Pages

Search This Blog

Tuesday, February 15, 2011

முஸ்லிம்கள் வேட்டையாடப்பட துணைபுரிந்த அதிகாரிகளுக்கு மோடி அரசில் மேலும் மேலும் பதவி உயர்வுகள்! தெகல்கா தோல் உரிக்கிறது

குஜராத் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி  கிடைக்க வேண்டும் என்று போராடிய மனித உரிமை குழுக்கள், வெளியீடுகள் பலவற்றிலும் தெகல்கா முன்னணியில் நின்றது. ஆறு மாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த  ரகசிய பேட்டிகளைப் பற்றிய செய்தியை 2007 அக்டோபரில் தெகல்கா வெளியிட்டது.

பன்னிரண்டுக்கும் மேற்பட்ட விசுவ இந்து பரிசத் தலைவர்கள், பா.ஜ.க. தலைவர்கள், அரசு குற்றவியல் வழக் கறிஞர்கள், கலவரங்களுடன் தாங்கள் சம்பந்தப் பட்டிருந்ததை ஒப்புக்கொண்டு, கலவரங்களின்போது நியாயம் , நீதி என்பதெல்லாம் எவ்வாறு காற்றில் பறக்கவிடப்பட்டது என்பதையும்,  கலவரங்களை நிகழ்த்த எவ்வாறு விரிவான சதித் திட்டம் வகுக்கப்பட்டது என்பது பற்றியும் பேட்டி அளித்த 60 மணி நேரம் ஒளிபரப்ப இயன்ற பேட்டிகளை தெகல்கா வெளியிட்டது.

இது நாகரிக சமூகத்திடையே ஒரு பெருங்குமுறலை ஏற்படுத்தியது. தெகல்கா விடியோ பதிவுகளைப் பற்றி ஒரு விசாரணையை மேற்கொள்ள குஜராத் அரசை தேசிய மனித உரிமை ஆணையம் கேட்டது. ஆனால் அதற்கு மோடி அரசு மறுத்து விட்டது. இதனைத் தொடர்ந்து இது பற்றி விசாரிக்க மத்தியப் புலனாய்வுத் துறை கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒளி நாடாக்களையும், கருவிகளையும் தெகல்காவிடமிருந்து கைப்பற்றிய மத்திய புலனாய்வுத் துறை அவற்றின் உண்மைத் தன்மையை  அறிய, ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பியது. இந்த ஒளி நாடாக்கள் 100 விழுக்காடு உண்மை யானவை என்று அறிவிக்கப்பட்டது.

மார்ச் 3 ஆம் தேதியன்று உச்சநீதி மன்றம் எப்படி முடிவு செய்தாலும் சரி,  இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் பொதுமக்கள் முன் வைக்கவே தெகல்கா விரும்புகிறது. அதைப் படிக்கும் பொதுமக்கள் 2002 குஜராத் கலவரங்களில் மோடி குற்றவாளியா என்பது பற்றி அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்! மோடிமீது சுமத்தப்படும் முக்கியமான குற்றச் சாற்றுகளும், அவற்றின் மீது சிறப்பு விசாரணைக் குழு மேற்கொண்ட முடிவுகளும் கீழே அளிக்கப்படுகின்றன.

2002 பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி மாலை நரேந்திர மோடி நடத் திய ஓர் அலுவலர் கூட்டத்தில், முஸ் லிம்கள் மீது தங்கள் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள இந்துக்களைத் தாராளமாக அனுமதிக்கும்படி மோடி தனது அதிகாரிகளிடம் கூறினாரா? இவ்வாறு கூறியதற்கான முடிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று சிறப்பு விசாரணைக் குழு தெரி விக்கிறது.
கொலை செய்யப்பட்ட  காங்கிரஸ் தலைவர் ஈஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி பதிவு செய்த,  கலவரங்களின் போது ஈஷான் ஜாஃப்ரி யும், அவருடன் டஜன் கணக்கான இதர முஸ்லிம்களும் பயங்கரமாக வெட்டியும், எரித்தும் கொலை செய்யப்பட்டனர் என்ற புகார் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2009 மார்ச் 27 அன்று மோடி மற்றும் அவரது அரசு மீதான குற்றச்சாற்றுகள் பற்றி விசாரணை நடத்த இந்த சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது.

மோடி, இதர பா.ஜ.க. பொறுப்பாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது 32 குறிப்பான குற்றச்சாற்றுகளை ஜாகியா ஜாஃப்ரி தெரிவித்துள்ளார். அவற்றில் மிகவும் மோசமான குற்றச் சாற்று என்னவென்றால், முஸ்லிம்களின் மீதான தங்களின் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இந்துக்களைத் தாராளமாக அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறை தலைவர், தலைமைச் செயலாளர் மற்றும் இதர மூத்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியிருந்தார் என்பதுதான்.
காந்திநகரில் உள்ள முதல் அமைச்சர் மாளிகையில் 27-2-2002 நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இத்தகைய அறிவுரைகள் வழங்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் குறிப்பிடுகிறார்:  27-2-2002 அன்று காலை கோத்ராவுக்குச் சென்று விட்டு அகமதாபாத்துக்குத் திரும்பிய  முதல் அமைச்சர் அன்று இரவு தனது வீட்டில் ஒரு கூட்டம் நடத்தினார் என்பது விசாரணையில் தெளிவாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது. (விசாரணைக் குழுத் தலைவரின் குறிப்புகள் பக்கம் 3).

விசாரணை அலுவலர் ஏ.கே.மல் ஹோத்ராவின் கூற்றுப்படி, அரை மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் கீழ்க் குறிப் பிடப்பட்ட எட்டு பேர் கலந்து கொண் டனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1) முதல் அமைச்சர் நரேந்திரமோடி
2) தலைமைச் செயலாளர் பொறுப்பு ஸ்வர்ண காந்த் வர்மா
3) கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை) அசோக் நாராயண்
4) காவல்துறை பொது இயக்குநர் கே.சக்ரவர்த்தி
5) அகமதாபாத் மாநகரக் காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே
6) உள்துறைச் செயலாளர், கே. நித்யானந்தம்
7) முதல் அமைச்சரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஸ்ரா
8) முதல் அமைச்சரின் செயலாளர் அனில் முக்கிம்
சிறப்பு விசாரணைக் குழுவின் முன் ஆஜரான இரண்டு மூத்த அதிகாரிகள் ஸ்வர்ண காந்த வர்மாவும், அசோக் நாராயணும் ,   முஸ்லிம்கள் மீது தங்கள் கோபத்தைத்  தீர்த்துக் கொள்ள இந்துக் கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற அதிர்ச்சி தரும் சொற்களை மோடி கூறினார் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதற்கு மாறாக, இத்தனை ஆண்டு காலம் கழிந்த பிறகு அவர் கூறியது எங்களுக்கு நினைவில்லை என்று கூறினார்கள். (பக்கம் 16)

நான்கு அதிகாரிகள் - கே. சக்ர வர்த்தி, கே.நித்யானந்தம், பி.சி.பாண்டே, பி.கே. மிஸ்ரா ஆகிய நால்வரும், கலவரங்களின்போது இந்துக்களைக் கட்டுப் படுத்த வேண்டாம் என்று முதல் வர் அறிவுரை கூறியதாகக் கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்தனர். தற்போது மத்திய வர்த்தக அமைச்சகத்தில் பணி யாற்றும் மற்றொரு அதிகாரியான அனில் முகிம், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதையே மறுத்தது வியப்பளிப்ப தாக இருந்தது.

இரண்டு மூத்த அதிகாரிகளின் சவுகரியமான நினைவுக் குறைவும், தான் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே இல்லை என்ற முகிமின் மறுப்பும், உண்மையை மறைக்க மேற்கொள்ளப் பட்ட ஒரு பெரு முயற்சியைக் காட்டு கிறது. இந்த நான்கு அதிகாரிகளில் பி.சி.பாண்டே, பி.கே.மிஸ்ரா இருவருக்கும் அவர்களது ஓய்வுக்குப் பிறகு மோடி அரசு செல்வாக்கும் அதிகாரமும் நிறைந்த பதவிகளை அளித்துள்ளது என்பதைக் காணும்போது, உண்மையை மறைக்க பெரு முயற்சி மேற்கொள்ளப் பட்டது என்பது நம்பத் தகுந்ததாகவே இருக்கிறது. 2009 இல் ஓய்வு பெற்ற பிறகு பி.கே.மிஸ்ரா குஜராத் மின்வாரிய ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டு ஆணை யத்தின் தலைவராக ஆறு ஆண்டு காலத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற பிறகு பி.சி.பாண்டே குஜராத் காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக நியமிக்கப் பட்டார்.

மூன்றாவது அதிகாரி யான கே. நித்யானந்தம் இன்னமும் குஜ ராத் அரசின் கீழ் குஜராத் காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின்  நிருவாக இயக் குநராகப் பணியாற்றி வருகிறார். குற்றச்சாற்றை மறுக்காமல், ஆனால் அதே நேரத்தில் நினைவில்லை என்று கூறிய அசோக் நாராயணுக்கும் பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. கலவரங்களுக்குப் பிறகு நாராயண் தலைமைச் செயலாள ராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளார். 2003 மே 23 அன்று அவர் லஞ்ச ஒழிப்பு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 2004 ஜூலை 31 அன்று 60 வயது நிறை வடைந்த பிறகும், அவருக்கு இரண்டு ஆண்டு காலம் பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து அவ ருக்கு நான்கு முறை ஆறுமாத கால நீட் டிப்புகள் வழங்கப்பட்டன. மொத்தமாக நான்கு ஆண்டு காலம் அவருக்கு மோடி அரசால் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள் ளது. அதன்படி சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் குறிப்பிடு கிறார்: பி.சி.பாண்டே, பி.கே.மிஸ்ரா, அசோக் நாராயண் ஆகிய மூன்று அதிகாரிகளும் ஓய்வு பெற்ற பிறகு, பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் முதல் அமைச்சருக்கோ அல்லது மாநில அரசுக்கோ எதிராக அவர்கள் பேசுவார்கள் என்று எதிர் பார்க்க முடியாது (தலைவரின் குறிப் புகள்: பக்கம்.4)

உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சவந்த் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹோஸ்பெர்ட் சுரேஷ் இருவரும், கவலைப்படும் குடிமக் களின் தீர்ப்பாய உறுப்பினர்களாக கலவரங்கள் பற்றி விசாரணை நடத்திய போது, குஜராத் முன்னாள் வருவாய்த் துறை இணை அமைச்சர் ஹரேன் பாண்டியா, கலவரங்களில் மோடியைத் தொடர்பு படுத்தும் வகையில் தங்களிடம் வாக்குமூலம் அளித்தார் என்று சிறப்பு விசாரணைக் குழுவிடம் உறுதிப் படுத்தினர் என்று அறிக்கை குறிப் பிடுகிறது.

பாண்டியா 2002 மே 13 அன்று எங்கள் முன் ஆஜராகி, தனது பெயர் வெளியில் தெரியக் கூடாது என்ற நிபந்தனையுடன்,   மோடியின் வீட்டில் 27-2-2002 அன்று நடந்த கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அக் கூட்டத்தில் பேசிய மோடி அடுத்த நாளன்று இந்துக்களிடமிருந்து ஓர் எதிர் தாக்குதல் கட்டாயம் நடக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார் என்ப தாக வாக்குமூலம் அளித்தார் என்று இந்த இரண்டு ஓய்வு பெற்ற நீதிபதி களும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவித்தனர். (அறிக்கையின் பக்கம் 18)

2003 இல் பாண்டியா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.  அவர் இறந்து போய்விட்டபடியால், அவர் தான் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்ட கூட்டம், 27-2-2002 அன்று முதல் அமைச்சரால் நடத்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டமா அல்லது மோடி தனியாகக் கூட்டிய பா.ஜ.க. தலைவர் களின் கூட்டமா என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்கான வழி இல்லை. ஆனால், தீர்ப்பாயத்தின் முன் பாண்டியா அளித்த வாக்குமூலம் பதிவு செய்யப் படாததால், ஓய்வு பெற்ற இரண்டு நீதிபதிகளின் அறிக்கைகளை உண்மை என்று எடுத்துக் கொள்ள சிறப்பு விசாரணைக் குழு தயாராக இருக்க வில்லை.
உண்மையைக் கூறுவதானால், இதுபற்றிய சிறப்பு விசாரணைக் குழு வின் முழுமையான அணுகுமுறையே, தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற விருப்பமோ உறுதியோ அற்றதாகவே இருந்தது. விசாரணை அலுவலர் தனது அறிக்கையின் 13-ஆம் பக்கத்தில் குறிப்பிடுகிறார்:

1) நீண்ட காலத்துக்கு முன்பே ஓய்வு பெற்ற சில அரசு அலுவலர்கள், நிகழ்ச்சி தங்களுக்கு நினைவில் இல்லை என்று கூறுகின்றனர். அரசுடன் எந்தக் கருத்து வேறுபாடும் முரண்பாடும் தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

2) மற்றொரு வகையான அரசு அலுவலர்கள், அண்மையில் ஓய்வு பெற்றவர்களாகவும், அதன் பிறகு நல்ல மறுநியமனங்கள் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். மாநில அரசுக்கும், முதல் அமைச்சருக்கும் இதற்காகக் கடமைப்பட்டவர்களாக இருக்கும் அவர்களின் சாட்சியம் நம்பத்தகுந்ததாக இல்லை.

3) பதவி உயர்வுக்குத் தகுதி பெற்றோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள தற்போது பணியில் உள்ள அலுவலர்கள், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் வாதிகளுடன் மோதலை மேற்கொண்டு,  அவர்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ள விரும்பாதவர்களாக உள்ளனர் என்ற நிலையே அவர்களின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

சிறப்பு விசாரணைக் குழுவின் முன் இவ்வாறு அரசு அதிகாரிகள், அலுவலர் கள் சுதந்திரமாக, உண்மையாக வாக்கு மூலம் அளிக்கவில்லை என்பதை நன்கு அறிந்திருந்த பிறகும், மேலும் இது பற்றி தோண்டித் துருவி விசாரிக்க விசா ரணைக் குழு விரும்பவில்லை என்ப தற்கு எந்தவிதக் காரணமும் கூற முடியாது. தான் கண்டவை பற்றிய தனது கருத்துகளை முடிவாகத் தெரி விக்க முனைந்த விசாரணை அலுவலர் கூறுகிறார்: 27-2-2002 மாலை மோடியின் வீட்டில் ஒரு சட்டம் ஒழுங்கு கூட்டம் நடைபெற்றது என்பதை முடிவு செய்ய இயலுகிறது. என்றாலும், முஸ்லிம்கள் மீது தங்களின் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள இந்துக்களை சுதந்திரமாக அனுமதிக்கும்படி  தலைமைச் செயலா ளர், காவல் துறைத் தலைவர் மற்றும் இதர அதிகாரிகளிடம் முதல் அமைச்சர் அறிவுறுத்தினார் என்பது மெய்ப்பிக்கப் படவில்லை.
நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/page-2/3489.html

No comments:


weather counter Site Meter