அய்யப்பப் பக்தர்களே, உங்கள் மீது எங்களுக்கு ஒன்றும் கோபம் இல்லை - 48 நாட்கள் விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று மகரஜோதியைத் தரிசித்து வந்தால் பாவங்கள் பறந்து போய்விடும் என்பதுதானே உங்கள் நம்பிக்கை?
அந்த மகரஜோதி என்பதே மோசடி - தெய்வ ஜோதி அல்ல; அய்யப்பனின் மகிமையல்ல என்று தெளிவாக, திட்டவட்டமாகத் தெரிந்துவிட்ட பிறகு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
பாவங்கள் தொலைவது பிறகு இருக்கட்டும். இவ் வாண்டு (14.1.2011) மகரஜோதியைத் தரிசிப்பதற்காகச் சென்று திரும்பிய 102 பக்தர்கள் புல்மேடு எனும் இடத்தில் பரிதாபகரமான முறையில் பலியாகி விட்டார்களே - நெஞ்சம் பதறுகிறதே - 1999 ஆம் ஆண்டிலும் இதேபோல 54 பக்தர்கள் பலியானார்கள்.
உண்மையிலேயே அய்யப் பனுக்குச் சக்தியிருந்தால் தன்னை நாடி வந்த பக்தர்களைக் காப்பாற்றியிருக்க மாட்டானா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
பொன்னம்பலமேடு பகுதியில் தோன்றுவதாக நம்பும் மகரஜோதி என்பது உண்மையானதல்ல - தெய்வ சக்தி யல்ல; மனிதர்களால் காட்டப்படுவதுதான் என்று திரு வாங்கூர் தேவசம் போர்டு ஒப்புக்கொண்ட செய்தி தமிழ், ஆங்கில ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் (தொலைக் காட்சிகளில் 31.1.2011 அன்றும், ஏடுகளில் 1.2.2011 அன்றும்) விரிவாக வெளிவந்தனவே - கேட்டீர்களா - படித்தீர்களா?
102 பக்தர்கள் பலியான நிலையில் கேரள உயர்நீதி மன்றம் சந்தேகத்தை எழுப்பியதால், அதற்குப் பதில் சொல்ல வேண்டிய நிலை தேவசம் போர்டுக்கு ஏற்பட்டது. அந்தப் போர்டு கூடி (31.1.2011) கடவுள் சக்தியல்ல - மனிதர்கள் காட்டும் செயற்கையானதுதான் மகரஜோதி என்பதை நீதி மன்றத்தில் சொல்லப் போகிறோம் என்று கூறிவிட்டார்களே!
1973 ஆம் ஆண்டிலேயே கேரளாவில் உள்ள பகுத்தறி வாளர்கள் 24 பேர் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு நேரில் சென்று, அங்கு மின் வாரியத்தைச் சேர்ந்த கோபி என்னும் ஓட்டுநர்தான் சூடக் கட்டிகளை அலுமினிய சட்டியில் வைத்துக் கொளுத்திக் காட்டுகிறார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டனர்.
பகுத்தறிவாளர்கள் பட்டாசுகளை வெடித்துக் காட்டி பக்தர்களின் குழப்பங்களைத் தெளிய வைத்தார்கள். இவர்கள்மீது காவல்துறை வழக்குப் போட்டது. நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது - அவர்கள் செய்தது குற்றம் அல்ல என்றும் கூறிவிட்டதே!
1980 இல் ஒருமுறை திருச்சூரிலிருந்து பொன்னம்பல மேடு சென்று வழக்கமான திசைக்கு எதிர்த் திசையில் விளக்கைக் (ஜோதியை) காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள். பிளிட்ஸ் ஆங்கில இதழும் (16.1.1982) தெகல்கா இதழும் (21.6.2008) மகரஜோதி பொய்யை, மோசடியை படங்களுடன் வெளியிட்டு அம்பலப்படுத்திற்றே!
கேரள மாநில இந்து அறநிலையத் துறை அமைச்சராக இருந்த ஜி. சுதாகரனும், தேவசம் போர்டு தலைவராக யிருந்த சி.கே. குப்தனும், ஆமாம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்திக் காட்டுகிறான் என்று ஒப்புக்கொண்டார்களே!
இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத் தலைவரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஜோசப் எடமருகு அன்றைய கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே. நாயனாரைச் சந்தித்து இதுகுறித்துச் சொன்னபொழுது, அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார்; ஆனாலும், இதில் தலையிட வேண்டாம் என்று கூறினாரே!
இப்பொழுது உள்ள கேரள மாநில முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான அச்சுதானந்தன், உண்மை எதுவாகயிருந்தாலும் மக்களின் மதப் பிரச்சினையில் தலையிட மாட்டோம் என்று கூறியுள்ளாரே - அது சரியானதுதானா?
அதேநேரத்தில், உண்மையை ஒப்புக்கொண்டு அதனை கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப் போவதாக தேவசம் போர்டு அறவித்துவிட்டது.
மார்க்சியம் பேசும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சி மத மோசடிக்குத் துணை போவது வெட்கக்கேடானதும் - வருந்தத்தக்கதும் அல்லவா!
பொதுமக்கள் குறிப்பாகப் பக்த கோடிகள் கொஞ்சம் சிந்திக்கவேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையும், எதிர்பார்ப்பும் ஆகும்.
மகரஜோதி என்றும், அது தெய்வ சக்தி என்றும், அது குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் தோன்றும் என்றும்தானே நம்பிக் கொண்டிருந்தீர்கள்; அந்த ஜோதியைத் தரிசித்தால் பாவங்கள் எல்லாம் தொலைந்து போகும், புண்ணியம் கிடைக்கும் என்று நம்பி தானே 48 நாள்கள் (ஒரு மண்டலம்) விரதம் இருந்து, பணத் தைச் செலவு செய்து, வெகுதூரம் பயணமும் செய்தீர்கள். இப்பொழுது அந்த மகர ஜோதியே உண்மையல்ல என்று ஆகிவிட்டதே!
கடவுள் அருளால் தோன்றுவது அல்ல என்று சம்பந்தப்பட்டவர்களே சொல்லிவிட்டார்களே! பக்தியைக் காட்டி பணம் சம்பாதிக்கச் செய்த திட்டமிட்ட ஏற்பாடு -மோசடி என்று தெரிந்துகொண்டுவிட்டீர்களா இல்லையா?
இன்னொரு சேதி உண்டு.
1956 இல் ஒருமுறை இந்த அய்யப்பன் கோயிலே தீப்பிடித்து எரிந்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
இப்பொழுது உண்மையைத் தெரிந்துகொண்டுவிட்டீர் களே - இனியும் ஏமாறப் போகிறீர்களா? மோசடிக்குப் பலி யாகப் போகிறீர்களா? உங்களுக்கு உண்மையிலேயே பக்தி யிருந்தால் உள்ளூரில் கோயில்கள் இல்லையா? அந்தக் கோயில்களில் இருக்கும் சாமிகளுக்குச் சக்தியில்லை என்று கருதுகிறீர்களா?
சிந்திப்பீர்! எங்களுக்காக அல்ல, உங்களுக்காக! உங்கள் அறிவும், பொருளும், உழைப்பும், காலமும் வீணா கலாமா? ஒரே ஒருமுறை சிந்தித்தாலே போதும் - உண்மை தெரிந்துவிடும் - மூட நம்பிக்கையும் ஒழிந்துவிடும்!
மானமும் அறிவும் மனிதனுக்கழகு
- தந்தை பெரியார்
Search This Blog
Wednesday, February 2, 2011
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சுட்டியை சொடுக்கி படிக்கவும்
1. இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாதவர் பிராமணகளின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்
2. ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு கழித்தவர்.
Post a Comment