Pages

Search This Blog

Saturday, September 21, 2013

தாழ்த்தப்பட்டவரை கொச்சைப்படுத்தினாரா தந்தை பெரியார்?

தந்தை பெரியார் தேவைக்கான உச்சக்கட்டம் இது. வரலாற்றுப் போக்கால் ஆரியத்தை, வருணாசிரமத்தை வைதீ கத்தை வீழ்த்தி புத்தம் எழுந்தது. பிற் காலத்தில் பக்தி மார்க்கம் சூழ்ச்சியால் கோலோச்சி பவுத்த சமண மார்க்கங் களைச் சாய்த்தது.
பல நூற்றாண்டுகளுக்குமுன் பவுத்தமும், சமணமும் தோற்ற இடத்தில் தந்தை பெரியார் என்ற ஒரு வரலாற்றுப் பெருமான் எழுந்தார்.
ஆரியத்தின் ஆணி வேர் பக்க வேர், சல்லி வேர்களை சொல்லிச் சொல்லி வெட்டி வீழ்த்தினார்.
தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பிரச் சாரம் பெரு வெள்ளமானது; - சூறாவளி யாகச் சுழன்றது; சுனாமியாக வீறு கொண் டது. தந்தை பெரியார் தமிழ்நாட்டில் மூட் டிய தீ இந்தியா முழுமையும் ஒடுக்கப் பட்ட மக்கள் மத்தியில் போய்ச் சேர்ந் திருக்கிறது.
சூத்திரா என்ற அமைப்பு உத்தர பிரதேசத்தில் உதித்தது. இராமனுக்கு அங்கும் செருப்படி விழுந்தது. டில்லியில் பெரியார் மய்யம் எழுந்தது. கொல் கத்தாவில் பெரியார் மய்யம் தேவை என்ற விண்ணப்பம் தமிழர் தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
பெரியார் பன்னாட்டு மய்யம் அமெரிக்காவின் சிகாகோவை தலைமை மய்யமாகக் கொண்டு எண்டிசையும் ஈரோட்டு வேந்தரின் சிந்தனைச் செல் வங்கள் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கின்றன.
யானைக்கு மதம் பிடித்தாலும் ஆபத்து; - மனிதனுக்கு மதம் பிடித்தாலும் ஆபத்தோ, ஆபத்து! உலகம் மத யானை யின் அச்சுறுத்தலால் பெரும் அபாய வட்டத்துக்குள் சிக்கி மூச்சுத் திணறுகிறது.
மத அடிப்படைவாதிகள் அனைத்து மதங்களிலும் மூர்க்கமாக எழுந்துள்ளனர். இந்தியாவில் இந்துத்துவா என்னும் காவிக் கூட்டம் திரிசூலத்துடன் புறப்பட் டுள்ளது.
அயோத்தியில் 450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை ராமஜென்ம பூமி என்று கூறி காவிப் படையினர் துவம்சம் செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் அமைந்த காவி ஆட்சி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களின் உயிரைக் குடித் தது - தலைகளைச் சீவியது. கர்ப்பிணிப் பெண்களைக் கூட சூறையாடியது.
இந்தியாவையே குஜராத் தாக்க துடித்துக் கொண்டு நிற்கிறது. வரவிருக் கும் 2014 மக்களவைத் தேர்தலில் வென்று டில்லி கோட்டையில் காவிக் கொடியை ஏற்றலாம் என்று எச்சில் ஊறி எகிறிக் குதிக்கிறது.
புத்தரை வீழ்த்தி வைதிகம் புத்துணர்வு பெற்றது போல - பெரியாரியத்தை வீழ்த்தி மீண்டும் ஆரியம் அரியாசனத்தில் அமரும் ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
அதற்குப் பெரும் தடை தந்தை பெரி யாரியல்தான். அதனை நிர்மூலப்படுத் தாமல் தாம் நினைத்தது நடக்கப் போவ தில்லை என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்டுள்ளனர். பவுத்தத்தை வீழ்த்தியது போல பெரியாரியலையும் வீழ்த்தி விட வேண்டும் என்பது அவர்களின் திட்டம்.
இந்தியாவில் 70 சதவிகித ஊடகங்கள் பார்ப்பனர்கள் கைகளில்; இணையதளம் வேறு சேர்ந்து கொண்டு இருக்கிறது. பொய்யை விதைத்து பொய்யை அறுவடை செய்யும் கும்பலாயிற்றே! விதைக்காது விளையும் கழனியாயிற்றே!
தந்தை பெரியார் மீது அவதூறுகளை ஆவேசமாக அள்ளி வீசுகிறார்கள். எந்த வகையிலாவது பெரியாரியலைப் பலகீனப்படுத்த முடியாதா என்பதில் படாதபாடு படுகிறார்கள்.
பெரியார் தாழ்த்தப்பட்டவர்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? பறச்சி ரவிக்கை போட்டதால் தான் விலைவாசி ஏறி விட்டதாகப் பெரி யார் பேசி இருக்கிறார் என்று பொத்தாம் போக்கில் புழுதி வாரி, தூற்றுகின்றனர்.
பெரியார் எங்கே பேசினார்? எப்பொ ழுது பேசினார்? என்ற விவரங்கள் கிடை யாது. மானாங்காணியாக எழுதுகிறார்கள்.
இந்த அக்கப் போர் குற்றாச்சாற்று தந்தை பெரியார் காதிலும் விழுந்தது.
இதற்குத் தந்தை பெரியாரே பதில் கூறியிருக்கிறார்.
நான் பறையன் என்று கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும் அதை ஒழிப்பதற்காகச் சொன்னதுதான்; எலெக்சன் நேரத்திலே இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாகச் சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள், அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஒட்டுப் போடாதீர்கள் என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள். நான் சொன்னது உண்மைதான் நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கைப் போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போடக் கூடாது அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது;
இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன்; இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும்.  நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதே யாகும்.
- (சென்னை அயன்புரத்தில் 11.12.1968 மாலை 7.15 மணி அளவில் நடைபெற்ற வேலூர் நாராயணன் அவர்களின் பாராட்டு விழாவில் பேசுகையில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து இந்தப் பகுதி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது).
(ஆதாரம்: விடுதலை 15.12.1968 பக்கம் 3).
உண்மை இவ்வாறு இருக்க, ஒடுக்கப் பட்ட மக்களுக்காக வைக்கம் வரை சென்று போராடி அதற்காக இருமுறை சிறை வாசமும் கண்டு வந்த வைக்கம் வீரர் பெரியார் அவர்களை கொச்சைப் படுத்துகிறார்கள் என்றால் அவர்கள்தான் கொச்சை மனிதர்கள்; உண்மையைக் காலில் போட்டு மிதித்து பொய்மையில் வயிறு வளர்க்க ஆசைப்படும் அற்பப் பேர் வழிகள்.
தீண்டாதார் எனும் தலைப்பில் 1928 நவம்பர் 8ஆம் தேதி வெளிவந்த குடி அரசில் தந்தை பெரியார் எழுதிய தலை யங்கம் என்ன கூறுகிறது?
தீண்டாதார்
பிராமணரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைவிட தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் மிகவும் முக்கியமான தென்பதை நாம் கோபுரத்தின் மீதிருந்தும் சொல்லுவோம். ஏனெனில் அவர்கள் சமூகப் பெருக்கத்திற்குத் தக்கபடி கல்வியிலோ, உத்தியோகத் திலோ மற்றும் பல பொதுவாழ்க்கையிலேயோ அவர்கள் முன்னேறவில்லை. இதன் காரணத்தினால் தேசத்தில் 5-ல் ஒரு பாகம் ஜனங்கள் தேச நலத்தை மறந்து சர்க்காரின் தயவை நாடி அன்னிய மதத்தில் போய் விழுந்து நமக்கு எதிரிகளாய் முளைத்துக் கொண்டு வருகிறார்கள். சுயகாரியப்புலிகளுக்கு இதைப்பற்றிக் கவலையிராதுதான். பொறுப்புள்ள பொதுமக்கள் இதைக் கவனியாமல் விடுவது தேசத்துரோகமென்று மாத்திரம் சொல்லுவதற்கில்லை.
இன்னும் எவ்வளவோ பெரிய பாவிகளென்றுதான் சொல்லவேண்டும் சுமார் 25 வருடங் களுக்கு முன்பாவது இச்சமூகங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளிக்கப் பட்டிருக்குமேயானால் இன்றைய தினமும் இந்தியாவில் இருக்கும் இவ்வளவு அபிப் பிராய பேதங்களும், ஒற்றுமை யின்மையும் பிரிட்டிஷ் கொடுங்கோன்மையும் பிரா மணக்கொடுமையும் நமது நாட்டில் இருக்குமா?தெருவில் நடக்கக்கூடாத மனிதனும், கண்ணில் தென்படக்கூடாத மனிதனும், அவனவன் மதத்தை அறியக் கூடாத மனிதனும், அவனவன் தெய் வத்தைக் காணக்கூடாத மனிதனும் இந்தி யாவில் இருக்கக்கூடுமாவென்பதை யோசிக்க வேண்டுவதோடு பொது நோக் குடைய ராஜீய மகாநாட்டில் இதை வலி யுறுத்தி அமுலுக்குக் கொண்டுவரும்படி செய்யவேண்டியது தேசபக்தர்களின் கடமையென்பதை வணக்கத்துடன் மீண்டும் தெரிவித்துக்கொள்ளுகிறோம். - குடிஅரசு தலையங்கம் - 08.11.1925
பறையன் பட்டம் போகாமல் சூத்திரப் பட்டம் போகாது என்றவரும் பெரியார் (குடிஅரசு 11.10.1931)
ஜாதி இழிவு இன்னும் வெளிப் படையாக சூளுரைத்து நிற்கக் கூடிய இடம் கோயில் கருவறையே! அந்த இடத்திற்குத் தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினரும் சென்று அர்ச் சனை செய்யும் உரிமை சட்ட ரீதியாக வர வேண்டும் என்ற கருத்தைச் சொன் னது மட்டுமல்ல; - அதற்காக தம் இறுதி மூச்சு அடங்கும் வரை - அதற்கான களத் திலேயே நின்று மரணத்தைத் தழுவிய தலைவரைப் பார்த்து பன்னாடைகள் புலம் புவதும், புறம்போக்குகள் சபாஷ் போடு வதும் வெட்கக் கேட்டின் எல்லையே!
- மின்சாரம்
21-09-2013 விடுதலை ஞாயிறு மலர் பக்கம் 1

No comments:


weather counter Site Meter