Pages

Search This Blog

Saturday, April 23, 2011

நிழலோடு சண்டை போடும் உச்சநீதிமன்றம்

மதுரை அருகே ஜல்லிக்கட்டு நடந்தபோது இரு தரப்பினருக்கிடையே நடைபெற்ற தகராறின்போது இரு தாழ்த்தப்பட்ட தோழர்கள் பன்னீர்செல்வம், மேகமணி ஆகியோரை ஆறுமுகம் சேர்வை, அஜித்குமார் ஆகிய இருவரும் ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதோடு அல்லாமல், அவர்களை அடித்து உதைத்தும் உள்ளனர்.

இதன்மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம் குற்றவாளிகளுக்குத் தண்டனை அளித்துத் தீர்ப்பும் வழங்கின.

மேல் முறையீட்டு முறையில் உச்சநீதிமன்றத்திற்கு வழக்கினைக் கொண்டு சென்றபோது, கீழ் நீதிமன்றங் களில் அளிக்கப்பட்ட தீர்ப்பினை உறுதி செய்ததோடு, காவல்துறைக்குச் சில வழிகாட்டுதல்களையும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜாதி தொடர்பான கவுரவக் கொலைகள் (வட மாநிலங்களில்), ஜாதிப் பெயரைச் சொல்லி அவமதிப் பது போன்ற குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. இதுபோன்ற குற்றங்கள் நடைபெறும் பகுதிக்குப் பொறுப்பான மாவட்டக் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளை இடைநீக்கம் செய்வதோடு, அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

நல்ல அறிவுரைதான், காவல்துறை சரியாக நடந்து கொள்ளும் பட்சத்தில் சில குற்றங்களைக் கண்டிப்பாகத் தடுத்து நிறுத்திட முடியும். குறிப்பாக தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையை காவல் துறை நினைத்தால் தடுத்திட முடியாதா? எந்தெந்தப் பகுதிகளில் இந்த மனித விரோதச் செயல் நடந்து கொண்டிருக்கிறது என்பதை காவல்துறை யினர் அறிய மாட்டார்களா?

கண்டும் காணாமல் காவல்துறை நடக்கும்போது இரட்டைக் குவளை முறை அனுபவத்தில் நிலவுவது எப்படி தடுக்கப்பட முடியும்?

எந்தெந்த மாவட்டத்தில் இன்னும் இரட்டைக் குவளை முறை நடைமுறையில் இருக்கிறதோ, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் தண்டனைக்குட்படுவர் என்று கறாராக அரசு அறிவிக்க வேண்டும்; கடமையைச் செய்யாத அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - அதில் தயவு தாட்சண்யம் பார்க்கப்படக் கூடாது.

இந்து மதம் என்னும் புற்று நோயின் குணம்தான் இந்த ஜாதிக் கொடுமை. இந்த ஜாதியின் கொடிய விளைவுதான் தீண்டாமை என்பதுமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 17ஆவது பிரிவில் தீண்டாமை ஒழிக்கப்படுகிறது - அதனை எந்த வகையில் கடைப்பிடித்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஒன்றைக் கவனிக்கத் தவறிடக் கூடாது. தீண்டாமை என்பது ஜாதியின் விளைவு என்பதை உணர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட ஜாதி ஒழிப்பு என்பது மூலாதாரம் என்பது வெளிப்படை.

நீதிமன்றங்கள் தீண்டாமையை எதிர்த்து சண்ட பிரசண்டம் செய்கின்றனவே தவிர, அதற்கு மூல ஊற்றான ஜாதியை சட்ட ரீதியாக ஒழிக்க வேண்டும் என்று உதடுகளை அசைப்பதில்லையே ஏன்? அவ்வாறு செய்யாமல் நீதிபதிகள், ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டலாமா? கூடாது - கூடவே கூடாது - அது சட்டப்படி குற்றம் என்று சொல்லுவது உருவத்தை விட்டுவிட்டு நிழலோடு சண்டை போடுவதாகும். கற்றறிந்த நீதிபதிகளுக்கே இதில் தெளிவு இல்லை என்பது வருந்தத்தக்கதே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பகுதியை எரிக்கும் போராட்டத்தை (1957 நவம்பர் 26) தந்தை பெரியார் அறிவித்து 10 ஆயிரம் திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனரே - மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கறுஞ்சட்டைத் தோழர்கள் மூன்று மாதம் முதல் மூன்றாண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார்களே - நீதிமன்றங்கள் தானே அந்தத் தண்டனையை வழங்கின.

ஜாதி ஒழிப்பில் முக்கிய மைல் கல்லான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் தமிழ்நாடு அரசின் சட்டத்தை முடக்குவது உச்சநீதிமன்றம் தானே?

மிக முக்கியமான இதுபோன்ற பிரச்சினையில் வேறு மாதிரியாக நடந்துகொண்டு, ஜாதியின் கொடிய விளைவுகள்மீது மட்டும் உரத்த குரல் கொடுப்பதில் பொருள் இருக்க முடியுமா?

ஜல்லிக்கட்டு தொடர்பாக நடைபெற்ற சண்டையில் ஜாதிப் பெயரைச் சொல்லித் தாக்கியவர்களுக்குத் தண்டனை அளித்ததை வரவேற்கிறோம்; அதோடு - இதற்கெல்லாம் மூல காரணமான ஜாதியை முற்றாக ஒழிப்பதற்கும் உச்சநீதிமன்றம் வழிகாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

விடுதலை 22-04-2011
http://viduthalai.in/new/page-2/7948.html

No comments:


weather counter Site Meter