Pages

Search This Blog

Monday, February 14, 2011

திருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா?

திருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா? சேக்கிழார் புகுத்தியவையே!

தெய்வப் புலவர்  எனப் புகழப்பட்ட சேக்கிழார் சமணர்கள்பால் கொண்ட வெறுப்பு பெரியபுராணத்தில் காணப்படுகிறது.
சேக்கிழார் தம் நூலில் சமணர்களைப் பற்றிக் கூற வருகையில் அவர்கள் தூய்மையில்லாதவர்கள் என்று கூறுகின்றார். சமணர்கள் மயிர் பறிக்கப்பட்ட தலையை யும், ஊத்தை வாயையும் அதாவது நாற்றமுடைய வாயையும், மாசுடைய சரீரத்தையும் உடையவர்கள் எனவும் பழிக்கிறார்.
ஆனால், சமணர்களால் எழுதப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள நீதி ஒழுக்க நூல்கள், வரலாற்று ஆதாரங்கள் முதலியவற்றைக் காணும்போது சமணர்கள் தூய்மையான உடல், ஒழுக்கமான ஆசாரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்று அறிய முடிகிறது. எனவே சமண சமயத்தின்பால் கொண்ட வெறுப்பினாலேயே சேக்கிழார் இழித்தும், பழித்தும் சமணர்களை நிந்தித்தார் எனலாம்.
வேயுறு தோளிபங்கன்
திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்குச் செல்லப் புறப்பட்டார். அப்போது அவருடன் இருந்த திருநாவுக் கரசர், அவர் சிறுவர் ஆனமையால் சமணர்கள் வஞ் சனைக்கு அளவில்லை. கிரகங்கள் வலிமை மிக்கவை; எனவே பாண்டிய நாட்டிற்குப் போக வேண்டாம் என்று தடுத்ததாகவும், அதற்கு அவர், சிவபெருமான் தன்னுள்ளத்தில் இருப்பதனால் தமக்குப் பயமில்லை என்று சொன்னதாகவும் சேக்கிழார் பாடியிருக்கிறார். அதற்கு ஆதாரமாக வேயுறு தோளிபங்கன் என்ற பதிகம் பாடினார் என்று ஆதாரம் காட்டுவார்.
ஆனால் வேயுறு தோளி பங்கன் என்று தொடங்கும் பதிகப் பாடலில் பரமசிவன் தன்னுள்ளத்தில் புகுந்து இருப்பதனால் கிரகங்கள் கெடுதி செய்யா என்று சொல்லுகிறாரேயொழிய, சேக்கிழார் பாடியது போல் அப்பர் அவரைத் தடுத்ததாகவும், அதற்கு மறுமொழியாகவும் யாதொரு ஆதாரமும் இல்லை. அப்பர் பேரில் சேக்கிழார் வீண்பழி சுமத்துகிறார் எனலாம்.
பாடல் வரிகள் இவை:
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் சடைமுடி மேல் அணிந்து
என் உளமே புகுந்து அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்
வியாழன் வெள்ளி சனி
பாம்பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை மிக நல்ல நல்ல
அடியார் என்பவர்க்கு மிகவே
பாண்டிய நாட்டில்
பாண்டிய நாடு சென்ற திருஞான சம்பந்தரை அரசி மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும், அரசன் பாண்டியன் கூன்பாண்டியன் சமணப் பற்றுடையவன் ஆதலால் அவன் அறியா வண்ணம் சந்திக்கின்றனர்.
திருஞான சம்பந்தரும் அடியார்களும் மடம் ஒன்றிலே தங்கினர். அன்றிரவு சமணர்கள் மந்திர சக்தியினால் அந்த மடத்திற்குத் தீ வைக்க முயன்று, அது முடியாமல் போனதால் அந்த மடத்திற்குத் தீ வைத்துவிட்டனர் என்று சொல்லப்படுகிறது. தீ பரவும் முன்னர் விழித்துக்கொண்ட சைவ அடியார்கள், ஞானசம்பந்தரிடம் தெரிவிக்க அத்தீ பையவே சென்று பாண்டியனைத் தாக்க வேண்டுமென்று அவர் பாடினாராம். இவர் பாடியதால் தீ பாண்டியனைச் சுரமாகத் நாக்கியதால் மன்னன் அவதிப்பட்டானாம்.
இந்தக் கதை பற்றி ஆராய்கின்ற நம் முன் எழுகின்ற வினாக்கள் இவை:
பல்லாயிரக்கணக்கான சைவ அடியார்கள் தங்கியி ருந்த மடத்தினுள் சமணர்கள் எவ்வாறு உட்புக முடியும்?
மடத்திலே வைத்த தீ எப்படிபாண்டியனைப் போய்ச் சேர்ந்து, பாண்டிய மன்னனுக்குக் காய்ச்சலாக மாற முடியும்? எனவே, உண்மை வேறாக இருக்க வேண்டும் சைவர்கள் தங்கள் மடத்திற்குத் தாங்களே தீ வைத்து விட்டனர். அத் தீ பரவும் முன்னர் அதனையும் அணைத்து விட்டு யாவரும் அறியக் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டனர். இது அக்காலத்துப் பிராமணர் செய்த சூழ்ச்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மன்னனுக்குச் சுரம் ஏற்பட்டது எனும் நாடகத்தைச் சைவ மடத்தவர் இவ்வாறு நிகழ்த்தியிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. எப்படி?
திருநீற்றின் மகிமை
அரசியும், அமைச்சரும் மன்னனை எப்படியாவது சமணத்திலிருந்து இழுத்து வந்துவிட வேண்டும் என முயன்றனர். அரசன் தான் சமணன் ஆன போதும் தன் மனைவியும், அமைச்சரும் சதியாலோசனை செய்து அரசனுக்கு எவ்வகையிலாவது நோய் ஏற்படுத்தி, அதைத் திருநீற்றினால் நீக்குவது போல் செய்ய முடிவு செய்தபடி உண்ணும் உணவில் மருந்து கலந்து சுரம் வரச் செய்து மாற்று மருந்தினால் சுரம் நீக்கி, வெளியில் மடத்திற்கு வைத்த தீ அரசனைத் தாக்கியது போலும், அதை விபூதியினால் நீக்கியதாகவும் செய்து விட்டனர் என்றே கருதப்படுகிறது.
அப்படித் திருநீற்றினால் சுரம் நீங்கியது உண்மை யானால் இப்போது அவ்வாறு செய்ய முடிகிறதா? யாருக் காவது வெறும் திருநீறு இன்று சுரம் நீக்குகிறதா? அப்படி யானால் இத்தனை மருத்துவர்கள், மருந்துக்கடைகள் ஏன்? அப்படி நடக்குமானால் கிறித்துவர், இசுலாமியர், சமணர் ஏன் வைணவரும்கூட திருமாலைக் கைவிட்டு, அவரவர் சமயத்தை விட்டு விட்டுச் சைவ சமயத்திற்கு வந்து விட மாட்டார்களா? அக்காலத்திலேயே திருநீறு அற்புதம் செய்தது, காய்ச்சல் நீக்கியது என்பதில் சந்தேகம் கொண்டவர்களும் இருந்ததினால் திருநீற்றோடு நின்று விடாததாலேயே அனல்வாதம், புனல் வாதம் ஆகிய வேறு பரிசோதனை கரம் இருந்திருக்கின்றன போலும். எனவே அனல் வாதம் பற்றிக் காண்போம்.
அனல் வாதம்
அனல் வாதம் எனப்படும் நிகழ்ச்சி நடந்ததா? என்பதே சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. ஏனென்றால் தேவாரத்தில் திருநள்ளாற்றுப் பதிகத்தில் எரியிலிடினும் நன்னாதவர் தம்நாமம் பழுதில்லை என்கிறார். அதாவது நெருப்பில் போட்டாலும் கூட என்று சொல்கிறாரே அன்றி நெருப்பில் போட்டுச் சோதித்துப் பார்த்ததாக இல்லை.
கடைசிப்பாட்டில் கொற்றவ னெதிரிடை யெரியி னிலிட  வினவ கூறிய என்று கூறுகிறார். இதிலிருந்து அறிவது இப்பாடல்கள் நெருப்பில் இடும் முன் பாடிய பாக்களே தவிர,  நெருப்பில் ஏடுகளைப் போட்டு அவை எரிந்து போகாது எடுத்த பின் பாடிய பாட்டுகளல்ல. நெருப்பில் இட்டு எடுத்த பின் பாடிய பாட்டுகள் ஏதாவது இருக்கின்றனவா? நெருப்பில் போட்டாலும் - அதாவது போட்டால்கூட அழியாது என்றுதான் உரைத்துள்ளார். எனவே ஏட்டை நெருப்பில் போட்டதாகவும், அவ்வாறு போட்டு எடுத்து எரியாமல் இருந்தது எனவும் கதைகட்டி விடப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் அக்கதை இன்றும் நிலவி வருகிறது என்றுதான் கருதவேண்டி யுள்ளது. அதாவது வாதம் செய்வதற்கு முன் சொல்லிய கூற்றை வைத்துக்கொண்டு, நெருப்பில் போட்டு அதில் எரியாமல் ஏடு வந்துவிட்டது என்ற கூற்றும் சந்தேகத்திற்கு இடமான கூற்றே என்று நன்கு தமிழாய்ந்த அறிஞர்கள் எடுத்து உரைக்கின்றனர்.
புனல் வாதம்
இது வாழ்க அந்தணர் என்று தொடங்கும் திருஞான சம்பந்தர் பதிகத்தாலறியக் கிடக்கிறது. பன்னிரண்டு பாடல்கள் உடைய பதிகம் இது. பதிகம் என்றால் பத்துப்பாட்டு உடையது. ஆனால் திருஞான சம்பந்தர் பதினோராவது பாட்டில் அடைவு கூறி பத்தை பதினொன்று ஆக்கினார். ஆனால் இப்பதிகத்திலோ பன்னிரண்டாவது பாட்டில் அடைவு கூறுகிறார்.
பதினொன்றில் தெண்ணீர் பற்றின்றிப் பாங்கெதிர் பரவும் பண்பு நோக்கிற் எனும் கூற்று உள்ளது. எனவே இந்தப் பதினொன்றாம் பாட்டு இடைச்செருகல் என்றே கருதப்படுகிறது. சுந்தரமூர்த்தி தேவாரத்தில் சிதம்பரத்துத் தீட்சிதர்கள் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளச் சுந்தரர் தம்மைத் தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன் என்று சேர்த்துக் கொண்டார்கள். அது போல் இப்பதிகத்திலும் வாழ்க அந்தணர் அதாவது பார்ப் பனர்கள் வாழ்க என்று தங்கள் புகழ் பாடிப் பெருமை பாடி ஒரு பாட்டை இடைச் செருகலாகச் சேர்த்துக் கொண்டார்கள் என்று கருதப்படுகிறது.

இப்பாடலிலும் கூட ஏடு தண்ணீரை எதிர்த்துச் சென்றதாகக் கூறப்படவில்லை. நீர் கரைபுரண்டு ஓடுவதையே கரைக்கோலை தெண்ணீர்ப் பற்றின்றிப் பாங்கெதிர் விரவும் பண்பு என்று தான் கூறப்பட்டுள்ளது.
அப்படியானால் ஏடு எதிர்த்து வந்தது என்ற கதை எப்படி நுழைந்தது? ஆரம்பத்தில் கூறியது போல் நம் தெய்வப் புலவர் சேக்கிழார் பெருமான் எழுதிவைத்தது தான் இதுவும்.

சேக்கிழார் திருவேடகப் பதிகத்தை ஆதாரமாக வைத்து ஏடு ஆற்றை எதிர்த்து வந்ததென்று கூறி விட்டார். பதினோராம் பாட்டிலே வைகை நீரேடு சென்றதனை தரும் ஏடகம் என்கிறார்.
இங்கே இன்னொரு உண்மையை நமக்கு முன்னே ஆராய்ந்த புலவர்கள் எடுத்துக் கூறுகின்றனர் அதாவது திருஞான சம்பந்தர் வைகை ஆற்றிலே ஏடு விட்டு, அது அந்த ஊர்அடைந்து அங்கு கிடைத்த பின் ஏடகம் திரு ஏடகம் என்றும் பெயர் பெறவில்லை.அதற்கு முன்னாலே ஏடகம் எனும் பெயர் அவ்வூருக்கு வழங்கியிருக்கிறது. அதற்குச் சான்று தேடி வேறு எந்தத் தேவாரப் பாடலையும் தேடி ஓடிட வேண்டாம். திருஞானசம்பந்தரின் பாடல்களே சான்றாகின்றன.அப்பதிகத்திலேயே ஒவ்வொரு பாட்டின் இறுதி யிலும் ஏடகத் தொருவனை ஏடகத் தெந்தை என்று சொல்லி வருகிறார். ஆகவே முன்னாலேயே வேறு என்ன காரணத்தாலோ ஏடகம் என்ற பெயர் அவ்வூருக்கு இருந்துள்ளது. ஏடு கிடைத்த பின் ஏடகம் என்று பெயர் வழங்கியது என்றால் ஏடு கிடைக்கும் முன் அவ்வூருக்கு வேறு பெயர் இருந்திருக்க வேண்டுமல்லவா? அப்பெயர் என்ன? அப்படிப் பெயர் ஏதும் எங்கும் குறிப்பிடப்படவில்லை. முன்பே அவ்வூருக்கு ஏடகம் என்றே பெயர் இருந்திருக்கிறது.
கழுவிலேற்றிய செயல்
சுரம் விலகியதும் பாண்டியன் தன் அமைச்சர் குலச்சிறையாரிடம் இச்சமணர்கள் எங்கள் பரம குருவான திருஞான சம்பந்தரிடம் தீங்கு செய்தமை யால் இவர்களைக் கழுவிலேற்றுக என்றானாம். அரசன் கழுவிலேற்றச் சொன்னபோது அன்பே சிவம் எனும் சைவ சமய குரூரவரான திருஞான சம்பந்தர் என்ன சொன்னார், என்ன செய்தார்?

திருஞான சம்பந்தர் ச மணர்களிடத்துச் சிறிது பகை கூட இல்லாதவராய் இருந்த போதிலும் அச்சமணர்கள் சிவனடியார்கள் வாழும் திருமடத் திற்குத் தீவைத்த பாதகச் செயல் அதிபாதகமாதலால், அதிபாதகம் செய்தவர் எவராயிருந்தாலும் அவரைக் கொல்ல வேண்டும் என்று சிவாகமம் சொல்வதால் பாண்டியன் கழுவிலேற்றச் சொன்ன போது தடுக்கவில்லை, சமணர் கழுவிலேற்றப்பட்டனர் என்று கூறப்படுகிறது.

அதாவது திருஞான சம்பந்தருக்குச் சமணர்கள் மேல் பகையில்லையாம் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாட்டில் சமணர்களை வசைபாடி, இழிவு மொழி கூறிப் பாடியுள்ள திருஞானசம்பந்தருக்குச் சமணர்கள்பால் வெறுப்பு, பகையில்லையாம்.
ஆனால், அதிபாதகஞ்செய்தவர் யாராயிருந்தாலும் அவரைக் கொல்ல வேண்டும் என்று சிவாகமம் சொல்கிறதாம். தேவாரங்களில் ஆங்காங்கு குற்றஞ் செய்தவர்களான போதிலும் அவர்களைக் கடவுள் மன்னிப்பார் என்றிருக்க, அவர்களைக் கொல்ல வேண்டுமென்று சொல்வது சிவாகமம் என்றால் அந்த ஆகமத்தையல்லவா நெருப்பில் போட வேண்டும்? எனவே, இது வேதத்தின் பேராலும், ஆகம சமயத்தின் பெயராலும் சமயக்  கொடுமை நிகழ்த்தப் பார்ப்பனர் செய்த சூழ்ச்சி. இச்சூழ்ச்சிக்கு எண்ணாயிரம் பேர் பலியாகி இருக்கின்றனர்.

திருமடத்திற்குத் தீ வைத்ததனால்தான் திருஞான சம்பந்தர் கழுவேற்றியதைத் தடுக்காதிருந்தார் என்பது அல்ல, அவர் முன்னரே சமணரை வாதில் வென்று அழிக்கத் தீர்மானித்திருந்தார் என்பது தேவாரம் வாயிலாக அறியப்படுகிறது. எண்ணாயிரம் பேரை - எவ்விதக் கொலை பாதகமும் செய்யாத வர்களை - அன்புச் சமயத்தைப் போதித்தவர்களைக் கொன்ற கொலை பாதகச் செயல் பிராமணிய ஆதிக்கம் தலையெடுத்து, வேதாகமம் செல்வாக்குப் பெற்றதாலேயே ஏற்பட்டிருக்கிறது.

No comments:


weather counter Site Meter