Pages

Search This Blog

Monday, February 28, 2011

குறும்படம்

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை என்ற அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை பெரியார் திடலில் சிறப்பாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளையும் வழங்கி வருகிறது.

அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய குறும்படங்களையும் திரையிட்டு வருகிறது.
கடந்த 24ஆம் தேதியன்று மாலை சென்னை- பெரியார் திடலில் சிறந்த குறும்படங்களுக்கான பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் அய்யாயிரம் மூன்றாம் பரிசு ரூ.3000, சிறப்புப் பரிசாக ஆயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பரிசுகளை வழங்கிக் கருத்துரையும் வழங்கினார்.

உலகம் இன்று படு வேகத்தில் கழன்று கொண்டி ருக்கிறது. சாப்பிடுவதிலிருந்து (Fast Food) எல்லா வற்றிலும் வேகம் வேகம் (Fast track) என்ற நிலையைக் காண முடிகிறது.

நாவல் என்பது அருகி, சிறுகதையாகி, அதுவும் இப்பொழுது ஒரு பக்க கதையாகி, அதனையும் கடந்து ஒரு நிமிடக் கதை என்கிற அளவுக்குச் சுருங்கிக் கொண்டு வருகிறது.
அதேபோல திரைப்படம் 3 மணி நேரம், 2 மணி நேரம் என்பதைக் காட்டிலும் சில நிமிடங்கள் மட்டுமே திரை யிடப்படும் குறும்படம்மீது மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்குப் பெரும் ஈர்ப்பு இருப்பதை அறிய முடிகிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இளைஞர்கள் மத்தியிலே பகுத்தறிவுக் கருத்துகளை, அறிவியல் சிந்தனைகளை முற்போக்கு எண்ணங்களைப் பதியச் செய்யலாமே என்கிற நல்ல எண்ணத்தில்தான் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை உருவாக்கப்பட்டு, குறும் படங்களை ஊக்குவித்துக் கொண்டு வருகிறது.

கலை கலைக்காகத் தான் என்பதெல்லாம் அசல் ஏமாற்று வேலை. அப்படிச் சொல்லுகிறவர்கள் கலையின் வடிவத்தில் மக்களை முட்டாளாக்கும் பக்தி ரசத்தைத் தான் பிழிந்து கொடுக்கின்றனர்.

தெருக் கூத்துகள் என்று சொல்லப்பட்டவைகூட புராணக் கதாபாத்திரங்களை மய்யமாக வைத்துத்தானே நடத்தப்பட்டன?

இராமாயணம், அரிச்சந்திரன், பவளக்கொடி என்றுதான் நடத்திக் கொண்டிருந்தனர். அது முற்போக்குத் திசையின் பக்கம் கால் பதிக்கத் தொடங்கி விட்டது என்றவுடன், கலை கலைக்காகத்தானே தவிர, கருத்துகள் தேவையில்லை என்று மேம்போக்காகச் சொல்ல ஆரம்பித்தனர்.

விழாவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கலை வெறும் கலைக்காக அல்ல; அப்படி இருப்பதால் எந்தவிதப் பயனும் கிடையாது; மக்களுக்குக் கலை மூலம் நல்ல செய்தி (Good Message) இருக்க வேண்டும் என்று அழுத்திக் கூறியுள்ளார்.

அப்படி முற்போக்கு எண்ணங் களை உள்ளடக்கமாகக் கொண்ட குறும்படங்கள் வெளிவர வேண்டும் என்பதை ஊக்குவிக்கத்தான் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை குறும்படங்களுக்குப் பரிசளிக்கும் பணியை செய்து வருகிறது.

முதல் பரிசு பெற்ற ஒரு குறும்படம் என்ன சொல்லுகிறது? ஒரு ஊரில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு. அங்கு ஒரு சுவர். வருவோர் போவோர் எல்லாம் அங்கு சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்தனர். அதனைத் தடுப்பதற்காக அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன செய்தார்கள்? ஒரு சாமி சிலையை அந்த இடத்தில் வைக்கிறார்கள். நாளடைவில் அந்தச் சிலை கோயிலாக விரிவடைகிறது.

அடுத்த கட்டம் என்ன? அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்டு இருப்பது அங்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று காவல்துறைக்குப் புகார் கொடுக்கிறார்கள் - அப்புறம் என்ன? காவல்துறையினர் வந்து ஆட்டோ ஸ்டாண்டு அங்கு இருக்கக் கூடாது என்று அதனை அப்புறப்படுத்துகிறார்கள்.

அந்த இடத்தில் ஒரு கோயில் உண்டியல் வைக்கப்படுகிறது. அத்துடன் குறும்படம் நிறைவு பெறுகிறது.

சில நிமிடங்கள் ஓடக் கூடிய படம்தான். அதே நேரத்தில் நிதர்சனமாக உண்மையை மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறதே!

எந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்தச் சாமி சிலையை அங்கு வைத்தார்களோ, அவர்களின் ஆட்டோக்களையே அங்கு நிறுத்தக் கூடாது என்ற நிலையைப் பக்தி உருவாக்கிவிட்டதே - எவ்வளவு அழகான படப்பிடிப்பு!

இதுபோன்ற குறும்படங்களைப் பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பொதுக் கூட்டம் நடப்பதற்கு முன்பாக இதனைப் போட்டுக் காட்ட லாம் என்ற ஓர் அரிய கருத்தினையும் திராவிடர் கழகத் தலைவர் அந்த நிகழ்ச்சியிலே குறிப்பிட்டார்கள். அதனைச் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
http://viduthalai.in/new/page-2/4409.html 

No comments:


weather counter Site Meter