Pages

Search This Blog

Monday, April 18, 2011

ஜனசக்தியின் பழி

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பற்றி விமர்சித்தால், ஜனசக்திக்கு நெறி கட்டுவது ஏன் என்று புரியவில்லை.

(மொழிப் போராட்டம்; இனப் போராட்டம் -_ சி.கே.எம் -_- ஜனசக்தி 12-.4.-2011 பக்கம் 5).

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஸ்ரீ என்ற வடமொழிக்கும், திரு என்ற தாய் மொழிக்கும் போராட்டம் என்று கூறி விட்டாராம். இதனை இனப் போராட் டமாக, மொழிப் போராட்டமாக சித்திரித்து விட்டாராம்.

இது தவறு; நடப்பது இனப்போராட் டமல்ல என்று கூறி பார்ப்பனர்களுக்கு வக்காலத்துப் போட்டு எழுத வந்தால்கூட வரவேற்கலாம். ஆனால் ஜனசக்தியோ பந்தை அடிக்க முடியாமல் காலை அடிக்கும் பரிதாப நிலைக்கு ஆளாகி விட்டதே- என் செய்ய!

தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவதையும், பாதுகாப்பதையும்விட, தனது சொத்தைப் பாதுகாப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இருப்பதால் வீரமணி ஆளும் கட்சிக்கு ஜால்ரா அடிப் பதையே கொள்கையாகக் கொண்டுள்ளார் என்று நிதானமின்றி தரம் தாழ்ந்து எழுதுகிறது ஜனசக்தி.

தந்தை பெரியார் அவர்களின் அறக்கட்டளைச் சொத்தை வீரமணியின் சொத்தாக பாவித்து எழுதியுள்ளது. அசல் விஷமத்தனமே! சேர்வார் தோஷம் என்பார்களே -_ ஜனசக்திக்கு பார்ப்பனீயப் புத்தி தொற்றிக் கொண்டுவிட்டது போலும்.

தந்தை பெரியார் அவர்களின் சொத்தைப் பாதுகாப்பது என்பது ஒன்றும் பஞ்சமா பாதகம் அல்ல! அது அவரது கடமை. குற்றம் சுமத்தலாம் என்று நினைத்து மானமிகு வீரமணிக்கு பாராட்டு மாலை அணிவிப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம்.

ஜெயலலிதா முன்னாள் முதலமைச் சராக இருந்த போது 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்தார். அப்போது இதே வீரமணி ஜெயலலிதாவை சமூக நீதி காத்த வீராங்கனை என்று வாயாரப் புகழ்ந்து தள்ளினார் என்று அடுத்த குற்றப்பத்திரிகை படிப்பதாக நினைத்துக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு வழிவகுத்தார் ஜெயலலிதா என்று ஒற்றை வரியில் தன் முகத்தைப் புதைத்துக் கொள்ளும் ஜனசக்தி, 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவைத் தயாரித்துக் கொடுத்ததே வீரமணி அவர்கள்தான் என்பதை மறைத்து அற்ப சந்தோஷத்தில் திளைக் கிறது -_ அதுவும் ஒரு வகையில் பார்ப் பனீயம்தான்.

சரி, 69 சதவிகிதத்தைப் பாதுகாத்துக் கொடுத்த ஜெயலலிதாவைப் பாராட்டுவதில் என்ன தவறு? திராவிடர் கழகம் என்ன அரசியல் கட்சியா? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போன்றதா?

எல்லாத் துறைகளிலும் படுதோல்வியடைந்த மக்கள் விரோத அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை அகற்றி, தமிழகத்தின் வளர்ச்சிக்கும், ஜன நாயகத்துக்கும், சமூக நீதிக்கும் உறுதியளிக்கும் மாற்றாட்சி என்பது அவசியம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது

(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 2006 தேர்தல் அறிக்கை பக்கம். 5)

இந்த - எல்லா வகைகளிலும் படு தோல்வியடைந்த மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிதான் மீண்டும் தமிழ்நாட்டுக்குத் தேவை என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி - 69 சதவிகித இட ஒதுக்கீட்டைக் காக்கும் சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக ஜெயலலிதாவைப் பாராட்டியதைக் குற்றம் கூறுகிறது.

ஸ்ரீக்கும் திருவுக்கும் போராட்டம் என்று தமிழர் தலைவர் சொன்னதில் உள்ள தத்துவார்த்தத்தினைப் புரிந்து கொண்டு, கூடுதல் சமுதாயப் பொறுப்புடன் சிந்திக்க வேண்டாமா? தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டும் ஜனசக்தி, அவரின் ஆழமான சமுதாயப் பார்வையைப் புரிந்து கொள்வதில் தடுமாறுகிறதே!

சட்டசபையிலேயே தன்னைப் பாப்பாத்தி என்று பிரகடனப் படுத்திக் கொண்டவராயிற்றே ஜெயலலிதா.
கலைஞரைப் பரம்பரை எதிரி (Traditional Enemy) என்று கடந்த தேர்தலில் கூறினாரே (Dr. நமது எம்.ஜி.ஆர்.17-.4.-2006 பக்கம்-6) இந்த அம்மையார். அதன் பொருள் என்ன?

Traditional என்று அம்மையார் சொல்லுவதற்கு என்ன பொருள்? தனிப்பட்ட முறையில் கலைஞர் குடும்பத்துக்கும், ஜெயலலிதா குடும்பத்திற்கும் பகையா? எந்தப் பொருளில் அவர் கூறினார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா? சமுதாயப் போராட்டங்களின் தொடர்ச்சியைப் புரிந்து கொண்டால்தான் இதன் உண்மை புலனாகும்.

கலைஞரை இராவணன் என்று அடிக்கடி ஜெயலலிதா வருணிக்கிறாரே _- அதன் பொருள் என்ன? இராமாயணம் என்பது ஆரியர் _ திராவிடர் போராட்டம் என்கிற வரலாற்று அறிவைத் தெரிந்து கொண்டிருந்தால் ஜெயலலிதா கலைஞரை இராவணன் என்று குறிப்பிடுவதற்கான முகாந்திரமும் புரிந்திருக்கும்.

17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராமன் பாலம் கட்டினான் -_ அந்தப் பாலத்தை இடித்துவிட்டு சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சென்று முடக்கி இருப்பவர் யார்? ஜனசக்தி ஜால்ரா அடிக்கும் ஜெயலலிதாதானே?

இராமன் மீது இந்த அம்மையாருக்கு ஏன் இந்த அளவு அபிமானம்? இதனைப் புரிந்து கொள்வதற்கு ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மவுடீகத்தை, மூடநம்பிக்கையை முன் வைத்து முடக்கும் ஜெயலலிதாவை கண்டிக்கத் துப்பில்லாதவர்கள் எல்லாம் மிக முக்கியமான திட்டத்தைக் கண்டு கொள்ளாமல் வெறும் சட்டமன்றப் பதவிக்காக தங்களை அடகு வைக்கும் ஆசாமிகள் எல்லாம் பகுத்தறிவு இயக்கத்தை நோக்கிப் பாய்வது பரிதாபமே!

இராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்று பேசிய (29-.7.-2003) ஜெயலலிதாதான் மார்க்சிய கண்ணோட்டத்தில் புடம் போட்ட மதச்சார்பின்மையின் மாணிக்க விளக்கோ!

பெயர்கள் சூட்டுவதில்கூட மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் -_ திராவிடர் இயக்கம். நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனதும், இராமையன் அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம் மதியழகன் ஆனதும் எல்லாம் திராவிட இயக்கத்தால் ஏற்பட்ட இன, மொழி எழுச்சியும் பண்பாட்டுப் புரட்சியுமாகும்.

தமிழ்மொழியில் சமஸ்கிருத ஆதிக்கத்தின் ஊடுருவலால் விளைந்த கேடுபாடுகள் கொஞ்சமா, நஞ்சமா?

இதன்மீது ஆழமான பார்வை இருந்தால் மட்டுமே ஸ்ரீ க்கும், திருவுக்கும் இடையிலான போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவர் கூறியதன் கொள்கைப் பார்வை புரியும்.

ஜெயலலிதா போகும் இடங்களில் எல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவது உண்டே! தப்பித் தவறி இதுவரை ஒரு குழந்தைக்காவது தமிழில் பெயர் வைத்ததுண்டா?

ஜெயஸ்ரீ, ஜெயப்பிரியா, ஜெயச்சந்திரன், ஜெயராமன், ஜெயகிருஷ்ணன்...

_ இத்தகைய வடமொழிப் பெயர்களை வலிந்து வைப்பதேன்? இதனைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருந்தால் ஸ்ரீக்கும், திருவுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று திராவிடர் கழகத் தலைவர் கூறியதற்கான பொருள் புரிந்திருக்குமே!

நாரதன் என்ற கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற கடவுளுக்கும் (ஆணுக்கும் _ ஆணுக்கும்) பிறந்த 60 குழந்தைகள்தான் தமிழ் ஆண்டுகள் என்றும் அவை பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடியக் கூடியவை என்றும் கூறுவது அறிவுக்குப் பொருந்தக் கூடியதுதானா? இந்த 60 ஆண்டுகளுக்கான பெயர்களில் ஒரே ஒரு பெயராவது தமிழில் உண்டா? தமிழ் அறிஞர் களும், திராவிர் கழகமும் தொடர்ந்து வலியுறுத் தியதன் விளைவாக முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இந்த மூடப் புராணப் புழுதியைத் தூக்கி எறிந்து தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று அறிவித்து திருவள்ளுவர் ஆண்டை சட்டரீதியாக நடைமுறைப்படுத்தினாரே _- இதனை வரவேற்க ஜெயலலிதா மறுப்பது ஏன்?
இதனைப் புரிந்து கொண்டால் திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் சொன்னதற்கான காரணமும், கருத்தும் விளங்கும்.

நீதிக்கட்சி ஆட்சியின் போது திரு என்ற சொல்லை அறிமுகப்படுத்திய போது ஆச்சாரியார் (ராஜாஜி) என்ன சொன்னார்? ஸ்ரீ என்றே போட வேண்டும் என்றாரே - _ அது ஏன்? அதனைப் புரிந்து கொண்டால், திராவிடர் கழகத் தலைவர் ஸ்ரீக்கும் திருவுக்கும் இடையே போராட்டம் என்று சொன்னதற்கான நியாயம் விளங்கும். இது போல் எத்தனை எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் கூற முடியும்.

தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் தொகுதியைத் தேர்வு செய்ததற்கு என்ன காரணம்? அய்யங்கார்களின் வாக்குகள் அதிகம் என்பதால்தானே!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் நடைபெற்ற அரிய நிகழ்வுகளைக்கூட கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலை, என்ன செய்வது!

இனப்போராட்டம் என்று திராவிடர் கழகத் தலைவராகப் பார்த்துக் கற்பிதம் செய்தது போல கடுகடுக்கிறதே ஜனசக்தி.

தமிழ்நாட்டின் தேர்தல் களம் பார்ப்பனர் -_ பார்ப்பனர் அல்லாதார் என்ற மய்யப் புள்ளியை வைத்துச் சுழன்றது இல்லையா? பூணூலைப் பிடித் துக்கொண்டு பிராமணர்களே ஓட்டுப் போடுங்கள் என்று ஆச்சாரியார் கூறவில்லையா?

1971 இல் நடைபெற்ற தேர்தல் நினைவு இருக் கிறதா? சேலத்தில் இராமனைப் பெரியார் செருப் பாலடித்தார் என்று சொல்லி அந்தத் தேர்தலைப் பற்றி பார்ப்பனர்களும், பார்ப்பன ஊடகங்களும் எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்தன? அந்தத் தேர்தலில் வெளிப்படையாக நடந்த பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போராட்டம் குறித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் என்ன கூறினார்?

இன்று ஆஸ்திகம் என்பது உயர்ஜாதி யினரின் நலம். இன்று நாஸ்திகம் என்பது பெரு வாரியான தமிழ் மக்களின் நலம். உங்களுக்கு இதில் எது வேண்டும்? (19.-2.-1971) என்று வினா தொடுத்தாரே, அதனை அறியுமா ஜனசக்தி? இந்த வரலாற்றையெல்லாம் அறிந்து வைத்திருந்தால் திராவிடர் கழகத் தலைவரின் கருத்தை நையாண்டி செய்ய முன்வந்திருக்காது.

காவி உடைக்காரருக்குப் புரிந்தது சிகப்புச் சட்டைக்காரர்களுக்குப் புரியாமல் போய் விட்டதே! காரணம் -_ அடிப்படையில் தெளிவற்ற தன்மையே!

ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த மறுநாளே சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள வைணவக் கோயில் பட்டாச்சாரியார்கள் கோயில் பிரசாதத்துடன் வந்து ஜெயலலிதாவைச் சந்தித்து ஆசீர்வதித்து, அ.இ.அ.தி.மு.க.விலும் உறுப்பினர்களாகச் சேர்ந்து விட்டார்களே _ இதற்கு மேலும் ஜனசக்திக்குச் சொல்ல வேண்டுமா?

தந்தை பெரியாரைத் தூக்கி, தந்தை பெரியார் அவர்களுக்குப் பின் அவர் கண்ட இயக்கத்தை கண்ணிமையாகப் போற்றி வழி நடத்திச் செல்லும் திராவிடர் கழகத் தலைவரை சிறுமைப்படுத்தி எழுதும் ஜனசக்திக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் புரியும் வகையில் தந்தை பெரியார் அவர்கள் கூறிள்ளதை இந்த இடத்தில் எழுதிக் காட்டுவது மிகவும் பொருத்தமானதாகும்.

இன்றைய அரசியல் போராட்டம் என்பதே - கம்யூனிஸ்ட் கட்சிகள் முதல் எல்லாக் கட்சிகளுக்கும் சமுதாயத் தத்துவங்கள் தான் அடிப்படை இலட்சியமே தவிர, மற்றபடி வாயால் சொல்லிக் கொள்வதற்குக் கூட, கொள்கைகள் கிடையாதே! அதாவது எதுவும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்ற அடிப்படையைக் கொண்டதுதான். (விடுதலை 22.-5.-1967)

கம்யூனிஸ்ட்களையும் சேர்த்துத்தான் தந்தை பெரியார் கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட்கள் இதனைப் புரிந்து கொள்ளாவிட்டால் அதற்குத் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களா பொறுப்பு?

உத்தரப்பிரதேசம், பிகார், பஞ்சாப் மாநிலங்களில் அன்றைய ஜனசங்கத்துடன் சி.பி.அய். பதவிகளைப் பகிர்ந்து கொண்டது போன்ற கொள்கைத் தெளிவு திராவிடர் கழகத்துக்கு இல்லை என்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளத் தயார்!

ஜனசக்தியின் பார்வைக்கு....
http://viduthalai.in/new/page-1/7490.html

No comments:


weather counter Site Meter