம் நம் நாட்டில் குறைவு என்று நான் சொல்ல மாட்டேன். மற்ற நாட்டை விட இந்த நாடு பொருளாதாரத்தில் குறைந்த தல்ல. இந்தியாவை நம்பி அனேக நாடுகள் தங்கள் வாழ்வை நிச்சயித்துக்
கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் பொருளாதாரத்தில் நாட்டமில்லையானால் வெள்ளைக் காரனுக்கு இங்கு வேலையில்லை. இது போலவே இதற்கு முன் வெளி நாட்டிலிருந்து இந்த நாட்டுக்கு வந்த அரசர்களுக்கும் அவர்களுக்கும், முன் வந்த ஆரியர்களுக்கும் இந்த நாட்டில் வேலையே இல்லை.
ஆகவே இவ்வளவு உயர்ந்த பொரு ளாதார நிலையுடைய இந்திய நாடு இந்த நாட்டு மக்களில் பெரும்பான் மையான பேர்களை வயிறார உண்ணவும், இடுப்பார உடுக்கவும், மானமோடு பிழைக்கவும் முடியாதபடி வேறு பல காரியங்கள் கொடுமைப் படுத்துகின்றன. அவற்றில் முக்கிய மானவை மதமும், கடவுளும், அடுத்த ஜென்மமுமேயாகும்.
மனிதன் எவ்வளவு சம்பாதித் தாலும், மனிதனுக்கு எவ்வளவு கிடைத்தாலும், எவ்வளவு விளைந் தாலும் அனேகமாய் எல்லாவற்றையும் மேல் கண்ட மூன்றுமே அபகரித்துக் கொள்ளுகின்றன. அதிலும் உலகத் தில் வேறு எப்பாகத்திலும் காண முடியாத மாதிரி இந்த நாட்டில், இம் மூன்றினாலும் பிழைப்பதற்கென்றே பிறவியை ஆதாரமாகக் கொண்டு சில வகுப்புகள் ஏற்பட்டு, அந்த நிலை களைக் காப்பாற்றிக் கொண்டு பாடுபடாமல் வயிறு வளர்ப்பதோடு, சகல போக்கியங்களையும் தங்க ளுக்கே உரிமையுமாக்கிக் கொண்ட தால், இந்த உலகம் உள்ள வரை இந்தியாவின் பொருளாதாரம் இப்படியே இருக்கும்படியாக ஏற்பட்டு விட்டது. அது மாத்திர மல்லாமல் இந்த நாட்டில் அரசனுக்கும் குடி களுக்கும் இருக்கும் முறையும், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இருக்கும் முறையும், மிராசுதாரனுக் கும் குடியான வனுக்கும் இருக்கும் முறையும், படித்தவனுக்கும் படிக்காத வனுக்கும் இருக்கும் முறையும், மேல் ஜாதிக்காரனுக்கும் கீழ்ஜாதிக்காரனுக் கும் இருக்கும் முறையும் பார்த்தால், இந்த நாட்டு மக்களில் 100க்கு 90 பேர்களுடைய பொருளாதார நிலை இன்றைய நிலையைவிடக் கடுகு அளவு கூட மாறி முன்னேற்ற மடைய முடியவே முடியாது என்பது எனது உறுதி. ஆகவே இம்முறைகளும், முன் சொல்லப்பட்ட மதம், கடவுள், அடுத்த ஜன்மம் ஆகிய கொள்கைகளும், இந் தியா எவ்வளவு வளம் பொருந்திய நாடானாலும், செல்வம் பொருந்திய தானாலும், பொன்விளையும் "புண் ணிய" பூமியானாலும், தபோதனர்கள், அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன் மார்கள், முனிகள், ரிஷிகள், மகாத் மாக்கள் பிறந்த நாடானாலும், பஞ்சநதி, அஷ்டநதி, ஜீவநதியாய் ஓடுகின்ற நாடானாலும், தரித்திரமும், கூலியும், இழிவும், பஞ்சமும், நோயும் இந்தியாவுக்கு நிரந்தரச் சொந்தமான தேயாகும் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.
நம்முடைய பொருளாதாரக் கஷ்ட மெல்லாம் முதலாவது, அனாவசிய மான செலவுகளும், அவற்றிற்கும் அதிகச் செலவுகளுமாகும். இந்திய மக்களின் 100க்கு 90 பேர்களுடைய சம்பாதனைகள் அனாவசியமான வற்றிற்கும், குருட்டுப் பழக்கம், மூட நம்பிக்கையானவற்றிற்கும், சோம் பேறியாய் வாழ்கின்றவர்களின் சுக போகத்திற்கும் செலவு செய்யப்படுவ தனாலேயே வீணாய் விடுகின்றன.
இரண்டாவது, சுலபத்தில் ஒரே பக் கமாகப் பொருள் களெல்லாம் போய்ச் சேரும்படியாகியும் விடுகின்றன.
மூன்றாவதாக, மனிதனுக்கு உள்ள நேரமும், சக்தியும் குறைந்த வரும் படிக்கே செலவாகும்படியான முறை களே இங்கு வெகு காலமாய் இருந்து வருகின்றன. அதாவது,
புத்தியைச் செலவழித்து, குறைந்த நேரத்தில் அதிகமான வேலைகள் நடைபெறவும், அதனால் அதிக சம்பாதனை அடையும் மார்க்கம் தேடவுமான துறையானது அடியோடு அடைபட்டுப் போய்விட்டது. இத்தி யாதி காரணங்களே இந்தியாவின் பொருளாதாரத்தின் குறைவிற்குக் காரணங்களாகும்.
சாமி, பூசை, உற்சவம், புண்ணி யம், யாத்திரை ஆகியவற்றின் பெயரால் தனித்தனிச் செலவும், அவற்றிற்காக நடைபெறும் பொது ஏற்பாட்டுச் செலவும் கணக்குப் பார்த்தால், மனி தனின் மொத்த வரும்படியில் ஒரு குறிப் பிட்ட பாகம் வீணாவதைக் காணலாம்.
பிறகு, மதத்தைக் காரணமாய் வைத்து ஏற்பாடுகள் செய்திருக்கும் சடங்குகளையும், அவற்றிற்காகும் செலவுகளையும் கணக்குப் பார்த்தால், அதுவும் ஒரு குறிப்பிட்ட பாகத் தைக் கவர்ந்து கொள்வதைப் பார்க்க லாம்.
மற்றும், மனிதன் வாழ்க்கையில் பிரவேசிக்கும் போதே பெரும்பான்மை யோர் அவர்களது கல்வி, கல்யாணம் முதலிய வற்றால் ஏற்பட்ட கடனின் பேரிலேயே வாழ்க்கையைத் தொடங்க வேண்டியிருக்கின்றது. இவை எல்லாம் சேர்ந்து அவசிய மான காரியங்களுக்குப் பொருள் இல்லாமல் கஷ்டப்படும்படிச் செய்து விடுவதுடன், சதா தரித்திரர்களாகவும், கடன்காரர் களாகவும் இருக்கவேண்டிய தாய் இருக்கின்றது.
இவை மாத்திரமல்லாமல், நாட்டின் பொருளாதார நிலையை விருத்தி செய்ய அவசியமான பொதுத் தொழிற் சாலைகள், யந்திர சாலைகள் முதலியவை ஏற்பாடு செய்வ தற்கும் மார்க்கமில்லாமல், பொருள்களை எல்லாம் மேல்கண்ட சடங்குகளும், வாழ்க்கை முறைகளும் கவர்ந்துக் கொள்வதோடு, கோவில் கட்டுதல், சாமிக்கு நகை, வாகனம் முதலியவை செய்துவைத்தல், மற்றும் உற்சவம், பூசை ஆகியவற்றிற்குப் பண்டு, பூமிகள் முதலிய சொத்துகள் ஒதுக்கி வைத்தல் ஆகிய காரியங்கள் பெரும், பெரும் தொகைகளைக் கவர்ந்து கொள்ளுகின்றன.
ஆகவே, இந்த மாதிரியான எல்லாம் - எல்லாப் பொருள் களும் நாசமாகிக் கொண்டும், வீணாகிக் கொண்டும் இருக்கையில், இந்த நாடு எந்தக் காலத்தில்தான் - எந்த வகையில்தான் பொருளா தாரத்தில் சீர் அடைய முடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நம் நாட்டுப் பொருளாதாரக் கஷ்டத்திற்கு மற்றொரு காரணத் தையும் சற்றுக் கவனித்துப் பாருங்கள். நம்முடைய வாழ்க்கைத் தன்மையை மேல் நாடுகளைப் பார்த்து நாளுக்கு நாள் செலவை அதிகரித்துக் கொண்டு வருகின்றோம். போக போக்கியங் களை அதிகப் படுத்திக் கொள்ளு கின்றோம். முன்னையை விட அதாவது 30,40,50 வருஷங்களுக்கு முன் நாம் இருந்ததை விட அதிகமான ஆடம்பரங்களை விரும்புகின்றோம். மேல்நாட்டு நடை, உடை பாவனை களைக் கண்டு காப்பியடித்துப் படிப்படியாக உயருகின்றோம். இவை எல்லாம் நமக்குத் தகாதென்றோ, குற்றமேன்றோ சொல்ல வரவில்லை. ஆனால், மேல்நாட்டார் எப்படித் தனது பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டே தனது வாழ்வின் சுக போகத்தையும் உயர்த்திக்கொண்டு போகின்றனரோ அதுபோலவே, நாமும் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டும், வாழ்க்கைத் தன்மையின் அவசியத்திற்கேற்ற வரு வாய்க்கு வகை செய்து கொண்டும் தானே அதில் பிரவேசிக்க வேண்டும். அதுவுமில்லாமல், இதுவு மில்லாமல் வெறும் மனப்பால் குடிப்பதில் என்ன பயன் அடையக்கூடும் என்பதை யோசித்துப் பாருங்கள். மேல் நாட் டான் குறைந்த நேரத்தில் அதிக வேலை செய்து நம்மைப் பார்க்கிலும் பன்மடங்கு இலாபம் அடை கிறான். அதனால் அவர்கள் சுகமனுபவிக்க மார்க்கம் ஏற்படுத்திக் கொள்ளு கிறார்கள். நமக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 அணா. மேல் நாட் டானுக்கு ஒரு நாள் சராசரி வரும்படி 2 ரூபாய். இதற்குக் காரணம் அவன் வேலை துரிதமே ஒழிய, வேலை சாமர்த்தியம் அல்ல என்பதை ஞாபகத் தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் 10 மணி நேரம் செய்யும் வேலையை மேல் நாட்டான் ஒரு மணி நேரத்தில் செய்து விடுகிறான். அதற்கேற்ற சாத னங்களை அவன் கையாளுகிறான். அதற்காகவே மேல் நாட்டுச் செல் வத்தையும், அறிவையும், ஊக்கத்தை யும் செலவு செய்து அந்த நிலை அடைந்திருக்கின்றான். அப்படிப்பட்ட வனைப் பார்த்து வேலை செய்வ திலும், சம்பாதிப்பதிலும் காப்பி அடிக் காமல் அதாவது, அதுபோல் நடக்கா மல், அவன் அனுபவிப்பதில் மாத்திரம் காப்பி அடித்து, அவனைப் போல் நடக்க ஆரம்பித்தால் சாத்தியப்படுமா? - பொருளாதாரம் இடம் கொடுக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்.
நமது நாட்டுப் பொருளாதார நிபுணர்கள் செத்துப் போன கைத் தொழில்களை உயிர்ப்பிக்க வேண்டும் என்கின்றார்கள். உதாரணமாக இராட் டினத்தில் நூல் நூற்கவேண்டும், கைத்தறியால் வேஷ்டி செய்ய வேண்டும் என்கின்றார்கள். போதாக் குறைக்கு தக்களியில் நூல் நூற்பது தேசியப் பொருளாதார பக்தியாக, குழந்தைகளும் நாமும் கற்பிக்கப்படு கிறோம். ஒரு நாளைக்கு ஒரு பெண் இராட்டினத்தில் நூல் நூற்றால், கால் ராத்தல் அல்லது காலேவீசம் ராத்தல் நூற்று 1அணா அல்லது அதிகமானா லும் 0-1-6 அணா கூலி தான் அடை யக்கூடும். அதுவும் வெகு மோசமான சரக்கைத்தான் உற்பத்தி செய்யக் கூடும். மேல்நாட்டானோ ஓர் ஆள் ஒரு நாளையில் இதை விடக் குறைந்த நேரத்தில், இதை விடக் குறைந்த கஷ்டத்தில், இதைவிட உயர்ந்த சரக்காக 5 ராத்தல் 6 ராத்தல் நூற்று, தினம் இரண்டு ரூபாய் சம் பாதிக்கிறான். ஆகவே மேல் நாட்டார் தினம் 2 ரூ சம்பாத்தியத்திற்கும், நம் நாட்டான் தினம் 2 அணா சம்பாதிக் கவும் இதுவும், மற்றும் இது போலவே விவசாயத் துறையிலும், வியாபாரத் துறையிலு முள்ள காரணங்களாகு மேயல்லாமல் வேறு ஒரு காரணமு மல்ல. சமூக சீர்திருத்தம் சம்பந்த மான விஷயங்களுக்கு, நம் பண்டி தர்கள் எப்படித் தொல்காப்பியர் காலத்திற்குப் போய் ஆராய்ச்சி செய்து அந்தக்கால நாகரி கத்தைக் கொண்டு சமூக முன் னேற்றம் செய் யப் பார்க்கின்றார்களோ அது போலவே, நமது தேசியப் பொரு ளாதாரப் பண்டிதர்கள் அதைவிட முந்திய காலத்திய கைத்தொழில் களைக் கண்டுபிடித்து, அந்தத் துறை யில் பொருளா தாரத்தை முன்னுக்குக் கொண்டுவரப் பார்க்கின்றார்கள்.
ஆகவே, இந்தியப் பொருளாதார நிலைக்கு இந்தியர்களும், அவர்களது மதமும், கடவுளும், சடங்குகளும், கர்நாடகத்தில் (பழமையில்) பித்துக் கொண்ட தலைவர்களுமே காரண மல்லாமல் வேறு ஒன்றும் முக்கியக் காரணமல்ல என்பது என் அபிப் பிராயம்.
சகோதரர்களே! வருஷம் ஒன் றுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் மதம், கடவுள், சடங்கு ஆகியவற்றிற் குச் செலவா வதை மறுக்கின்றீர் களா? பல கோடிக்கணக்கான ரூபாய் கள் சாமி, கோவில், பூசை, உற்சவம், நகை, வாகனம் ஆகிய வற்றிற்காக அடங்கி, முடங்கிக் கிடக்கின்றதை நீங்கள் மறுக்கின் றீர்களா? எனவே இந்தத் துறைகள் எல்லாம் புதிய முறை  - ஆராய்ச்சி முறை - மேல் நாட்டு முறை ஆகியவற்றில் கைத் தொழிலும், வியாபாரமும், விவசாய மும் செய்யப்பட்டு, குருட்டுப் பழக்கம், மூடநம்பிக்கை, சுயநலக்காரர்கள் சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து மீண்டு விட்டோ மானால் நமது பொருளாதார நிலை தானாகவே உயருமா? இல்லையா? என்பதையும், அந்தப்படிச் செய்யாத காரணமே இன்றைய தரித்திர நிலைக்குக் காரணமா? இல்லையா? என்பதையும் நீங்களே யோசித்துப் பாருங்கள். எனவே, எனக்குக் கொடுத்த விஷயத் தின் தலைப்பில் எனக்குத் தோன்றி யதைத் தங்களுக்கு எடுத்துச் சொன்னேன். இது சரியா? தப்பா என்று யோசித்துப் பார்த்து, உங்கள் மனதிற்குச் சரி என்று தோன்றியதை வைத்துக் கொண்டு மற்றதை உடனே மறந்து விடும்படியாய்க் கேட்டுக் கொண்டு இவ்விஷயத்தை முடிக்கிறேன்.
27.12.1930இல் களக்காடு அய்க்கிய முஸ்லிம் சங்கத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு, (குடிஅரசு 18.1.1931).
25-08-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 3

weather counter Site Meter