Pages

Search This Blog

Thursday, February 3, 2011

திமுக பொதுக் குழுவில் 21 தீர்மானங்கள்

கச்சத் தீவு புது ஒப்பந்தம் தேவை 4ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம்

இனவுணர்வு தலைக்கேறி செயல்படும் பத்திரிகைகளுக்குக் கண்டனம்!

இந்தியாவின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று

தமிழ் நாட்டின் பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதல் அமைச்சர் கலைஞருக்குப் பாராட்டு

குற்றம் சுமத்தப்பட்டதாலேயே இராசா குற்றவாளியாக மாட்டார்

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா மீது குற்றம் சுமத்தப்பட்டதாலேயே அவர் குற்றவாளியாக மாட்டார் என்பது உட்பட 21 முக்கிய தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில், 3.2.2011 வியாழக்கிழமை அன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற, தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம்:- 1.

இந்திய நாட்டில், தமிழகத்தை வழிகாட்டும் மாநிலமாக உயர்த்தி, தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு!

மாண்புமிகு முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் 1969ஆம் ஆண்டு முதன்முதலாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நாள் தொடங்கி, ஐந்தாவது முறையாக முதலமைச்சர் பொறுப் பேற்றுச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இக்காலம் வரையிலும் கழக அரசின் திட்டங்கள் அனைத்தும் நலிந்த பிரிவு மக்களை நாடிச் செல்லும் திட்டமாகவும், பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் உட்பட்ட சமுதாயத்தின் அடித்தளத்தில் வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்கித் தவிக்கும் மக்களை மேம்படுத்தி, வழிநடத்தும் திட்டங்களாகவே அமைந்த வரலாற்றை நாடு நன்கு அறியும்.

குறிப்பாக, மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்க்ஷாக்களை ஒழித்து, அவற்றுக்கு மாற்றாக இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கியது - பார்வை இழந்தோருக்கு இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் - விவசாயிகளுக்கும், நெசவாளர் களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் - விவசாயிகளின் நலன் கருதி உற்பத்திப் பொருட் களுக்கு உரிய விலை கிடைத்திட, தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகள் -அனைத்து சாதியினரும் அர்ச்சகராகச் சட்டம் - மனிதக் கழிவைச் சுமக்கும் துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கான திட்டம் - பெண்களுக்கு பரம்பரைச் சொத்தில் ஆண்களுடன் சமஉரிமை வழங்கும் சட்டம் - அரசுப் பணிகளில் மகளிருக்கு 30 சதவிகித வேலைவாய்ப்பு வழங்கும் சட்டம் - பட்டக் கல்வி வரை பயிலும் மாணவ, மாணவி களுக்கு இலவசக் கல்வி மற்றும் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை - ஏழை மகளிருக்கு முது கலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி - ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் உதவித் தொகை - கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி - ஐம்பது வயதாகியும் திருமணமாகாத ஏழை மகளிருக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் - குடும்ப அட்டை உள்ள எல்லாக் குடும்பங்களுக்கும் இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி - எரிவாயு இணைப்பு அனுமதியுடன் கூடிய இலவச எரிவாயு அடுப்பு - நாடெங்கும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்தல் - சுழல்நிதி உதவிகள் - மாவட்டந்தோறும் உடல் ஊனமுற்றோருக்கு உரிய உதவி வழங்கிடும் பல்வேறு திட்டங்கள் - நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட அரவாணிகளுக்கு மறுவாழ்வு அளித்திட அரவாணிகள் நலவாரியம் - ஆதிதிராவிடருக்கு இந்தியாவிலேயே முன்மாதிரி யான இலவச கான்கிரீட் வீடுகள் கட்டி வழங்கும் திட்டம் - வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர் களுக்கு உதவிநிதி திட்டம் - மக்கள் நல்வாழ்வுக் கென வருமுன் காப்போம் திட்டம் - ஏழைச் சிறார் இதயநோய்க்கு சிகிச்சை வழங்கும் திட்டம் - நிலமற்ற ஏழைகளுக்கு தரிசு நிலத்தைப் பண்படுத்தி இலவசமாக நிலம் வழங்கும் திட்டம் - சிறுபான்மை இசுலாமியர்களுக்குத் தனி இடஒதுக்கீடு - பழங்குடியினருக்குப் புதிதாக ஒரு சதவிகித இடஒதுக்கீடு - மிகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருபது சதவிகித இடஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள அருந்ததிய மக்களுக்கு 3 சதவிகிதம் உள்ஒதுக்கீடு விவசாயிகளுக்கு ரூ.7000 கோடி கடன் தள்ளுபடி மற்றும் வட்டி இல்லாத பயிர்க்கடன் - இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் கழக ஆட்சியில் மட்டுமே வழங்கப்படும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் விலைக்கு வழங்கும் திட்டம் - குழந்தைகட்கு சத்துணவுடன் வாரம் ஐந்து முட்டைகள், முட்டை ஏற்காதவர்கட்கு வாழைப்பழம் வழங்கும் திட்டம் - பல்வேறு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கென 26 நலவாரியங்கள் - கலைஞர் வீடு வழங்கும் திட்டம் - மாவட்டந்தோறும் பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம் - ஒவ்வொரு ஒன்றியத்திலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் -

கிராமங்களின் தேவைக்கான நமக்கு நாமே திட்டம் - பெருந் தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாள் எனத் தனிச்சட்டம் - ஆதிதிராவிட மக்களுக்கு தாட்கோ மூலம் பெற்ற கடன்கள் தள்ளுபடி - பட்டம் பெற்றவர்கள் இல்லாத குடும் பத்தைச் சார்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர் தொழில் கல்விக்குக் கட்டணச் சலுகை என்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருவது கழக அரசு. தமிழகத்தின் துணை முதல்வர், கழகப் பொருளாளர், தளபதி மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுமையும் மின்னல்வேகச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, தந்தை பெரியார் சிலையுடன் அமைந்த சமத்துவபுரங்களைத் திறந்து வைத்தும், மகளிர் சுயஉதவிக்குழுக்கள், சுழல்நிதி வழங்குதலை விரைவுபடுத்தி சொல்வதைச் செய்வோம்; அதுவும் உடனுக்குடன் செய்வோம் என்பதை நிரூபித்துக் காட்டியதும் கலைஞர் அரசுதான்.

மேலும், உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வாழும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயனடையும் அடிப்படையில் தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டுத் திட்டம், அவசரகால ஊர்தி சேவை (108), பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு துவக்க நன்னாளில் சென்னை மாநகரில் 20 ஊர்திகளுடன் மாண்புமிகு முதல்வர் அவர்களால் தொடங்கப் பட்டு, ஓராண்டில் இத்திட்டம் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் 290 ஊர்திகளுடன் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

உயிர் காக்கும் இந்த இரண்டு திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளன. இந்த மனிதநேயத் திட்டங்களால் பயனடைந்த ஏழை எளியவர்கள் மகிழ்ச்சிப் பெருக்குடன், இந்த உயிர் காக்கும் திட்டங்களை நாள்தோறும் வாழ்த்தி, தலைவர் கலைஞர் இருக்கும் திசை நோக்கி வணங்குகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு, தமிழகத்தை இந்திய நாட்டுக்கே வழிகாட்டும் மாநிலமாக உயர்த்தித் தமிழ்நாட்டு மக்களுக்காக ஓய்வின்றி உழைத்துப் பொற்கால ஆட்சியை வழங்கிக் கொண்டிருக்கும், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்:- 2

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

ஒட்டுமொத்த தமிழ்மக்களின் நீண்டநாள் கோரிக்கையான தமிழ் செம்மொழித் தகுதியைப் பெறவேண்டும் என்பதற்கான தொடர் முயற்சிக்கு வெற்றி கிட்டும் வகையில், தலைவர் கலைஞர் அவர்கள், தன்னை முழுமையாக அப்பணியில் ஈடுபடுத்திக் கொண்டு, தமிழ்மொழிக்குச் செம் மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து வரலாறு படைத்துள்ளார்கள். இந்த முயற்சிக்கு பெரும் துணையாக இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டும் தலைவர் திருமதி சோனியாகாந்தி அம்மையார், இந்திய நாட்டின் பிரதம அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங், அன் றைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. அர்ஜூன்சிங் ஆகியவர்களும் பாராட்டுக்குரிய வர்கள்.

அதனைத் தொடர்ந்து, வரலாறு படைக்கும் வகையில், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை தமிழகமே வியந்திடும் வகையில் நடத்திக் காட்டிய பெருமையும் தலைவர் கலைஞர் அவர்களையே சாரும். அதற்காக கழகத் தலைவர் அவர்களுக்கு இப்பொதுக் குழு தனது பாராட்டுக் களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் :- 3

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை, அண்ணாவின் இதயமாம் தலைவர் கலைஞர் அவர்கள், ஆண்டு முழுமையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்ததோடு, பேரறிஞர் அண்ணாவி னுடைய நினைவு அலைகள் என்றும் ஓயாத கடல் அலைபோல் தமிழர்களின் உள்ளங்களில் ஒலித்துக் கொண்டேயிருக்கும் வண்ணம், நூற்றாண்டு விழா நிறைவினையொட்டி, சென்னை கோட்டூர்புரத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஒன்றினை, சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்நூலகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய நூலகம் என வல்லுநர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகத்தை அறிவு ஆசான் பேரறிஞர் அண்ணாவின் நினைவாக உருவாக்கி, எதிர்கால இளைய தலைமுறையின ருக்கு, அறிவுக்கோர் கலங்கரை விளக்கம் என காலமெல்லாம் அறிவொளி பரப்பிடும் வகையில் அமைத்திட்ட, மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு, இப்பொதுக்குழு உள்ளம் நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்:- 4

புதிய சட்டமன்ற வளாகம்!

தமிழகத்தின் தென்கோடிக் குமரிமுனையில் கண்டோர் வியக்கும் வண்ணம், மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், அய்யன் வள்ளுவருக்குச் சிலையமைத்தது போலவே, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தை அமைத்து அங்கே வரலாற் றுச் சிறப்புமிக்க சட்டப்பேரவை மண்டபத்தையும் தலைமைச் செயலகத்தையும் உள்ளடக்கிய புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்கி, அதன் திறப்பு விழாவினை இந்தியப் பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் அவர்களைக் கொண்டு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அவர்களின் முன்னிலையில் நடத்திக் காட்டி யிருக்கிறார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் கலை நயத்துடனும் - நவீன உயர்தொழில் நுட்பத் துடனும் - ஏற்றமிகு எழிலுடனும், குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டிமுடிக்கப்பட வேண்டுமென்ப தற்காக, தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சியும், கண்காணிப்பும் அளப்பரிய தாகும்.

பல்வேறு பணிகளுக்கிடையிலும், நாள்தோறும் நேரடியாகச் சென்று கட்டிடப் பணிகளை மேற்பார் வையிட்டு, ஆலோசனைகள் வழங்குவதைத் தன்னு டைய அன்றாடக் கடமைகளில் ஒன்றாக அமைத்துக் கொண்டு, தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்த தொடர் முயற்சியும், அக்கறையும், அயராத ஈடுபாடும்தான், இத்தகைய பிரம்மாண்டமான சட்டமன்ற வளாகம் உருவாவதற்கு முழுமையான காரணம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார் கள். மேலும் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது உள் நோக்கத்தோடு கலைக்கப்பட்ட தமிழக மேலவையை மீண்டும் தமிழகத்திலே ஏற்படுத்துவ தற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதற்கான இடத் தையும் நிர்ணயம் செய்துள்ள மாண்புமிகு முதல மைச்சர் கலைஞர் அவர்களுக்கு இந்தப் பொதுக் குழு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்:- 5

தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத கிராமங்களை உருவாக்கும்

கலைஞர் வீடு வழங்கும் திட்டம். இந்திய நாடு விடுதலை பெற்ற பின்னர் - முதல் மாநிலமாக - கழக அரசால் 1971ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டு, குடிசை வீடுகளுக்குப் பதிலாக மாடி வீடுகள் கட்டிதரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு முழுவதும், ஏழை எளிய மக்கள் வசிக்கும் 21 இலட்சம் குடிசை வீடுகளுக்குப் பதிலாக, மனிதநேய அடிப்படையில், கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அறிவித்து, இந்த ஆண்டில், முதல் கட்டமாக 2,250 கோடி ரூபாய் செலவில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக 3 இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. ஆறாண்டு காலத்தில் தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாத வாழ்விடங்கள் அமைக்கும் வாய்ப்பை இத்திட்டத் தின் மூலம் கழக அரசு உருவாக்கியுள்ளது. மேலும் பேரூராட்சிகளிலும், நகர்ப் புறங்களிலும் வாழும் ஏழையெளிய மக்களுக்கான வீடு கட்டும் திட்டம் பற்றியும் கலைஞர் அரசு அறிவிப்பு செய்து அதனை நடைமுறைப்படுத்தவுள்ளது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமைக்கு ஆதாரமான நிரந்தர கான்கிரீட் வீடுகள், இந்தத் திட்டத்தின் மூலம் முழுமையாகவே, தமிழக மக்களுக்கு, கழக அரசால் வழங்கப்படுவதாக இப்பொதுக்குழு கருதுகிறது.

எனவே, இத்தகைய மக்களின் அடிப்படை உரிமையை நிறைவு செய்யும் திட்டத்தை அறி வித்துச் செயல்படுத்தி வருகின்ற தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இப்பொதுக்குழு மகிழ்ச்சிப் பெருக்குடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்:- 6

மாநில சுயாட்சி

தி.மு.கழக ஆட்சியில் அமைக்கப்பட்ட ராஜமன் னார் குழு அறிக்கையை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திரு. முரசொலி மாறன், திரு.இரா. செழியன் ஆகியோரைக் கொண்ட குழு ஆய்வு செய்து தனது கருத்துகளைத் தெரிவித்தது. இவற்றின் அடிப்படையில்தான் 1974 ஏப்ரல் 14ஆம் தேதியன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநில சுயாட்சித் தீர்மானம் தமிழக சட்டப் பேரவையில் முதலமைச்சர் கலைஞர் அவர்களால் முன்மொழி யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இவற்றின் தொடர்ச்சி யாக, மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசால் 1983ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட நீதிபதி சர்க்காரியா குழுவும்; 2000ஆம் ஆண்டில் நீதிபதி வெங்கடாசலய்யா குழுவும் மத்திய-மாநில உறவுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பல பரிந்துரைகளை வழங்கியுள் ளன. மீண்டும் 2008ல் மத்திய-மாநில உறவுகளை ஆய்வதற்கு நீதிபதி பூஞ்சி குழு அமைக்கப்பட்டுள் ளது.

இந்த எல்லா குழுக்களிடமும் திராவிட முன் னேற்றக் கழகம் தனது கருத்துரைகளை எடுத் துரைத்து, முழுமையானதும், உண்மையானதுமான கூட்டாட்சி முறையை மாநில சுயாட்சி அடிப் படையில் அமைத்திட வேண்டுமென்பதை (Wholesome and genuine federalism with fuller autonomy to the States)வலியுறுத்தியுள்ளது. மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உரு வாகி, கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தேவையானத் திருத்தங் கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று - இந்தப் பொதுக் குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:- 7

மகளிர் இட ஒதுக்கீடு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தி.மு. கழக அரசு உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் மகளிர்க்கென்று 33 சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்ததன் மூலம், தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தில் மகளிர் பெரும் பங்கு வகிக்கக் கூடிய நிலைமை உள்ளது. இந்திய நாடாளுமன்றத்திலும், மாநிலச் சட்டப் பேரவைகளிலும் மகளிர்க்கு 33 சதவிகித தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்ட முன் வடிவு அவ்வப்போது ஏற்படும் கருத்து மாறு பாடுகளினால் இன்றளவும் நிறைவேற்றப் படாமல் உள்ளது.

எனவே நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகிய ஆட்சி மன்றங்களில் மகளிர் உரிமை பெறு வதை மேலும் காலம் தாழ்த்தாமல், 33 சதவிகித இட ஒதுக்கீடு மகளிர்க்கு அளிக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டுமென்று இப் பொதுக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள் கிறது.

தீர்மானம்:- 8

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை

மறைந்த தேசீயத் தலைவர்களுக்கு திருவுருவச் சிலைகளையும், மணிமண்டபங்களையும், நினைவுச் சின்னங்களையும், கட்சி பாகுபாடின்றி உருவாக்கிப் பெருமைப்படுத்துவதில் மிக உயர்ந்த ஜனநாயக மாண்புகளுக்கும் மரபுகளுக்கும் வழிகாட்டியாகத் திகழும் மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், மறைந்த இந்தியப் பிரதமர் அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள தொன்மையும், புகழும் பெற்ற தலைமை அரசு பொதுமருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனை என்று பெயர் சூட்டி யமைக்கு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்:- 9

தமிழக மீனவர்கள் பிரச்சினை

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர் கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் மீன்பிடி வலைகள் படகுகள் சிதைக்கப்பட்டும், தமிழக மீனவர்களால் பிடிக்கப்பட்ட மீன்கள் கொள்ளையடிக்கப் படுவது மான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர், வேதாரண்யம் பகுதி, புஷ்ப வனம் கிராமத்தைச் சார்ந்த மீனவர் ஜெயக்குமார் இலங்கைக் கடற்படையினரால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொடுஞ்செயலுக்கு இலங்கைக் கடற்படையினர் காரணமல்ல என வாதிடும் இலங்கை அரசை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு எழுதிய கடிதம், அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட அவசர நடவடிக்கைகள் காரணமாக மத்திய அரசின் வெளியுறவுச் செய லாளர் திருமதி நிருபமாராவ் தலைமையில் குழு ஒன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவைச் சந்தித்து இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் அடிப் படையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

புதுடெல்லி சென்ற மாண்புமிகு தமிழக முதல்வர், தலைவர் கலைஞர் அவர்களை வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களும், வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் அவர்களும் 1-2-2011ல் சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினையில் இனியும் இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறாது எனவும்,

மேலும் இந்தப் பிரச்சினையில் அவ்வப்பொழுது சுமுக முடிவுகள் மேற்கொள்வதற்காக இருசாராரையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுக்குழு நியமிப்பதென இலங்கை அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்துள் ளனர். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் என்றும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்பட்டு, அவர்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொண்டு வரும் தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய அரசின் முழுமையான கவனத்தை மீனவர் பிரச்சினைப் பக்கம் திருப்பி, நிரந்தர பாதுகாப்பிற்கு உத்திரவாதம் பெற்றுத் தந்தமைக்கு இப்பொதுக்குழு நன்றியையும் வாழ்த்தையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு,

ஏற்கனவே நிறை வேற்றப்பட்ட ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டு - பிறகு கைவிடப்பட்ட - கச்சத் தீவில் தமிழகத்திற்கு உள்ள உரிமைகளை மீண்டும் நிலைநாட்டுவதற் கேற்ற வகையில் - புதிய ஒப்பந்தம் போடப்பட வேண் டும் என்பதையும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம்:- 10

இலங்கைத் தமிழர் இன்னல் போக்கிட!

இலங்கையில் தமிழகளுக்கெதிரான போர் முடிந்து ஓராண்டாகியும், அந்தப் போரினால் பாதிக்கப்பட்ட சுமார் இரண்டரை இலட்சம் பேர் - இலங்கைத் தமிழர்கள் - அவர்களது வாழ்விடங் களுக்குத் திரும்ப முடியாமல் ஏதாவது ஒரு காரணத்திற்காகத் தடுக்கப்பட்டு இலங்கை அரசால் நிர்வகிக்கப்படும் முகாம்களில் அடைத்து வைக் கப்பட்டிருந்தனர்.

அவர்களை உடனடியாக இலங்கையில் உள்ள தற்காலிக முகாம்களில் இருந்து விடுவித்து, மேலும் காலம் தாழ்த்தாமல் அவர்களது சொந்த இடங்களில் மறு குடியமர்த்துவதைத் தவிர வேறு எந்தத் தீர்வும் கிடையாது. இந்தக் கோரிக்கை தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களிலும், முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டங்களிலும், முதலமைச்சர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தூதுக் குழுக்கள் பிரதமரிடம் நேரடியாக முறையிட்ட போதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய தேவையைப் பற்றி இலங்கை அரசுக்கு பல்வேறு நிலைகளில் இந்திய அரசு நிர்பந்தம் செலுத்தி வருகிறது.

இலங்கைத் தமிழர்களின் இன்னல் போக்கிடுவ தற்கான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலே உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு, எம்.பி., அவர்கள் தலைமையில் இலங்கை சென்று அங்கே முகாம்களில் அவதியுறும் தமிழர்களைக் கண்டு ஆறுதல் கூறியதோடு, இலங்கை அதிபரையும் கண்டு முகாம்களில் அவதிப்பட்ட தமிழர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்கு விரைவிலே செல்வதற் கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தியதன் அடிப்படையில் இதுவரை ஏறத்தாழ 1 லட்சத்து 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

அதற்குள் இலங்கையிலே அதிபர் தேர்தல் வந்த காரணத்தினால் எஞ்சியவர்களை வாழ்விடங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. எனவே அவர்களும் தங்கள் சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பவும், அவர்களது நல்வாழ்வுக்கான உதவிகள் இலங்கை அரசினால் வழங்கப்படவும் மத்திய அரசு இலங்கை அரசினை வலியுறுத்த வேண்டுமென்றும், ஏற்கனவே உறுதியளித்தபடி இலங்கைத் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு செய்வது ஒன்றுதான் நிரந்தர சகவாழ்வுக்கு வழி வகுத்திடும் என்பதால் அதற்கான அரசியல் தீர்வினைக் காண தேவையான முயற்சிகள் அனைத்தையும் மத்திய அரசு விரைவில் மேற் கொண்டு ஆவன செய்ய வேண்டுமென்றும் இப் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


தீர்மானம்:- 11

பத்திரிகா தர்மம்

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது அவர் களால் உதாசீனப்படுத்தப்பட்டு - பல வகையிலும் பழி வாங்கப்பட்ட தமிழ் - ஆங்கிலப் பத்திரிகை கள் சில, தற்போது தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் வருகிறது என்றவுடன், தாம் இது காறும் அணிந்திருந்த முகமூடியைக் கழற்றி எறிந்து விட்டு, இரத்தம் - தண்ணீரை விடக் கெட்டியானது என்பதற்கேற்ப, இன உணர்வு தலைக்கேறி வெறியாட்டம் போடு கின்ற நிலைமையையும்; எப் பாடுபட்டேனும் அ.தி.மு.க. வை மீண்டும் அரியணை யில் ஏற்றிட வேண்டும் எனும் ஆசையால், செய்தி களையெல்லாம் திரித்தும், திசை திருப்பியும், வேண்டு மென்றே பொய்ச் செய்திகளை வெளியிட்டும் பொது மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற குறுகிய நோக்கம் கொண்ட செயல்பாடுகளையும்; தமிழக மக்கள் கண்டு வருகிறார்கள்.

அத்தகைய பத்திரி கைகள் பத்திரிகா தர்மத்தை காலடியில் போட்டு மிதித்து விட்டு; கழகத்தைப் பற்றியும், கழகத் தலை வரின் குடும்பத்தைப் பற்றியும், கழக முன்னணி யினரைப் பற்றியும் இல்லாததை யும் பொல்லா ததையும் செய்திகள் என்ற பெயரில் - நடுநிலை நாளேடுகள் என்ற போர்வையில் கெடுமதியினர் சிலர் நாள்தோறும் செய்து வரும் நஞ்சைப் பரப்பும் நாச காரியத்தை இப்பொதுக்குழு கடுமையாகக் கண்டிப்பதுடன், அத்தகைய பத்திரிகைகளை இனம் கண்டு கழகத் தோழர்கள் இனி வாங்கிப் படிப்பதைத் தவிர்க்க வேண்டு மென்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:- 12

மத்திய அரசின் உதவி

புதுடில்லியில் நடைபெற்ற உள்நாட்டுப் பாதுகாப்புக் குறித்த முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்கள் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர், திருமதி சோனியா காந்தியைச் சந்தித்து, தி.மு.க. - காங்கிரஸ் தேர்தல் உடன்பாட்டை உறுதி செய்துள்ளார்.

மாண்புமிகு பிரதம அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்து, தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதத்தை ஈடுசெய்வதற்கு, தேசிய பேரிடர் நிதியிலிருந்து ரூ.1832 கோடி நிதி கோரியும், தமிழக மீனவர் பிரச்சினையில் நிரந்தரமான உடனடி ஆக்கப்பூர்வமான நடவடிக் கைக்கு உத்திரவாதம் பெற்றும், முல்லைப் பெரியாறு அணை குறித்த சுற்றுச்சூழல் ஆய்வுக்குழு தேவை யற்றது என்பதை எடுத்துக் காட்டியும் - இந்தக் கோரிக்கைகளுக்கும் வேண்டுகோளுக்கும் பிரதம அமைச்சரிடமிருந்து சாதகமான இசைவையும், உறுதியையும் பெற்று வந்தமைக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்:- 13

பா.ஜ.க.வுக்கு கண்டனம்

பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் நிதின்கட்காரி சமீபத்தில் சென்னையில் அவர்களது கட்சியின் சார்பாக நடைபெற்ற கூட்டத்திலும்; அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் வெளியிட்டுள்ள கருத்துக்களும் செய்திகளும் திட்டமிட்டுத் திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீதும் கழக அரசின்மீதும் பரப்பப்பட்ட பொய்ச் செய்திகளும் கருத்துக்களுமாகும். அரு கிலுள்ள கருநாடக மாநிலத்தில் அவரது கட்சியைச் சார்ந்த ஆட்சியும் முதலமைச்சர் பதவியும் எத்தகைய மோசமான அரசியல் விமர்சனங்களுக்கு உட்பட்டி ருக்கின்றன என்பதை மறைத்துவிட்டு, கழக அரசிற்கும் கழகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு கருத்துக்களை வெளியிட்ட நிதின்கட்காரியை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானம்:- 14

அலைக்கற்றை ஒதுக்கீடு

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக் காட்டும் ஒரே சான்று இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஆகும். இதே தணிக்கை அறிக்கை பா.ஜ.க. ஆட்சி நடைபெற்ற போதும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்குப் பெரு இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று எடுத்துக்காட்டியிருக்கின்றது. தற்போது எழுந் துள்ள எதிர்ப்போ குற்றச்சாற்றோ அப்போது கூறப் படவில்லை.

மாறாக திரு. ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும், கைது செய்ய வேண்டு மென்றும், இல்லாவிட்டால் பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்றும் தங்களின் ஜனநாயகக் கடமையைக் கூட நிறைவேற்ற மறுத்து, தொடர்ந்து வலியுறுத்தி அதனைச் செயல்படுத்திக் காட்டி, அதிலே வெற்றி பெற்ற பிறகும், இன்னமும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழுவின் விசாரணை வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர்.

தணிக்கை அறிக்கை குறித்து முறைப்படி நடத்தப்பட வேண்டிய விசாரணை - பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவினால், அதன் தலைவரான பா.ஜ.க. வைச் சேர்ந்த திரு. முரளி மனோகர் ஜோஷி அவர்கள் தலைமையிலே நடைபெற்று வருகின்றது. ஜனநாய கத்தைக் காப்பாற்ற வேண்டுமென்ற பெருந்தன்மை யோடு, மேலும், இந்தப் பிரச்சினையில் 2001ஆம் ஆண் டிலிருந்து 2009 முடிய அரசுகள் பின்பற்றிய ஒதுக் கீட்டு கொள்கை முறையாக நடைமுறைப்படுத் தப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சிவராஜ் பாட்டீல் அவர்கள் நியமிக்கப்பட்டு, அவரும் 31-1-2011 அன்று தமது அறிக்கையைச் சமர்ப்பித்து விட்டார்.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு களை அடிப்படையாக வைத்து இந்தியப் புலனாய் வுத் துறை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வை யில் காலக்கெடு நிர்ணயித்து, இந்தப் பிரச்சினையில் புலன்விசாரணை மேற்கொள்ள வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டு புலனாய்வு தீவிரமாக நடந்து வருவதோடு, இந்த வழக்கில் புலனாய்வுத் துறையினால் திரு. ராஜா அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு மட்டும்தான் விசாரிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்துவதும், மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறி தீர்வு காணும் வாய்ப்பை விட்டு விட்டு, நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே 22 நாட்கள் முடக்கியதும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளாகவே இப்பொதுக்குழு கருதுகிறது.

தொடக்கத்தில் இந்தப் பிரச்சினை எழுந்த போதே 8-12-2010 அன்று செய்தியாளர்கள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களிடம் கேட்ட போது, ராஜா குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு கட்சி தயவு தாட்சண்யம் பார்க்கா மல் நடவடிக்கை எடுக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஒருவர் கைது செய்யப்பட்டு விட்ட காரணத்தாலேயே அவர் குற்றவாளியாக ஆகி விட மாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

எனவே இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரை திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு திறந்த புத்தகமாக உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டு வதோடு, இதனைப் பெரிதுபடுத்தி எப்படியாவது கழகத்தின் மீது களங்கம் சுமத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை இப்பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

தீர்மானம்:- 15

விலைவாசி

மாறிவரும் பொருளாதாரச் சூழ்நிலை காரண மாக இந்தியநாடு முழுமையும் ஏற்பட்டுவிட்ட விலைவாசி உயர்வு, தமிழ்நாட்டிலும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. அந்த விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனடிப் படையில், மாண்புமிகு தமிழக முதல்வர், தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் 14-1-2011 அன்று அரசு உயர் அதிகாரிகள் கூட்டத்தில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதித்து, தொடர் நடவடிக்கைகள் அரசின் சார்பாக எடுக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டு, நியாயவிலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படு கிறது. காய்கறிகளை அரசே நேரடியாகக் கொள் முதல் செய்து, புதிதாகத் திறக்கப்பட்டுள்ள விற் பனை மையங்கள் மூலம் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

மேலும் நெல், பயறு வகைகள் உற்பத்தியை அதிகப்படுத்துவற்கான நீண்டகாலத் திட்டமும் செயல்படத் தொடங்கியிருக்கின்றது. தமிழ்நாட்டில் உள்ள உழவர் சந்தைகளை, மேலும் விரிவாக்கவும் புதிய உழவர் சந்தைகளை உருவாக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட முறையில் தலைவர் கலைஞர் தலை மையில் அமைந்த கழக அரசு, குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டத்தை உருவாக்கி விலையேற் றத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதை பொதுமக்கள் நன்கறிவார்கள்.

இத்தகைய உடனடி நடவடிக்கை மேற்கொண்டு விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டுவந்த, தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களை இப் பொதுக்குழு நன்றியுடன் பாராட்டுகிறது.

தீர்மானம்:- 16

சிங்காரவேலருக்கு விழா

மீனவர் இனத்தின் விடிவெள்ளியாகவும் - பொதுவுடமை கருத்துக்களை முதல்முதலாக இந் தியாவில் பரப்பிய முன்னோடிகளில் ஒருவராகவும், தந்தை பெரியாரோடு இணைந்து சுயமரியாதைக் கருத்துக்களையும் - பகுத்தறிவுச் சிந்தனைகளையும் விதைப்பதற்குக் காரணமானவராகவும் விளங்கிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடுவ தற்கு ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இப்பொதுக்குழு பாராட்டுக் களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்:- 17

தொழில் முதலீடு

முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடு செய்யக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. குறிப்பாக, அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கார் தொழிற்சாலைக்குத் தேவையான வசதிகள் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் சிறப்பாக உள்ளது என்றும், தமிழக அரசின் அணுகுமுறையால் கார் தொழிற் சாலைகள் பெருகுகின்றன என்றும், தென்னிந்தியா வின் புதிய டெட்ராய்ட்டாக சென்னை உருவாகி வருகிறது என்றும் செய்தி வெளியிட்டு, தமிழக அரசைப் பாராட்டியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பல்வேறு நாடுகளிலிருந்து தொழில்துறையில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ற சூழ்நிலைகளையும், உள்கட்டமைப் புக்களையும் உருவாக்கி ஒற்றைச் சாளர முறையை நடைமுறைப்படுத்தியுள்ள மாண்புமிகு முதல்வர் தலைவர் கலைஞர்தான் இதற்குக் காரணம் என்பதைச் சுட்டிக்காட்டி, அவருக்கு இப்பொதுக் குழு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்:- 18

வேலை வாய்ப்பு

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா வேண்டுமென்றே வேலை நியமன தடைச்சட்டத்தை கொண்டு வந்து எண்ணற்ற இளைஞர்களுக்கு பெறவேண்டிய வேலைவாய்ப்பை ரத்து செய்து, அந்த இளைஞர்களின் எதிர்கால வாழ்வை சூனியமாக்க மூலகாரணமாக இருந்தார்.

தலைவர் கலைஞர் அவர்கள், ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட வேலை நியமன தடைச் சட்டத்தை ரத்து செய்து, பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்தார்கள்.

அந்தவகையில், மாண்புமிகு முதல்வர் தலைவர் கலைஞர் மேற்கொண்ட முயற்சியால், அரசுத் துறையில் 5 இலட்சத்து 5 ஆயிரத்து 314 பேருக்கு வேலைவாய்ப்பு நிரந்தரமாக அளிக்கப்பட்டுள்ளது.

படித்த இளைஞர்களுக்காக பயிற்சியுடன்கூடிய வேலைவாய்ப்பு திட்டம் ஒன்று புதிதாக துவங்கப் பட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் முயற்சியினால் வேலைவாய்ப்பினை தேடித்தரும் முகாம்கள் நடத்தப்பட்டு அதன்மூலம் 1 லட்சத்து 30 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது.

எனவே, இத்தகை வேலைவாய்ப்பு திட்டங்களை உருவாக்கி இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தந்த தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இப்பொதுக்குழு நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம்:- 19

சேது சமுத்திரத் திட்டம்

தமிழக மக்களின் 150 ஆண்டு காலக் கோரிக்கை யான சேது சமுத்திரத் திட்டம் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக 2.7.2005 அன்று 2421 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நேரத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது என்பதைத் தொடக்கத் திலிருந்தே தாங்கிக் கொள்ள முடியாத சிலர், எதையாவது சொல்லி இந்தத் திட்டத்தை முடக்கிப் போட முடியாதா என்றெல்லாம் பார்த்து, கடைசி யில் ராமர் சேது பாலத்தை இடிக்கக் கூடாது என்று கற்பனையான ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துக் கூறினார்கள். தனுஷ்கோடி கடல் பகுதியில் அவர்களின் கூற்றுப்படி உருவாக்கப்பட்ட பாலம் இருந்ததற்கான துளியளவு ஆதாரம்கூட இல்லை. 2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 81 இடங்களில் கடலுக்குள் ஆழ்துளை சோதனை நடத்திப் பார்த்ததில் அறிவியல் ரீதியாகவோ - ஆழ்கடல் வேதியியல் பகுப்பாய்வு மூலமாகவோ - அவ்வாறு உருவாக்கப்பட்ட பாலம் எதுவும் அங்கே இருந்ததற்கான எவ்வித அடிப்படையோ, ஆதாரமோ இல்லாத நிலையில்; மதவாதக் காரணங்களைக் காட்டி இந்தத் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் இதற்கான வழக்கு நிலுவையிலே உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்திட முயற்சி மேற்கொண்டு; தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகிடவும், நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரித் திடவும், மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவும், தென்மாவட் டங்கள் பெருமளவுக்கு வளர்ச்சி பெறவும் வழிவகுத்திடும் இத்திட்டத்தின் எஞ்சிய பணிகளை நிறைவேற்றிட வேண்டும் என்று - இப்பொதுக்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:- 20

இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழ்

பேரறிஞர் அண்ணா அவர்கள் டெல்லி மாநிலங் களவையில் பேசும் போது ஒரு முறை I can never forget that I have got a hoary language called Tamil. I will never be satisfied till that language in which my forefathers spoke, in which my poets have given sermons and scriptures, in which we have got classics and literature of inexhaustible knowledge - I will never be content till that day when Tamil takes its due place as one of the official languages in the Union. (பழம்பெருமை மிக்க தமிழ் மொழி என்னுடைய மொழி என்பதை என்னால் எப்போதும் மறந்திட இயலாது.

என்னுடைய முன்னோர்கள் பேசிய அந்த மொழி - கவிஞர்கள் வாழ்க்கை நெறிகளையும், அறிவுரை களையும் வழங்கிய அந்த மொழி - வற்றாத அறிவை வாரி வழங்கிடும் இலக்கியங்கள் நிறைந்திருக்கும் அந்த மொழி - அதற்கு உரிய இடத்தினைப் பெற்று மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆகும் வரை நான் நிறைவடைய மாட்டேன்) என்று கூறினார்கள்.

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற காலம் வரை மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமும் நீடிக்கும் என்றும்; பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும் பண்டித நேரு அவர்கள் வழங்கிய உறுதிமொழி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் திராவிட முன்னேற்றக் கழகம்; இந்தி பேசாத மாநில மக்களின் உரிமைகள் நிரந்தரமாகக் காப்பாற்றப்பட; அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆட்சி மொழிகள் அனைத்தும் (All the official languages of the States the Indian Union) மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது ஒன்றுதான் வழி என்றும் உறுதியாக நம்புவதோடு; இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானால், முதல் கட்டமாக - திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியுமான தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டு மென்று இந்தப் பொதுக் குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்:- 21

தமிழ் மொழியை உயர் நீதி மன்ற மொழியாக ஆக்கிட....

அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 348 (2), இந்தி உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளையும் உயர் நீதி மன்றங்களில் வழக்கு நடத்தப் பயன் படுத்தலாம் என்றும் - ஆனால் தீர்ப்புகள், உத்தரவு கள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றது. மத்திய அரசின் ஆட்சி மொழிக் கான நாடாளு மன்றக் கூட்டுக் குழு அளித்த பரிந்துரையில் இந்தி மொழியை நீதி மன்றத் தீர்ப்புகளுக்கும், ஆணைகளுக்கும் பயன்படுத் தலாம் எனப் பரிந்துரை செய்தது.

சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவது தொடர்பாக; தமிழகச் சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி, மேதகு ஆளுநர் அவர்களின் பரிந்துரையினையும் - சென்னை உயர் நீதி மன்றத்தின் மாண்புமிகு தலைமை நீதிபதியின் பரிந்துரையினையும் பெற்று; மத்திய அரசுக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அனுப்பியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மாண்பு மிகு கலைஞர் அவர்கள் தமிழ் உள்ளிட்ட மாநில ஆட்சி மொழிகளை உயர் நீதி மன்ற மொழியாகப் பயன்படுத்த மத்திய அரசு முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இந்தியப் பிரதமர் அவர் களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

தமிழகத்தைச் சார்ந்த தோழமைக் கட்சிகளின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமரை நேரிலே சந்தித்து - இது குறித்து கோரிக்கை விடுத்துள்ளார் கள். மாநில மொழியைப் பேசக் கூடிய பல்லா யிரக்கணக்கான மக்கள் நீதி கோரி அன்றாடம் உயர் நீதி மன்றங்களை அணுகக் கூடிய நிலையில் - நீதி மன்ற நடவடிக்கைகளும், தீர்ப்புகளும் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில ஆட்சி மொழி களிலும் வெளியிடப்படுவதை அந்தந்த மாநில நீதி மன்றங்களிலும் நடைமுறைப் படுத்த வேண்டு மென்று மத்திய அரசை இந்தப் பொதுக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
http://viduthalai.in/new/page-3/2699.html

No comments:


weather counter Site Meter