Pages

Search This Blog

Wednesday, February 16, 2011

முஸ்லிம்கள்மீது இந்துக்களை ஏவினாரா மோடி? தெகல்கா படப்பிடிப்பு - 5

சஞ்சீவ் பட் : எதிர்நீச்சல் போட்டு உண்மையைக் கூற முன்வந்த ஒரே ஒரு மனிதர். அவரை ஏன் சிறப்பு விசா ரணைக் குழு பயன்படுத்திக் கொள்ள வில்லை?

மவுனமாக இருத்தல், தனக்கு நினைவில்லை என்று கூறுதல் போன்ற மென்மையான வழிகளை பல அலுவலர் கள் தேர்ந்தெடுத்தனர் என்றபோதிலும், முதல் அமைச்சரின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டேன் என்று கூறும் அய்.பி.எஸ். அதிகாரியான சஞ்சீவ் பட் உண்மையைக் கூற முன்வந் தார். தற்போது உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருக்கும் அவர், கலவரங் களின்போது மாநில புலனாய்வுத் துறையில் மாநகர உதவிக் காவல்துறை ஆணையராக இருந்தார்.

காவல் துறை டைரக்டர் ஜெனரல் சக்ரவர்த்திதான் முதல் அமைச்சர் கூட்டிய அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தினார் என்று பட் சிறப்பு விசாரணைக் குழுவிடம் கூறினார். புலனாய்வுத் துறைத் தலைவர் ஜி.சி. ராய்கர் விடுப்பில் சென்றிருந்தபடியால், சபர்மதி ரயில் எரிப்பு சம்பவம் பற்றி முன் கூட்டியே தகவல் தெரிவிக்கத் தவறியது எப்படி என்பது போன்ற புலனாய்வுத் துறை பற்றி கேட்கப்படும் கேள்வி களுக்கு பதில் கூற புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரி எவராவது இக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று சக்ரவர்த்தி விரும்பி னார் என்று பட் சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார்.

ஆனாலும் இதற்கு மேல் எதுவும் கூற பட் மறுத்துவிட்டார். மோடிக்கு எதிரான இந்த விசாரணை ஒரு தொடக்க நிலை விசாரணை என்பதால், இது பற்றி இதற்கு மேல் பேச நான் விரும்பவில்லை என்று பட் விசாரணைக் குழுவிடம் கூறினார்.

என்றாலும், ஒரு குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டால், சாட்சியம் அளித்து உண்மையைக் கூற தான் கடமைப்பட்டிருப்பதாக அவர் கூறினார். (இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை முற்றிலும் ஆராயும் தன் மையை மட்டுமே கொண்டது என்பதால், தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் அதிகாரி ஒருவர், எந்த வித பயனும் இல்லாமல், தான் பேசுவது தனது பணிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கக் கூடிய வகையில் அமையும் என்பது அவரது கருத்தாக இருந்திருக்கலாம்.)

திரைமறைவில் வேலைகள்

பின்னர் ஒரு நிலையில் சாட்சியம் அளிக்க தனது விருப்பத்தை அவர் தெரிவித்த உடனே, திரைமறைவில் வேகமாக செயல்கள் நடைபெறத் தொடங்கின. 25-3-2010 இல் விசா ரணை அலுவலர் மல்ஹோத்ரா நரேந்திர மோடியை விசாரித்த போது, அதிசயமான முறையில் மோடி வாய்தவறி ஒன்றைக் கூறிவிட்டார்.

சபர்மதி ரயில் எரிப்பு சம்பவ இடத்தைப் பார்த்துவிட்டு கோத்ராவிலிருந்து திரும்பிய பிறகு, 27-2-2002 அன்று தனது வீட்டில் ஒரு கூட்டத்தைக் கூட்டியதாக அவர் ஒப்புக் கொண்டார். அக்கூட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று கேட்கப்பட்ட போது, தன்னைத் தவிர ஏழு அதிகாரிகள் கலந்துகொண்டதாக மோடி கூறினார். அதன்பின், எந்தக் கேள்வியும் கேட்கா மலேயே, அது உயர்மட்ட அலுவலர் கூட்டம் என்பதால், புலனாய்வுத் துறை உதவி ஆணையராக இருந்த சஞ்சீவ் பட் அக் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை என்று மோடி கூறினார். பட்டின் பெயரை அவர் ஏன் கூறினார்? யார் யார் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்றுதான் விசாரணை அலுவலர் கேட்டாரே ஒழிய யார் யார் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வியைக் கேட்கவில்லை. சிறப்பு விசாரணைக் குழுவின் முன் பட் அளித்த சாட்சி யத்தைப் பற்றி யாரோ மோடியிடம் கூறி அவரை எச்சரித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. விசாரணை அலுவலர் கேட்ட கேள்வியில் பட்டைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லாத நிலை யிலும், பட் கூறியதை மறுத்து அவரை மதிப்பிழக்கச் செய்யத் தயாராகவே மோடி வந்திருந்தார்.

அக்கூட்டத்தில் பட் கலந்து கொண்டது பற்றி கேட்கப்பட்டபோது இந்த மற்ற ஏழு அதிகாரிகளும் கூட வியப்பான முறையில் எதிர்வினையாற் றினர். ஸ்வர்ண காந்த் வர்மாவும், அசோக் நாராயணனும் தங்களுக்கு நினைவில்லை என்று கூறினார்கள். முதல் அமைச்சரின் முதன்மைச் செய லாளராக இருந்த பி.கே.மிஸ்ரா, பட் கூட்டத்தில் கலந்து கொண்டதை மறுக்க வில்லை; ஆனால் தன்னால் நினைவு படுத்திக் கூற முடியவில்லை என்று கூறினார். மற்ற நான்கு அதிகாரிகளில் காவல்துறை இயக்குநர் ஜெனரலாக இருந்த சக்ரவர்த்தி ஒருவர் மட்டும் பட் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தாக கூறுவதை மொத்தமாக மறுத்தார். மற்ற மூவரும் குழப்பமான பதில்களை அளித்தனர்.

இந்த முரண்பாடுகளுக்குப் பின்னும், தனது அறிக்கையின் 149 ஆம் பக்கத்தில் விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா முடிக்கிறார்: முதல் அமைச்சர் கூட்டிய கூட்டத்தில் பட் கலந்து கொண்டது பற்றிய அவரது அறிக்கை மெய்ப்பிக்கப் படாததால் அது பொருட்படுத்தாமல் ஒதுக்கப்படுகிறது. மோடி அரசால் பரிச ளிக்கப்பட்டவர்கள் அல்லது அவரது அரசில் தொடர்ந்து பணியாற்றுபவர்கள் என்பதால், அந்த ஷஏழு அதிகாரிகளின் சாட்சியங்கள் நம்பத்தகுந்தவையல்ல என்று மல்ஹோத்ராவே கூறியுள்ளார். பட் கூட்டத்தில் கலந்துகொண்டது பற்றி வரும்போது மட்டும், இந்த நம்பத்தகாத சாட்சிகளை எப்படி மல்ஹோத்ரா நம்புகிறார் என்பதுதான் முற்றிலும் நம்பமுடியாததாக உள்ளது.
விசாரணைக் குழுத் தலைவரின் குறிப்புகள்

விசாரணைக் குழுத் தலைவரின் குறிப்புகளும் அது போலவே காரணம் கூற முடியாதவையாக உள்ளன. ஒரு முறையான குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டதனால் ஏற்படும் சட்டப் படியான ஒரு கடமை என்று வரும்போது மட்டும்தான் கூட்டத்தில் என்ன பேசப் பட்டது என்பது பற்றிய உண்மைகளை வெளிப்படுத்த முடியும் என்று புலனாய் வுத் துறை கண்காணிப்பாளர் சஞ்சய் பட் விசாரணைக் குழுவிடம் கூறியுள் ளார். அந்த சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி கூறுவதில் அவருக்கு ஏதோ சில மறுப்புகள் இருப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகக் கூறப்படும் அலுவலர்களில் எவர் ஒருவரும் பட் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று கூறாததால், பட் ஒரு நம்பத்தகாத சாட்சியாகவே கருதப் படுகிறார். அத்தகைய ஒரு உயர் நிலை அதிகாரிகளின் கூட்டத்தில் அழைக் கப்பட இயலாத அளவில் அவர் பணி மூப்பில் இளையவரானவர். (தலைவரின் குறிப்புகள் பக்கம் 3-4).

கேட்காமலேயே பட்டைப் பற்றி மோடி சொன்ன தகவலை பகுத்தறிவு வழியில் ஆய்வு செய்யாமலேயே சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதைவிட வியப்பான செய்தி என்னவென்றால், 27-2-2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பட் கலந்து கொண்டதாகக் கூறியதை ஏற்றுக் கொள்ள மறுக்கும் சிறப்பு விசாரணைக் குழு, அவர்களின் அறிக்கையில் மற்ற இடங்களில் பட் அளித்த சாட்சியத்தை மட்டும் ஏற்றுக் கொண்டிருப்பதுதான்.

நன்றி: தெகல்கா, 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/page-2/3536.html 

No comments:


weather counter Site Meter