Pages

Search This Blog

Sunday, February 6, 2011

திராவிடம் - ஓர் வரலாற்று ஆய்வு

இந்தியாவில் இன்றைய தமிழ்நாட் டிலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலும் முதன்மையான பேச்சுமொழி தமிழ்மொழியே இந்தப் பகுதிகளிலிருந்து தென்ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, பர்மா, மலாயா, சிங்கப்பூர் மற்றும் தொலை கிழக்கு நாடுகளுக்குச் சென்று குடியேறிவர்கள் பேசுவதும் தமிழே. திராவிட மொழிகளின் குடும்பத்தில் தமிழ்தான் மிகப் பழைமையானது என்பது உறுதி. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மூன்றும் இக்குடும்பத்தின் பிற உறுப்பினர்கள்.

இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறு மொழிகளில் துளு, கொடகு, தோடா, கோடா ஆகியவை தென்இந்தியாவிலும் கோண்டி, ஓரான், மால்டி, ராஜ்மகால், கூயி, குருக் ஆகி யவை மத்திய இந்தியாவிலும் ஒரிசா விலும் புழங்குகின்றன. தொலைவி லுள்ள பலுசிஸ்தானத்தில் பேசப்படும் (பிரஹுயி) பிரகூயி மொழியும் இக் குடும்பத்தைச் சேர்ந்ததே போற்றற்குரிய ஹோராஸ் என்பவரின் ஊகம் உண்மையாக இருக்குமாயின், திராவிட மொழிகளின் குடும்பம் மொகேஞ்ச தாரோ நகாரிகத்துடன் பண்டைக் காலத்திலேயே தொடர்புகள் கொண் டதாக இருந்திருக்க வேண்டும் என்று தெ. போ. மீனாட்சிசுந்தரனார் கருதுகிறார்.

இன்றைய இந்திய இலக்கியம்

தமிழ் மொழி பற்றி மு. வரதரா சனார் கூறுவதை இனிபார்ப்போம். இந்திய நாடு முழுவதும் பழங்காலத்தில் ஒரே மொழி பேசப்பட்டு வந்தது. அதைப் பழந்திராவிட மொழி ((Proto Dravidian) என்று கூறுவர். வடகிழக்குக் கணவாய் வழியாக துரானியரும் வடமேற்குக் கணவாய் வழியாக ஆரியரும் வந்து வடஇந்தியாவில் இருந்த மக்களோடு கலந்து ஒன்றா னார்கள். அப்போது வட இந்தியாவில் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழி பலவகை மாறுதல்கள் பெற்றது. பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் தோன்றின. அந்த நிலையிலும் சிற்சில பகுதிகளில் பழைய திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்த பழந்திராவிட மொழி பலவகை மாறுதல்கள் பெற்றது. பிராகிருதம், பாலி முதலிய மொழிகள் தோன்றின.

அந்த நிலையிலும் சிற்சில பகுதிகளில் பழைய திராவிட மொழியின் திரிபுகள் பேசப்பட்டு வந்தன. அந்த மொழிகளைப் பேசிய மக்கள் மற்றவர்களோடு கலக்காமல் தனித்து வாழ்ந்த காரணத்தால் அவை திராவிட மொழிகளாகவே ஆங்காங்கே நின்று விட்டன. கோமி, பார்ஜி, நாய்கி, மால்டா, ஓரொவன், கட்பா, குருக், பிராகூய் முதலான மொழிகள் இன்றும் திராவிட மொழி இனத்தைச் சார்ந்த வைகளாக இருப்பதற்குக் காரணம் அதுவே. வர வர இந்த மொழிகளைப் பேசும் மக்கள் அடுத்துள்ள மொழி களைக் கற்று மற்ற மக்களோடு ஒன்றுபட்டு வருவதால் அவர்களின் தொகை குறைந்து வருகிறது. வங்காளத் தில் ராஜ்மகால் மலைப் புறங்களில் வாழ்வோரும் சோட்டா நாகபுரியின் சுற்றுப் புறத்தில் வாழ்வோரும் பிறரும் இதற்குச் சான்றாக இருக்கிறார்கள். இந்தியாவின் வடமேற்கே பலுசிஸ் தானத்தில் வாழ்பவர்களில் ஒருசாரார் பேசும் மொழி பிராகூய். அந்த மொழியில் திராவிட மொழிக் கூறுகள் மிகுதியாக உள்ளன. ஆரியர்கள் அந்த வழியாக வந்து இந்தியாவில் குடிபுகுந்த பிறகும் அவர்கள் பேசும்மொழி தனித்து இருந்து வந்தது.

இரட் (இரண்டு), முசிட் (மூன்று) முதலிய எண் பெயர் களும் மூவிடப் பெயர்களும் (Personal Pronouns), வாக்கிய அமைப்பும் மற்றும் சில இயல்புகளும் பிராகூய் மொழியில் இன்னும் தமிழைப் பேலவே இருப்பது கண்டு அறிஞர்கள் வியப்படை கிறார்கள். 1911 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கில் அந்த மொழி திராவிட மொழிகளோடு வைத்து கணக்கிடப்பட்டது. அப்போது அதைப் பேசிய மக்களின் தொகை 1,70,000. வரவர அவர்களின் தொகைக் குறைந்து வருகிறது. இப்போது சில ஆயிரம் மக் களே அந்த மொழி பேசி வருகிறார்கள். ஆனாலும் திராவிடர்கள் வடமேற்குக் கணவாய் முதல் வங்காளம் வரையில் பழங்காலத்தில் பரவி இருந்தார்கள் என்பதற்கும் பழந்திராவிட மொழி பேசிவந்தார்கள் என்பதற்கும் இவை சான்றுகளாக உள்ளன.

வட இந்தியாவில் பிராகிருதம், பாலி முதலியவை செல்வாக்குப் பெற்ற பிறகு பழந் திராவிடமொழி தென் இந்திய அளவில் குறுகிவிட்டது. பிறகு அதிலிருந்து பற்பல காரணங்களால் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் முதலிய மொழிகள் உருவாகி தனித் தன்மை யடைந்துவிட்டன. திராவிட மொழிகளுக்குள் இடத்தால் பரப் புடைய மொழி தமிழ், தமிழ்நாட்டின் மொழியாக இருப்பதுடன் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோ னேஷியா, தென் ஆப்பிரிக்கா, பிஜித் துவு, மொரீஷியஸ் முதலான பல நாடுகளில் பலகோடி மக்களால் பேசப்படும் உலக மொழியாகவும் தமிழ் இருந்து வருகிறது. (டாக்டர் மு. வ. தமிழ் இலக்கிய வரலாறு) பேரறிஞர் அம்பேத்கர் தமிழ்மொழி பற்றிக் கூறும் கருத்து பின்வருமாறு உள்ளது:

தமிழும் இதர இன உணர்வு மொழிகளும் பண்டைய அசுர மொழியை அடிப்படையாகக் கொண் டவையே என்று கருதப்படுகிறது. சிந்துவின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பிராகூய்களின் மொழி மேலே கூறிய மொழிகளுடன் மிகப் பெருமளவிற்கு ஒத்திருப்பது இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாக உறுதி செய்வதாக இருக்கிறது. இது குறித்து டாக்டர் கால்டுவெல் கூறுவதாவது: திராவிட இனத்தவர்கள் சிந்து நதிக்கு அப்பால் மத்திய ஆசியாவின் தெற்கு எல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு பிராகூய் மொழி நமக்குத்துணை புரிகிறது. நான், ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று இந்த நாடுகள் அசுரர்களின் அல்லது நாகர்களின் தாயகமாகும். திராவிட அரசுகளை நிறுவியவர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்களே என்பது வெள்ளிடைமலை.

இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, தென் இந்தியாவின் திராவிடர்களும் வட இந் தியாவின் அசுரர்களும் அல்லது நாகர் களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் - தீண்டப்படாதவர்கள் யார்? தமிழ் மொழிபெயர்ப்பு பக்கம் - 94.

மேலும் தாசர்கள் எனப்படுவோரும் நாகர்களே என்று அம்பேத்கர் விளக்கமளிக்கிறார். வேதகால இலக்கியத்தில் நாகர்கள் எவ்வாறு தாசர்கள் என அழைக்கப்பட்டனர் என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் ஒன்றுமல்ல. தஹாகா என்னும் இந்தோ ஈரானிய சொல்லின் சமற்கிருத மொழி வடிவமே தாசர் என்பது . தஹாகா என்பது நாகர்களுடைய மன்னனின் பெயர். எனவே நாகர்களை அவர் களுடைய மன்னன் தஹாகாவின் பெய ரால் ஆரியர்கள் அழைக்க ஆரம்பித் தனர். இதுவே அதன் சமற்கிருத வடிவத்தில் தாசர் என்றாகி அனைத்து நாகர்களையும் குறிப்பிடும் இனப் பெயராயிற்று.

ரிக் வேதத்தில் நாகர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதானது நாகர்கள் மிகப் பண்டைக் காலத்து மக்கள் என்பதைக் காட்டுகிறது. நாகர்கள் எவ்வகையிலும் ஆதிவாசிகளோ அல்லது நாகரிகமற்ற மக்களோ அல்லர் என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். நாகர்கள் உயர்ந்த பண்பாட்டுத் தரத்தை எய்தி இருந்தது மட்டு மன்றி இந்தியாவில் ஒரு கணிசமான பகுதியில் அவர்கள் ஆட்சி செய்தும் வந்தனர். என்பதையும் வரலாறு காட்டுகிறது. மராட்டியம்தான் நாகர்களின் தாயகம். அதன் மன்னர்களும், மக்களும் நாகர்களாகவே இருந்தனர்.

(மேற்குறிப்பிட்ட நூல் பக்கம் 82_83)

மனுவின் காலத்தில் ஆரியமொழி யில் அசுரர்கள் மொழியும் புழக்கத்தில் இருந்தன. ஆயினும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலத்தில் ஆரியமயமான குலங்களிடையே அசுர மொழி கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயிருக்க வேண்டும். எனவே, இனம் மாறிய தங்களுடைய சகோதர்கள் தங்களைப் புறக்கணித்த போதிலும் அசுரர்கள் தங்களுடைய முன்னோர்கள் சென்ற மொழியையும் சமயத்தையும் பழக்க வழக்கங்களையும் பாதுகாத்து வந்தனர் என்றே தோன்றுகிறது. புத்தெழுச்சி பெறாத இத்தகைய குலங்களுக் கிடையேதான் பைசாசி பேச்சுவழக்கு மொழிகள் பயன்பாட்டில் இருந்தன என்பதும் இவர்களில் திராவிட பாண்டியரும் அடங்குவர் என்பதும் தெரியவருகிறது.

(மேற்படி நூல் பக்கம் 93, 94)

திராவிடர்கள் என்ற சொல் தென்இந்தியாவில் தமிழ்பேசும் மக்களை மட்டும் ஏன் குறிப்பிடுகிறது என்பது பற்றி அம்பேத்கர் எழுதி இருப் பது அப்படியே கீழே தரப்படுகிறது:

நாம் நினைவில் கொள்ள வேண்டிய மற்றொரு விடயம் திராவிடர் என்னும் சொல் ஒரு மூலச் சொல் அல்ல என்ப தாகும். தமிழ் என்னும் சொல்லின் சமற்கிருத வடிவமே இந்தச் சொல். தமிழ் என்னும் மூலச் சொல் முதன் முதலில் சமற்கிருதத்தில் இடம் பெற்றிருந்தபோது தமிதா என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமில்லா வாகி முடிவில் திராவிடா என உருத்திரிந்தது. திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் ஞாபகத்திற்குக் கொள்ள வேண்டிய விடயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை. மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது; காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதேயாம். உண்மையில் இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டு வந்த மொழியாகவும் திகழ்ந்தது.

ஆரியர்களுக்கும், நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்த படியாக நாம் கவனத்திற்கொள்ள வேண்டும். இதில் விந்தை என்னவென் றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென்இந்திய நாகர்களிடம் தோற்று வித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டு, அதற்குப் பதில் சமற்கிருதத்தை வரித்துக்கொண்டனர். அனால் தென்இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை; தமிழையே தங்களது தாய் மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர்; ஆரியர்களின் மொழியான சமற்கிரு தத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக் கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனதிற் கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை; ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால், தென் இந்தியாவின் நாகர்களைப் பொறுத்தவரையில் திராவிட மொழியை தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்த தால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர்; அதுமட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழி யைப் பயன்படுத்துவதைக் கைவிட்டு விட்டதன் காரணமாக திராவிடமொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வது மிகமிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப் படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.

எனவே, தென்னிந்திய மக்களுக்குத் திராவிடர் என்ற சொல் விசேடமாகப் பயன்பட்டிருப்பதானது நாகர்களும், திராவிடர்களும் ஒரே இனத்தவர்களே என்ற உண்மையை மூடி மறைக்க அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவேயாகும். நாகர்கள் என்பது இனம் அல்லது கலாச்சாரப் பெயர். திராவிடர் என்பது மொழியின் அடிப்படையில் அமைந்த அவர்களது பெயராகும்.


(மேல் கூறப்பட்ட நூல் பக்கம் 94_96)

மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட தொல்காப்பியம் என்ற நூல்தான் தமிழ் மொழியில் முதல் நூலாகும். சமணம், பவுத்தம் (பௌத்தம்) ஆகிய நெறிகளைப் பற்றிய குறிப்புகள் அந்தநூலில் அறவே இல்லை. பிற்காலத்தில் பெயர்பெற்று விளங்கிய எந்த வைதிக (Orthodox) சமயங்களைப் பற்றியும் அது பேசுவதில்லை.

தென் இந்தியாவில் மற்ற திராவிடமொழி இலக்கியங்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டுக்குப் பின் தோன்றியவை யாகும். தமிழில் மிகப் பழைய பாடல்களின் தொகுப்புகளாக உள்ள சங்க இலக்கியத்தில் (கி.மு. 500_கி.பி.200) கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பற்றிய தெளிவான குறிப்புகள் இல்லை. வடுகர் என்ற சொல் திருப்பதி, மலைக்கு வடக்கே உள்ளவர்களைப்பற்றி வழங்கியது. மேற்குக் கடற்கரைப் பகுதியாகிய கேரளத்தில் வழங்கும் மலையாள மொழியைப் பற்றிய குறிப்பும் இல்லை.

திராவிடம் என்ற சொல் தமிழ் என்பதற்கு வடமொழியார் தந்த வடிவம் என்று கொள்ளப்பட்டமையால் திராவிடம் என்ற சொல் அந்தக் காலத்துத் தமிழ் இலக்கியத்தில் ஆளப்படவில்லை. திருநாவுக்கரசர் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றே பாடியுள்ளார்.

தென் இந்திய மொழிகளாகிய தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளைக் குறிக்கும் திராவிடம் என்ற சொல் பிற்காலத்தில் ஏற்பட்டதாகும்.

ஒரு காலத்தில் கன்னடத்தைக் கருநாட்டுத் தமிழ் என்றும், துளு மொழியைத் துளுநாட்டுத் தமிழ் என்றும் சிலர் குறிப்பிட்டது உண்டு. அனால் இன்று திராவிடம் என்ற சொல், அந்த மொழிகள் தனித்தனியே பிரிவதற்கு முன் இருந்த பழைய நிலையைக் குறிப்பதற்கும் இவை ஓர் இனம் என்று கூறி அந்த இனத்தைக் குறிப்பதற்கும் உரிய சொல்லாகப் பயன்படுத்தப் படுகிறது என்று டாக்டர் மு.வ. கூறுகிறார்.

திராவிடம் என்ற சொல் தமிழின் தொன்மையையும் மேன்மையையும் குறிக்கும் ஒரு வரலாற்றுச் சொல்லாக இன்று ஆகிவிட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை. வரலாற்றில் பல ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டிருக் கலாம். வரலாற்றை மறப்பதோ, மறைப்பதோ, மறுப்பதோ ஒரு இனத்தின் மொழி, நாகரிகம், பண்பாடு, மறுமலர்ச்சி, வளர்ச்சி ஆகியவைகளைத் தடுப்பதற்கும் கெடுப்பதற்கும் வழி வகுத்துவிடும். திராவிடம், தமிழ் மற்றும் தமிழர்களின் தொன்மையையும் தனித் தன்மையையும் காக்கும் சொல்லாகவே என்றுமிருக்கும்.
--வீ. இரத்தினம், பெங்களூரு--
http://viduthalai.in/new/page6/2804.html

No comments:


weather counter Site Meter