Pages

Search This Blog

Wednesday, February 9, 2011

திருஞான சம்பந்தர் அற்புதங்களும் சேக்கிழாரின் பெரிய புராணமும் வரலாறும், உண்மையும் இடறுகிறது

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
சமயக்குரவர்கள் என்று போற்றப்படும் நால்வர் - அப்பர் எனும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர். இந்த நால்வர் வாழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழ்ந்ததாக நம்பப்படு கிறது. அதிலும் திருஞானசம்பந்தர் வாழ்க்கையில் அற்புதங்களை அவரே நிகழ்த்தியதாகவும், அதுவும் இறையருளாலே நிகழ்த்தப்பட்டதாகவும் நம்பப்படு கிறது.

இந்நிலையில் இளமையில் இருந்தே இது குறித்து அவ்வப்போது அய்யங்கள் எழுவது உண்டு. அதிலும் நான் பிறந்து வளர்ந்த திருமங்கலத்தில் என்னுடைய வீட்டை ஒட்டிய தெருவில் உள்ள அருள் மிகு பத்ரகாளி மாரியம்மன் கோயிலில் ஆறாம் திருவிழாவில் சமணர் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெறுவதும் உண்டு. இது இன்றும் நடைபெறுகிறது. இந்த ஆறாம் திருவிழாவில் சைவ, சமண விவாத மாக நடைபெறுகிறது.. காக்காவேஷம், சாமியார் வேஷம் என்று கூறும்படி, சமணர்களாகவும், சைவர்களாகவும் வேடமிட்டுச் சாமி ஊர்வலத்தில் வருவார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தக் கோவில் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார் களுக்குப் பாத்தியப்பட்டது. பரம்பரை டிரஸ்டிகள் என அனைவருமே நாடார்களால் நிருவகிக்கப்படுவது.

நாட்டாண்மை முறை பரம்பரை டிரஸ்டி தலைமை யில் இயங்குவது திருமங்கலத்தில் மட்டும்தான். பரம்பரை டிரஸ்டி வி.வி.பி. சிதம்பர நாடார், வி.வி.பி.சி. சவுந்திரராஜன், வி.வி.பி.சி. ரமேஷ் பாபு என்று நாடாரே ஆவர். நாட்டாண்மைகரம் அப்படியே முதல் நாட் டாண்மை நல்லதம்பி நாடார் வகையறா சி. ரத்தினம், இரண்டாவது நாட்டாண்மை ராக்கி நாடார் வகையறா - மாஸ்கோ நாடார். மூன்றாவது நாட்டாண்மை பொன்னுலிங்க நாடார் வரையறா வி.வி.முருகேசன்; மேலும் பரம்பரையாகப் பன்னிரண்டு காரியக்காரர்கள். இப்படி நாடார்கள் உருவாக்கிய, நாடார்களுக்கே சொந்தமான மாரியம்மன் கோவிலில் நாடார்கள் ஒரு பிரிவினர் காக்காவேஷம் என்று சமணர் வேஷம் போடுவதும், ஒரு பிரிவினர் சாமியார்கள் என்று திருஞான சம்பந்தராயும், அவருடைய சைவ அடியார்களாகக் காவி அணிந்து, பட்டை கொட்டை அணிந்து சைவர் வேஷம் போடுவதும் நடைபெறுகிறது.

அது மட்டுமல்லாது சமணர் வேஷம் போடுபவர்கள் நீண்ட அங்கி, தலையில் கருப்புக்குல்லாய், கையில் கத்தையாக மயிற்பீலி ஏந்தி அருகனே துணை அருகனே துணை அவாளுக்கு நாம் என்ன ஒக்கப்போட்டு ஆக்கியவாளா என்பதும் கூறுவர். சைவர்களோ கையில் உத்திராட்சத்தை உருட்டிக்கொண்டு நமசிவாயா, நமசிவாயா என்று குரல் எழுப்புவர். சமணர்கள் பகலில் முக்கியமானவர்கள் வீடுகளுக்குச் சென்று காபி, சிற்றுண்டி ஏற்று ஆசிர்வாதம் செய்வர்.

இரவில் இரண்டு மணி அளவில் திருமங்கலம் குண்டாற்றின் கரையில் அமைந்துள்ள கழுவேற்றப் பொட்டல் என்னுமிடத்தில் சமணர்கள் எதிர் எதிராக அமர்ந்து சமணர்கள் பாட்டு என்று பாடல்களைப் பாடுவதும், சைவர்கள் திருஞானசம்பந்தர் பாடல்களைப் பாடுவதும் செய்து, சமணம் உயர்ந்ததா? சைவம் உயர்ந்ததா என்று வாதிடுவார்கள்.
இந்தத் திருமங்கலத்தைச் சேர்ந்த பத்திரகாளி மாரியம்மன் கோயில் பழைய குறிப்பு ஒன்று கிடைத்தது. அதில் உள்ள தகவல்கள் இவை. அக்காலத்திய தமிழில் உள்ளது. இதில் திருஞானசம்பந்தர் கூட்டத்தார் நிகழ்த்திய அனல்வாதம், புனல்வாதம் என்பது மோசடி என்று கூறப்பட்டிருப்பதைப் படித்தபோது திருஞான சம்பந்தரின் அற்புதங்கள் பற்றிக் கூறியதை ஆராயும் ஆர்வம் ஏற்பட்டது.

பழைய குறிப்பில் கிட்டும் செய்திகள்

மதுரையில் பாண்டிய அரசர் மூலமாக சமணாசிரியர் கள் மூவாயிரம் வருஷகாலமாய் சர்வ ஜீவராசிகளுக்கும் கருணை, ஈகை, சாந்தம் முதலிய வார்த்தையை அன்பால் பேசி, அரவணைத்து மயில் இறகால்துடைத்து, ஞானப்பால் கொடுத்து, நல்லொழுக்கமூட்டி, நற்குணம் ஏற்று எமனை வோட்டி, கையிலங்கிரிக்கு வழிகாட்டி மக்களுக்கு நல்ல நிலைமையை உண்டாக்கினார்.
கோள் பிறந்த நாட்டில் கோமாளியும் பிறந்தது போல் சம்பந்தர் பிறந்து மதுரைமாநகருக்கு இத்திருக்கூட்டம் வந்து, ஆடம்பரமாய் இருந்து சமணர்களுக்கு எதிராக பொறாமை பேதகமாய் நடந்து, திருவிளையாடல் செய்து தேவாரம், திருவாசகம் பல ஏடுகள் இயற்றியிருப்பதால் இத்திருமங்கலம் ஸ்ரீ பத்ரகாளி மாரியம்மன் மகா உற்சவத்தில் ஆறாம் நாள் கழுவேற்றயாகத்தில் சம்பந்த மூர்த்திகளும், சமணாசிரியர்களும் தர்க்க வாதம் பேசி வேத சாஸ்திரம் போட்டி நடைபெறுகிற படியால் ஜனங்கள் யாபேரும் சாந்தமாய் இருந்து, சரித்திரம் தெரிந்து, நியாயமானதை அறிந்து இல்லறத்துறவு என்பதனை நிதானித்து நியாயங்களை புகழ்வீர்கள் என மகாகுருவை வணங்கி மகிழ்கிறோம்.

பாண்டிய நாட்டில் சமண மதம் நன்றாகவே வாழ்ந்து வந்த சமயத்தில் சோழ நாட்டில் இருந்து வந்த சம்பந்த மூர்த்தி திருக்கூட்டம் ஆற்றுக்கு அக்கரையில் காவிக் கூடாரம் அடித்து சமணர்க்கு எதிராக நின்றனர். சமண மதத்தை அடியோடு அழிக்க எண்ணங் கொண்டவராய் அக்கினிக்குண்டம், ஓமக்குண்டம், நெய்குண்டம் ஆகிய ஆராதனைகளாலும் மந்திரங்களாலும் வஞ்சனை, பில்லி, வைப்புச்சாவல்களாலும், மாயா ஜோதி வேஷங்களாலும் அத்திராத்தி என்ற மந்திரத்தை இகழ்ச்சியாகப் பேசி, சமணர்களை கவுணர்கள் எனச் சொல்லி ஆபத்து உண்டாக்கி உடம்பிலே அக்கினி உண்டாக்கி, அருகன் வேதம் நீக்கி அவர்களுடைய வேதங்களைத் தழுவச் சொன்னதால் நாங்கள் உங்கள் மதத்தில் சேரமாட்டோம் என்றும், பகவான் அருகனே எங்கும் சமதர்மக் கொள்கையே என்றோம். ஆனால் மங்கையர்க்கரசியாரும், மந்திரி குலச்சிறையாரும் மன்னர் காய்ச்சலால் அவதிப்படுகிறார்; மந்திரத்தாலும் மயிற் பீலிகையாலும் குணமாக்க வேண்டினர். அதற்கு நாங்கள் சொன்னதாவது: அங்வானி மூர்த்தியோ நரியைப் பரியாக்கி நாமுகனே எமனாக்கி நாயகனே பேயன் ஆக்கிய வஞ்சக மூர்த்திகளைக் கண்ணால் கண்டால் 8 நாள் தோசம், காதாரக் கேட்டால் 16 நாள் விரதம். அவாள் மந்திரஞ் செய்து, அக்கினியை ஏவி மடத்தில் தீ வைத்ததாகச் சொல்வதோ தன் மனம் தன்னைச் சுடும் தவறிய குணம் வீட்டைச் சுடுவது போல் பேசுகிறார்கள். எங்கள் மதம்சாரா சீனா, ஜப்பான், பர்மா, முதலான தீவுகளில் பாண்டிய மன்னர் அரியணை ஏறி அறக்கொடி ஏற்றி அரவணைத்து சேர, சோழ மகா அரசர்களையும் ஜெயித்து, கூன்பாண் டியன் அரசு புரியும் பாண்டிய நாட்டைப் பிரிக்க சூழ்ச்சி செய்கின்றனர். இக்காலத்தில் சம்பந்தமூர்த்தியிடம் சமணர்கள் தர்க்கவாதம் சொல்வதோ நீதிக்கு விரோதம். பாண்டிய தேசத்தைக் கைப்பற்ற எண்ணிக் கொண்டு கெட்ட எண்ணத்துடன் சமண மதக் கொள்கையை எதிர்க்கும் சம்பந்தமூர்த்தி திருக்கூட்டத்திற்குத் புரியும் பட்சத்தில் தாம் ஒன்றும் செய்வதற்கில்லை; ஒன்றும் செய்ய இயலாது என்றும் சம்பந்தரைக் கழுவில் ஏற்ற அரசர் உத்தரவு இடுவார்கள் ஆனால் பாண்டிய ராஜாவை எழுப்பித் தருவோம் எனக் கூறினோம்.

திருக்கூட்டமாகிய பாலர்களோ பதை பதைத்து முழி முழித்து தூங்கிக் கொண்டிருந்தபடியால் மகாராஜாவின் வேண்டுகோளால் இரு பேர்களுமே இருந்து சுரமது போக்கிச் சுகமாக்கி, அரசாட்சி செங்கோல் நடத்தி வந்தார். மங்கையர்க்கரசியாரும், மந்திரிமார்களும் சூழ்ச்சி செய்து சம்பந்தமூர்த்தியை அலங்கிருதம் உண்டு பண்ணி தண்டிகைபல்லாக்கு மேலே ஏற்றி படாடோபமாய், ஆடம்பரமாய் ஊர் கோலஞ் சுற்றி வந்தபோது சமணர்களா குல குருவாகவும், மன்னர்க்கு மகா முனிவராகவும், மற்ற மானிடர்களுக்குச் சமணாசிரியர் ஆகவும் இருக்கும் பொழுது நீங்கள் வெற்றிக்கொடி நாட்டி வரும் பயங் கொள்ளித்தனமல்லவா என்று சொன்னோம். ராஜா சமணர்களை ஆதரிக்க அரசியாரும் மந்திரி குலச்சிறை யாரும் சம்பந்தமூர்த்தி திருக்கூட்டத்தினை ஆதரிக்க ஆரம்பித்தனர். இரு தலைவர்களின் வாதங்களும் அதிகரித்தன.

இருவருடைய ஏடுகளையும் நெருப்பில் போட்டு, யாருடைய ஏடு எரியாமல் உள்ளதோ அந்த ஏட்டிற்கு உரியவர்களே வென்றதாகக் கூறுவார்கள். ஆனால் சமணர்களாகிய நாங்கள் இயற்கையினை எதிர்த்துப் போட்டியிட விரும்பவில்லை.
இறுதியில் போட்டியிட மறந்து எங்களுடைய ஏடு எரியும் நெருப்பினில் இட்டோம். எங்களுடைய ஏடு இயற்கை நீதிகளுக்கு ஒப்ப தீயில் எரிந்தது. எங்க ளுடைய ஏடு எரிந்த அந்தச் சாம்பலை எடுத்து சம்பந்த மூர்த்தி திருக்கூட்டம் பூசியதோடு அவருடைய ஏட்டில் பூசி அவர்களுடைய ஏட்டை நெருப்பில் இட்டார்கள். ஏடு எரியவில்லை. எங்களுடைய ஏட்டின் சாம்பலை அவர் களுடைய ஏட்டில் பூசியதால்தான் ஏடு எரியவில்லை என்று கூறினோம் அவர்கள் நம்பவில்லை.

மூன்றாவது போட்டியாக இருவருடைய ஏட்டையும் ஆற்றில்போட்டு எந்த ஏடு ஆற்றின் நீரை எதிர்த்துச் செல்கின்றதோ அந்த ஏட்டிற்குரியவரே வென்றனர் எனக் கூறினர். நாங்கள் இப்போட்டிக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இயற்கை நீதியை எதிர்த்து எங்கள் ஏடு ஆற்றின் நீரை எதிர்த்துச் செல்லாது எனக் கூறினோம். அவர்கள் ஏற்கவில்லை.

ஏடுகள் இரு பேரும் ஆற்றிலே போடவும் ஏதுவாய் காந்தக் கல் பூசியே போடவும் கோபமாகவே சமணர்கள் வாடவும் ஏற்றிய சக்திகள் முத்தமிழ் பாடவும் இருவ ருடைய ஏடும் வைகையாற்றில் போடப்பட்டது. எங்க ளுடைய ஏடு இயற்கை நீதிகளுக்கு உட்பட்டு ஆற்று நீரோடு சேர்ந்து கிழக்கு நோக்கிச் சென்றது. அவர் களுடைய ஏடு ஆற்று நீரை எதிர்த்து மேற்கு நோக்கிச் சென்றதாகக் கூறி மந்திரி குதிரை மீது ஏறி திருவேடகம் சென்று ஏடு எடுத்து வந்தார்.

இவ்வாறு அனல்வாதம், புனல்வாதம் முடிந்து சமணர்கள் தோற்றதாகக் கூறிக் கழுவேற்றுதல் நடைபெறும். கழுவேற்று தல் என்பது சவுக்குக் கட்டைகளை கட்டப்பட்டிருக்கும். சமணர்கள் அதில் ஏறி உட்கார்ந்து கையில் துணியால் தைத்த சிறு நாக்கு போன்ற ஒன்றை வாயில் திணிப்பார்கள். இந்த வேடிக்கை ஆண்டுதோறும் நடைபெற்றாலும், இளம் வயதில் ஆரிய சூழ்ச்சியையெல்லாம் புரிந்துகொள்ளும் பக்குவம் எனக்குக் கிடையாது. வேடிக்கை பார்ப்பதோடு சரி.

திருமயிலைக் கபாலீச்சரம் திருக் கோயிலில் கபாலீச்சுரர் சன்னிதி நுழை யும் வாயிலருகில் காசி மடம் குமர குருபர சுவாமிகள் கல்லில் திருஞான சம்பந்தர் பாடிய அங்கம் பூம்பாவாய் பாடல் செதுக்கி வைத்துள்ளதைக் காண்பது உண்டு. அதுபோல் மேற்கு வாயில் அரு கில் திருஞானசம்பந்தர் சாம்பலிலிருந்து எழுப்பிய பூம்பாவைக்கு ஒரு சிறிய சன்னிதி சில ஆண்டுகளுக்குள் எழுப்பி யது கொடி மரத்தின் எதிரே காணப் படுகிறது.

இவற்றைக் காணும்போதும், தேவாரப் பாடல்களை ஆராயும்போதும் திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதங்கள் குறித்துத் தேவாரப் பாடல்களில் குறிப் புகள் ஏதும், அங்கம் பூம்பாவையை எழுப் பியது உட்படச் சான்றுகள் இல்லாமை யைக் கண்ணுற நேர்ந்தது.

அப்படியானால் திருஞானம்சம்பந்தர் இவ்வாறு பல அற்புதங்களை நிகழ்த் தினார் எனும் கற்பனைக் கதை பரவியது எப்படி? மறைந்த பேராசிரியர் என் அன்பு நண்பர் கு. நம்பி ஆரூரன் தம்முடைய எம்.லிட் பட்ட ஆய்விற்காகப் பெரிய புராணம் கூறும் சமூகப் பொருளாதாரக் கோட்பாடுகள் எனும் ஆய்வினை மேற் கொண்டு ஆய்வேட்டினை, சென்னைப் பல்கலைக் கழகத்தில் அளித்துள்ளார். அடுத்து பேராசிரியர் இராசமாணிக் கனார் பெரிய புராண ஆராய்ச்சி என்ற நூலினை எழுதியுள்ளார்.

மேலும் பல்லவர் வரலாறு எனும் அவர்தம் நூலில் சுந்தரர் வழக்கு குறித்துப் பெரிய புராணம் கூறுவனவற்றை எடுத்துக் கூறியிருந்தார். எனவே பெரிய புராணம்தான் இவ்வா றான அற்புதங்கள் செய்தார் எனும் கற் பனைச் செய்தி பரவியதற்குக் காரணம் என்பது தெளிவாகிறது.

புராணங்கள் - அவை கந்தபுராணமா யினும் சரி, சேக்கிழாரின் பெரியபுராண மானலும் சரி, அவை கற்பனையே என்ப தோடு மிகைப்படுத்தப்பட்ட - இன்னும் சொல்லப் போனால் புளுகுச் செய்தி களுக்குத் தமிழ்ப் புனுகு சாத்தப்பட் டவையே.

சேக்கிழாரின் தமிழைப் போற்றுகி றோம். சேக்கிழார் தமிழர் என்பதால், ஆரியப் புலவர் அல்லர் என்பதால் மதிக் கிறோம். போற்றவும்கூட செய்கிறோம் ஆனால் இதுபோன்ற கற்பனைக் கதையை உலவவிட்டதை ஏற்கவியலாது என்பது பகுத்தறிவாளர் கருத்து. அது கம்பரின் இராமாயணத்திற்குக் கூறப்பட்ட எதிர்ப்புப் போலவே பெரியபுராணத்திற்கும் கூறப்படும் எதிர்ப்பு, மறுப்பு எல்லாம் ஆகும்.

வைணவத்திற்குக் கற்பனை வழங் கியவன் கம்பன். அதே காலகட்டத்தில் சைவத்திற்குக் கற்பனை வழங்கியவர் சேக்கிழார்.

இந்நிலையில் 1929இல் இன்றைக்கு எண்பது ஆண்டுகளுக்குமுன் இராசரத் தினம் என்பவர் எழுதிய பெரிய புராணம் கூறிய, தேவாரத்தில் இல்லாத கற்பனை கள், கப்சாக்கள் குறித்த செய்திகள் காணப்பட்டன.

அதுவே மேலும் நம் ஆர்வத்தைத் தூண்டி திருஞானசம்பந் தர் நிகழ்த்திய அற்புதங்கள் என்பவை யெல்லாம் கற்பனையே, சேக்கிழார் பக்தியை வளர்க்க, தம் பக்திப் பெருமையை வெளிக்காட்ட தெய்வப் புலவர் என்று அழைக்கத்தக்க அளவில் பல கற்பனை, புளுகுகள், நம்ப முடியாத வற்றை எழுதி வைத்துவிட்டார்.

நல்ல வேளையாகத் தேவாரப் பாடல் கள் இராஜராஜசோழன் முயற்சியால் கிடைத்துள்ளன. அவற்றில் திருஞான சம்பந்தர் அற்புதங்கள் செய்தார் என்று காட்டுவதாக இல்லை. இன்னும் ஆலயங் கள் சென்று வருகின்ற என்போன்ற ஆய்வாளர்கள் அவற்றை எடுத்துக் காட்டிட வேண்டும்.

எனவே பக்தி மடம் கொண்டவர்கள் எங்களைப் போன்றவர்களைக் கட்டுச் சோற்றுக்குள் எலி என்று எண்ணிக் கொண்டாலும் சரி, கலைஞர் பராசக்தி யில் கூறியதுபோல் பக்தி பகல் வேஷமாகி விடக் கூடாது. உண்மையான பக்தி பலன் கருதாப் பக்தியாக மறைமலையடிகள், திரு.வி.க. காட்டிய வழியில் அமைதல் வேண்டும்.

பெரிய புராணமும் - தேவாரமும்

தமிழ் வேதம் என்று சொல்லப்பட்ட தேவாரப் பாடல்களைப் பாடியவர்கள் மூவர் - திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரமூர்த்தி. இவர்கள் மூவரும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் அடங்குவர். இவர்களைக் குறித்துக் கூறவந்த பெரிய புராணம் இவர்கள் மூவருமே அற்புதங்கள் நிகழ்த்தினர் என்று கூறுகிறது.

இக்கூற்றுகளுக்குச் சான்றாக காலத் தால் முந்திய ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த எந்தத் தேவாரப் பாடல்களிலும் கிடைக்கவில்லை. சேக்கிழார், தேவாரப் பாடல்கள் தோன்றிய சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குப்பின் குன்றத்தூரில் பிறந்து சிதம்பரத்தில் பெரிய புராணம் அரங்கேற்றினார் என்று கூறப்படுகிறது.

அவ்வாறு பெரிய புராணம் இயற்றுகையில் நாட்டில் வழங்கும் கதைகளைக் கொண் டும், தேவாரப் பாடல்களில் வழங்கும் சில சொற்களின் போக்கைக் கொண்டும், சேக்கிழார் திரிபுணர்வினால் - மூவர்கள் பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறுகின்றனர்.

இதே போன்று எந்நாட்டிலும் பெரியோராயிருந்தோர்களை, பிற்காலத் தவர் சிறப்பாகக் கொள்ளுமாறு, அவரைப் புகழ்ந்தோரும், சார்ந்தோரும் மிகைப்படக் கூறி, அவதார புருஷர் களாக ஆக்குவது வழக்கமாகக் காணப் படுகிறது.

அவ்வாறே உலகத்திற்கு நீதி போதிக்க வந்த யேசு கிறித்துவை பல அற்புதங்கள் நிகழ்த்தியதாகக் கூறு வதும் ஏற்றதே.

ஏன், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த கலையுரைத்த கற்பனை யெல்லாம் மண் மூடிப் போக என்று பாடிய வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகள் அற்புதங்கள் செய்ததாகச் சில ரும், அதை மறுக்கப் பலரும் தோன்றி யதும், வழக்காடியதும் நிகழ்ந்துள்ளன.

தந்தை பெரியார் இராமலிங்கர் பொன் மொழிகள் என்று விடுதலையில் ஒரு பக்கத்திற்கும் மேலாகத் தொகுத்து கட்டுரை ஒன்று வரைந்துள்ளார். இராமலிங்கர் பொன்மொழிகளை பெரியார் தொகுத்துக் கூறியதன் நோக்கம் - பொய் தோன்றிய காலத்துச் செல்வாக்குப் பெறவில்லையென்ற போதிலும், மேலும் மேலும் வற்புறுத்திக் கூறுவதினாலும், நாளடைவில் அதனை மறுப்பவரின்றி மெய்யாக ஆகிவிடக் கூடாது என்பதால்தான்.

பின்வருவோர் பொய்யை ஏட்டில், எழுத்தில் கண்டால் கடவுள் வாக்கு அது; என்றும் மாறாத சத்தியம், உண்மை என்று எண்ணி மயங்கிட நேரிடுகிறது. மூவர் செய்த அற்புதங்கள் எல்லாம் அவ்வாறேதான் மாறியுள்ளன. இதுபோல் வைணத்தில் அதிகமில்லையெனினும் பன்னிரு ஆழ்வார்களில் ஓரிருவர் இதுபோல் அற்புதங்கள் நிகழ்த்தியதாக அல்லது அவர்கள் வாழ்வில் அற்புதங்கள் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது

திருஞானசம்பந்தரின் புராணத்தை - வாழ்க்கை வரலாறை அல்ல - ஆராய்ந் தால் இவர் சீர்காழிப் பதியிலே, அரிய தவங்கிடந்த   தாய் தந்தையர்க்குப் பிறந்தவர். எதற்குத் தவங் கிடந்தார் களாம்? தமிழ்நாடெங்கனும் தங்கள் அன்பு மதமாகிய, ஆரியத்திற்கு எதிரான, வேத நெறிக்கு எதிரான சமணமும், பவுத்தமும் தங்கள் கடைமார்க்கமாகிய  ஆருகதமும், பவுத்தமும் போதித்து வர, சற்சமயமான சைவ சமயம் கருகி  ஆருகத மும், வருவதைச் சிந்தையிற் கொண்டு அதைத் தூக்கி நிறுத்தி, ஆருகதமும், பவுத்தமும் அழியத் தவங் கிடந்து ஒரு புதல்வரைப் பெற்றார்களாம்.

கருவில் இருக்கும் குழந்தை தாய், தந்தையர் எண்ணும் எண்ணத்தையே உருக் கொண்டு பிறக்கும் என்பது மருத்துவ நூல் வல்லார் - மருத்துவ அறிவியலார் கண்ட உண்மை. அவ்வாறே சமணரையும், பவுத்தரையும் அழிக்கத் தவங் கிடந்து பிறந்த திருஞானசம்பந்தர் பிற்காலத்தே எவ்வாறு எண்ணாயிரம் சமணரைக் கழுவிலேற்றக் காரணமானார் என்பதைப் புராணம் அறிந்தவர் அறிவர்.

இந்தக் குழந்தை மூன்று வயதிலே குளக்கரையிலே தன் தந்தையைக் காணாது அழ, சிவனும், உமையவளும் விண்ணில் தோன்றி அழும் குழந்தையை ஓயப்பண்ண, பொற்கிண்ணத்தில்   குழந்தைக்குப் பால் கொடுத்தபோது அழுகை தீர்ந்தது. வாயில் பால் ஒழுகி யது. லட்சோப லட்சம் ஏழைக் குழந்தைகள் பாலுக்கு ஏங்கி அழுகையில் வராத உமை - இந்தக் குழந்தை அழுதபோதுமட்டும் வந்தது எப்படி? ஏன்? என்று பகுத்தறி வாளர் வினா எழுப்புவது ஒருபுறம் இருக்கட்டும்.

புராணத்திற்கு வருவோம். தந்தை குழந்தை வாயில் பால் ஒழுகுவதைக் கண்டார். ஏதெனக் கேட்டார். குழந்தை விண்ணை நோக்கி உமையையும், சிவனையும் காட்டி, தோடுடைய செவி யன் என்ற பதிகம் பாடியது என்றிருக் கிறது. புராணத்தில் ஞானப் பாலுண்டதி னால் ஞான சம்பந்தன் என்று பெயர் வழங்கிற்று என்கிறது புராணம். இங்கே தான் நம்  புலவர் சேக்கிழாரின் புலமை  வெளிப்படுகிறது - கற்பனைக் கருவூலம் திறக்கிறது.

புராணத்தில், குழந்தை பிறந்த சில  நாளிலேயே அதற்குப் பெயர் சூட்டப்பட்ட தாகக் கூறப்பட்டு இருக்கிறது. என்ன பெயர் என்று குறிப்பிடவில்லை. மூன்று வயது வரை பிள்ளைக்குப் பேர் வைக் காமல் இருந்திருக்க மாட்டார் - அந்தப் பிள்ளையின் தந்தை சிவபாதஇருதயர்.

தவங்கிடந்து பிறந்த பிள்ளையாத லால் ஞானசம்பந்தன் என்றே அவரும் பெயரிட்டு இருக்கவேண்டும்.

ஆனால், சேக்கிழார் முன்பு அமைந்த பெயரைக் கொண்டும்,
பொற்கிண்ணத்து அடிசில்
பொய்வதென தாதையர் முனிவுற

என தம் பதிகத்தை ஆதாரமாகக் கொண்டும், உமை தந்த பாலை உண்ட தாகவும், அதனாலே ஞானசம்பந்தன் எனப் பெயர் பெற்றதாகவும் சேக்கிழார் பாடிவிட்டார்.

ஆனால், பாலுண்டமைக்குக் கோபித்த தன் தகப்பனைப் பார்த்து முதன்முதலில் பாடிய பதிகத்தின் இறுதி யிலேயே தன்னை ஞானசம்பந்தன் என்று பாடி இருக்கிறார். ஆகவே ஞானசம்பந் தன் என்பது ஞானம் பெற்றதனால், ஞானப்பால் அருந்தியதால் பெற்ற பெயர் அல்ல. அதாவது இடு குறிப்பெயரே யன்றிக் காரணப் பெயரன்று.

பரமசிவன் பொற்றாளம் கொடுத்தாரா?

கையினால் தாளம் போட்டுப் பாடி வந்த ஞானசம்பந்தருக்கு சிவபெருமான், பஞ்சாட்சரம் அதாவது நவசிவாய என்ற எழுத்து எழுதப் பெற்ற பொன்னால் செய்யப்பட்ட தாளம் கொடுத்தார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் ஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் எதிலுமோ, அல்லது வேறு எவரேனும் பாடிய பாடலிலோ அதுபோன்ற தகவல், பாடல் ஏதும் கிடையாது. தாளத்தை யாராவது எடுத்து வந்து கையில் போடாமல், ஆகாய மார்க்கமாய் வந்து கையில் தாளம் தந்தது என்று சொல்வது எப்படி உண்மையாக இருக்க முடியும்? அதுபோல் இறைவன் தாளம் தந்தார் என்று சொல்வது இறைவனை மாஜிக் செய்பவர் போல் ஆக்குவது ஆகும். இறைவன் என்ன,  தந்திர வித்தைக்காரரா? என்று கேட்க விரும்புகிறோம்.

தோளில் சுமந்து சென்றாரா?

திருஞானசம்பந்தரை அவருடைய தந்தை சிவபாத இருதயர் தோளில் சுமந்து ஊர் ஊராகக் கொண்டு சென் றார் என்று சேக்கிழாரின் பெரிய புராணம் கூறுகிறது. ஆனால் தேவாரத்திலோ இவ்வாறான செய்திக்கு ஆதாரம் ஏது மில்லை. சிவபெருமான் முத்துச் சிவிகை, முத்துச் சின்னங்கள், முத்துக் குடை கொடுத்தாரா?

ஞானசம்பந்தர் திருவாவடுதுறைக்குச் சென்றிருந்தபோது  சிறுபிள்ளை நடந்து வருவதைக் காணப் பொறுக்காமல் முத்துச் சிவிகையும், முத்துச் சின்னங் களும், முத்துக்குடையும் கொடுத்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

பார்ப்பனர்களின் சூழ்ச்சி இதில் இருக்கிறது என்று நம்பப்படுகிறது. கோயிலிற் கிடந்த பல்லக்கு, குடை முத லியவற்றை எடுத்து வந்து  ஞானசம்பந்த ருக்குச் சிறப்புகளைச் செய்துவிட்டு, இவற்றைக் கடவுள் கட்டளை செய்தார் என்றனர். கடவுள் அந்தத் தலத்திலுள்ள எல்லாப் பிராமணர்களுக்கும் கனவில் தோன்றி இவ்வாறு செய்யுமாறு கட்டளை செய்தாராம். இது புராணக் கூத்து. பிராமணருக்கு மட்டும் ஏன் கடவுள் கனவில் தோன்ற வேண்டும். பிராமண ரல்லாத சிவனடியார் கனவில் ஏன் தோன்றவில்லை? எனவேதான் இது பார்ப்பனச் சூழ்ச்சி எனப்படுகிறது.

சமண சமயம் எங்கும் பரவியிருந்தது. இச்சமயத்தின் கோட்பாடு உயர்வு, தாழ்வு பாராட்டாதாம். இச்சமயத்தின் செல்வாக் கினால் பார்ப்பனர் தம் குலப் பெருமையை இழந்திருந்தனர். இதனைப் பெற வேண்டு மானால் ஜாதியிறுமாப்பைப் பெற வேண் டும். அதற்குத் தகுதி வாய்ந்த சமயம் சைவ சமயம். அச்சமயம் பரவ வேண்டு மானால் கடவுள் ஞான சம்பந்தருக்குப் பல்லக்கு, குடை முதலியன கொடுத்தார் என்றால் நம் மக்கள்தான் எதையும் சமயத்தின் பேரால், கடவுள் பேரால் கேள்வி கேட்காமல் நம்பிவிடும் அப்பாவி களாயிற்றே. சைவ சமயப் பற்றினால் ஏற்பர்.

சைவ சமயமும் பரவ வசதியாக இருக்கும். சேக்கிழார் இப்படிப் புராணம் எழுதி வைத்துவிட்டார். இதில் இன் னொரு வேடிக்கை - சிவிகை அதாவது பல்லக்கு, குடை முதலியன கோயிலைச் சார்ந்தவையல்ல. திடீரென்று கோயிலில் இருக்கக் கண்டனராம். இவ்வாறு இயற்கைக்கு விரோதமாக நடக்குமா?

கொல்லி மழவன் மகள் நோய் தீர்த்த விவகாரம்

கொல்லிமழவன் என்னும் அரசன் மகள் முயலகன் என்னும் நோயினால் வருந்தியிருந்தாள். இவர் அவளுடைய அந்நோயைத் தீர்த்து இன்னொரு அற்புதமும் செய்ததாகக் கூறப்படுகிறது.

திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத் திலே மங்கையை வாடமயல் செய்வதோ விவர் மாண்பே என்று கூறுகிறாரே ஒழிய தீர்ந்ததாகப் பாடக் காணோம். தம்முடைய பதிகத்தின் இறுதியில் இந்தப் பதிகத்தைப் பாடுவோர் நோயி னின்றும் நீங்குவர் என்றுதான் முடிக் கிறார். ஆனால் சேக்கிழார் கொல்லி மழவன் மகள் நோய் நீங்கித் தந்தையின் பக்கம் வந்து நின்றாள் என்கிறார்.

திருநீலகண்டப் பதிகமும்- குளிர் சுரமும்

திருஞானசம்பந்தர் திருக்கொடி மாடச் செங்குன்றூருக்குச் சென்றிருந்த போது அங்குக் குளிரால் யாவரும் வாட, அவர் திருநீலகண்டப் பதிகம் பாடி அனைவருக்கும் குளிர் சுரத்தை அகற்றினார் என்று கூறப்படுகிறது.

ஆனால் திருநீலகண்டப் பதிகத்தில் குளிரைப் பற்றியாவது அக்குளிரினால் ஏற்பட்ட சுரத்தைப் பற்றியாவது ஒரு குறிப்பும் காணோம். இப்படியே முத்துப் பந்தர் இடப்பட்டதாகவும், பொன்னுல வாக்கிழி பெற்றதாகவும் ஆதார மில்லாமல் கூறப்பட்டுள்ளது.

செட்டி மகளை எழுப்பியது

திருஞானசம்பந்தர் பாடிய பாடல் களில் செட்டி மகள் படும் மெலிவு தகுமோ என்று கூறுகிறாரே ஒழிய, செட்டி உயிர் பெற்று எழுந்திருந்தார் என்றோ, உயிர் பெற்று எழுந்தார் என்றோ தேவாரத்தில் எங்கும் கூறக் காணோம். தேவாரத்தில் எப்படிக் கூறாமல் விட்டிருப்பார்?

அப்பரை திருஞானசம்பந்தர் சந்தித்தாரா?

ஞானசம்பந்தர் அப்பரைச் சந்தித் தார் பல தடவை என்று கூறுவர். அது மட்டுமல்லாது வேளாளரான அப்பரை, பார்ப்பனரான ஞானசம்பந்தர் அப்பரே அதாவது அப்பா என்று அழைத்தார். ஜாதி வேற்றுமை பாராட்டாதவர் என்றும் கூறுவது உண்டு.

ஆனால் ஞானசம்பந்தர் தேவாரத் திலாவது, அப்பரின் தேவாரத்திலாவது இருவரும் சந்தித்தார்கள் என்பதற்கான குறிப்பு ஏதும் காணோம். அப்பர் தேவாரத்தில் மட்டும் திறக்கப்பாடியவர் என்றும், அடைக்கப்பாடியவர் என்றும் குறிப்புக் காணப்படுகிறது.

திருமறைக் காட்டிலே கோயிற் கதவை திறந்தமையைப் பற்றி சிறப்பித் துக் கூறப்பட்டிருக்கிறது. திறப்பித்தது அப்பர். அவருடைய பாட்டுகளில் கதவின் வலியை நீக்குமே என்று பத்து பாட்டுகளிலும் கூறுகிறாரேயொழிய வேறு ஒன்றுமில்லை.

சமண சமயம் செல்வாக்குடன் இருந்த காலத்தில் பூசையில்லாமையால் கதவு சாத்தப்பட்டிருந்தது. பூட்டப்பட்ட தாள் திறக்காமையினால் கதவு துரு ஏறிக் கிடந்ததைத் திறந்து கோயில் புகுகின்ற திறப்பு விழாவின் போது கடவுளை நோக்கிப் பாடியவையே திறக்கப் பாடியவை எனலாம்.

பார்ப்பனர்கள் ஞானசம்பந்தர் காலத்தும் ஜாதி உயர்வு பாராட்டியுள்ள னர். பெரிய புராணத்திலே திருவீழி மிழலைப் பார்ப்பனர்கள், சீர்காழிப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே விருந்து நடத்தினர் எனவும், அத்தலத்திலே இருந்த அப்பருக்கும் அவருடனிருந்த வர்களுக்கும் விருந்து நடத்தியதாக யாதொரு குறிப்பும் இல்லை. இனி அனல் வாதம், புனல்வாதம் உண்மையா என்று காண்போம்.

http://viduthalai.in/new/home/archive/2859.html
http://viduthalai.in/new/home/archive/2939.html
http://viduthalai.in/new/page-2/3082.html 

No comments:


weather counter Site Meter