Pages

Search This Blog

Wednesday, February 9, 2011

வீட்டு மனை ஒதுக்கீடு-தி.மு.க. போட்ட உத்தரவல்ல - எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு அரசியல் தரகரைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பன ஊடகங்கள்


15 சதவிகித வீட்டு மனை ஒதுக்கீடு - விருப்புரிமை அடிப்படையில் வழங்கப்படக் கூடியது -   தி.மு.க. போட்ட உத்தரவல்ல - எம்.ஜி.ஆர். போட்ட உத்தரவு  அரசியல் தரகரைத் தூக்கிப் பிடிக்கும் பார்ப்பன ஊடகங்கள்
2011 மே-க்குப் பிறகு மூக்கறுபடுவது உறுதி
1971 தேர்தல் நினைவில் இருக்கிறதா?

விருப்புரிமை அடிப்படையில் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கலாம் என்ற விதிமுறையின் அடிப்படையில் செயல்பட்ட தி.மு.க. ஆட்சியின்மீது வீண் பழி சுமத்தும் பார்ப்பனர்கள், பார்ப்பன ஊடகங்களை எச்சரித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அரசியல் தரகர் சுப்பிரமணிய சுவாமி என்ற பார்ப்பனரை பார்ப்பன ஏடுகளும், ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் தூக்கிப் பிடித்து, இவரை ஏதோ மாபெரும் அரசியல் அவதார புருஷர், சம்பவாமி யுகே, யுகே பாடிவரும் நாயகன் என்பதைப்போல சித்திரித்துக் காட்டுவர்.

எதையாவது புஸ்வாணத்தைக் கொளுத்தி, தான் ஏதோ ஒரு ராக்கெட்டையே விட்டுவிட்டதுபோல புருடா விடும் புருஷர் இவர்!

முதலமைச்சரின் விளக்கம்!

இவர் தமிழக ஆளுநரிடம் ஒரு புகார் கொடுத்து, முதல்வர் கலைஞர் மீது வழக்குப் போட, நடவடிக்கை எடுக்க அனுமதி (Sanction) கோரியுள்ளாராம்!

வீட்டு மனைகளை, தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரியத்திடம் உள்ளவைகளில் ஒரு பகுதியை ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்துவிட்டதாம். இவர் இப்போது கண்டுபிடித்துவிட்டாராம்! உடனே முதல்வர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமாம்! அவர் பதவி விலகவேண்டுமாம்!

இதுபற்றிய தெளிவான விளக்கத்தை முதல்வர் கலைஞர் அவர்கள் நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில், அவை விதி 110-இன்கீழ் தந்துள்ளார்கள்.

இந்தத் தகவல்களை முதல் முறையாக இந்தக் கொலம்பஸ் கண்டுபிடித்துக் கூறுகிறாரா என்றால், இல்லை! இதுபற்றி வடநாட்டு ஆங்கில தொலைக்காட்சி ஒன்றும், தமிழ் வார ஏடு ஒன்றும்தான் வெளியிட்டன. ஓர் ஆங்கில நாளேடும் வெளியிட்டது.

அப்போதே அதற்கு இதுபோன்ற மிகத் தெளிவான விளக்கத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அளித்துவிட்டார்; பிரச்சினையை மேலும் ஊதிப் பெரிதுபடுத்த நினைத்த அந்த ஊடகங்கள் அப்போதே தோற்றுப் போய்விட்டன.

மூன்று செய்திகள்

நேற்று தாக்கல் செய்த விளக்கத்தில் முதல்வர் முக்கியமாக மூன்று செய்திகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

(1) விருப்புரிமையின்கீழ் (Discretionary Quota) என்பதன்கீழ் சிலருக்கு வீட்டு மனைகளோ, வீடுகளோ வழங்கும் முடிவு - இதற்கு முன்னாள் இருந்த அ.தி.மு.க. அரசினால்தான் புகுத்தப்பட்டது.

85 விழுக்காடு குலுக்கல் முறையில்; 15 விழுக்காடு விருப்புரிமைப்படி ஒதுக்கீடு; இது ஏதோ சிதம்பர ரகசியம் அல்ல. கோப்புகள் மூலமே ஆணையிடப்படும் வெளிப்படை நடவடிக்கைதான்!
‘Discretionary’ என்ற சொல்லுக்கு Harward பல்கலைக் கழகத்திலேயே புரண்டு வந்துள்ளதாகத்  தம்பட்டம் அடிக்கும் இந்த அதிமேதாவிக்கு அர்த்தம் தெரிந்திருக்க வேண்டாமா? விருப்புரிமை என்றபோதே, அதை பிறர் எவரும் கேள்வி கேட்க இடமோ, நிலையோ சட்டத்தில் இல்லை. பின் ஏன் இப்படி மோடிமஸ்தான் வேலை காட்டுகிறார் இவர்?
(2) முதலமைச்சர் அவர்கள் அந்த விளக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளதுபோல், இந்த ஒதுக்கீடு பெற்றவர்கள் எவருக்கும் தனிச்சலுகையை பத்திரப் பதிவிலோ, விலை நிர்ணயத்திலோ அரசு காட்டிட வில்லை; எனவே, தமிழக வீட்டு வசதி வாரியத்திற்கோ, பத்திரப் பதிவுத் துறைக்கோ எந்த நட்டமும் ஏற்படவில்லை.

இருந்தும் இப்படி வல்லடி வம்பு வழக்கு என்பது யாரை ஏமாற்ற? சு.சாமிகளைப்பற்றி மக்கள் தெளிவாக அறிவார்களே!

வருவாய்த் துறை அமைச்சரின் விளக்கம்

7.12.2010-லேயே தமிழக வருவாய்த் துறை அமைச்சர் விதிமுறைகளுக்கு உட்பட்டே எல்லாம் நடந்திருக்கிறது. அரசு ஒதுக்கீடு செய்யும் விதிகள் மீறப்பட்டிருந்தால் - யாராவது குறிப்பிட்டுப் புகார் கொடுத்தால், அதைப் பரிசீலனை செய்து, அதில் உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளாரே! இதையும் முதல்வர் தாம் தந்த விளக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

எம்.ஜி.ஆர். காலத்திலேயே போடப்பட்ட ஆணை

இந்த விருப்புரிமைத் திட்டம்பற்றிய அ.தி.மு.க. அரசு காலத்தில் போடப்பட்ட ஆணை 25.1.1979 - எம்.ஜி.ஆர். ஆண்டபோதுதான் என்பது குறிப்பிடத்தக்கது!

மும்பையில் கார்கில் வீரர்களின் தியாக குடும்பத் தவர்களுக்கு எனக் கட்டப்பட்டதில் அங்கே காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முதல்வரின் குடும்பத்தவர், அரசு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டது தவறான அதிகார துஷ்பிரயோகம் என்பதும் இதுவும் ஒன்றா? ஒரே தன்மை யதா?

அவரைப் பதவி விலகச் செய்த அடிப்படையே வேறல்லவா?

குதிரைக்கு குர்ர்ரம் என்றால், ஆனைக்கு அர்ர்ரம் என்று அழைப்பதா?

இவர்கள் இந்த லட்சணத்தில் முதலமைச்சர்மீது 23 வழக்குகள் போடப் போகிறாராம்! யாரிடம் இந்தப் பூச்சாண்டி?

இந்த சுப்பிரமணிய சுவாமிகளுக்கு முன்பு தமிழ்நாட்டு அ.தி.மு.க. மகளிரணியினர் தந்த வரவேற்புபோல், பல வரவேற்புகளை தி.மு.க.வினர் செய்யமாட்டார்கள். அவர்கள் நாகரிகம் தெரிந்தவர்கள்.

1971 - நினைவிருக்கிறதா?

எனவேதான், இவர் வெத்து வேட்டு அரசியல் செய்ய சல்லடம் கட்டிப் புறப்படுகிறார். பூணூல் பாசத்தினால் அவாள் ஏடுகளும், தலைவர்களும் இவரைத் தாங்கிப் பிடித்து, 2011 மே-க்குப் பின் மூக்கறுபடுவதற்கு ஆயத்தமாகிறார்கள் போலும்!

தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்.

1971  - நினைவிருக்கிறதா?
கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
http://viduthalai.in/new/e-paper/3077.html 

No comments:


weather counter Site Meter