Pages

Search This Blog

Saturday, April 23, 2011

கடவுள் அருள் பக்தனுக்கே இல்லை-கைவல்யம்

(கைவல்யம் நினைவு நாளையொட்டி இக்கட்டுரை)
சைவ, வைணவ சமயங்களில் உள் சமயப் பிரிவுகளோ பல.  சைவ சமயத் தில் ஊர்த்த சைவம், அனாதி சைவம், ஆதி சைவம், மகாசைவம், பேத சைவம், அபேத வைசம், அனந்த சைவம் குறை சைவம், நிர்குண சைவம், தத்துவா சைவம், யோக வைசம், ஞான சைவம், அணுச்சைவம், கிரியா சைவம், நாலுபரதச் சைவம், சுத்த சைவம் என்னும் விதங்களும்; வைரவம், வாமம், காளாமுகம், மாவிருதம், பாசுபதம் என்னும் அதனுள் சமயமும்; தெலுங்கு, கன்னட தேசத்து வீர சைவமும், தசானமிகண்டி சைவர்கள், யோக சைவர்கள், பரம அம்ச சைவர்கள், அகோ சைவர்கள், ஊர்த்தவாரி, ஆகாசமுகி, நாகி சைவர்கள், சூடராச்சைவர்கள், ருகார, உகார, சுகார சைவர்கள், சாரலிங்கச் சைவர்கள், சந்நியாசிச் சைவர்கள், நாகச் சைவர்கள் முதலிய வட தேசத்து வைசர்கள் கூட்டமும் இத்தனை பேதமான சைவக் கூட்டங்களெல்லாம் சிவனை வணங்குகிறவர்களானாலும் கொள்கை, ஆச்சாரம், பூசை விதிகள், ஆராதனை முதலியவைகளில் வேறு பட்டவர்கள்.  விஷ்ணுவை ஒரு தேவனா கவும், சிவனின் பெண் ஜாதியாகவும் நினைப்பவர்கள்.

சிவனையும் கோவிலையும் நிந்திக்கும் வைணவர்கள்

வைணவத்திலும் பல பேதங்கள்.  இரணியகப்பம், மாயாவாதம், இரா மானுஜீயம், பாஷ்கரம், தத்துவ விஷாரம் என்னும் பல பிரிவாய் மாலுக் தாசி வைணவம், இராயதாசி வைண வம், சேருபந்தி வைணவம், மீராபாய் வைணவம்.  இராதாபாய் பல்லவி வைணவம், சகீபாவ வைணவம், சாதாரதாசி வைணவம், அரிச்சந்திர வைணவம், சாதனபந்தி வைணவம், மாதோவைணவம், பிராணநாத வைணவம், சாதுவை வைணவம், சதநாம வைணவம், சிவ நாராயண வைணவம், திரிதண்டி வைணவம் முதலிய வடதேசத்து வைணவமுமல் லாமல் கமலா,  ஜமாஸ், கபீர், விமலா, சாது முதலிய கூட்டங்கள் கோவில் விக்கிர பூசையுமில்லாமல் ராம நாமத்தைச் சொல்லிக்கொண்டிருக் கும் வைணவக் கூட்டங்களுமிருக் கின்றன.

இவர்களுக்கெல்லாம் தெய்வம் விஷ்ணுவாக இருந்தாலும் ஆச்சாரம், கொள்கை ஏற்பாடு முதலியவைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டே இருக் கும். இவர்களெல்லாம் சிவனை உத்திரனென்றும், உரு மந்திரத்திற்கே அதிகாரி என்றும், அந்த மந்திரமும் பலிப்பதற்கு விஷ்ணுவின் காலிலிருந்து வரும் கங்கையைத் தலையில் அணிந்திருக்கிறார் என்றும் இன்னும் ஆபாசங்களால் சிவனையும் கோவி லையும் நிந்திப்பார்கள்.

ஜாதியிலிருந்து தள்ளப்பட்ட பிள்ளையார்

வடகலை வைணவர்கள் விஷ்ணு வின் தென்கலை நாமத்தைச் சுரண்டி எடுத்தும் விடுவார்கள்.  விஷ்ணு கோவிலுக்குப் பக்கத்து அரசமரத்தடி பிள்ளையாருக்கு நாமமும் போட்டு விடுவார்கள்.  அதைச் சைவர்கள் கண்டு தங்கள் தெய்வத்தின் பிள்ளைக் குச் செய்த அநீதிக்கு சண்டைக்கும் வருவார்கள்.  சமாதானத்தின் பேரில் அந்தப் பிள்ளையாரை ஜாதியிலிருந்து தள்ளிவிட்டும் போய் விடுவார்கள்.

இவையனைத்தும் ஆகமசாஸ்திர மந்திரத்தை உடையது என்கிறார்கள்.  இவ்வளவு சமயங்களிலும் ஆச்சாரி பூசாரிகளுக்கு அந்தத் தெய்வங்கள் பிரத்தியட்சமாவதும், உத்தரவு பண்ணு வதும், சொப்பனம் சாதிப்பது முதலிய காட் சிகள் நடந்து வருவதாகவே சொல்லு கிறார்கள்.  எப்படியிருந்தாலும் இந்தத் தெய்வங்களுக்கும், சமயங்களுக்கும், கோவில்களுக்கும், ஆச்சாரி குருவுக்கும் உண்டாகும் விவகாரங்களையெல்லாம் தீர்த்துவைப்பது கிறிஸ்துவ சமயமும் அந்தக் கடவுள் சக்தியுமேயாகவிருக்கிறது.

சக்தி பூசை

முன்சொன்ன சமயங்களை எல்லாம் விட வெகு சுளுவாகவும் உலகமெல்லாம் ஆச்சரியப்படும்படியான பூசா விதிகளுடன் எல்லாப் பாக்கியங்களையும் கொடுத்து மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய சமயம் ஒன்றிருக்கிறது.  அதாவது, பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் ஒரு சக்தியி லிருந்து வந்ததால் அந்தச் சக்தியே தெய்வம்; இந்தத் தெய்வத்தையும் அதன் பூசைக்கிரமங்களையும் சொல்லுவது தந்திர சாஸ்திரம்; இதுவும் இந்து மதத்தைச் சேர்ந் ததுதான்.  வேதத்தில் ஆகம சாஸ்திரம் இருப்பதுபோல தந்திர சாஸ்திரமும் வேதத்தில் ஒட்டிக் கொண் டிருப்பதுதான்;

அதற்குச் சக்தி மதமென்று பெயர்.  அந்தச் சக்தியைப் பூசிப்பதற்கு சாதனங்கள் வாலிப திடகாத்திரத்துடன் கூடின பெண்ணின் குறிகள், மாமிசம், மீன் இவற்றை அனுபவித்துக் கொண்டே சக்தியான தேவியைப் பூஜித்தால் எல்லா சம்பத்தும் வந்து மோட்சத்தையும் அடைய லாம் என்று சொல்லுகிறது.  கோவில் களிலும் தேர்களிலும் பல சித்திரங்கள் செதுக்கியிருப்பதும் சக்தியின் சின்னங்களே.

நாஸ்திகனைத் தண்டிக்காத அரசன் அரசனுக்குப் பிறந்தவனல்லவாம்!

ஒரு சமயத்திலிருந்து இத்தனைவித சமயங்களும் உட்பிரிவுகளும் ஏன் உண்டா யிற்று?  எதற்காக உண்டு பண்ணப்பட்டன வென்றால், வேதத்திற்குப் பார்ப்பான் அதி காரி; வேதத்திலுள்ள எந்தச் சமயத்திற்கும் ஆச்சாரி, குரு, கர்த்தா பார்ப்பான்.  வேதத் திற்கோ, வேதத்தைப்பற்றின சமயத்திற்கோ அதிகாரம் யாருக்கும் இல்லை. 

மக்களுக்குள்ள பொது அறிவால் ஏதாவது கேட்டால் தண்டனையுண்டு: கேட்டவர்கள் நாஸ்திகர்கள் -  வேதம், சமயம் முதலி யவைகளைப் பற்றி யுக்திவாதம் செய்கிற வர்களை எந்த அரசன் தண்டிக்க வில்லையோ அந்த அரசன் தன் தகப் பனான அரசனுக்குப் பிறந்தவனல்ல வென்று வேதம் சொல்லுகிறது.

கடவுளால் சொல்லப்பட்ட வேதத்தில் அப்பனுக்குப் பிறக்கவில்லையென்று சொல்கிறதே என்று பயந்து அரசர்களும் தண்டித்துவிடுவார்கள்.  இந்தக் காலத்தில் தண்டனையில்லை.  சமய தர்க்கங்களி னால்தான் இத்தனை சமயங்களும் உண்டாயின் தர்க்கமும் பல சமயம் உண்டு பண்ணினதும் பார்ப்பனர்களே.  அவர் களைக் கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை. 

வேதப் பிரமாணம் சமயம், சமயப் பிரமாணம் கடவுள், கடவுள் பிரமாணம் பார்ப்பான்.  எத்தனைச் சமயப் பிரிவுகள் உண்டானாலும் உண்டாக்கிக் கொண் டாலும் ஆச்சாரி புரோகிதன் பார்ப்பான்.  அதிலுள்ள லாபமெல்லாம் அவரவர்கள் கூட்டத்திற்குத்தானே?  உண்டாக்கிக் கொண்டிருப்பதுதானே அவர்கள் தொழிலும்.

தொழில்முறை லாபத்தினால் ஏற்பட்ட பிரிவுகள்

வேதமென்றும், கடவுளென்றும், சமயமென்றும் சொல்லி அதிலேயே நம்பிக்கையுடைய மக்களை ஏய்ப்பதில் நம்பிக்கையுடையவர்கள்தானே பார்ப்பார்களும்; தொழில் முறையான லாபத்தினால்தான் இத்தனை பிரிவுகள் ஏற்பட்டன.

கும்பாபிஷேகம் செய்து கோவிலில் குடிவந்திருக்கும் கடவுளிடம் அருள் சக்தி, கடாட்சம், பாதுகாப்பு, பிரசாதம், அபிஷேகம், மந்திரம் முதலிய சக்தி களும் குருக்களின் அபிஷேக சக்தி புரோகிதர்களுடைய மந்திர சக்தி இன்னும் பல சக்திகளும் நிறைந் திருப்பதாக அல்லவா நிச்சயமாக அதைத்தானே நமக்கும் சொல்லு கிறார்கள்.  அதைத்தானே நாமும் நம்பி கடவுளுக்கு எத்தனையோ செய் தோம்; இப்பொழுதும் செய்து வருகிறோம்.  கடவுளுடைய இத்தனை சக்திக்கும் மேலதிகாரிகளாய் கடவு ளுடைய காரியங்களையெல்லாம் பார்த்துவரும் மடாதிபதிகள், மகந்துக் கள், ஆச்சாரிகள் முதலியவர்களின் ஆபத்திற்கே கடவுளும் அவருடைய மற்ற சக்திகளும் ஒரு உதவியும் செய்யவில்லை என்றால் நமக்கு எப்படி உபயோகப்படும்?  நம் கஷ்டத்தைத் தீர்க்குமா?

மகந்துவை மருந்துதான் காப்பாற்ற வேண்டும்

முன்னிருந்த திருவாடுதுறை பண்டார சந்நதியின் உபத்திரவத்தை சென்னை டாக்டர் ராபர்ட்சன் தீர்த்தார்; பஞ்சாட்சர மந்திரமும், சைவ சின்னங்களும், தேவார திருவாசகமும் மடாதிபதியைச் சுற்றிக்கொண்டு தானிருந்தது.  சிறிது காலத்திற்கு முன் திருப்பதி மகந்துவிற்குப் புத்திக் கோளாறு ஏற்பட்டது.  மால்காமன்ஸ் என்கிற சென்னை டாக்டரைக் கூட்டி வந்து பார்த்தார்கள்.  திருப்பதியில் உங்கள் பெருமாளுக்கும் பிரசாதத் திற்கும் மத்தியில் மகந்து விருந்தால் வியாதி குணப்படாது என்று சொல்லி மகந்துவை சென்னைக்குக் கூட்டிப் போய் இங்கிலீஷ் நர்ஸ் வருகிற வரையிலும் மகந்து கூடவே யிருந்தன.  இருந்தும் மகந்துவை ஒரு மணி நேரம் தூங்கவைக்கக் கூட முடியவில்லை.

அதேபோல சிறிது நாளைக்கு முன் சிருங்கேரி சங்கராச்சாரிக்கும் இங்கி லீஷ் வைத்தியமே செய்யப்பட்டது.  கடவுளிடம் அருள், ஆசிர்வாதம் பெற்று நமக்களிக்கும் குருக்குள், அர்ச்சகர் கள், புரோகிதன் முதலியவர் களெல்லாம் சென்னை டாக்டர்களிடம் தானே அடைக்கலம் புகுகிறார்கள்?  இவர்களுக்கெல்லாம் அருள் சுரக்காத கடவுள் நமக்கென்ன செய்வார்?  நமது கடவுள் சமய ஏற்பாடு அனைத்தும் புரோகிதப் புரட்டும், குருக்கள் கட்டுப் பாடும், நமது அறியாமையும் என்பதை ஆலோசித்துப் பார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.
(உண்மை: 14.12.1973)


ய்யரிடம் கேட்கலாம் என்ற கெட்ட வழக்கம் எப்படி ஏற்பட்டது?

தானம் கொடுப்பது என்றால் பார்ப்பனருக்குத்தான் தானம் கொடுக்க வேண்டும் என்ற நியதி இன்றுவரை நிலவுவதற்குக் காரணம் என்ன? அதற்கும் காரணம் இராமாயண நீதிதான் என்று கைவல்யம் அவர்கள் கூறுகிறார்கள்.

இராமன் காட்டுக்குப் போகிறான்; சீதை தானும் வருவதாகக் கூறுகிறாள். அதற்கு இராமன் ஒரு நிபந்தனை விதிக்கிறான்.

நீ வருவதாக இருந்தால் நான் சொல்கிறபடியே செய்துவிட்டு வரவேண்டும். அதாவது உன் நகைகளையும், உன்னிடமுள்ள மற்ற பொருள்களையும் பிராமணர்களுக்குக் கொடுத்து விட வேண்டும். உனது வேலையாள்களுக்கு நீ ஏதாவது கொடுக்க நினைத்தால் அதையும் பிராமணர்களைக் கேட்டுக் கொடுக்கவேண்டும் என்று சீதையிடம் இராமர் கூறுகிறார்.

இந்தச் செய்தியை எழுதிவிட்டு கைவல்யம் கேட்கிறார். ஊரிலிருந்தாலும், காட்டுக்குப் போனாலும் எல்லாம் பிராமணர்களுக்குக் கொடுத்துவிடு என்று சொல்லவே எல்லாருக்கும் பொதுவாயுள்ள தெய்வம் பூலோகத்தில் அவதாரம் பண்ணி சனங்களுக்கு நடந்துகாட்ட இராமஇராச்சியம் நடத்தி வந்தது என்று விளங்கவில்லையா? நீ உன் வேலைக்காரர்களுக்கு ஏதாவது கொடுக்க இஷ்டப்பட்டாலும் - கொடுப்பதாக இருந்தாலும்  பிராமணர்களைக் கேட்டு, அவர்கள் சொற்படி  செய் என்றுதானே இராமர் தன் பெண்ஜாதியான சீதைக்குச் சொன்னார்.

இந்த உத்தரவினால் ஒரு கூட்டத்திற்கு லாபமும், ஏழைகள் வாயில் மண்ணுமல்லவா விழுந்துவிட்டது என்று குறிப்பிடுகிறார்.

இதற்குக்கூட அய்யரைக் கேட்கணுமா என்று குத்தலாக இன்று சொல்லுகிறோம் என்றால், அது வந்ததற்குக் காரணம் இராமாயணத்தில் இராமன் சீதையிடம் சொன்ன இடம்தான் என்று மிக அழகாகக் கைவல்யம் குறிப்பிடுவது சிறிய விஷயத்தில் பதுங்கிக் கிடக்கும் பெரிய உண்மைகளை வெளிப்படுத்தும் பேரறிவைக் காட்டுகின்றது!

விடுதலை 22-04-2011
http://viduthalai.in/new/page-2/7949.html

No comments:


weather counter Site Meter