Pages

Search This Blog

Thursday, February 3, 2011

அண்ணா நினைவிடம் முன்பு சூளுரைப்போம்!


2011 பிப்ரவரி 3ஆம் நாள் - அறிஞர் அண்ணாவின் 42ஆம் ஆண்டு நினைவு நாள்!
1967இல் அவர் வகுத்த அரசியல் வியூகத்தால் ஆட்சியில் அமர்ந்த அண்ணா - ஆற்றலின் நிறைகுடமாகத் திகழ்ந்தது மட்டுமல்ல; அடக்கத்தின் முழு உருவாய்த் திகழ்ந்தார்.

தனது தலைவராம் - தனது ஆசானாம் - தந்தை பெரியாரிடம் அவர் கொண்ட நன்றி விசுவாசம், கொள்கைக் குடும்பப் பாசம், காட்டிய குரு பக்தி வரலாற்றில் எந்த ஒரு தலைவர் - தலைமகன் இடையே காண முடியாதவை ஆகும்!

தனது ஆட் சியை தந்தை பெரியாருக்கே காணிக்கை என்று சட்டமன்றத்தில் பிரகடனப்படுத்திய தோடு, ஒவ்வொரு அசைவிலும் சுயமரியாதைக் கொள்கை - லட்சியங்களை பொலிவோடும், வலிவோடும் ஆட்சிக்கட்டிலில் இருந்து அரசோச்சிய போது இருக்க வேண்டும் என்று கவனமாகப் பார்த்து, கடமையாற்றி, கண்ணியம் காத்து, கட்டுப்பாடு குலையாது கழக ஆட்சியை நடத்தி, புதியதோர் அரசியல் திருப்பம் கண்டார்!

தனக்குப் பிறகு தான் தொடங்கி யதை தனது தம்பியர்களில் மிகுந்த பல்துறை ஆற்றல்களை - தன்னைப் போலவே கொண்ட கலைஞர் அவர்கள் முடித்து வைப்பார் என்பதைத் தொலை நோக்குடன் தொல்லுலக மக்களுக்கு அறிவிக்கவும் தவறவில்லை.

தி.மு.க. என்னும் திராவிடத்துக் கொள்கை விளக்கு ஒளி அணையாது காக்கும் அருந்தொண்டை - அவராலும் அவர்தம் தலைவர் பெரியார் அவர்களா லும் சரியான முறையில் அடையாளம் காட்டப்பட்ட நம் கலைஞர் - அண்ணா மறைவின் வெற்றிடத்தை தனது கட்சித் தலைமை, ஆட்சிப் பொறுப்பு மூலம் நிரப்பிட நாளும் விழைகிறார் - அன்று முதல் இன்று வரை.

அதன் விளைவே - வேட்கையே - அவரை 87 வயதிலும் ஓர் 27 வயது இளைஞராக்கி அலுப்பு சலிப்பின்றி, ஆயிரம் ஈட்டிகள் அவர் உள்ளத்தில் பற்பலரால் பாய்ச்சப்பட்டாலும், அவர் எதையும் தாங்கும் இதயம் கொண்ட வராய், ஏறு நடைபோட்டு, தொண் டறத்தின் உச்சியை நோக்கியே லட்சியப் பயணம் செய்கிறார்!

2011 - ஒரு பொதுத் தேர்தலைச் சந்திக்கும் ஆண்டு - இதில் அண்ணா பெயரையும், படத்தையும் போட்டு - அவர்தம் கொள்கையை சந்தைக்கடை சரக்குகளாக்கி, திரிபுவாதங்களாக்கும் அரசியல் விற்பனையாளர்களும் அவர் கண்ட இயக்கத்தை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க, பொய்ப்பிரச்சார புகைமூட்டத்தைக் கிளப்பி, அண்ணா சொன்ன ஆரியமாயை, அவர் பெயரையே பயன்படுத்தி பதவிச்சுகம் தேடிட, வைதிகத்திற்கு வழிபாடு செய்ய முனைகின்றனர்!

மீண்டும் ஆரிய - திராவிடப் போரின் அடுத்தகட்டம்; இதில் நம் இனத்தின் வழமை போல் விபீடணக் கூட்டமும், சுக்ரீவ அனுமார்களும் உண்டு.

இவற்றை நம் மக்கள் துணையோடு முறியடித்து, அண்ணா அய்யாவுக்குக் காணிக்கையாக்கிய அருந்தமிழர் ஆட்சியை மீண்டும் பொறுப்பேற்கச் செய்ய அண்ணா நினைவிடம் முன்பு சூளுரைத்து, செயல் தொடருவோமாக!

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

No comments:


weather counter Site Meter