Pages

Search This Blog

Sunday, September 1, 2013

ஆதி திராவிடர் சுயமரியாதை மகாநாடு _ தந்தை பெரியார்

தந்தை பெரியார் சென்னை நேப்பியர் பார்க்கில் (தில்லைவனத்தில்) ஆதி திராவிட சுயமரியாதை மகாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானமாவது:
ஆறரைக் கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது, இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதின் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும், இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியா மலிருக்கும் படியும், சர்க்கார் தஸ்தா வேஜூகளிலும் எங்களை இந்துக்கள் என்ற பதவியிலிருந்து நீக்கி விடும் படிச் சர்க்காரையும், சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது என்ப தாகத் தீர்மானித்திருக்கின்றது.  திருவாங்கூர் ராஜ்ஜியத்திலும் சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக முது குளத்தூர் என்கின்ற இடத்தில் கூடிய ஒரு எஸ்.என்.டி.பி. யோகத் தில்  அதாவது ஈழவ சமுதாய மகா நாட்டில் இதை அனுசரித்த ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது, இந்து மதத்தில் மனித சுதந்திரம் இல்லாததால் இம் மதத்தை விட்டு வேறு மதத்திற்குப் போய் விடவேண்டும் என்பதாகும்.
இத்தீர்மானம் ஒன்று வரப் போவதாகத் தெரிந்து சில கிறிஸ்தவ பாதிரிகளும், ஆரிய சமாஜிகளும், புத்தமதப் பிரமுகர்களும் அக் கூட்டத்திற்கு வந்திருந்து தங்கள் தங்கள் மதத்தின் பெருமையை எடுத்துச் சொன்னார்கள்.
திரு ஈ.வெ. ராமசாமியும், அம்மகா நாட்டுக்குப் போயிருந்தார். தீர் மானத்தை ஆதரித்துப் பேசியபோது, இது சமயம் வேறு மதத்திற்குப் போக வேண்டியதில்லை. இனியும் சிறிது காலம் பார்க்கலாம் என்றும், அப்படி மதம் மாறுவதாயிருந்தால் மகமதிய மதத்திற்குப் போவது நல்லது என்றும், ஏனெனில், மதத்தின் பேரால் மக்கள் இப்போது மகம்மதிய மதத்தைக் கண்டால் தான் பயப் படுகிறார்கள் என்றும், அதில் பெண்கள் விஷயம் தவிர, மற்ற வழிகளில் உண்மையான சர்வ சுதந்திரமும் இருக்கிறது என்றும், நமது நாட்டில் உள்ள கிறிஸ்தவ மதம் வரவர பார்ப்பன மதம் மாதிரியாகி வருகின்ற தென்றும், அதிலும் ஜாதி உயர்வு பாராட்டப்படுகிறது என்றும், ஆரிய சமாஜம் என்பது பார்ப்பன மதத்தின் வேறு ஒரு ரூபமே ஒழிய வேறில்லை என்றும், பவுத்தக் கொள்கைகள் இப்போதுள்ள மற்ற எல்லா மதங்களின் கொள்கைகளை விட மேலானது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்றும், ஆனாலும் பார்ப்பன மதத்தை அடக்கி நமது நாட்டிற்கு உண்மையான விடுதலை தேடிக் கொடுக்க வேண்டுமானால் இது சமயம்  மகமதிய மதத்தினால் தான் முடியுமென்றும் பேசினார். பிறகு அவர் சொன்ன படியே இப் போது மதம் மாறவேண்டிய தில்லை என் தீர்மானிக்கப்பட்டது. இப்போது ஆதிதிராவிட மகாநாட்டிலும் சரி யாக அதே போல் இல்லா விட்டா லும், இந்து மதத்திலிருந்து விலகிக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட் டிருக்கின்றது. அப்படியானால் இனி அவர்கள் என்ன பெயரில் அழைக்கப் படுவது என்று சிலர் கேட்கலாம். ஒரு பெயராலும் அழைக்க வேண்டிய தில்லை என்றும், அவசியமானால் இந்தியன் என்று அழைக்கலாம் என்றும் சொல்லுவோம். மேலும் சர்க்காரில் குறிக்க ஏதாவது ஒரு பெயர் வேண்டாமா என்றால், அதற்காக இப்போது இந்தியாவில் உள்ள 20 கோடி இந்துக்கள் என்பவர் களை எப்படி அரசியல் முறையில் மகம்மதியரல்லா தவர்கள் என்று அழைக்கப்படுகின்றதோ, அது போல் 61/2 கோடி தீண்டப்படாத மக்கள் என்பவர்களை இந்துக்களல்லாத வர்கள் என்று அழைக்கலாம் என்று சொல்லுவோம்.
பார்ப்பனரல்லாதவர்களும், மகமதியரல்லாதவர்களும் இருக்கும் போது இந்துக்களல்லாதவர்கள் என்று ஒரு கூட்டம் இருப்பதால் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது என்றும், அதனால் எவ்வித இழிவும் ஏற்பட்டுவிடாது என்றும் சொல்லுவோம். அப்படி ஓர் இழிவு ஏற்படுவதாயிருந் தாலும் இந்துக்கள் என்ற பெயரை வைத்துக் கொண் டிருப்பதன் மூலம் ஏற்பட் டிருக்கும் இழிவை விட அதிகமான இழிவாய் விடாது என்பது நமது அபிப்பிராயம்.  இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லாத நிலையில்,  அதன் பேரில் மக்கள் அழைக்கப்படுவது மிகவும் அக்கிரமமான செய்கையா கும். அப்படியிருக்க, அதன் பேரால் மனிதனின் உரிமை களை மறுத்து கோயில், குளம், தெரு, பள்ளிக்கூடம் முதலியவற்றின் உரிமை களை மறுப்பது எல்லாவற்றை யும் விட அக்கிரமும் அயோக் கியத்தனமுமாகும். சாதாரணமாக, இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதைப் பற்றி நாமே தனித்து சொல்லுவதாகவும், அதைப் பற்றிய படிப்பு சிறிதும் இல்லை என்றும், அதுவும் பார்ப்பனர்கள் மீது துவேஷத்தால் சொல்லுவதாகவும் சிலர் சொல்லுகின்றார்கள்.
ஆனால், இப்போது நமது நாட் டில் ஆங்கிலத்திலும், தமிழிலும் வல் லவர் என்றும், சமய ஆராய்ச்சியில் தேர்ந்தவர் என்றும், மிக்க நுண் ணிய அறிவுடையவர் என்றும் பல் லோராலும் மதிக்கப்படும் உயர்திரு வாளர் திருநெல்வேலி கா. சுப்பிர மணியபிள்ளை எம்.ஏ., எம்.எல்., அவர்கள் சுமார் 7, 8 வருடங்களுக்கு முன் செந்தமிழ்ச் செல்வி என்னும் புத்தகத்தில் எழுதி இருப்பதை இங்கு அப்படியே எழுதுகின்றோம்.
முதல் முதல் மக்கள் உள்ளத்தே பதிய வேண்டியது யாதெனில், இந்து மதம் என்ற ஒரு சமயம் உண்மையில் கிடையாது என்பதும், இந்து மதம் என்பது இந்தியா நாட்டிலுள்ள மக்களின் சமயம் என்று கொள்ளப் படும் சிந்து நதிக் கரையில் உள்ளவர் களைக் குறிக்கும் ஹிந்து என்ற பாரசீகச் சொல்லை கிரேக்கர் இந்து என வழங்க, அவர் வழக் கத்தைப் பின்பற்றி மேலை தேசத்தார் யாவரும் இந்நாட்டிலுள்ளாரை இந் துக்கள் எனவும், இந்நாட்டை இந் தியா எனவும் வழங்கலாயினர். இந்து என்ற சொல் இப்பொருளில் ஆரியம், தமிழ் என பண்டைய இரு மொழி நூல்களிலும் கிடையாது.
இந்நாட்டிலே சமயங்களைப் பற்றிச் சிறிதும் அறியாதவர்கள் தங்கள் மதத்தை இந்து மதம் என்று கூறுவார்கள்.  அய்ரோப் பியம், அமெரிக்கம், ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னாரது சொற்களும், நாகரிகங் களும் குறிக்கப்படுவதே யல்லாது சமயம் குறிக் கப்படாமை போல, இந்து என்ற சொல்லும் இமயம் முதல் குமரி வரையில் உள்ள மக்களின் நாகரி கத்தைக் குறிப்பதேயன்றி சமயத்தைக் குறிப்பதன்று. இக்கருத்தைச் சுவாமி விவேகானந்தரும் தமது சொற்பொழிவு பலவற்றி லும் சுட்டிக் காட்டி உள் ளார்.  . . ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்தாதல், தலைமை ஆசிரியரை வைத்தாதல், அருள் நூலை வைத்தாதல் எழுது வது முறை. . . கிறித்து மதமும், மகம் மதிய மதமும் தங்களது தலை வரின் பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டுள் ளன. அவ்வாறே புத்த மதமும் ஆருகத முமாம். ஆனால் இந்து என்ற சொல்லோ சமயக் கருத்து யாதொன்றையும் குறித் தில்லை.
இக்குறிப்பில் திரு பிள்ளை அவர்கள் சுவாமி விவேகானந்தரும் இதே அபிப்பிராயம் கொண்டதாகக் கூறியிருக்கிறார். எனவே இப்படி ஓர் அர்த்தமே இல்லாத வார்த்தையின் பேரால் மதம் என்று ஒன்றைக் கற் பித்துக் கொண்டு, சமயத்திற் கேற்றபடியெல்லாம் கொள்கை களைச் சொல்லிக் கொண்டு, 20 கோடி மக்களையும், பல வளப்பமுள்ள ஒரு பெரிய தேசத்தையும் பாழாக்கி வருவதை இனியும் எத்தனை காலத்திற்கு மக்கள் பொறுத்துக் கொண்டு இருப்பது என்பது விளங்கவில்லை.
இதைப் பற்றி மற்றொரு சமயம் டாக்டர் எஸ். சுப்பிரமணிய அய்ய ரான ஒரு பார்ப்பனர் அவர்கள், காமன்வீல் என்ற பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-
இந்துக்களின் தற்கால நிலை மையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாகச் சீர்குலைந்து அலங் கோலப்பட்டு இடிந்து பாழாகிக் கிடக்கும் மதம் இந்து மதம் என்றும், பழைய கோட்டை அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்கு படுத்தி முட்டுக் கொடுத்துப் பழுது பார்த்தாலும் பயன்படாது. தயவு தாட்சண்யமின்றி நெட்டித் தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதி அடிப்படை களின் மீது நமது தற்கால அவசியத் திற்கும்,  உபயோகத்திற்கும் ஏற்ற தாகச் சாதாரணமான புதுக்கட்டடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்று தோன்றுகின்றது என்று எழுதி இருக்கின்றார்.
இன்னும் அநேக பெரியோர் களும் ஆராய்ச்சியாளர்களும் இதே அபிப்பிராயம் கொண்டிருக்கின் றார்கள். இந்நிலையில் குழந்தை மணத்தைத் தடுக்கவும், மக்கள் தெருவில் நடக்கவும், சாமிகளின் பேரால் கோயில்களில் நடக்கும் விபச்சாரத்தனத் தைத் தடுக்கவும், சிறு குழந்தைகளைப் படுக்கை அறையில் தள்ளுவதை ஒழிக்கவும் செய்யப்படும் முயற்சிகளை இம் மாதிரி ஒரு பொய் மதம் தடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் எந்த விதத்தில் மானமும், வீரமும், யோக்கியமும் உடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள முடியும்.
எனவே, ஆதிதிராவிட மக்கள் தங்களை எப்படி இந்துக்கள் என் கின்ற பதிப்பில் பதியக்கூடாது என்கின்றார்களோ, அது போலவே நாமும் சொல்ல வேண்டியவர்களாய் இருக்கின்றோம். ஏனெனில் இந்துக்கள் என்கின்ற பதிப்பில் நம்மைப் பதிந்து கொள்ள நாம் சம்மதிப்பதனால், நமக்கு ஆதி திராவிடர்களை விடக் கீழான நிலையான சூத்திரன் என்கின்ற பதவிதான் கிடைக்கின்றது. அதை நீக்கிக் கொள்ள இதுவரை எந்தச் சீர்திருத்தக்காரரோ, சட்டசபைப் பிரதிநிதியோ, வேறு எந்தச் சமூகத் தவரோ  முயற்சித்ததாகத் தெரிய வில்லை. ஆஸ்திகம் போச்சு கடவுள் போச்சு மதம் போச்சு  சமயம் போச்சு புராணம் போச்சு கலை போச்சு என்று கூப்பாடு போட்டுக் கூலி பெற நம் நாட்டில் ஆட்கள் மலிந்து கிடக்கின்ற தேயல்லாமல், மானம் போச்சு, மனித உரிமை போச்சு, மிருகத்திலும் கீழாச்சு என்று சொல்லி மனிதத் தன்மை பெற யாரையும் காணோம். எனவே நாமும் ஆதி திராவிட சகோதரர்கள் போலவே நம்மையும் இந்து என்னும் தளையில் இருந்து பிரித்துவிடு என்று கேட்கும் நாள் சீக்கிரத்தில் வரும் என்றே கருது கிறோம்.
- தந்தை பெரியார் அவர்கள் கட்டுரை (`குடிஅரசு, 21.7.1929)
01-09-2013 விடுதலை நாளிதழ் பக்கம் 2

No comments:


weather counter Site Meter