Pages

Search This Blog

Monday, February 28, 2011

குட்டக் குட்ட குனியவேண்டாம் தி.மு.க-கி.வீரமணி

தோழமை காட்ட வேண்டிய கட்சிகள் தி.மு.க.வின் தோள்மீது சவாரி செய்வதா?
கருவறைமுதல் கல்லறைவரை - தி.மு.க. ஆட்சியில் பலன் பெற்ற மக்கள் இருக்கிறார்கள் - மறந்து விடாதீர்!


குட்டக் குட்ட குனியவேண்டாம் தி.மு.க.

சுதந்திரமாக முடிவெடுக்கட்டும் தி.மு.க. தலைமை
தீரமிக்க தி.மு.க.வுக்குத் தாய்க் கழகத்தின் வேண்டுகோள்
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தாய்க் கழகத்தின் சார்பில் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மான மிகு சுயமரியாதைக்காரர். இதை எப்போதும் எங்கும் கூறத் தயங்காத பெருந்தகையாவார்!
கலைஞரின் தனித் தன்மைகள்

அய்யாவின் துணிவும், அண்ணாவின் கனிவும், அவரது ஆற்றல்மிகு ஏழை, எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்டோரை உயர்த்தும் ஓயாத சிந்தனையும் செயலாக்கமும் அவரது தனித்தன்மைகள்.

அவரது தலைமையில் அய்ந்தாவது முறை நடை பெறும் ஆட்சி, தமிழ்நாட்டின் சமதர்ம சகாப்தத்தை சமானிய மக்கள் சுவைத்து அன்றாடம் பயன்படும் ஒப்பற்ற ஆட்சியாக கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கருவறைமுதல் கல்லறைவரை....

கருவறை துவங்கி கல்லறை வரை, கலைஞர் ஆட்சியால் நேரிடையாகவோ, மறைமுக மாகவோ (Directly or Indirectly) பயன் பெறாத மக்களே இல்லை என்பதை மார்தட்டி எங்கும் சொல்லும் மாண்புகள் மலிந்த மகத்தான ஆட்சி!

தசரதன் கொடுத்த வரமாகி விடக் கூடாது!

கூட்டணி என்ற ஒன்றைக் காட்டி, தசர தனிடம் கைகேயி வரம் பெற்றதாக இராமா யணக் கதையில் வரும் நிகழ்வைப் போல, தோழமை உணர்வு காட்ட வேண்டிய சில கட்சிகள், தோள் மேல் சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்து விட்டதுபோல் கற்பனைக் குதிரைகள்மீது சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு தி.மு.க., இணங்க வேண்டிய, இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை.

தி.மு.க. - ஜனநாயக பீனிக்ஸ் பறவை!

தி.மு.க. தேர்தல் கால நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல; அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில் நீந்தி வந்த ஓர் ஜனநாயக பீனிக்ஸ் பறவை!

தமிழ் மக்கள் அதன் பக்கம் உள்ளனர். அதன் தன்னிகரற்ற சாதனைகள் அதன் பலம். அக்கட்சி காட்டும் பண்பாடு, மனிதநேயம், கண்ணியம் அதற்கு பலவீனமாகி விடக் கூடாது!

கட்டுப்பாட்டோடு பட்டி தொட்டியெங்கும் படர்ந்துள்ள பலம் வாய்ந்த இயக்கம் இது.

குட்ட குட்டக் குனியக்கூடாது!

எனவே குட்டக் குட்ட குனியும் போக்குக்கு எங்கே இது ஆட்பட்டுவிடுகிறதோ என்ற அச்சம் தமிழ் இனவுணர்வாளர்களுக்கு, தன்மானத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, அதன்மூலம் நிரந்தர சுமை தாங்கியாக ஆகாமல், சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும்.

நட்பு பேசிக் கொண்டே கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல - கூட்டணி அரசியலில். நான் உமி கொண்டு வருவேன்; நீ நெல் கொண்டு வா, குத்தியபின் ஊதி ஊதி தின்போம் என்ற போக்கு நியாயமாகுமா?

விட்டுக் கொடுத்துக் கெட்டுப் போன பழைய கதை

1980இல் இப்படி விட்டுக் கொடுத்து கெட்டுப் போன பழைய வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாம்!

அதற்குமுன் 1971இல் செய்யப்பட்ட கோயபெல்ஸ் பிரச்சாரத்தின் கொடுமையையே சந்தித்து, வெற்றி வாகை சூடிய இயக்கம் தி.மு.க.

தி.மு.க.வின் தீரமிக்க தலைமைக்கு நமது வேண்டுகோள்!

எனவே தி.மு.க. சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும். பல பழிகளை கடந்த காலத்தில் அது சுமந்த கறை நீங்கும். வெற்றிச் சூரியன் விரிகதிர் வெளிச்சத்துடன் கிளம்பும் என்பதே தாய்க் கழகத்தின் கணிப்பு.

உலகத் தமிழர்கள் - உண்மைத் தமிழர் களின் உணர்வும் அதுதான்!

தி.மு.க.வின் தீரமிக்க தலைமைக்கு எமது வேண்டுகோள் இதுவே. தம்பி உடையான் படைக்கஞ்சான்!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

http://viduthalai.in/new/e-paper/4402.html 

No comments:


weather counter Site Meter