Pages

Search This Blog

Wednesday, February 16, 2011

சனாதனத்தைப் பரப்பிட மேலும் ஒரு தொலைக்காட்சியாம்

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் என்னும் நிறுவனம் இந்தியக் கலை, பண்பாடு, பாரம்பரியம்பற்றிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிட இலாப நோக்கமற்ற கிருஷ்ணா தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்க உள்ளதாம்.

டாக்குமெண்டரி படங்களையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரிக்கும் நிறுவனமான கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் 48 ஆம் ஆண்டு விழாவில் பேசும்போது எஸ். கிருஷ்ணசாமி இத்தொலைக்காட்சி தொடங்கப்படத் தேவையான உயர்தரக் கட்டுமானப் பணிகள் தயாராக உள்ளன; இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுவிடும் என்று கூறியிருக்கிறார்.

இந்தியப் பண்பாட்டின் இன்றியமையாத மதிப்பீடுகள் பற்றி தொலைக்காட்சியில் பிரச்சாரம் செய்வது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சியுடன், ஆன்மிக முன்னேற்றமும் இணைந்ததுதான் இந்தியக் கலாச்சாரம்; அளவுக்கு அதிகமான பொருளாதார வளர்ச்சி என்னும் நோக்கமே ஊழலுக்கு வழிவகுக்கிறது. ஊழலை அறவே ஒழிக்க சமூகம் மறுபடியும் சனாதன தருமத்துக்குத் திரும்பவேண்டும் என்றும் எஸ். கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சு.சாமி சிறப்பு விருந்தினராம். இந்தத் தொலைக்காட்சி தொடங்கப்படத் தேவையான அனைத்து வள உதவிகளையும் (Resources) செய்து தரத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இந்து ராம் பாராட்டுரை வழங்கி இருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையைப் பார்க்கும் எவருக்கும் பார்ப்பனீயத்தை மேலும் வலுப்படுத்த ஓர் ஆபத்தான ஒளிபரப்பு நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட உள்ளது என்பதை எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

சனாதன தருமத்துக்கு நாடு திரும்பவேண்டும் என்று சொல்லுவதிலிருந்தே - இதன் நோக்கம் புரிகிறது.

சனாதன தருமம் என்றால், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றாரே கணியன் பூங்குன்றன் - அவர் கூறிய தர்மமா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றாரே திருவள்ளுவர். அவர் கூறிய தத்துவமா?

அல்ல, அல்ல; மாறாக புராதன தருமம் என்று பார்ப்பனர்கள் கூறும் அந்த நான்கு வருண தர்மம்தான். அரசியல் ஆச்சாரியாரிலிருந்து ஆன்மிக ஆச்சாரியார் வரை இந்தக் கருத்தில் மாறுபட்டவர்கள் இல்லை.

உடம்பெல்லாம் மூளை என்று பார்ப்பனர்கள் புகழ்ந்து கூறும் ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் இரண்டு முறை தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்தார். அந்த இரண்டு முறைகளிலும் அவர் செய்தது என்ன? அவர்களின் சனாதன - புராதன தர்மப்படி சூத்திரன் படிக்கக் கூடாது என்பதற்காக இரண்டு முறையும் ஏற்கெனவே நடந்து வந்த பள்ளிக் கூடங்களையும் ஆயிரக்கணக்கில் இழுத்து மூடியதுதானே - அவர் செய்த சாதனை?

அரை நேரம் படித்தால் போதும்; அரை நேரம் அவரவர்களின் அப்பன் தொழிலைச் செய்யவேண்டும் என்பது நவீன வருணாசிரமக் கொள்கைதானே அது!

இன்றைக்கும் அந்த வருணாசிரமக் கொள்கைத் திட்டத்தை கல்கியும், சோவின் துக்ளக்கும் சரியான திட்டம்தான் என்று எழுதுகின்றனவே!

பார்ப்பான் ஒரு தொலைக்காட்சியைத் தொடங்கினால் - சனாதன தருமத்தை - பார்ப்பன தருமத்தை, பிறவியின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் வருண தருமத்தைப் பரப்புவதற்கு முயற்சி செய்கிறான்.

தமிழர்கள் ஆரம்பித்தால் அதற்கு எதிராக சமத்துவ எண்ணங்களைப் பரப்பிடும் பணியில் ஈடுபட வேண்டாமா? பார்ப்பனர்களோடு சேர்ந்துகொண்டு இராமாயணத்தை ஒளிபரப்ப வேண்டுமா? அதன்மூலம் சனாதன தருமத்துக்குப் புத்துயிர் கொடுக்கவேண்டுமா?

ஆன்மிக முன்னேற்றம்தான் இந்தியாவின் கலாச்சாரம் என்று சொல்லியிருக்கிறாரே கிருஷ்ணசாமி அசோசி யேட்ஸின் உரிமையாளர் - இதற்குப் பதவுரை, பொழிப்புரை தேவையா?

இந்த ஆன்மிகம்தானே காலாகாலமும் நம்மை சூத்திரர்களாக, பஞ்சமர்களாக, தீண்டத்தகாதவர்களாக ஆக்கி வைத்தது - கல்வி உரிமையற்றவர்களாக சாத்திர ரீதியாகக் கட்டிப் போட்டது - மறுக்க முடியுமா?

இந்த ஆன்மிகத்தை எதிர்த்தும், சனாதனத்தின் ஆணிவேரை எரித்தும்தானே பார்ப்பனர் அல்லாத மக்கள் தன்மான உணர்வு பெற்றார்கள் - பகுத்தறிவு வெளிச்சம் பெற்றார்கள், கல்வி உரிமை பெற்றார்கள் - உத்தியோகப் படிக்கட்டுகளை மிதித்தார்கள்.

தமிழர்கள் இவற்றை மறந்தால், மறுபடியும் பார்ப்பனர்கள் விரிக்கும் சனாதனப் படுகுழியில் விழுந்தால், பழைய நிலைக்குத்தானே ஆளாக நேரிடும்?

தமிழர்களே, உஷார்! பார்ப்பனீயம் பல வகைகளிலும் நம்மை மறுபடியும் சனாதனப் பாழும் கிணற்றிலே தள்ள முயற்சி செய்கிறது.

இவற்றை எல்லாம் முறியடிக்க கழக வெளியீடுகளைப் பரப்புவீர்! பிரச்சாரக் களம் அனல் பறக்கட்டும்! பெரியார் தொலைக்காட்சி உதயமாக தமிழர்களின் உதவிக் கரங்கள் உயரட்டும், உயரட்டும்!!
http://viduthalai.in/new/page-2/3535.html 

1 comment:

Jo Amalan Rayen Fernando said...

வீண் பயம். Paranoia!

என்னைப்பொறுத்தவரை, இந்த தொலைக்காட்சி தேவையான ஒன்று.

தற்போது, ஜெயா டிவி, சன் குழமங்கள், பொதிகை, மற்றெல்லா தொலைக்காட்சிகளும், இந்த சனாதன மதத்தில் புராணக்கதைகளையும் சொற்பொழிவுகளையும், கோயில்களையும் கோயில் விழாக்களையும் காட்டிக்கொண்டிருக்கின்றன. பெந்தெகோஸ்தோக்காரர்களும் கிருத்துவர்களும் பணம்
கட்டி இத்தொலைக்காட்சிகளில் இடம் வாங்கி பிரச்சாரம் பண்ணுகிறார்கள்.

இந்துக்களுக்கு இவை இலவசம். இந்துக்கள் நிறைய இருப்பதால், தொலைக்காட்சி நிறுவனங்கள் அவர்களைத் தம் பக்கம் ஈர்க்க இவ்வாறு செய்யும் போது மற்றவருக்கு எரிச்சலாக இருக்கிறது.

கிருஸ்ணசாமி தொ.கா வந்த பின், இந்து சனாதனவாத தொலைக்காட்சி காணொளிகள் அங்கே இடம் பெயர்ந்து விடும். இக்காட்சிகளை சனாதன வாதிகளான பார்ப்ப்னர்கள்
மட்டுமன்றி, அவ்வழியை ஏற்றுக்கொண்ட தமிழ் மேல்சாதிகள் (செட்டிகள்,
பிள்ளைகள்) போன்றவர்களும் வரவேற்கிறார்கள்.

அவர்களை விட்டுவிட்டு பார்ப்ப்னர்களை மட்டுமே எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் பார்த்து மகிழ ஏன் ஒரு தனித் தொலைக்காட்சி இருக்கக்கூடாது என்கிறீர்கள் ?

தொலைக்காட்சியில் வரும் காட்சிகளை பார்க்கச் சொல்லி ஆரும் நிர்பந்திப்பதில்லை.
வேண்டாமென்போர் வேறு தொ.காவுக்கு செல்லலாமே ?

மக்கள் மீத் எப்படி திணிப்பாகும் ? குழந்தைகள் என்றால் சரி! ஆனால் ஆன்மிக
நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதில்லை. வளர்ந்தோரே பார்ப்பர்.

அவர்கள் மீது திணிப்பா ? ஒருவன் வந்து திணித்தால், ஏற்ற்க்கொள்வதும், கொள்ளாததும் பார்ப்பவர்கள் செய்யமுடியாதா ? எல்லாரும் குழந்தைகளா ?

அனாவசியப்பயம்.

கிருஸ்ணசாமி தொ.காவை வரவேற்கிறேன். சனாதன பார்ப்ப்னர்களுக்கென ஒரு தொலைக்காட்சி இருப்பின் நல்லது.


weather counter Site Meter