Pages

Search This Blog

Friday, February 11, 2011

திராவிடர் கழகத் தீர்மானமும் - புதிய சட்டமும்

அதிகமான எண்ணிக்கையில் தமிழர்கள் வாழும் நாடுகளில் குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமீரகம் (துபாய்), குவைத் முதலிய நாடுகளுக்குத் தமிழர்களையே தூதர்களாக நியமிக்க வேண்டுமென்று மத்திய அரசையும், வெளிநாடுகளில், வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் மாநில அமைச்சரவையில் தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

பல வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்புப் பாலமாகி, தமிழர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயலுவது அதன் பணியாக அமைவது அவசியமாகும். பஞ்சாப், கேரள போன்ற மாநிலங்களில் இப்படி ஒரு தனி அமைச்சகத்துறை உள்ளது என்பதையும் இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது

- எனும் மேற்கண்ட தீர்மானம் திருப்பத்தூரில் (வ.ஆ.) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவிலும் (23.10.2010), மதுரையில் நடைபெற்ற தென் மண்டல திராவிடர் மாணவர் எழுச்சி மாநாட்டிலும் (5.12.2010) நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று (10.2.2011) இந்தத் திசையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கதும், பாராட்டத்தக்கதுமாகும்.
இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களும், காரணங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் பற்றியுமல்ல, வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வாழும் தமிழர்களில் நலம், பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், தொலைநோக் கோடு இந்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

(1) பொருளாதார காரணங்களுக்காகவும், பொருளா தாரம் உலகமயம் ஆக்கப்பட்டதன் காரணமாகவும் வேலை தேடி அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், அயல்நாடுகளுக்கும் தொடர்ந்து இடம் பெயர்ந்து செல்கின்றனர். இந்தக் காரணத்தால் அவர்களின் உறவினர்கள் நேர்மறையான மற்றும் எதிர்மறையான தாக்கங்களுக்கு உள்ளாகின்றனர்.

2) தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் வேலையில் இருக்கும்போதும், அதற்குப் பின்பும் தாயகத்திலும், வெளிநாட்டிலும் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் குறித்த பிரச்சினைகளையும், சட்டப் பிரச்சினைகளையும் அடிக்கடி எதிர் கொள்கின்றனர்.

3) தமிழ்நாட்டில் குறைந்த வருவாய் பெற்று வந்து, வெளிநாட்டில் வளமான எதிர்காலத்தை நோக்கி தன்னைச் சார்ந்து இருப்பவர்களை இங்கு விட்டு, வேலை நாடிச் செல்வோர் பல்வேறு சட்டப் பிரச்சினைகளை எதிர்நோக்கு கின்றனர். அவற்றிற்குத் தாங்களே தீர்வு கண்டு மீண்டும் நிலையான வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள இயலாமல் இருக்கின்றனர்.

4) தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பினை வழங்குவது முக்கியமாகக் கவனத்திற்குக் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

(5) தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்களின் இறந்த உடல்களை தாயகத்திற்குத் திருப்பி அனுப்புவதற்குத் தேவைப்படும் நிதி உதவி வழங்குவதோடு, அதன் பின்னர் வழங்கப்பட வேண்டிய உரிமைகளைத் தீர்வு செய்வதிலும், தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும்.

இதுபோன்ற பிரச்சினைகள் நீண்டகாலமாக தமிழர்களுக்கு வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் இருந்துதான் வருகின்றன. இதற்குத் தீர்வு காணும் வகையில் மானமிகு கலைஞர் தலைமையிலான அரசு கீழ்க்கண்ட திட்டத்தைக் கைக்கொள்ள விருக்கிறது.

தமிழ்நாட்டை வாழ்விடமாகக் கொள்ளாத தமிழர்கள் தங்கள் குறைகளைத் தீர்ப்பதற்காக, தொடர்பு கொள் வதற்காக தமிழ்நாடு அரசின் கீழ் தனியொரு முகவாண்மை அமைப்பு இல்லாததே அவர்கள் நலத்திற்கு இடைஞ்சல் ஏற்படுவதாக இருந்தது.

இதற்காக அத்தமிழர்களின் நலனுக்காக ஒரு செயல் திட்டத்தினை உருவாக்கி, அதன்கீழ் ஒரு நல நிதியத்தை ஏற்படுத்தி, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த, நிருவகிக்க ஒரு குழுமம் நிறுவப்படும் என்று அந்தச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை, திட்டத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், வெளிநாடுகளில் வாழும் உறவினர்களாகிய தமிழ்நாட்டுத் தமிழர்களும் மிகப் பெரிய அளவில் நன்றியுடன் போற்றுவார்கள் என்பதில் சிறிதும் அய்ய மில்லை. வாராது வந்த மாமணியாக இந்தத் திட்டத்தைக் கருதுவார்கள் என்பது யதார்த்தமாகும்.

ஈழத்தில் நடைபெற்ற கொடுமைகளைப் பார்த்த பிறகு இப்படியொரு சட்டம் எந்த அளவுக்குத் தேவை என்பது நிச்சயமாக உணரப்படும். மலேசியா, சிங்கப்பூரில் வாழும் தமிழர்களுக்கும் அடிக்கடி ஏற்படும் பிரச்சினையை நாம் அறிவோம்.

இந்தியாவுக்குள், வெளி மாநிலங்களிலும் வெளி மாநிலத்தவர்களுக்கும் பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக மகாராட்டிரத்தில் நீண்ட காலமாக பல சிக்கல்கள் இருந்தும் வருகின்றன.

இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்துதான் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொலைநோக்கோடு இத்தகைய சட்டம் தேவை என்று உணர்ந்துதான் திராவிடர் கழகமும் இந்த வகையில் தீர்மானத்தை நிறைவேற்றியது.

அந்த வகையிலும் மகிழ்ச்சியோடு தமிழ்நாடு அரசுக்கு, குறிப்பாக முதல் அமைச்சருக்குத் திராவிடர் கழகம் பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. ஒருமனதாக இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது - நல்ல முன் மாதிரியாகும்.

http://viduthalai.in/new/page-2/3219.html

No comments:


weather counter Site Meter