Pages

Search This Blog

Monday, February 28, 2011

குட்டக் குட்ட குனியவேண்டாம் தி.மு.க-கி.வீரமணி

தோழமை காட்ட வேண்டிய கட்சிகள் தி.மு.க.வின் தோள்மீது சவாரி செய்வதா?
கருவறைமுதல் கல்லறைவரை - தி.மு.க. ஆட்சியில் பலன் பெற்ற மக்கள் இருக்கிறார்கள் - மறந்து விடாதீர்!


குட்டக் குட்ட குனியவேண்டாம் தி.மு.க.

சுதந்திரமாக முடிவெடுக்கட்டும் தி.மு.க. தலைமை
தீரமிக்க தி.மு.க.வுக்குத் தாய்க் கழகத்தின் வேண்டுகோள்
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தாய்க் கழகத்தின் சார்பில் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

முதலமைச்சர் கலைஞர் அவர்கள் மான மிகு சுயமரியாதைக்காரர். இதை எப்போதும் எங்கும் கூறத் தயங்காத பெருந்தகையாவார்!
கலைஞரின் தனித் தன்மைகள்

அய்யாவின் துணிவும், அண்ணாவின் கனிவும், அவரது ஆற்றல்மிகு ஏழை, எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்டோரை உயர்த்தும் ஓயாத சிந்தனையும் செயலாக்கமும் அவரது தனித்தன்மைகள்.

அவரது தலைமையில் அய்ந்தாவது முறை நடை பெறும் ஆட்சி, தமிழ்நாட்டின் சமதர்ம சகாப்தத்தை சமானிய மக்கள் சுவைத்து அன்றாடம் பயன்படும் ஒப்பற்ற ஆட்சியாக கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கருவறைமுதல் கல்லறைவரை....

கருவறை துவங்கி கல்லறை வரை, கலைஞர் ஆட்சியால் நேரிடையாகவோ, மறைமுக மாகவோ (Directly or Indirectly) பயன் பெறாத மக்களே இல்லை என்பதை மார்தட்டி எங்கும் சொல்லும் மாண்புகள் மலிந்த மகத்தான ஆட்சி!

தசரதன் கொடுத்த வரமாகி விடக் கூடாது!

கூட்டணி என்ற ஒன்றைக் காட்டி, தசர தனிடம் கைகேயி வரம் பெற்றதாக இராமா யணக் கதையில் வரும் நிகழ்வைப் போல, தோழமை உணர்வு காட்ட வேண்டிய சில கட்சிகள், தோள் மேல் சவாரி செய்ய, மிரட்டல் பாணி ஆயுதங்கள் கையில் கிடைத்து விட்டதுபோல் கற்பனைக் குதிரைகள்மீது சவாரி செய்வது போன்ற நிபந்தனைகளை ஏற்படுத்தினால், அதற்கு தி.மு.க., இணங்க வேண்டிய, இறங்கி வர வேண்டிய அவசியம் இல்லை.

தி.மு.க. - ஜனநாயக பீனிக்ஸ் பறவை!

தி.மு.க. தேர்தல் கால நெருக்கடிகளைச் சந்திக்கும் கட்சி மட்டும் அல்ல; அரசியல் நெருக்கடி கால நெருப்பாற்றில் நீந்தி வந்த ஓர் ஜனநாயக பீனிக்ஸ் பறவை!

தமிழ் மக்கள் அதன் பக்கம் உள்ளனர். அதன் தன்னிகரற்ற சாதனைகள் அதன் பலம். அக்கட்சி காட்டும் பண்பாடு, மனிதநேயம், கண்ணியம் அதற்கு பலவீனமாகி விடக் கூடாது!

கட்டுப்பாட்டோடு பட்டி தொட்டியெங்கும் படர்ந்துள்ள பலம் வாய்ந்த இயக்கம் இது.

குட்ட குட்டக் குனியக்கூடாது!

எனவே குட்டக் குட்ட குனியும் போக்குக்கு எங்கே இது ஆட்பட்டுவிடுகிறதோ என்ற அச்சம் தமிழ் இனவுணர்வாளர்களுக்கு, தன்மானத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தேவையற்ற கூடுதல் பாரத்தை இறக்கிவிட்டு, அதன்மூலம் நிரந்தர சுமை தாங்கியாக ஆகாமல், சுயமரியாதையுடன் முடிவு எடுக்க வேண்டும்.

நட்பு பேசிக் கொண்டே கசப்பும், வெறுப்பும் மேலோங்கும் இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு களத்தில் இறங்குவது யாருக்கும் நல்லதல்ல - கூட்டணி அரசியலில். நான் உமி கொண்டு வருவேன்; நீ நெல் கொண்டு வா, குத்தியபின் ஊதி ஊதி தின்போம் என்ற போக்கு நியாயமாகுமா?

விட்டுக் கொடுத்துக் கெட்டுப் போன பழைய கதை

1980இல் இப்படி விட்டுக் கொடுத்து கெட்டுப் போன பழைய வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாம்!

அதற்குமுன் 1971இல் செய்யப்பட்ட கோயபெல்ஸ் பிரச்சாரத்தின் கொடுமையையே சந்தித்து, வெற்றி வாகை சூடிய இயக்கம் தி.மு.க.

தி.மு.க.வின் தீரமிக்க தலைமைக்கு நமது வேண்டுகோள்!

எனவே தி.மு.க. சுதந்திரமாக முடிவு எடுக்க வேண்டும். பல பழிகளை கடந்த காலத்தில் அது சுமந்த கறை நீங்கும். வெற்றிச் சூரியன் விரிகதிர் வெளிச்சத்துடன் கிளம்பும் என்பதே தாய்க் கழகத்தின் கணிப்பு.

உலகத் தமிழர்கள் - உண்மைத் தமிழர் களின் உணர்வும் அதுதான்!

தி.மு.க.வின் தீரமிக்க தலைமைக்கு எமது வேண்டுகோள் இதுவே. தம்பி உடையான் படைக்கஞ்சான்!

கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

http://viduthalai.in/new/e-paper/4402.html 

குஜராத் கலவரம்-காவல்துறை அதிகாரி சிறீகுமாரின் சாட்சியத்தை சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை

குஜராத் 9.4.2002 அன்று ஆர்.பி.சிறீகுமார் மாநில புலனாய்வுத் துறை கூடுதல் காவல்துறைத் தலைவ ராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த சிலரை தீர்த்துக்கட்டுவது உள்ளிட்ட மோடியின் சட்டத்திற்குப் புறம்பான, அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான அறிவுரைகளின் படி தான் நடந்து கொள்ளாததால், மோடியின் வெறுப்புக்குத் தான் ஆளான தாக அவர் கூறினார். சிறீகுமார் அளித்த ஆவண ஆதாரங்களில், கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ளவையும் அடங்கும்.

1) அகமதாபாத் நகரில் தற்போது நிலவும் சமூக நிலவரம் என்ற அறிக் கையைத் தயார் செய்து அப்போதைய உள்துறை கூடுதல் தலைமைச் செய லாளராக இருந்த அசோக் நாராயணி டம் 24.4.2002 அன்று பொருத்தமான நடவடிக்கை மேற்கொள்ள அளிக்கப் பட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்த முக்கியமான செய்திகள்:

அ) குற்றவியல் நீதித்துறை நடை முறையின்மீது கலவரங்களால் பாதிக் கப்பட்ட மக்கள் நம்பிக்கை இழந்து விட் டனர். பா.ஜ.க. மற்றும் வி.இ.ப. உறுப் பினர்களுக்கு எதிராக புகார்களை அளிக்க விடாமல் அவர்களைக் காவல் துறையினர் மிரட்டினர்.

ஆ) புகார்களில் அளிக்கப்பட்ட குற்றச் சாற்றுகளை காவல்துறை அதி காரிகள் நீர்த்துப் போகச் செய்ததுடன், முதல் தகவல் அறிக்கைகளைத் தனித் தனியாகப் பதியாமல், ஒன்றுக்கும் மேற் பட்டவற்றை ஒன்றாக இணைத்தனர்.

இ) முஸ்லிம்களுடன் வியாபாரம் செய்யக்கூடாது என்று வி.இ.ப. மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் வியாபாரிகளை வற்புறுத்தினர்.

ஈ) மத உணர்வுகளைத் தூண்டி விடும் அளவுக்கான செய்திகள் அடங் கிய பிரசுரங்களை வி.இ.ப. அமைப்பினர் விநியோகித்து வந்தனர்.

உ) காவல் நிலையங்களில் இருந்த ஆய்வாளர்கள் மேலதிகாரிகளின் அறி வுரைகளைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு மாறாக பா.ஜ.க. தலைவர்களின் நேரடியான வாய்மொழி அறிவுரை களைப் பின்பற்றினர்.

இந்த அறிக்கை உண்மையானது என்பதைக் கண்டு கொண்டது மட்டு மன்றி, மற்ற சில அதிகாரிகள் தயாரித்த அறிக்கைகள் சிறீகுமார் அறிக்கை யுடன் ஒத்துப் போவதாகவும் சிறப்பு விசாரணைக் குழு கண்டுகொண் டுள்ளது.

இது பற்றி சிறப்பு விசாரணைக் குழு கேட்டபோது, அந்த அறிக்கையை மோடியிடம் வைத்தேனா இல்லையா என்பது எனக்கு நினைவில்லை என்று அசோக் நாராயண் கூறினார்.

நீறு பூத்த நெருப்பு

2) குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளிலும் மத உணர்வுகள் இன்னும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருப்பதால், மோடி மேற்கொள்ள உத்தேசித்திருந்த ரத யாத்திரைக்கு எதிராக மற்றொரு அறிக்கையை 25.6.2002 அன்று சிறீகுமார் அனுப்பி வைத்தார். அவரது பரிந்துரையை மோடி அரசு நிராகரித்துவிட்டது.

3) மக்களிடையே மத உணர்வுகள் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருவதை எடுத்துக்காட்டி, நியாயமற்ற காவல்துறை நடவடிக்கைகள் பற்றியும், கண்துடைப்பு விசாரணை பற்றியும் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து புகார் செய்து வருவதை எடுத்துக்காட்டியும் 20.8.2002 அன்று சிறீகுமார் மற்றொரு அறிக்கையைத் தயார் செய்து அனுப் பினார்.

இந்த அறிக்கை மீது அரசு நட வடிக்கை எடுக்கவில்லை என்று அசோக் நாராயண் சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்புக் கொண்டார்.

4) நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒட்டி நிலவும் உள்நாட்டுப் பாதுகாப்பு நிலை பற்றிய மற்றொரு அறிக்கையை 28.8.2002 அன்று சிறீகுமார் தயாரித்து அளித்திருந்தார். அந்த கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தன்னால் நினைவுபடுத்திக் கூற முடியவில்லை என்று அசோக் நாராயண் கூறினார்.

5) பின்னர் நானாவதி-ஷா கமிஷன் முன் சிறீகுமார் மூன்று பிரமாண வாக்குமூலங்களைப் பதிவு செய்தார். சபர்மதி ரயில் எரிப்பைத் தடுக்க மாநில மற்றும் மத்திய புலனாய்வுத் துறைகள் எவ்வாறு தவறிவிட்டன என்பதை முதல் பிரமாண வாக்குமூலம் விவரித்தது. மாநிலப் புலனாய்வுத் துறையின் அறிக்கை களை மோடி அரசு வேண்டுமென்றே கவனிக்காமல் புறக்கணித்தது என்று இரண்டாவது பிரமாண வாக்குமூலம் குற்றம் சாற்றியது.

சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்னதாக நடத்துவதற்கு ஏற்றபடி மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலையைப் பற்றி ஆதரவான அறிக்கை அளிக்கும்படி மோடியின் அதி காரிகள் எவ்வாறு தன்னை நிர்ப்பந்தித் தனர் என்பதை மூன்றாவது பிரமாண வாக்குமூலத்தில் அவர் பதிவு செய்திருந் தார்.

அப்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி கே.எம்.லிங்கோத் தலைமை யில் 9.8.2002 அன்று நடைபெற்ற கூட்டத்தில் தவறான தகவல்களை அளித்ததற்காக மாநில உள்துறை அதி காரிகளை அவர் கண்டித்த நிகழ்ச்சி யையும் சிறீகுமார் விவரித்திருந்தார். 16.8.2002 பிறப்பித்த ஓர் ஆணையில் லிங்கோத் குறிப்பிட் டிருந்தார்:

182 சட்டமன்றத் தொகுதிகளில் 154 தொகுதிகளைச் சேர்ந்த 151 நகரங் களும், 993 கிராமங்களும் கலவரங் களால் பாதிக்கப்பட்டிருந்தன என்று கூடுதல் காவல்துறைத் தலைவர் சிறீகுமார் தேர்தல் ஆணையத்தின் முன் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும், சட்டத்திற்குப் புறம்பான, அரசமைப்பு சட்டத்திற்கு மாறான செயல் களைச் செய்யும்படி மோடியும் அவரது அதிகாரிகளும் தனக்கு வாய்மொழி ஆணைகளைப் பிறப்பித்ததாகவும் சிறீகுமார் தனது பிரமாண வாக்குமூலத் தில் குற்றம் சாற்றியிருந்தார்.

இவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணைகளில் சில:

அ) காங்கிரஸ் தலைவர்கள், மோடி யின் போட்டியாளர்கள், ஹிரேன் பாண் டியா போன்ற பா.ஜ.கட்சிக்கு உள்ளேயே இருப்பவர்கள் ஆகியோரின் தொலைப் பேசிப் பேச்சுகளைப் பதிவு செய்வது.

ஆ) மோடியின் அரசியல் நலன் களுக்கு ஏற்றவாறான அறிக்கைகளை அளித்தல்.

இ) மோடியின் ரத யாத்திரைக்குக் குந்தகம் விளைவிக்க முயலும் முஸ்லிம் களை ஒழித்துக்கட்டுவது.

ஈ) மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்த குஜராத் காவல்துறைக்கு உதவி செய்து வந்த மத்திய ராணுவப் படைத் தலைவர் ஜஹுருடீன் ஷா-வின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்தி களைத் துப்பறிந்து கூறுவது.

சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய வாய்மொழி ஆணைகளைப் பதிவு செய்யும் பதிவேடு ஒன்றையும் சிறீகுமார் பராமரித்து வந்தார். ஆனால் சிறப்பு விசாரணைக் குழுவோ, சிறீகுமார் பராமரித்து வந்த பதிவேடு உள்நோக்கம் கொண்டதாகத் தோன்றுவதால், அதன் மீது எந்த நம்பிக்கையும் வைக்க முடி யாது என்பதாலும், சிறீகுமாரின் வாய் மொழி சாட்சியத்தை வேறு எந்த ஒரு சுதந்திரமான சாட்சியும் உறுதிப்படுத்த வில்லை என்பதாலும், அதனை நம்பிக் கைக்குகந்த ஓர் ஆவணமாகக் கருத முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளது.

சுதந்திரமான சாட்சியங்கள் என்பதன் மூலம் அசோக் நாராயண், கே.சக்ரவர்த்தி, பி.சி.பாண்டே போன்ற அதிகாரிகளை சிறப்பு விசாரணைக் குழு குறிப்பிடுகிறது.

இந்த அதிகாரிகள் ஓய்வு பெற்ற பின்னர் அதிகாரமும் செல்வாக்கும் மிகுந்த பதவிகளை மோடி பரிசாக அளித்தார் என்பதால், அவர்கள் நேர்மையாகப் பேசுவதாகத் தோன்ற வில்லை என்று சிறப்பு விசாரணைக் குழுவே ஒப்புக் கொண்டுள்ளது.

நானாவதி-ஷா கமிஷன் முன்னி லையில் தான் எவ்வாறு சாட்சியம் அளிக்கவேண்டும் என்று பயிற்சி அளித்து, அச்சுறுத்திய உள்துறைச் செயலாளர் ஜி.சி.முர்மு, உள்துறை அதிகாரி தினேஷ் கபாடியா மற்றும் மாநில அரசின் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் அர்விந்த் பாண்டியா ஆகியோரின் பேச்சுகளைப் பதிவு செய்த ஒலிநாடாவையும் தனது மூன்றாவது பிரமாண வாக்குமூலத்துடன் சிறீகுமார் அளித்திருந்தார்.

இந்த ஒலிப்பதிவு உண்மையானது தான் என்று சிறப்பு விசாரணைக் குழு கண்டு கொண்டபோதும், பதவி உயர்வு அளிப்பதில் தனது பணிமூப்பைப் புறக் கணித்த பின்னர் ஏற்பட்ட கடுங்கோபத் தினால்தான் சிறீகுமார் இந்த ஒலி நாடாவை அளித்துள்ளார் என்று விசா ரணைக் குழு குற்றம் சாற்றியுள்ளது.

மோடி அரசின் மத மற்றும் அரசியல் செயல் திட்டங்களுக்கு எதிராக சிறீகுமார் தொடர்ந்து மேற்கொண்டு வந்த நிலைப்பாட்டைப் போற்றுவதற்கு சிறப்பு விசாரணைக் குழு தவறிவிட்டது.

மாநிலப் புலனாய்வுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்ட தேதியிலி ருந்து ஒன்பது நாள்களுக்குப் பிறகு 18.4.2002 முதல் இந்தப் பதிவேட்டை சிறீகுமார் பராமரித்து வருகிறார். அப் போதைய நிருவாகம் மற்றும் பாதுகாப்பு காவல்துறைத் தலைவர் ஓ.பி. மாத்தூர் அவர்களைக் கொண்டு இந்தப் பதிவேட் டில் சான்றொப்பம் பெறப்பட்டுள்ளது.

நன்றி: தெகல்கா 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

http://viduthalai.in/new/page-2/4410.html 

குறும்படம்

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை என்ற அமைப்பு கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை பெரியார் திடலில் சிறப்பாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளையும் வழங்கி வருகிறது.

அது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு மாதமும் புதிய புதிய குறும்படங்களையும் திரையிட்டு வருகிறது.
கடந்த 24ஆம் தேதியன்று மாலை சென்னை- பெரியார் திடலில் சிறந்த குறும்படங்களுக்கான பரிசளிப்பு விழாவில் முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம், இரண்டாம் பரிசு ரூபாய் அய்யாயிரம் மூன்றாம் பரிசு ரூ.3000, சிறப்புப் பரிசாக ஆயிரம் ரூபாயும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் கலந்து கொண்டு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பரிசுகளை வழங்கிக் கருத்துரையும் வழங்கினார்.

உலகம் இன்று படு வேகத்தில் கழன்று கொண்டி ருக்கிறது. சாப்பிடுவதிலிருந்து (Fast Food) எல்லா வற்றிலும் வேகம் வேகம் (Fast track) என்ற நிலையைக் காண முடிகிறது.

நாவல் என்பது அருகி, சிறுகதையாகி, அதுவும் இப்பொழுது ஒரு பக்க கதையாகி, அதனையும் கடந்து ஒரு நிமிடக் கதை என்கிற அளவுக்குச் சுருங்கிக் கொண்டு வருகிறது.
அதேபோல திரைப்படம் 3 மணி நேரம், 2 மணி நேரம் என்பதைக் காட்டிலும் சில நிமிடங்கள் மட்டுமே திரை யிடப்படும் குறும்படம்மீது மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்குப் பெரும் ஈர்ப்பு இருப்பதை அறிய முடிகிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இளைஞர்கள் மத்தியிலே பகுத்தறிவுக் கருத்துகளை, அறிவியல் சிந்தனைகளை முற்போக்கு எண்ணங்களைப் பதியச் செய்யலாமே என்கிற நல்ல எண்ணத்தில்தான் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை உருவாக்கப்பட்டு, குறும் படங்களை ஊக்குவித்துக் கொண்டு வருகிறது.

கலை கலைக்காகத் தான் என்பதெல்லாம் அசல் ஏமாற்று வேலை. அப்படிச் சொல்லுகிறவர்கள் கலையின் வடிவத்தில் மக்களை முட்டாளாக்கும் பக்தி ரசத்தைத் தான் பிழிந்து கொடுக்கின்றனர்.

தெருக் கூத்துகள் என்று சொல்லப்பட்டவைகூட புராணக் கதாபாத்திரங்களை மய்யமாக வைத்துத்தானே நடத்தப்பட்டன?

இராமாயணம், அரிச்சந்திரன், பவளக்கொடி என்றுதான் நடத்திக் கொண்டிருந்தனர். அது முற்போக்குத் திசையின் பக்கம் கால் பதிக்கத் தொடங்கி விட்டது என்றவுடன், கலை கலைக்காகத்தானே தவிர, கருத்துகள் தேவையில்லை என்று மேம்போக்காகச் சொல்ல ஆரம்பித்தனர்.

விழாவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் கலை வெறும் கலைக்காக அல்ல; அப்படி இருப்பதால் எந்தவிதப் பயனும் கிடையாது; மக்களுக்குக் கலை மூலம் நல்ல செய்தி (Good Message) இருக்க வேண்டும் என்று அழுத்திக் கூறியுள்ளார்.

அப்படி முற்போக்கு எண்ணங் களை உள்ளடக்கமாகக் கொண்ட குறும்படங்கள் வெளிவர வேண்டும் என்பதை ஊக்குவிக்கத்தான் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை குறும்படங்களுக்குப் பரிசளிக்கும் பணியை செய்து வருகிறது.

முதல் பரிசு பெற்ற ஒரு குறும்படம் என்ன சொல்லுகிறது? ஒரு ஊரில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு. அங்கு ஒரு சுவர். வருவோர் போவோர் எல்லாம் அங்கு சிறுநீர் கழித்துக் கொண்டு இருந்தனர். அதனைத் தடுப்பதற்காக அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் என்ன செய்தார்கள்? ஒரு சாமி சிலையை அந்த இடத்தில் வைக்கிறார்கள். நாளடைவில் அந்தச் சிலை கோயிலாக விரிவடைகிறது.

அடுத்த கட்டம் என்ன? அந்த இடத்தில் ஆட்டோ ஸ்டாண்டு இருப்பது அங்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று காவல்துறைக்குப் புகார் கொடுக்கிறார்கள் - அப்புறம் என்ன? காவல்துறையினர் வந்து ஆட்டோ ஸ்டாண்டு அங்கு இருக்கக் கூடாது என்று அதனை அப்புறப்படுத்துகிறார்கள்.

அந்த இடத்தில் ஒரு கோயில் உண்டியல் வைக்கப்படுகிறது. அத்துடன் குறும்படம் நிறைவு பெறுகிறது.

சில நிமிடங்கள் ஓடக் கூடிய படம்தான். அதே நேரத்தில் நிதர்சனமாக உண்மையை மக்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறதே!

எந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்தச் சாமி சிலையை அங்கு வைத்தார்களோ, அவர்களின் ஆட்டோக்களையே அங்கு நிறுத்தக் கூடாது என்ற நிலையைப் பக்தி உருவாக்கிவிட்டதே - எவ்வளவு அழகான படப்பிடிப்பு!

இதுபோன்ற குறும்படங்களைப் பொது மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றும், பொதுக் கூட்டம் நடப்பதற்கு முன்பாக இதனைப் போட்டுக் காட்ட லாம் என்ற ஓர் அரிய கருத்தினையும் திராவிடர் கழகத் தலைவர் அந்த நிகழ்ச்சியிலே குறிப்பிட்டார்கள். அதனைச் செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
http://viduthalai.in/new/page-2/4409.html 

Saturday, February 26, 2011

திரிநூல் தினமணியே ஸ்ரீரங்கம் நினைவிருக்கிறதா?


தினமணி ஏடு ஜாதி அரசிய லைப்பற்றி எழுதுகிறது. பல கட்சி களுக்கும் இப்பொழுதுதான் தங் களது சுயமரியாதை நினைவுக்கு வரும். ஜாதி பலமும், வாக்கு பலமும் வாக்கு வங்கிப் புள்ளி விவரங்களும் பயன்படும் என்றெல்லாம் தினமணி ஆவர்த்தனம் பாடுகிறது (7.2.2011). எந்தெந்தத் தொகுதிகளில் வன்னியர் கள் ஓட்டு இருக்கிறது என்றெல்லாம் முடி பிளந்து ஆய்வுக் கட்டுரை எழுதுகிறது.

ஜாதியைப் பற்றி எழுதட்டும். சுயமரியாதைப் பற்றியும் தாராளமாக எழுதித் தள்ளட்டும். காகிதம் இருக் கிறது எழுதுகோல் இருக்கிறது கணினி இருக்கிறது அச்சு இயந் திரம் இருக்கிறது அடித்துத் தள் ளட்டும்.

இதைப்பற்றியெல்லாம் எழுதுவதற் கான தகுதி தினமணிக்கு உண்டா என்ற ஒரு கேள்வி எழுகிறதே.

ஜாதி வேண்டாம் அது கூடாது  என்பது தினமணியின் கருத்தா தினமணி வக்கீலாக இருக்கும் -வைத்தியநாதய்யர்கள் மாய்ந்து மாய்ந்து தூக்கிப் பிடிக்கும் இந்து மதத்துக்கோ, சங்கர மடத்துக்கோ ஜாதி பற்றிய கருத்து என்ன என் பதை முதலாவதாகத் தெரிவித்து விட்டல்லவா கோதாவில் குதிக்க வேண்டும்?

தினமணி வைத்தியநாதய்யர் களோ, சோ இராமசாமிகளோ,  கோயங்கா வீட்டுக் கணக்குப் பிள்ளை குருமூர்த்திகளோ, சு.சாமி களோ ஆவணி அவிட்டம் கொண் டாடுகிறார்களா, இல்லையா? பூணூல் அணிந்து கொண்டு இருக் கிறார்களா, இல்லையா? என்ற கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு, ஜாதியைப்பற்றி என்ன வேண்டு மானாலும் எழுதித் தொலையட்டும் நமக்கு ஒன்றும் அட்டியில்லை.

ஜாதியையும் தாண்டி தீண்டாமை க்ஷேமகரமானது என்று கூறும் சங்கராச்சாரியாரை லோகக் குரு என்று துதிபாடுவதற்கு வெட்கப் படாதவர்கள் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதுவதற்கு என்ன யோக் கியதை இருக்கிறது? ஒரு பெரியார் தோன்றாமல் இருந்திருந்தால், திராவிடர் கழகம் என்ற ஒன்று உருவெடுக்காமல் இருந்திருந்தால், விடுதலை போன்ற ஏடுகள் விழிப் புணர்வை உண்டாக்காமல் இருந் திருந்தால் இந்தக் கேள்விகள்கூட பிராமணோத்தமர்களை நோக்கி எழுந்திருக்க வாய்ப்பில்லை.

பூணூல் போட்ட பார்ப்பனர் களைப் பார்த்து கும்பிடுகிறேன் சாமி, தோப்புக்கரணம் இதோ, சாமி! என்று கூப்பாடு போட்ட கால மும் துண்டை எடுத்துச் சுருட்டிக் கக்கத்தில் வைத்துக் கொண்டு சேவகம் செய்த காலமும் மலையேறி விட்டது என்று தினமணிகளுக்குத் தெரியாதா?

ஜாதி வாக்கு வங்கி என்றெல்லாம் குறைகூறும் தினமணி, ஆச்சாரியார் (ராஜாஜி) அவர்கள் 1967 தேர்தலில் பூணூலைப் பிடித்துக் கொண்டு உதய சூரியனுக்கு ஓட்டளியுங்கள் என்று பார்ப்பனர்களுக்குக் கட்டளையிட் டாரே  அதற்கு என்ன பெயராம்? அதற்குப் பெயர் ஜாதி அரசியல் இல்லையா?

ஒவ்வொரு தேர்தலிலும் பார்ப் பனர் சங்கம் மாநாடு கூட்டி அல்லது சங்கக் கூட்டம் நடத்தி பிராமணர் கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு என்றும், பி.ஜே.பி.க்கு என்றும் தீர்மானம் போடுகிறார்களே அப்பொழுது இந்த உலக்கைக் கொழுந்துகள் எங்கே தீவட்டிகளைத் தூக்கிக் கொண்டு திரிந்தன?

அக்ரகாரவாசிகளே, இது ஆகாது, ஆகாது; கூடாது, கூடாது. இதுபோல் தீர்மானம் போட்டு உங்களைத் தனியே பிரித்துக் காட்டிக் கொள்ளா தீர்கள். அது ஆபத்தில்  போய் முடி யும்! என்று மண்டையில் அடித்தது போல தினமணி தலையங்கம் தீட்டி யிருந்தால் அல்லது ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருந்தால் ஜாதி வாக்கு வங்கி பற்றி எழுதிட அதற்கு அருகதை உண்டு.

காலமெல்லாம் பார்ப்பனர்களின் தாசானு தாசராகவும், திராவிட இயக்க வீராதி வீரருமாக விளங்கிய தொங்கு மீசைக்காரர் ம.பொ.சிவ ஞான கிராமணியார் 1971-இல் மயி லாப்பூர் தொகுதி சட்டமன்ற தேர் தலில் போட்டியிட்டபோது கற்ப காம்பாள் கோயிலில் அர்ச்சனை செய்யுமாறு அர்ச்சகரை வேண்டிக் கொண்டபோது, அந்த அர்ச்சகப் பார்ப்பான் அவரை எதிர்த்து நின்ற வேட்பாளரான டி.என். அனந்தநாயகி அம்மையாருக்காக மாற்றி அர்ச் சனை செய்தார் என்று ம.பொ.சி. புலம்பினாரே! ஆரிய தம்பிரானுக்கே இந்த நிலை என்றால், மற்றவர்களின் நிலை என்ன? கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பானுக்குக்கூட இனவுணர்வு ஜாதி உணர்வு இருக்கும்போது மற்றவர்களுக்கு இருக்கக் கூடாதா?

வெகு தூரம் போக வேண்டாம் நடந்து முடிந்த மக்களவைத் தேர் தலில் திருச்சித் தொகுதியில் என்ன நடந்தது?

திருச்சி மக்களவைத் தொகுதியில் திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும் பூர், கந்தர்வக்கோட்டை, புதுக் கோட்டை, சிறீரங்கம் ஆகியவை அடங்கியவை.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக காங்கிரசும், அ.இ.அ.தி.மு.க. வும் பெற்ற வாக்குகள் விவரம்:

திருச்சி கிழக்கு:
             காங்கிரஸ் - 51340
             அ.தி.மு.க.,  -48,954
திருச்சி மேற்கு
              காங்கிரஸ்  -50,890
             அ.தி.மு.க., -50,698
திருவெறும்பூர்:
              காங்கிரஸ் _ 56,312
             அ.தி.மு.க., _ 49,657
கந்தர்வக்கோட்டை
            காங்கிரஸ் _ 41977
            அ.தி.மு.க., _ 41236
புதுக்கோட்டை
              காங்கிரஸ் _ 42,228
             அ.தி.மு.க., _ 37,095
சிறீரங்கம்
            காங்கிரஸ் -- 50,767
           அ.தி.மு.க., -70,949
இந்தப் புள்ளி விவரத்தைக் கவனமாகப் பார்க்க வேண்டும். ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளில் 5 தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பா ளர் சாருபாலா தொண்டமான் அதிமுக வேட்பாளர் திரு ப. குமாரை விட அதிக வாக்குகள் பெற்றுள் ளார்.

சிறீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளருக்குக் கிடைத்த அதிக வாக்குகள் மேற்கண்ட அய்ந்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகளையும் கீழே தள்ளி, அதற்குமேலும் 4335 வாக்குகளை அதிகமாக அளித்து வெற்றி பெறச் செய்ததே -இதற்குப் பெயர் என்னவாம்? எல்லோருக்கும் தெரிந்த செய்திதானே? அக்கிரகார வாசிகள் அதிகம் நிறைந்த தொகுதி அல்லவா? சிறீரங்கம் தொகுதி உணர்த்தும் பாடம் என்ன?

ஒன்று திரண்டு ஒரே அடியாக வாக்குகளை அதிமுகவுக்கு அள்ளிப் போட்டுள்ளதில் ஜாதி உணர்வு கிடையவே கிடையாது என்று தினமணி சத்தியம் செய்யப் போகி றதா? துண்டை விரித்துத் தாண்டப் போகிறதா?

இதைப்பற்றி அப்பொழுது தினமணி எழுதியதுண்டா?

தமிழர்களே, தமிழர்களே!

பார்ப்பனர்களைப் பார்த்தாவது இனவுணர்வு கொள்ளுங்கள் என்ப துதான் கருஞ்சட்டை தொண்டர் களின் கனிவான வேண்டுகோள்.

நடக்க இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைகூட ஆரியர் திராவிடர் போராட்டமாகத்தான் அமையப் போகிறது.

தினமணி, துக்ளக் கல்கி வகையறாக்கள் அதற்கான யாகக் குண்டத்தை வளர்க்க குச்சிகளைப் பொறுக்க ஆரம்பித்துவிட்டனர்; தூபக்கால் தயாராகி விட்டது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?

கலைஞரைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்று சொன்ன ஆரியகுலத் திலகம் எதிர் அணியில். மீண்டும் ஆரியம் அரியணை ஏறலாமா? அதனை அனுமதிக்க லாமா?

மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தாரே, நினைவிருக் கிறதா?

ராமன் கோயிலை அயோத்தியில் கட்டாமல் வேறு எங்கு போய் கட்ட முடியும் என்று வினா தொடுத்தாரே அந்த அம்மையார் அதனை மறுந்துவிடலாமா?

ஆரிய கலாச்சாரங்களான யாகம், யோகம் இவற்றைப் புதுப்பிக்கும் போக்குக்குச் சிகப்புக் கம்பளம் விரிக்கலாமா?

ஆமாம், நான் பாப்பாத்தி தான்! என்று சட்டப் பேரவையிலே ஆடித் தீர்த்தாரே ஆரிய குல மங்கை நெஞ்சில் நிறுத்துங்கள்.

அன்று புத்த மார்க்கத்தை ஊடுருவி ஆரியம் அழித்தது இன்று திராவிட இயக்கத்திலே ஊடுருவி திராவிடத் தத்துவத்தைக் கபளீகரம் செய்கிறது. மீண்டும் மனு தர்மமா?

தந்தை பெரியார் உழைத்ததும், அறிஞர் அண்ணா பிரச்சாரம் செய்ததும், தன்மான உணர்வுத் தீயை வளர்த்ததும் எல்லாம் பாழுக்குப் போய் விடலாமா?

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

இந்தத் தேர்தலில் திரண்டெழுகிற தமிழர்களின் இனவுணர்வு எரிமலை யால் காலா காலத்திற்கும் காகப்பட் டர் பரம்பரை எழுந்திருக்கக் கூடாது.

உணர்வு பெறுவீர்! உறுதி கொள்வீர்!

ஓங்கட்டும் இனமானம்!

ஒழியட்டும் ஆரியம்!
http://viduthalai.in/new/page-1/4253.html
--- மின்சாரம் -

கலைஞர், ஜீவாவை நினைவுகூர்ந்தது தவறா?

தினமணி (17.2.2011) நடுப்பக்கத்தில் பெயரைச் சொல்லவும் தகுதி வேண்டும் (http://www.dinamani.com/edition/Story.aspx?artid=377577)எனும் ஒரு கட்டுரையைத் தகுதி உடைய ஒருவரால் எழுதப்பட்டு வெளியாகி இருக்கிறது. 

சில நாள் களுக்கு முன்பு ஜீவாவின் பெயர்த்தியின் திருமணத்தைப் பெரியார் திடலில் முதல்வர் கலைஞர் தலைமையேற்று நடத்தி வைத்தார். 

அப்போது அவர் ஜீவாவுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை, தோழமையை விவரித்துப் பேசி அது ஏடுகளில் எல்லாம் வெளியாகி இருக்கிறது. 

ஜீவாவுக்கும் கலைஞருக்கும் 18 ஆண்டுகள் வித்தி யாசம் இருந்தால் என்ன? அவரைச் சந்திக்கிற வாய்ப்பு, உரையாடுகிற வாய்ப்பு எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது.  அந்தத் தோழமையைத் தான் கலைஞர் அந்தத் திருமண விழாவில் எடுத் துரைத்தார். 

அதை மறுத்து ஒரு கட்டுரை ஒருவர் எழுத, அதை தினமணி வெளியிட்டு மகிழ்ந்து இருக்கிறது.கட்டுரையாளர் ஒரு சில வரலாற்று நிகழ்வுகளைச் சரியாக எடுத்துக் கூறி இருக்கிறார். 

அதற்குரிய புத்தகங்கள் அவரிடம் இருக்கின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.  ஆனால் 1957 தேர்தல் தொடர்பாக தினமணி கட்டுரையாளர் எழுதியுள்ள இமாலயப் பொய்யை எப்படிப் பொறுத்துக் கொள்ளுவது? 

அவர் எழுதுகிறார்:

1957 இல் வண்ணார்பேட்டை தொகுதியில் ஜீவா கம்யூனிஸ்ட் சார்பாகப் போட்டியிட்டபோது, ஜீவரத்தினம் என்ற ஒருவரை நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்த பெருமை தி.மு.கவுக்கு உண்டு, தி.மு.க, முதன் முதலில் பங்கேற்ற தேர்தல் அது.

அப்போதெல்லாம் 234 தொகுதிகளி லும் தி.மு.க. நிற்காது. வெற்றி வாய்ப்பு உள்ள ஒரு சில தொகுதிகளில் மட்டுமே நிற்கும்.  தி.மு.க. போட்டியிடாத தொகுதிகளில் காங்கி ரஸுக்கு எதிரான சுயேச்சைகளை ஆத ரிக்கும்.

அந்தச் சமயத்தில் ஜீவாவை எதிர்த்து வேட்பாளர் யாரையும் நிறுத்தவேண்டாம் என்று இடதுசாரி இயக்கத்தினர் கெஞ்சிக் கேட்டபோதும்கூட, அதைப் பொருட்படுத் தாமல், ஜீவரத் தினத்தை தி.மு.க. சார்பில் நிறுத்தி, ஜீவாவைத் தோற்கடித்தது தி.மு.க. ஜீவரத்தினத்தை வண்ணார் பேட்டை தொகுதியில் நிறுத்தவேண்டும் என்று முடிவெடுத்ததில் கருணாநிதிக் கும் பங்கு உண்டு.  இன்று ஜீவாவைப் பற்றிப் பேச தி.மு.க.வுக்கும், கருணாநிதிக் கும் என்ன தகுதி இருக்கிறது?

மேலே உள்ள கட்டுரையாளரின் கூற்றைப் பார்த்தால் அவர் எவ்வளவு கற்றுக்குட்டித்தனமாக,  எழுதுகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

1957 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. நிற்க வேண்டும் என 1956 இல் முடிவு எடுத்துவிட்டது.  அதன்படி தி.மு.க. 124 இடங்களில் தமிழகச் சட்டமன்றத் திற்குப் போட்டியிட்டது.  போட்டி யிட்டதோடு நாடாளுமன்றத்திற்கு 11 இடங்களில் 1 ஆதரவு வேட்பாளர் 5 பேருக்காகப் பிரச்சாரம் செய்தது.

இது எப்படி வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களில் போட்டியிடுவது என்று ஆகும்?  இப்படி வேட்பாளர்களை நிறுத்தியதிலிருந்துதான் 15 பேர் சட்ட மன்றத்திற்கும் இருவர் நாடாளுமன்றத் திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது வரலாறு.

1957 ஆம் ஆண்டு தேர்தலில் ஜீவா வண்ணாரப் பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தேர்தலுக்கு நிற்கவில்லை.  அவர் 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தி.மு.க. தேர்தலில் நிற்கவில்லை. 

திரா விட நாட்டுக் கொள்கையை ஆதரித்து உடன்படிக்கையில் கையெழுத்திட்ட வேட்பாளர்களையே தி.மு.க. ஆதரித்தது.  அதன்படி ஆல்பர்ட் ஜேசுதாசனை தி.மு.க ஆதரித்துப் பிரச்சாரம் செய்தது.  1952 இல் ஜீவாதான் வெற்றி பெற்றார்.

1957 ஆம் ஆண்டு தேர்தல் நிலவரம் என்ன? ஜீவா வண்ணாரப்பேட்டையில் சட்டமன்றத்திற்குப் போட்டியிட வில்லை, அவர் நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில் போட் டியிட்டார்.  அங்கே அப்போது தி.மு.க. வேட்பாளர் நாஞ்சில் கி. மனோகரன். 

ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர். சம்பந்தம் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றார்.  1957 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிட்ட கம்யூ னிஸ்ட் வேட்பாளர் ஏ.எஸ்.கே. அய்யங் கார்.  தி.மு.க. வேட்பாளர் எஸ். ஜீவரத் தினம். காங்கிரஸ் வேட்பாளர் மாயாண்டி நாடார் வெற்றி பெற்றார். 

போட்டியிடாத ஜீவாவை யார் தோற்கடித்தது?  1962 ஆம் ஆண்டு தான் ஜீவா மீண்டும் வண்ணாரப் பேட்டை தொகுதியில் போட்டியிடு கிறார். 

மீண்டும் காங்கிரஸ் வேட் பாளர் மாயாண்டி நாடார்தான் வெற்றி பெறுகிறார். 

தி.மு.க. வேட்பாளர் மு. வேதாசலம் வெற்றி வாய்ப்பை இழக்கிறார். 

இதுதான் 1952, 1957, 1962 ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் விவரங்கள் சுருக்கமான நிலவரங்கள்.

அப்போது பெற்ற வாக்கு விவரங்கள் வருமாறு: 1957 ஆம் ஆண்டு  வண்ணாரப்பேட்டை தொகுதியின் வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள்

1.  எம். மாயாண்டி நாடார்    11,770  - 29.49%     (காங்)

2.  என் ஜீவரத்தினம் (தி.மு.க. ஆதரவு)       (சுயே)    11,279  - 28.26%

3.  பி.எம். லிங்கேசன்    9,152  - 22.93%       (சுயே)

4.  ஏ.எஸ்.கே. அய்யங்கார் 7,005 - 17.56%       (கம்யூ)

5. எஸ். தெய்வசிகாமணி    707  - 1.76%       (சுயே)

1962 ஆம் ஆண்டுவண்ணாரப் பேட்டை தொகுதியில்

வேட்பாளர்களின் வாக்கு விவரங்கள்

1.  எம். மாயாண்டி நாடார்    25,732- 37.8%    (காங்)
2.  எம். வேதாசலம்    24,095  - 35.4%       (தி.மு.க)
3.  பி.ஜீவானந்தம்    10,040  - 14.7%      (கம்யூ)
4.  பி.எம். லிங்கேசன்    2,190   -   -           (சுயே)

நிலைமை இப்படி இருக்கிறபோது, தினமணி கட்டுரையாளர் அவராகவே சில கதைகளை யெல்லாம் விடுகிறார்.  இடதுசாரிகளை எதிர்த்து வேட் பாளர்களைப் போடவேண்டாம் என்று யார் யாரிடம் கேட்டுக் கொண்டார் கள்? 

ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் கடுமையாக உழைத்து முன்னேறிக் கொண்டிருந்த காலம் அது!

ஒவ்வொரு கட்சியும் கொள்கை முழக்கம் முழங்கிய நாள்கள் அவை.  கூட்டணி என்று இல்லாமல் தனியாக மக்களை சந்தித்த மகத்தான நாள்கள் அவை! 

கட்டுரையாளர் சொல்லுவது போல எவரும் யாரையும் கேட்டுக் கொள்ளவில்லை, இதற்கும் கலைஞரை அக்காலகட்டத்தில் சம்பந்தப்படுத்து வது பொருத்தமில்லாதது ஆகும்.  கட்டுரையாளரின் தெளிவின்மையையும் அறிவீனத்தையும் இது காட்டுகிறது.

தி.மு.க.வின் முதல் மாநில மாநாட் டின் மேடையில் அமர்ந்து இருந்தவர் ஜீவா!  திராவிட இயக்கத் தலைவர் களிடையே தோழமை பேணியவர் ஜீவா! 

சுயமரியாதை இயக்கத்தில் உழைத்தவர் ஜீவா!  முற்போக்கு எண் ணம் கொண்டவர்களை மதிப்பவர் ஜீவா.  அந்த வகையில் கலைஞர், ஜீவா வுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை தோழமை பொங்க ஜீவாவின் பெயர்த்தி திருமணவிழாவில் எடுத் துரைத்திருப்பது தவறா?  அதற்கு வயதை ஒப்பிட்டுக் காட்டுவது எப்படிச் சரி?

1963 ஆம் ஆண்டு ஜீவா இயற்கை எய்தினார்.  தமிழ்நாட்டு அர சியலில் கலைஞர் அதற்குள் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர் ஆகி விட்டார்.  ஜீவாவின் மரணத்தின் போது கலைஞர் தி.மு.க.வின் பொருளா ளர்; நாடறிந்த தலைவர். 

ஜீவாவைச் சந்தித்துப் பேசுகிற அறிமுகமும், வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்து இருக்கின்றன.  இதில் 18 வயது ஜீவா மூத்தவர் என்கிற காரணம் எப்படிச் சரியாக இருக்கமுடியும்? 

அவர் மூத்தவர்தான். அதனால் இளையவர் தோழமை மேலிட முடியாதா, ஜீவா காந்தியைச் சந்தித்தது போல!  தோழமை பொங்க அவரோடு பழகியதை கலைஞர் நினைவு கூர்ந்தது ஒரு மறக்க முடியாத நிகழ்வே!  இது தவறாகுமா?
க. திருநாவுக்கரசு
http://viduthalai.in/new/page2/4254.html

மே மாதம் வரை பொறு தினமணியே

மித்திரபேதம், சிண்டு முடிதல், மரை கழற்றுதல் (Nut loose theory) என்பது போன்ற சொல்லாடல்களைக் கேள்விப்பட்டு இருக்கலாம். இவை பற்றி நிதர்சனமான காட்சிகள் தேவை என்றால் தினமணி, கல்கி, துக்ளக் ஏடுகளைப் படித்தால் போதும், ஓகோ! இதுதானா அந்த அசிங்கங்கள் என்பது பொலபொல வென உதிர்ந்துவிடும்.

எடுத்துக்காட்டாக கோபத்தில் காங்கிரஸ் ; தயக்கத்தில் தி.மு.க. என்ற ஒரு கட்டுரை (25-2-2011) தினமணியில்(http://www.dinamani.com/edition/story.aspx?artid=381901).

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணிபற்றி பேச்சு வார்த் தைகள் நடந்து வருகின்றன - சுமுகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று இரு தரப்பைச் சேர்ந்தவர் களும் கூறியுள்ள தகவல்கள் நாளும் ஏடுகளில் வந்து கொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி எப்படியும் அமைந்து விடக்கூடாது என்பதிலே அடடே, இவர்களுக்கு ஏற்பட்டு வரும் ஆவேசமும் அரிப்பும் கொஞ்ச நஞ்சமல்ல.

இவர்களின் தலைவியான அம்மையார் வெளிப்படை யாகவே பேசினார். காங்கிரசை ஆதரிக்கத் தயார்! அ.தி.மு.க. வோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் தயார்! நீங்கள் தயார் தானா? என்று வெட்கத்தை விட்டே வெளிப்படையாகப் பேசினார்.

காங்கிரஸ் பிடி கொடுக்கவில்லை; ஓட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளாக தி.மு.க. வுடனான எங்கள் கூட்டணி உறுதியான ஒன்று என்று அக்கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் கூறி மூக்கை ஒட்ட நறுக்கிவிட்டார்.

அ.தி.மு.க. வோடு தே.மு.தி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், த.மு.மு.க. போன்ற கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. தி.மு.க.வைப் பொறுத்தவரை, பா.ம.கவுடன் தெளிவான வகையில் கூட்டணி வரையறுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதலிய கட்சிகள் உறவு என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று.

அது எப்படி? தி.மு.க.வோடு காங்கிரஸ் கூட்டு சேரலாம்? அதைத்தான் பார்த்துவிடுவோமே என்று கோதாவில் குதிப்பது போல தினமணி தனக்கே உரித்தான மித்திர பேதத்தில் தன் யானைக் காலைப் பதித்துள்ளது.

ஆட்சியில் பங்கு என்பதில் காங்கிரஸ் உறுதியாக நிற்கிறது. 15 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டதால், அதன்படி 90 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.

கடந்த தேர்தலில் இருந்த நிலை இப்பொழுது தி.மு.க. வுக்கு இல்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தவிக்கும் ஆளும் கட்சியின் ஒரே கவசம் காங்கிரஸ் மட்டும்தான். இத்தனைப் பிரச்சினைகளுக்கு நடுவிலும் நாங்கள் கூட்டணிக் கட்சி என்பதால் கை கொடுக்கும்போது, அதற்குத் தகுந்தாற்போல இடங்களையும் தி.மு.க. தரத்தான் வேண்டும் என்கிற காங்கிரசின் கோரிக்கை தி.மு.க. தலைமையை எரிச்சலூட்டாமல் என்ன செய்யும்? என்கிறது தினமணி.

- இந்த இடத்தில் தி.மு.க.வின் மூக்கைச் சொறிந்து விடும் வேலை.

வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி என்று அறிவிப்பு -மூன்றில் ஒரு பங்கு, அதாவது 78 இடங்கள் வெற்றி பெற்று அமைச்சரவை அமைத்தால் அதிலும் மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள், குறைந்த பட்ச செயல்திட்டம், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைந்த கட்சிகளின் ஒருங்கிணைப் புக் குழு என்று பல நிபந்தனைகளைக் காங்கிரஸ் தி.மு.க.வுக்கு விதிப்பதாகவும், இதைக் கேட்டு தி.மு.க. தரப்பு விதிர் விதிர்த்துப்போய் இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

- இந்த இடத்தில் காங்கிரசின் மூக்கைச் சொறிந்து விடும் வேலை.

அரிப்பு எடுத்தவன் ரத்தம் சொட்டச் சொட்ட சொறிந்து அற்ப சுகம் அனுபவிப்பது போல் தினமணி தினவெடுத்துச் சொறிந்து அற்ப சுகம் அனுபவிக்கும் பரிதாபத்தை என்ன சொல்ல!
இவ்வளவுக்குப் பிறகும் கூட ஆசை வெட்கம் அறியாது என்பது போல எழுதுகிறது தினமணி.

ஒரு வேலை தி.மு.க. தனது கோரிக்கைகளை ஏற்காவிட்டால், மூன்றாவது அணி அமைத்துப் போட்டி யிட காங்கிரஸ் தயங்காது என்று டில்லியிலிருந்து சமிக்ஞைகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் மூன்றாவது அணி அமைக்குமானால், அ.தி.மு.க.வுடன் முதல் கட்டப் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கும் தே.மு.தி.க.வே கூட கூட்டணி ஆட்சிக்குப் பச்சைக் கொடி காட்டக் கூடும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள் - என்று மேலும் எழுதுகிறது தினமணி.

கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் சில்லுண்டித் தனம்! அது நிறைவேறாத நிலையில் இந்தக் கூட்டணி அமையப் போவதில்லை பாருங்கள் என்று எரிச்சல் - சாபம்!

தன் ஆசைகளைக் கற்பனைக் குதிரையாக்கி சவாரி செய்கிறது தினமணி கும்பல்.

அ.தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கூட்டணி அமைய வேண்டும்! அது அமையாது போய்விட்ட நிலையில் இப்படியாவது எழுத்துகளைச் சோறாக்கி விழுங்கி தம்மைத் தாமே ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது.

தினமணி வைத்தியநாதய்யரே காங்கிரசில் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பது போலவும், நேரில் எல்லாவற்றையும் அறிந்தாற் போலவும் சாமர்த்தியமாக எழுதிட முயற்சித்துள்ளார்.

எத்தனையோ அரசியல் ஜாம்பவான்களையெல்லாம் விழுங்கி ஏப்பம் விட்டவர் கலைஞர். இந்தத் தினமணி சுண்டெலிகள் பூணூல் ஜாக்கெட் போட்டு மினுக்கிப் பார்க்கின்றன.

1971 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இப்படித்தான் வேட்டி இடுப்பில் இருக்கிறதா, நழுவி விட்டதா என்றுகூடத் தெரியாமல் கூச்சல் போட்டது தினமணி.

அய்யப்பனையும், பிள்ளையாரப்பனையும் வேண்டிக் கொண்டது நாள்தோறும் தினமணி.

முடிவு என்ன? 1967 இல் 138 இடங்களில் வென்ற தி.மு.க. 1971 இல் 183 இடங்களில் அல்லவா வாகை சூடியது?

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரே கடைசியில் சரணாகதி அடைந்துவிட்டாரே!

இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. மகா புருஷர்கள் எல்லாம் நாட்டை விட்டே வெளியேற முடிவு செய்துவிட்டனர் என்று ராஜாஜி கையொப்பம் போட்டு அறிக்கை வெளியிடவில்லையா?

மே மாதம் வரை பொறு தினமணியே! மேள தாளத்தோடு உங்களை அனுப்பி வைக்க தமிழர்கள் மிக ஆர்வத்தோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

- மின்சாரம்

Monday, February 21, 2011

பக்தர்களே, சிந்திப்பீர்-தந்தை பெரியார்

கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். அவருக்கு உருவம் கிடையாது - அரூபி என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டே; எங்கும் நிறைந்ததாகக் கூறும் கடவுளுக்குக் கோயில்கள் கட்டுவதும், உருவமற்றவர் என்று சொல்லிக் கொண்டு கோயிலுக்குள் கடவுளுக்கு உருவங்கள் - சிலைகள் வடித்து வைப்பதும், அந்த உருவமற்ற கடவுளுக்குப் படையல்கள் போடுவதும் எப்படிப்பட்ட முரண்பாடு என்பதைப் பக்தர்கள் ஒரே ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

கோயில், குளம், சிலை, திருவிழா, தேரோட்டம், குடமுழுக்கு நேர்த்திக் கடன் என்று வரிசை வரிசையாக சடங்குகளைப் பெருக்கி வைத்திருப்பது - பக்தியின் பெயரால் மக்களின் பொருளைச் சுரண்டும் புரோகித ஏற்பாடாகும்.

பக்தர்கள் சாமிக்குப் படைக்கும் பொருள்கள் யாருக்குப் போகின்றன? ஒரு தேங்காயை உடைத்தால்கூட பாதி மூடி பக்தனுக்கு; மற்றொரு பகுதி மூடி அர்ச்சகப் பார்ப்பானுக்குத்தானே? அர்ச்சனைத் தட்டில் போடும் பணம் பார்ப்பானுக்குத்தானே! கண்ணுக்கு எதிரே நடக்கும் இந்தப் பகல் கொள்ளையைப் பார்த்த பிறகும்கூட முட்டாள்தனமான பக்தி மக்களின் சிந்தனைக் கண்களைக் குருடாக்குகிறதா இல்லையா?

அதையும் தாண்டி இன்னொன்றையும் அவர்கள் சிந்திக்க வேண்டாமா? கோயிலுக்குச் சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் விபத்துக்கு ஆளாகிச் செத்து மடிகிறார்களே, அதனைத் தெரிந்து கொண்ட பிறகாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? தன்னை நாடி வந்த பக்தர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாத கடவுள் என்ன கடவுள் என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

இவ்வாண்டு சபரிமலைக்குச் சென்று மகர ஜோதி பார்க்கச் சென்ற பக்தர்கள் கூட்ட நெரிசலில் 102 பேர் பரிதாபகரமான முறையில் பலியானார்களே - அதற்குப் பிறகும் அய்யப்பன் என்று ஒரு கடவுள் இருக்கிறார் - அவர் சர்வ சக்தி வாய்ந்தவர் - பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருபவர் - பக்தர்களைத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுபவர் என்று நம்பலாமா?

ஒவ்வொரு கோயிலுக்கும் தல புராணங்களை எழுதி வைத்து அதன் மகத்துவத்தைப் பரப்புகிறார்களே - அது எதற்கு? வியாபாரிகள் தங்கள் கடைச் சரக்குகளின் விற்பனையைப் பெருக்குவதற்குச் செய்யும் விளம்பர யுக்தியைத் தானே இந்தக் கோயில் விடயத்திலும் கையாளுகிறார்கள்.

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தால் நினைத்தது நடக்கும், நோய் நொடிகள் அண்டாது, செல்வம் பெருகும், வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். கிரிவலம் வர உகந்த நேரம் என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கிறார்கள்.

நேற்று மாலை ஏட்டில் ஒரு தகவல் வெளி வந்துள்ளது. சேலம் மாவட்டம் மல்லூர் அருகே சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் (23) ரங்கசாமி (28) கந்தசாமி (45) பூமிநாதன் (30) ஆகிய தொழிலாளிகள் ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்குச் செல்லுவது வழக்கம். அதே போல நேற்றுமுன்தினம் கிரிவலத்துக்குச் சென்றனர்.

கிரிவலத்தை முடித்துவிட்டு ஊர் திரும்பினர். சொந்தவூரில் ஆட்டையாம் பட்டிக்கு அவர்கள் நடந்து சென்றபோது சாலையைக் கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் வேகமாக வந்த வாகனம் மோதி நான்கு பேரும் தூக்கி எறியப்பட்டு பரிதாபகரமான முறையில் பலியானார்கள் என்ற சேதி வெளிவந்துள்ளதே.

அதே ஏட்டில் இன்னொரு சேதியும் வெளி வந்துள்ளது. பொள்ளாச்சியை யடுத்த ஆனைமலை மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக லக்சம்பட்டியைச் சேர்ந்த 27 பேர் ஒரு வாகனத்தில் (18.2.2011) ஆனைமலைக்குப் புறப்பட்டனர்.

விடியற்காலை 3.30 மணிக்கு உடுமலையைத் தாண்டி வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரில் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக 4 பெண்கள் சித்ரா (28), கலைச்செல்வி (29), சாந்தி (35), வெள்ளையம்மாள் (35) ஆகியோர் அதே இடத்திலேயே துடிதுடித்துச் செத்தனர். 8 ஆண்களும், 6 பெண்களும் பலத்த காயம் அடைந்தனர் என்று ஒரே நாளில் இரு கோயில்களுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் பரிதாப கரமாகப் பலியானார்களே - இதுபற்றி பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்?

பகவான் பக்தர்களைக் காப்பான் என்பது உண்மை யானால் இந்தக் கோர விபத்து நடந்திருக்கலாமா? தன்னை நாடி வந்தவர்களைக் காப்பாற்ற முடியாதவன் என்ன கடவுள்?
சர்வ தயாபரன் என்கிறார்களே, இதன் பொருள் கருணையே வடிவானவன் என்பதாகும். கடவுள் கருணையே வடிவானவன் என்பதற்கு அடையாளம்தான் பத்து பக்தர்கள் துடிதுடித்துப் பலியாவதா?

கோயிலுக்குப் போகாமல், கிரிவலம் சுற்றாமல் ஒழுங்காக வீட்டில் உருப்படியான காரியத்தைச் செய்து கொண்டு இருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா?

தலை எழுத்துப்படிதான் நடக்கும் என்று சமாதானம் சொல்வார்களேயானால், அதற்குப்பின் எதற்குக் கோயிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிட வேண்டும் - படையல் போட வேண்டும்?

பக்தர்களே, சிந்தியுங்கள்!

பகவான் என்பதெல்லாம் கற்பனை. கோயிலைக் கட்டியவனும் மனிதன்; அதற்குள் சிலையை செதுக்கி வைத்தவனும் மனிதன். மனித சக்திதான் உண்மை.அதற்கு மேல் கடவுள் சக்தி என்பதெல்லாம் பொய்! பொய்!! பொய்!!!

வீணாய் அறிவையும், பொருளையும், காலத்தையும், உயிரையும் பாழாக்காதீர்கள்!
கடவுளை மற - மனிதனை நினை

- தந்தை பெரியார்
http://viduthalai.in/new/page-2/3773.html 

ஏழுமலையான் என்ன செய்வார்? அவர் வடித்து வைக்கப்பட்ட சிலைதானே?

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலை அய்திக முறைப்படி அலங் கரிப்பதில் தேவஸ்தான அதி காரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருப்பதி திருமலையில் உற்சவராக எழுந்தருளும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான சீனிவாச பெருமாளுக்கு, தினமும் நித்ய கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

முன்னதாக, வெங்கடேச பெருமாள் கோவில் பிரதான வாயிலில், தினமும் அதி காலை மாவிலை, வாழை மரம் கட்டி தோரணங்களால் அலங் காரம் செய்வதும் வழக்கம்.

ஆனால், நேற்று முன் தினம் பிரதான வாயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மற்றும் மாவிலைகள், உலர்ந்து முற்றிலும் வாடிய நிலையில் இருந்ததைக் கண்டு, பக்தர்கள் அருதிப்தி யடைந்தனர்.

தினம் காலையில் முறைப் படி புதிதாக தோரணங்கள் கட்டப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
(தினமலர் 17.2.2011)

திருப்பதி ஏழுமலையான் மீது எவ்வளவு அன்பும், பக்தி யும் செலுத்துகின்றனர் பக்தர்கள் என்பதை அளவிட் டுச் சொல்ல முடியாது.

தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந் தம்! என்று நம்புகிறார்கள். புரட்டாசி மாதத்தில் ஒவ் வொரு சனிக்கிழமையும் பட்டினி (விரதம்) கிடந்து கோவிந்தனை சேவிக் கிறார்கள்.

திருப்பதி செல்ல முடியாத வர்கள் வீட்டிலேயே கூட்டி மெழுகி, நாமம் போட்டு பய பக்தியாகப் படையல் போடு கிறார்கள்.

வசதி உள்ளவர்கள் திருப்பதி சென்று, மணிக் கணக்கில் காத்து நின்று ஏழுமலையானைத் தரிசித்து, துளசி தீர்த்தம் பெற்று, பிறந்த பயனின் திருப்தியை அடைந் ததாக மனம் உருகி நிற் கிறார்கள். உண்டியலில் பணத்தைக் கொட்டு கிறார்கள்.

கோயிலுக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பும்போது பைசா காசும் பையில் இருக்கக் கூடாதாம் - எங்காவது தெரு முக்கூட்டில் கோயில் இருந்தால் அந்தக் கோயில் உண்டியலில் போட்டு விட்டு வரவேண்டும் என்பது அய்திகமாம். (கோயில் சுரண்டல் எவ் வளவு தந்திரமாக இருக் கிறது என்பதை இதன்மூலம் தெரிந்து கொள்ளலாம்!)

இவ்வளவு பயபக்தி பக்தர்களிடம் இருக்கிறது. ஆனால் திருப்பதி கோயி லிலோ அர்ச்சகர்ப் பார்ப்பனர் கள் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்கள். நித்தியக் கல்யாணம் நடத்த வேண் டுமாம். (அப்பொழுது தானே பக்தர்களைக் கவர்ந்து இழுத்துப் பணப் பையை நிரப்பலாம்!)

ஆனால் ஆங்கே என்ன நடக்கிறது? நாள்தோறும் வாயிலில் கட்டப்பட வேண் டிய வாழை மரம் கட்டப்படு வதில்லை. மாவிலைகள் உலர்ந்து தொங்குகின்றன. (ஆனால் அன்றாடம் வாழை மரம் கட்டுவதாகக் கணக்கு எழுதி விடுவார்கள்).

இப்படியெல்லாம் நடக் கிறது ஆங்கே! பக்தர்கள் தான் பயித்திக்காரர்கள். ஏழுமலையான் என்ன செய் வார்? அவர் வடித்து வைக்கப் பட்ட சிலைதானே?

- மயிலாடன்

குஜராத் மதக்கலவரப் படுகொலைகளில் பங்கேற்ற பாஜ.க., வி.இ.ப. தலைவர்கள் காவல்துறையினரால் வேண்டுமென்றே விசாரிக்கப்படவில்லை

குஜராத் கலவரங்களில் நரோடா காவுன், நரோடா பாடியா மற்றும் குல்பர்கா சொசைடி படுகொலைகளைப் பற்றி விசாரணை செய்த குஜராத் காவல் துறையினர் கலவரக்காரர்கள் மற்றும் பா.ஜ.க., வி.இ.ப. மூத்த தலைவர்களி டையே இருந்த தொடர்பைப் பற்றி விசாரிக்கவே இல்லை. உள்துறையை வைத்திருந்த முதலமைச்சர் நரேந்திர மோடி விரும்பியிருந்தால், கலவரங் களின்போது நிலைமையை மிக எளி தாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என்பதும், அதன்பின் நடத் தப்பட்ட விசாரணை நியாயமானதாக வும், வெளிப்படையானதாகவும் இருந் திருக்கக்கூடும் என்பதும் வலியுறுத்து வது முக்கியமானது.

ஆனால் அதற்கு நேர்மாறாகத்தான் நடந்தது. பவநகரிலிருந்து வெளியே தள்ளப்பட்ட காவல்துறை அதிகாரி ராகுல் சர்மா கலவரங்களின்போது அகமதாபாத் நகரில் செயல்பட்ட அனைத்து கைப்பேசி அழைப்புகள் பற்றிய புள்ளிவிவரங்கள் கொண்ட ஆவணங்களைத் திரட்டி வைத்திருந் தார். இந்த கைப்பேசி அழைப்பு ஆவ ணங்களின் நகல்களை சர்மா தனது மேல் அதிகாரிகளுக்கு மட்டுமன்றி, நானாவதி-ஷா கமிஷன் முன்பும், பானர்ஜி கமிஷன் முன்பும் சமர்ப்பித்தார். கலவரங்களில் பங்கு கொண்டதாகக் குற்றம் சாற்றப்பெற்ற ஜடாபியா, மாயாபென் கொண்டானி, ஜெய்தீப் படேல், பாபு பஜ்ரங்கி, எம்.கே.டாண்டன், பி.பி.கோண்டியா மற்றும் பல பத்து சங்பரிவார் உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு முக்கியமான சாட்சியமாக இந்தக் கைப்பேசி அழைப்புகள் ஆவணமாக விளங்குகிறது.

கலவர வழக்குகள் குஜராத் காவல் துறையின் கைகளில் இருந்தபோது, இந்த ஆவணங்களைப் பரிசீலித்து, குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்று சிறப்பு விசாரணைக் குழு தெரி விக்கிறது. இவ்வாறு செய்யத் தவறிய குற்றத்தை, பொறுப்பை மாநகரக் காவல் துறை ஆணையர் மீதோ, காவல்துறை தலைவர் மீதோ, உள்துறை அமைச்சர் மீதோ சுமத்தாமல், சாதாரண நிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகளின் மீது சுமத்துவதில் சிறப்பு விசாரணைக் குழு மகிழ்ச்சி அடைந்தது என்பது மிகவும் வியப்பளிக்கிறது.

விசாரணைக் குழு தெரிவிக்கிறது: அப்போது காவல் துறை ஆய்வாளராக இருந்து, தற்போது சிறப்பு செயல்திட்டப் பிரிவின் அகமதாபாத் உதவி காவல் துறை ஆணையராக உள்ள தாருன் பாரட் மற்றும், அப்போது குற்றப் பிரிவு உதவி ஆணையராக இருந்த, இப்போது அகமதாபாத் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் அகமதாபாத் கண்காணிப்பாள ராக உள்ள ஜி.எல். சிங்கால் ஆகியோர் கைப்பேசி அழைப்புகள் ஆவணத்தைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டனர்; அவர்களுக்குக் கடும் தண் டனை அளிக்கப்படுவதுடன், அவர்கள் மீது இலாகா நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

இதுபோன்ற கண்துடைப்பு விசார ணைகள் மேலிடத்தின் அனுமதியின்றி நடைபெற்றன என்பதை மக்கள் நம்ப வேண்டுமென்று சிறப்பு விசாரணைக் குழு விரும்புகிறதா? ஒரு சில கீழ்நிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகள் தாங் களாகவே செயல்பட்டிருக்க முடியுமா? பா.ஜக., வி.இ.ப. தலைவர்களைப் பற்றி விசாரணை நடத்தாமல் இருப்பதற்கான கட்டாயம், காரணம், விருப்பம் யாருக்கு இருக்கும்? ஒரு காவல்துறை ஆய்வாள ருக்கும், ஒரு உதவி காவல்துறை ஆணை யருக்கும் இருந்திருக்குமா? அல்லது பா.ஜ.க., வி.இ.ப. தலைமைக்கு இருந் திருக்குமா? இந்த அடிப்படைக் கேள்வி களைக் கேட்டு அவற்றுக்கான பதில் களை சிறப்பு விசாரணைக் குழு தேட வில்லை என்பது வருத்தமளிப்பதாக இருக்கிறது.

கோத்ரா ரயில்பெட்டி எரிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது உறவினரிடம் ஒப் படைக்காமல், விசுவ இந்து பரிசத் திடம் ஒப்படைத்தது, மக்களின் உணர்ச்சி யைத் தூண்டுவதாக அமைந்தது. ஆனால் இந்தக் குற்றத்தையும், சிறப்பு விசார ணைக் குழு கீழ் நிலைக் காவல் துறை அதிகாரி மீதே சுமத்துகிறது.

சபர்மதி விரைவு ரயில் பெட்டி எரிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை வி.இ.பரி சத்திடம் ஒப்படைப்பதை அனுமதித்தார் என்பது மோடி மீதுள்ள ஒரு முக்கிய குற்றச்சாற்றாகும். பின்னர் வி.இ.ப. அந்த உடல்களை அகமதாபாத் நகரில் ஊர்வலமாக எடுத்துச் சென்றதுதான், மத உணர்வுகளைக் கொலை வெறியாக மாறத் தூண்டியது; ஏற்கனவே பதற்றம் நிறைந்திருந்த சூழ்நிலையை மேலும் மோசமாக ஆக்கியது.

அப்போது கோத்ரா மாவட்ட மாஜிஸ் டிரேட்டாக இருந்த ஜெயந்தி ரவி என்ப வரின் அறிவுரைகளின்படி, ரயில்பெட்டி எரிப்பில் உயிரிழந்த 54 பேரின் உடல்கள் வி.இ.ப. தலைவர்கள் ஜெய்தீப் படேல், ஹஷ்முக் படேல் ஆகியோரிடம் ஒப்படைத் ததாக அப்போது கோத்ரா நிருவாக மாஜிஸ்டிரேட்டாக இருந்த எம்.எல். நால்வயா சிறப்பு விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ஜெயந்தி ரவி இதனை மறுத்து, தன் கீழ் வேலை செய்த நால்வயா இந்த முடிவை அவரே மேற்கொண்டார் என்று கூறி யுள்ளார்.

ஜெயந்தி ரவி, ஜெய்தீப் படேல், அமைச்சர்கள் அசோக் பட், பிரபாத் சிங் சவுகான், கோர்தான் ஜடாபியா, நரேந்திர மோடி ஆகியோர் தாளிட்ட அறைக்குள் நடத்திய கூட்டம் ஒன்றில், இறந்தவர்களின் உடல்களை அகமதா பாத்துக்குக் கொண்டு செல்வது என்ற முடிவு எட்டப்பட்டது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவிக்கிறது. ஆனால், இறந்தவர்களின் உடல்களை வி.இ.பரிசத்திடம் ஒப்படைப்பது என்ற முடிவை யார் எடுத்தார் என்ற கேள்வி வரும்போது மட்டும், நிருவாக மாஜிஸ் டிரேட் நால்வயாவை சிறப்பு விசாரணைக் குழு குற்றம் சாற்றுகிறது. (பக்கம் 23-24).

ஒரு கீழ்நிலை அதிகாரியான நால்வயா இது போன்றதொரு பெரிய முடிவை அவராகவே எடுத்திருக்க முடியுமா? நால்வயா கூறியதை ஒதுக்கிவிட்டு, ஜெயந்தி ரவி கூறியதை மட்டும் ஏற்றுக் கொள்ள சிறப்பு விசா ரணைக் குழு விரும்பியதேன்?

இறந்தவர்களின் உடல்களை அகம தாபாத்துக்குக் கொண்டு செல்வதை தான் எதிர்த்ததாகவும், ஆனால் மோடி அதனை நிராகரித்துவிட்டார் என்றும் 2002 இல் கவலைப்படும் மக்களின் தீர்ப்பாயத்தின் முன் சாட்சியம் அளிக் கையில் ஜெயந்தி ரவி கூறியுள்ளார். ஆனால் பின்னர் அவர் தனது சாட்சி யத்தை மாற்றிக் கொண்டார். தற்போது அவர் அரசின் உயர்கல்வி ஆணையர் என்னும் அதிகாரம் நிறைந்த பதவி வகிக்கிறார்.

மோசமான நிகழ்ச்சி நடந்த 27-2-2002 அன்றே எரிந்துபோன 54 உடல் களும் அய்ந்து டிரக்குகளில் அகமதா பாத்துக்கு காவல்துறைப் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. இந்த 54 உடல் களில் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் 25 பேர் மட்டுமே என்று அடையாளம் காணப்பட்டது. சில உடல்கள் அவர் களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட் டன. மற்றும் சில ஒட்டு மொத்தமாக எரிக்கப்பட்டன.

அகமதாபாத்தில் சவஊர்வலம் நடைபெற்றதா என்ற கேள்வியைப் பொறுத்தவரை சிறப்பு விசாரணைக் குழு மவுனம் காக்கிறது. கோத்ராவில் இருந்து அகமதாபாத் துக்கு உடல்கள் ஊர்வலமாக எடுத்து வரப் படவில்லை என்று மோடி கூறியதை மட்டும் சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் இந்தக் கூற்றை சிறப்பு விசாரணைக் குழு ஏற்றுக் கொண்டதற்கு எந்த ஒரு ஆவ ணத்தின் சாட்சியத்தின் அடிப்படையும் இல்லை. சுதந்திரமான, தனிப்பட்ட சாட்சிகள் எவரையும் அது விசாரிக்கவும் இல்லை.

கலவரங்களின்போது ராணு வத்தை அழைப்பதில் எந்தத் தாம தமும் இல்லை என்று கூறும் சிறப்பு விசாரணைக் குழு, வந்த ராணுவத்தை கலவரப்பகுதி களுக்கு அனுப்புவதில் மட்டும் ஏன் கால தாமதம் ஏற்பட்டது என்பது பற்றி விசாரிக்காமல் மவுனம் காக்கிறது.

மாநிலத்தில் நிலவிய கலவரச் சூழ் நிலையில், தங்களுக்கு ராணுவத்தின் உதவி பிப்ரவரி 27 அன்றே தேவைப் படலாம் என்று மாநில அரசு ராணுவத் திற்கு எச்சரித்துவிட்டது என்பதை சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் மாநில அரசுக்கு ஆதரவான தனது குறிப்பில் தெரிவிக்கிறார். மாநி லத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதைப் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியிடமும் மோடி பேசியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து 28-2-2002 அன்று ஒரு தொலைப்பதிவிக் கடிதமும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 - மார்ச் 1 இரவு நேரத்தில் ராணுவ வீரர்கள் அகமதாபாத்துக்கு வந்து சேரத் தொடங்கிவிட்டனர். ராணு வத்தை அழைப்பதில் மாநில அரசு மெத்தனமாக இருக்கவில்லை என்பது தெளிவாக மெய்ப்பிக்கப் பட்டுள்ளது என்று ராகவன் முடிக்கிறார்.

என்றாலும், ராணுவம் வந்துவிட்டால் மட்டும் போதாது. அதற்கு மாநில அரசின் ஆதரவும் இருக்க வேண்டும். மார்ச் 1 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி அளவில்தான் மோடி அரசு ராணுவத் தினரை எங்கே அனுப்பப்படவேண்டும் என்பதை முடிவு செய்தது. அதற்குள் பெருமளவிலான பயங்கரம் நேர்ந்து விட்டது. வந்த ராணுவ வீரர்களை கலவர இடங்களுக்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதத்தை, மெத்தனத்தை மட்டும் விசாரணைக் குழு அறிக்கை பதிவு செய்துள்ளதே அன்றி, அதனைப் பற்றி எந்தக் கருத்தும் கூறாமல் மவுனம் காத்தது.


நன்றி: தெகல்கா, 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

http://viduthalai.in/new/page-2/3920.html 

தெகல்கா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது குஜராத் கலவர வழக்குகளின் அரசு வழக்கறிஞர்கள் சங்பரிவாரைச் சேர்ந்தவர்களே

கலவரங்களின்போது முஸ்லிம் மத மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டும் வெறுப்புணர்வு கொண்டவரது ஆபத்து நிறைந்த நடத்தையை மோடி வெளிப்படுத் தினார். ஆனாலும் அவர் மீது குற்றச்சாற்று பதிவு செய்ய போதுமான சாட்சியம் இல்லை என்று சிறப்பு விசாரணைக் குழு கூறுகிறது.

தனது மாநிலத்தில் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்ட தற்கு, சட்டப்படி இல்லா விட்டாலும், தார்மீக ரீதியிலாவது ஒரு முதலமைச்சரை பொறுப்பாக்க என்ன செய்ய வேண்டும்?

சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையின் 67 ஆம் பக்கத்தில் மல்ஹோத்ரா குறிப்பிடு கிறார்: 27-2-2002 அன்று கோத்ராவுக்குச் சென்றதாக முதலமைச்சர் நரேந்திர மோடி ஒப்புக் கொண்டுள்ளார். குல்பர்கா சொசைடி, நரோடா பாடியா, மற்றும் கலவரங் களால் பாதிக்கப்பட்ட அகமதாபாதின் இதர பகுதிகளையும் தான் மார்ச் 5, 6 தேதிகளில் சென்று பார்த்ததாக மோடி ஒப்புக் கொண் டுள்ளார். இது அவரது பாகுபாடு காட்டும் மனப்பான்மையைக் காட்டுகிறது. ஒரே நாளில் 300 கி.மீ. பயணம் செய்து கோத் ராவுக்குச் சென்று வந்த அவர், உள்ளூர் பகுதிகளில் மோசமான கலவரங்கள் நடந்து, பெரும் அளவிலான முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்ட பகுதியை உடனே சென்று பார்க்கத் தவறிவிட்டார்.

எதிர் வினையாம்!

குஜராத்தில் மதக் கலவரங்கள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த 2002 மார்ச் 1 ஆம் தேதியன்று ஜீ செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மோடி குறிப்பிட்டுள்ளார்: நடவடிக்கைக்கு எதிர்நடவடிக்கை என்ற நடைமுறை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு செயல் நடை பெறாமல் இருந்திருந்தால், அதற்கு எதிர்வினை என்று எதுவும் நிகழ்ந்திராது என்றுதான் நான் கூறுவேன். கோத்ரா முஸ்லிம்கள் குற்றவியல் மனப்பாங்கைக் கொண்டிருந்ததாகவும், சபர்மதி ரயில் தீ விபத்துக்குப் பின்னணியில் அவர்கள் இருந்தனர் என்றும் அதே பேட்டியில் மோடி கூறியுள்ளார். குஜராத்தில் அதன் பின் நடந்த கலவரங்கள் அதன் இயல்பான எதிர்வினைதான் என்றும் மோடி கூறியுள்ளார்.

தனது அறிக்கையின் 69 ஆவது பக்கத்தில் மல்ஹோத்ரா குறிப்பிடுகிறார்:
குல்பர்கா சொசைடி அருகே கூடியி ருந்த கலவரக் கும்பல் மீது இறந்து போன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாஃப்ரிதான் முதலில் துப்பாக்கியால் சுட்டார் என்றும், அதனால் கோபமடைந்த கலவரக்காரர்கள் சொசைடிக்குள் நுழைந்து தீ வைத்தனர் என்றும் ஜீ தொலைக் காட்சி பேட்டியில் நரேந்திர மோடி தெளிவாகக் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. இந்தப் பேட்டியில் ஈஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதுதான் வினை என்றும், அதனைத் தொடர்ந்த படு கொலைகள் எதிர்வினையென்றும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

மல்ஹோத்ரா மேலும் எழுதுகிறார்:

குல்பர்கா சொசைடி மற்றும் இதர இடங்களிலும் முஸ்லிம்கள் மீது மேற்கொள் ளப்பட்ட பயங்கரமான வன்முறைத் தாக்கு தல்களுக்குப் பின்னும், அரசிடமிருந்து வந்த எதிர்ச் செயல், காட்டிய பிரதிபலிப்பு எவர் ஒருவரும் எதிர்பார்க்கக் கூடிய வகையில் இருக்கவில்லை. குல்பர்கா சொசைடி, நரோடா பாடியா மற்றும் இதர இடங்களில் நிலவிய தீவிரத் தன்மையை, ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச் செயல் இருக்கத்தான் செய்யும் என்று கூறியதன் மூலம் நீர்த்துப் போகச் செய்யும் முயற்சியையே முதலமைச்சர் மேற்கொண்டார் என்பதை மேற்கூறிய கலந்துரையாடல் காட்டுகிறது. மோடியின் கூற்று, சிறுபான்மை சமூக அப்பாவி உறுப் பினர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத் துவதாகவே இருந்தது. பாகுபாடு காட்டும் இத்தகைய மனநிலை ஒரு முதலமைச்சரிடம் எதிர்பார்க்கக்கூடியது அல்ல. மோடி கூறியது முக்கியமான பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அதிர்ச்சி தரத்தக்கதாகவும் இருக்கிறது என்று ராகவன் குறிப்பிடுகிறார். என்றாலும், மோடிக்கு எதிராக ஒரு வழக்கைத் தொடரத் தேவையான ஆதாரங்கள் போது மானவையாக இல்லை என்று மல்ஹோத்ரா முடிக்கிறார்.

வழக்கறிஞர்கள் காவிகளே! காவி உடைப் படை உறுப்பினர்களையே அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக கலவர வழக்குகளில் குஜராத் அரசு நியமித்தது. ஆனால் அவர்கள் தவறாக நடந்து கொண் டார்கள் என்று குறிப்பிட்டுக் காட்டுவது எளிதாக இல்லை என்று விசாரணைக் குழு தெரிவிக்கிறது.

இந்த விரிவான பகுத்தாய்வு காட்டுவது போல், ஒவ்வொரு அம்சத்திலும் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை முரண் பாடுகளைப் பற்றிய ஒரு முழுமையான ஆய்வாக அமைந்துள்ளது. பல விஷயங் களில் மோடி அரசின் நெறி தவறிய செயல் களை விசாரணை அலுவலர் ஒப்புக் கொண் டாலும் மேலும் விரிவான விசாரணை ஒன்றை நடத்துவதற்குப் பரிந்துரைப்பதில் காரணம் கூற இயலாதவாறு தயக்கம் காட்டுகிறார்.

விசுவ இந்து பரிசத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களை அரசு குற்றவியல் வழக் கறிஞர்களாக நியமித்த விஷயத்தில், மற்ற விஷயங்களை விட அரசின் நெறி தவறிய செயல் நன்றாகவே தெரிகிறது.

அறிக்கையின் 157-ஆம் பக்கத்தில், 2002 இல் வதோதரா மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறி ஞராக ரகுவீர் பாண்டியா என்ற விசுவ இந்து பரிசத் ஆதரவாளர் நியமிக்கப்பட்டார். பெஸ்ட் பேக்கரி வழக்கை பாண்டியா நடத் தியதில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பாண்டியா வின் செயல் பாடுகள் பற்றி உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும் பரிந்துரைத்துள்ளது என்று மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.

முடிவுக்கு வராத குழப்பம்!

விசுவ இந்து பரிசத் அல்லது ஆர்.எஸ். எஸ். தலைவர்கள் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட மேலும் அய்ந்து எடுத்துக்காட்டுகளை மல்ஹோத்ரா பட்டியலிட்டுள்ளார். இந்த நியமனங்களில், வழக்கறிஞர்களின் அரசியல் தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்று மல்ஹோத்ரா குறிப்பிடுகிறார். பின்னர் அவரை மறுத்து அவரே, எந்த ஒரு அரசு குற்றவியல் வழக்கறிஞர் மீதும் தொழிலில் தவறாக நடந்து கொண்டார் என்ற குறிப்பிட்ட குற்றச்சாற்றும் வெளிச் சத்துக்கு வரவில்லை என்றும் கூறுகிறார்.

திரும்பத் திரும்பத் தங்களது கண்டுபிடிப் புகளை அவற்றின் இயல்பான முடிவுகளுக் குக் கொண்டு செல்வதற்குத் துணிவற்ற சிறப்பு விசாரணைக் குழுவின் நிலையைப் பற்றி என்ன கூறுவது, என்ன செய்வது என்ற முடிவுக்கு வரமுடியாத குழப்பத்தையே ஏற்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, மேகசேனா மாவட் டத்தில் 2000 ஏப்ரல் முதல் டிசம்பர் 2007 வரை அரசு குற்றவியல் வழக்கறிஞராகப் பணியாற்றிய குஜராத் விசுவ இந்து பரிசத் தின் பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி யின் கீழ் 12-க்கும் மேற்பட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் பணியாற்றி வந்தனர். இந்த மேகசேனா மாவட்டம்தான் கலவரங் களில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட தாகும். மேகசேனாவில் நடைபெற்ற இரண்டு கலவர வழக்குகளில் - விஸ்நகரில் கொல் லப்பட்ட தீப்சா தார்வாசா மற்றும் சர்தார்புரா படுகொலை வழக்குகள் மிகவும் கொடூர மானவை.

தெகல்கா ரகசியமாக மேற்கொண்ட ஒரு புலன் விசாரணையில், குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தான் சென்று, அங்குள்ள அரசு குற்றவியல் வழக்கறிஞர் கள், விசுவ இந்து பரிசத் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிரதி வாதிகளின் வழக்கறிஞர்கள் ஆகியோரை சந்தித்துப் பேசி கலவர வழக்குகளில் குற்றம் சாற்றப்பெற்ற இந்துக்கள் அனைவரையும் தான் எவ்வாறு விடுவிக்கச் செய்தார் என்று தன்னைப் பற்றியே புகழ்ந்து பேசியதை தெகல்கா செய்தியாளரிடமே ஒப்புக் கொண்டது ஒலிப்பதிவு செய்யப் பட்டுள்ளது. மேகசேனாவில் இருந்த 74 கலவர வழக்கு களில் இரண்டு வழக்குகளில் மட்டுமே குற்றம் சாற்றப்பெற்றவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்று பெருமையாகக் கூறியதும் பதிவாகியுள்ளது. என்றாலும், மூன்று கலவர வழக்குகளில் இதே தெகல்கா செய்தியாளரை அரசு சாட்சியாகக் குறிப் பிட்ட சிறப்பு விசாரணைக் குழு, தற்போது உணர்ச்சி மிகுந்த, தன்னையே காட்டிக் கொடுக்கும் திரிவேதியின் வாக்குமூலத்தை உண்மை என ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

விசுவ இந்து பரிசத் மற்றும் ஆர்.எஸ். எஸைச் சேர்ந்த அரசு குற்றவியல் வழக் கறிஞர்கள் மாநிலம் முழுவதிலும் எவ்வாறு திட்டமிட்டு நீதியைக் குழிதோண்டிப் புதைத் தனர் என்பதை மிக விரிவாக அர்விந்த் பாண்டியா என்ற குஜராத் அரசின் மற்றொரு சிறப்பு அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெகல்கா செய்தியாளரிடம் கூறியுள்ளதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தெகல்கா இதனை வெளிப்படுத்திய பிறகு பாண்டியா பதவியை விட்டு விலகவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மக்களிடம் நம்பிக்கையை உருவாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளை யும் மேற்கொள்ள வேண்டிய நேரத்தில், நல்ல நோக்கத்தைக் கொண்டிருக்க வேண் டிய அரசு, பல சங்பரிவார அமைப்புகளின் உறுப்பினர்களை அரசு குற்றவியல் வழக் கறிஞர்களாக நியமித்திருப்பதையும் சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.

தீவிரவாதம் மற்றும் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், ஒன்பது முஸ்லிம்களைக் கொண்ட குடும்பம் ஒன்றைக் கொன்றதான ஒரு வழக்கு விசாரணையை முன்னொரு நாளில் எதிர்கொண்ட சேடன் ஷா என்ற விசுவ இந்து பரிசத் உறுப்பினர் 17-6-2003 அன்று முதல் 3 ஆண்டு காலத்திற்கு அரசு குற்ற வியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்திற்கு முன் குல்பர்கா சொசைடி படுகொலை வழக்கில் குற்றம் சாற்றப்பெற்றவர்கள் பலருக்காக அவர் வாதாடினார் என்பது அதிர்ச்சி தரத்தக்க செய்தியாகும்.

சேடன் ஷா மீது நடைபெற்ற படுகொலை வழக்கில் அவருக்காக வாதாடிய எச்.எம். துருவ் என்ற வழக்கறிஞர் குல்பர்கா சொசைடி மற்றும் நரோடா பாடியா வழக்கு களில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

ஏ.பி.வி.பி மற்றும் வி.இ.ப. தலைவரான பியூஷ் காந்தி 15-3-1996 அன்று பஞ்சமாலில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமிக் கப்பட்டு, 1-9-2009 வரை அவர் அப்பதவியில் நீடித்தார். ஷபானா சுஹாங் கற்பழிப்பு மற்றும் கொலை உள்ளிட்ட பல கலவர வழக்குகளை அவர் நடத்தியுள்ளார். இந்த வழக்குகளில் குற்றம் சாற்றப் பெற்றவர்களில் பலர் மிகவும் எளிதாக ஜாமீன் வாங்கிச் சென்றனர். சிறப்பு விசாரணைக் குழு தலைவர் ராகவன் குறிப்பிடுகிறார்: இவ்வாறு நியமிக்கப்பட்ட வர்களில் சிலர் ஆளுங்கட்சியுடனோ அல்லது அதற்கு ஆதரவாக உள்ள அமைப்பு களுடனோ அரசியல் தொடர்பு கொண்ட வர்கள் என்பது தெரிய வந்துள்ளது. என்றாலும் மேற்கொண்டு எதுவும் கூறுவதை அவர் தவிர்த்துவிட்டார்.

நன்றி: தெகல்கா 12-2-2011
தமிழில் த.க.பாலகிருட்டிணன்

http://viduthalai.in/new/page-2/3838.html 

Saturday, February 19, 2011

அத்வானிகளும், மோடிகளும், ஜெயேந்திரர்களும் நடமாடுவது எப்படி?

கொலை செய்தல், கொலை செய்யத் தூண்டுதல், கலவரம் செய்தல் (இபிகோ 147, 153 (ஏ), 153(பி), 295 (ஏ), 505, 102 (பி)) இந்தப் பிரிவுகளின் கீழ்குற்றஞ் சாற்றப்பட்டவர்களை நினைவில் இருக்கிறதா?சாதாரணமானவர்களா அவர்கள்? இந்தியாவின் உள்துறை அமைச்சர், துணைப் பிரதமர் உள்ளிட்ட பதவி களை வகித்தவர்கள் ஆயிற்றே!

மத்திய தணிக்கைத் துறை அறிக்கை கொடுத்துவிட்டது, அறிக்கை கொடுத்துவிட்டது என்று இன்று அலறுகிறார்களே, நாடாளுமன்ற கூட்டுக் குழுவை அறிவிக்காவிட்டால் நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்று முஷ்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்கிறார் களே அவர்கள் ஒன்றை சாமர்த்திய மாக மறைக்கப் பார்க்கிறார்கள்.

லிபரான் ஆணையத்தின் அறிக் கையை ஜமக்காளம் போட்டு மறைக்கப் பார்க்கிறார்கள்.

68 பேர்கள் குற்றவாளிகள் என்று லிபரான் ஆணையம் பட்டியல் போட்டுக் கொடுத்து விட்டது.

மிகப் பெரிய மனிதராகத் தூக்கிக் காட்டப்படும் அடல் பிஹாரி வாஜ் பேயும் அந்தப் பட்டியலில் அடங் குவார்.எப்படி வாஜ்பேயியை இதில் சேர்க்கலாம் என்று காட்டுக் கூச்சல் போடுகிறார்கள்.

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு வாஜ்பேயியை எப்படி குற்ற வாளி என்று கூறலாம் என்று கேட்பது எந்த ஊர் நியாயம் என்றே விளங்க வில்லை.

19 ஆண்டுகளாக குற்றவாளிகள் ராஜ நடைபோட்டுத் திரிகிறார்கள். அரசு நியமித்த ஆணையமும் அவர்கள் குற்றப் புரிந்தவர்கள்தாம் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டது.

ஆ. இராசாமீது வழக்கைப் பதிவு செய்து வேகவேகமாக வழக்கை நடத் தும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உலக நாடுகள் முன் இந்தியாவை தலைகுனிய வைத்த பாபர் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கை வேகமாக நடத்த முன் வராதது ஏன்?

19 வருடங்களா ஒரு முக்கியமான வழக்குக்குத் தேவைப்படும்?

நீதிமன்றங்கள்தான் ஆகட்டும்; மற்ற மற்ற வழக்குகளை விரைவாக நடத்திட வேண்டும் என்று சாட்டையை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்களே. இதில் மட்டும் ஏன் பாம்பும் நோகாமல் கொம்பும் நோகாமல் மந்திரித்துக் கொண்டு இருக்கிறார்களாம்?

கொலை குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார்கள் கொஞ்சம்கூட வெட்கமின்றி ஆனை நடைபோட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். சாட்சியங்கள் எல்லாம் பிறழ்சாட்சியங்களாக ஆகிக் கொண்டு இருக்கின்றன.

நீதிமன்றங்களுக்கு வராமல் வெளியில் ஆட்டம் போட்டுத் திரிகிறார்கள். இந்த வழக்கு விசாரணையை வேகப்படுத்தச் சொல்லி எந்த நீதிமன்றமும் சாட் டையை எடுத்துக் கொண்டு புறப்பட வில்லையே, ஏன்?

காலம் கடத்த கடத்த அத்தனை சாட்சிகளும் அந்தர் பல்டி அடிக்கும் நிலைதான்! அதுவரை காவல்துறையும், நீதித்துறையும் காவி வேட்டி சங்கராச் சாரியார்களை விட்டு வைக்கும் என்றே நம்பலாம்.

சங்கரராமன் கொலை மட்டும் தானா? ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டது, திருக்கோட்டியூர் மாதவன் தாக்கப்பட்டது, காஞ்சிபுரம் சங்கராச்சாரியாருக்குச் சொந்தமான பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவியின் மர்ம மரணம், 1994-இல் சங்கர மடத்தில் வேதம் பயின்று வந்த 15 வயது மாணவன் நாக சுப்பிரமணியம் பிணமாகக் குளத்தில் மிதந்தது, ஜெயேந்திரர் சென்றால் தங்கும் இடமான சூர்யலட்சுமி காட்டன் மில் ஓய்வு விடுதியில் ஜெயேந்திரர் தங்கி இருந்தபோது (18.3.1998) அந்த மில்லில் பணியாற்றிய நிர்மலம்மா (வயது 18) தம்மம்மா (வயது 16) ஆகியோர் கொலை - _என்று ஒரு பட்டியலே உண்டு. சங்கர மடம் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கையும் தண்ணீரில் மூழ்கடித்து விடக் கூடாது.

பாபர் மசூதி காவிக் கும்பலால் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில் பால்தாக்கரே தலைமையில் வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப் பட்டது. நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலை மையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. சிவசேனா தலைவர் பால்தாக்கரேமீது பகிரங்கமாகக் குற்றம் சுமத்தியது.

அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் வற் புறுத்தியிருந்தது. அவர்மீது ஒரு துரும் பையாவது அரசு தூக்கி எறிந்ததுண்டா? மாநிலத்தை ஆண்டு வந்த சிவசேனா - பா.ஜ.க. அரசு 1371 வழக்குகளை ஊற்றி மூடியது. 112 வழக்குகளை மட்டுமே சிறப்புக் குழு மறு ஆய்வு செய்தது என் றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிலுவையில் இருக்கும் வழக்குகளை யாவது நாணயமாக நடத்தியிருக்க வேண்டாமா? சிவசேனா தலைவர் என் றால் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா?

ஊருக்கு இளைத்தவர் ஆ. இராசா மட்டும்தானா?

2002-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் முசுலிம் மக்கள் மீது நரேந்திர மோடி தலைமையில் மாநில அரசு நரவேட்டையாடியதே உச்சநீதிமன்றமே முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னன் என்று சாடியதே  குஜராத் கலவரம் குறித்த விசா ரணை, அவருக்கு எதிராக இருக்கிறதே அவர் எப்படி முதல் அமைச்சராகத் தொடருகிறார்?

தெகல்கா ஏடு கொலைகாரர்களைக் கூட, பேட்டியளித்து வெளிச்சத்தில் வாரி இறைத்ததே - _ ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை?

டில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார், புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்த திராய் போன்றவர்கள் மோடியின்மீதும், நிருவாகத்தினர்மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக சொன்னார்களே, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? மத்தியஅரசின் செயல்பாடுதான் என்ன?

ஆ.கே. இராகவன் தலைமையிலான மோடி மீதான சிறப்பு விசாரணைக்குழு மோடியின் முகமூடியைக் கிழிந்து எறிந்து விட்டது. பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்துவிட்டன. சோ ஒரு வரிகூட இதைப்பற்றி எழுதாதது _ ஏன்?

அரைகுறையாக விசாரணை அறிக்கையிலிருந்து கிடைத்திட்ட தகவல்களை வைத்துக் கொண்டு அத்வானி என்ன சொன்னார் தெரியுமா? வெகு நீண்ட காலத்திற்குப் பிறகு நான் படித்த மிகவும் மகிழ்ச் சியான செய்தி என்று ஆனந்தமய மாகிக் குதித்தாரே!

ஆனால் உண்மையோ வேறு வித மாக இருக்கிறது. சிறப்பு விசாரணைக் குழுவில் இடம் பெற்ற மோடிக்கு எதிரான தகவல்களை பெரும்பாலும் ஊடகங்கள் வெளியிடாத நிலையில் தெகல்கா இதழ் மட்டும் உண்மையான தகவல்களை வாரிக் கொண்டு வந்து கொட்டிவிட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழு உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி அமைக்கப் பட்டது. அது 600 பக்கங்களையும் கொண்ட ஓர் அறிக்கையை உச்சநீதி மன்றத்தில் அளித்துள்ளது.

கலவர காலத்தில் காவல்துறையின் கம்பியில்லாத் தந்தி போக்குவரத்துப் பற்றிய ஆவணங்களை மோடி அரசு முற்றிலுமாக அழித்துவிட்டது. கலவரங் களின் போது சட்டம் ஒழுங்குபற்றி நடத்தப்பட்ட முக்கியமான கூட்டங்கள் பற்றி எந்த ஓர் ஆவணமும், குறிப்பு களும் கிடையாது (அறிக்கை பக்கம் 13)

ஏன் ஆவணங்களை அழித்தார்கள்? அந்த ஆவணங்கள் கிடைக்கப் பெற்றால் மோடி அரசு எப்படி எப்படி யெல்லாம் முசுலிம்களை வேட்டை யாடியது, அவர்கள் தொழில் நிறுவனங் களையெல்லாம் தீயிட்டு எரித்தனர் என்ற விவரங்கள் தெரிந்து விடுமே.

கலவரங்களுக்கு ஒத்துழைத்த அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளும், சட்டப்படி, நடுநிலையோடு நடந்து கொண்ட கண்ணியமான அதிகாரி களுக்கு முக்கியத்துவம் அற்ற துறை களும், தண்டனைகளும் கொடுக்கப் பட்டன என்றால் மோடி அரசின் மோசகரமான, மூர்க்கத்தமான நர வேட்டை எப்படி நடந்திருக்கும் என்று எளிதில் தெரிந்து கொள்ள முடியுமே!

கலவரங்களின்போது காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் களுக்கு இடம் ஏன்? அசோக்பட் மற் றும் ஜடஜா ஆகிய இரு அமைச்சர் கள்தான் அவர்கள்.

எந்தவித குறிப்பிட்ட செயல் திட் டமும் இன்றியே இந்த இரு அமைச்சர் களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர். காவல்துறையின் பணியில் குறுக்கிட்டு, அலுவலகங்களுக்கு தவறான முடிவு களை, கட்டளைகளை அளிக்கவே அமைச்சர்கள் காவல்துறைக் கட்டுப் பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப் பட்டனர். (சிறப்புப் புலனாய்வுக் குழு வின் தலைவரின் குறிப்பு பக்கம் 12)

இதற்குப்பின்னாலும் குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சி தொடருவ தற்குக் கிஞ்சிற்றும் நியாயப்படியான சட்டப்படியான தகுதி இருக்கிறதா?

இந்த ஆட்சி ஏன் கலைக்கப்பட வில்லை? இந்த முதல்வர்மீது ஏன் சட்டப்படியான நடவடிக்கை இல்லை?

இராசாதான் இளக்காரமா? நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது? மனுதர்மம் நடக்கிறதா என்ற செங்குத்துக் கேள்வி மக்கள் மன்றத்தில் கிளர்ந்து எழ வேண்டாமா? சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!
- மின்சாரம் -

http://viduthalai.in/new/page-1/3750.html 

உ.வே சாமிநாதய்யர்

உ.வே சாமிநாதய்யரின் 157ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள். தமிழ்த் தாத்தா என்று இவர் கூறப்படுகிறார். தமிழ் இலக்கியங்கள் பலவற்றை ஓலைச் சுவடிகளில் இருந்து பதிப்பித்தவர் என்று புகழப் படுபவர் இவர். அந்தப் பணி பாராட்டுதலுக்கு உரியதே!

இவரைப் புகழும் பார்ப் பனர்கள் இவரின் குருவாகிய - தமிழ் இலக்கியங்களை, இலக் கணங்களை இவருக்கு முறைப் படி போதித்தவரான -மகா வித்துவான் மீனாட்சி சுந்தர னாரைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். அதுதான் பார்ப் பனர்களுக்கே உரித்தான இனப்பற்று என்பதைவிட - இனவெறியாகும்.

உ.வே.சா. தமிழ்த் தொண்டு எந்த வகையைச் சார்ந்தது? பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஆரியப் பார்ப்பனர் களின் அளவிறந்த கொட் டங்கள் எனும் நூலினை எழுதியுள்ளார். உ.வே.சா.பற்றிப் பல தகவல்களைத் தந்துள்ளார்.

தமிழ்ப் பாஷை என்றுதான் எழுதுவாரே தவிர தமிழ் மொழி என்று எழுத மாட்டார். நூல் களைப் புஸ்தகங்கள் என்றுதான் எழுதுவார். அரசுக் கட்டிலை சிங்காதனம் என்றும், அமைச்சு என்பதை மந்திரி வேலை என்றும், விண்மீன் என்பதை நக்ஷத்திரம் என்றும் எழுதும் பார்ப்பன - சமஸ்கிருதப் போக் குடையவர் என்பதை அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
புறநானூற்றில் ஆன்முலையறுத்த என்று தொடரும் 34ஆம் பாட்டில் உள்ள அடிகளில் உள்ள ஒரு சொல் யாழ்ப்பாணத்துப் பழைய வெளியீடு ஒன்றில் அறவோர் என்று வந்துள்ளது என்று உரையாசிரியர் சிலர் குறித்துள் ளனர். உ.வே.சா. பதிப்பில் அச்சொல் பார்ப்பார் என்று குறிக்கப் பெற்றுள்ளது.

பாட வேறுபாடாகக்கூட அச்சொல் இவர் வெளியீட்டில் எழுதப் பெறவில்லை. அறவோர்க்குக் கொடுமை செய்தல் கூடா தெனும் அறங்கூறும் அவ்வடி, பார்ப்பாருக்குக் கொடுமை செய்தல் கூடாதென்பதாக இவர் பதிப்பில் காட்டப் பெற்றதும், அதற்குக் கொலைகளில் கொடுமை சான்ற பார்ப்பனக் கொலை எனும் காஞ்சிப் புராண அடியை மேற்கோள் காட்டியிருப் பதும் - இவ்வாறு பிற ஆரிய உரையாசிரியர்களால் காட்டப் பெற்ற கருத்து மேலும் வலிவுற வேண்டும் என்னும் உள்நோக் கம் இவருக்கிருப்பதை நன்கு புலப்படுத்தும் என்று பாவலரேறு அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

உ.வே.சா. அவர்கள் தனது என்சரிதம் எனும் நூலில் அக் கிரகாரம் எப்படி தோன்றியது என்கிற ஒரு தகவலைத் தந் துள்ளார்.

சற்றேறக் குறைய இரு நூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் தம் முடைய பரிவாரங்களுடன் புறப் பட்டார். தஞ்சைக்குக் கிழக்கே 15 மைல் தூரத்தில் பாபநாசம் அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் போஜனம் முடித்து தாம்பூலம் போட்டு சிரம பரிகாரம் செய்தார்.

அன்று ஏகாதசி. ஏகாதசியன்று அரசர் ஒரு வேளை மாத்திரம் உணவு அருந்துவார். தாம்பூலம் தரிக்க மாட்டார். ஆனால் அன்று அதனை மறந்துவிட்டார். விரதத் துக்குப் பங்கம் ஏற்பட்டது குறித்து வருந்தினார்.

இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்க, ஓர் அக்ரகாரம் பிரதிஷ்டை செய்து, வீடுகள் கட்டி வேதவித் துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால். இந்தத் தோஷம் நீங்கும் என்றனர். அவ்வாறே அரசன் செய்தான். அந்த ஊர்தான் உத்தமதான புரம். அவ்வூரில்தான் உ.வே.சா. பிறந்தார்.

அரசன் தோஷப் பட்டான் என்றே வைத்துக் கொள்வோம் - அதன் பலன் பார்ப்பானுக்குப் போய்ச் சேர வேண்டுமா?

அக்ரகாரம் எப்படி எல்லாம் தோன்றியிருக்கிறது பார்த் தீர்களா?
- மயிலாடன்

Friday, February 18, 2011

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் (1860-1946)

சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலனாரின் 151 ஆம் ஆண்டு பிறந்த முக் கிய நாள் இந்நாள் (1860).

இந்தியாவில் பொது வுடைமைக்குக் கட்சி ரீதி யாக அடிக்கால் போட்டவர் அவர் என்றால் அது மிகையாகாது.

வெறும் வர்க்கப்பேதம் பற்றிப் பேசினால் மட்டும் போதாது; வருக்க உணர்ச்சியை உண்டாக்கினால் மட்டும் போதாது - வருண சமூக அமைப்பை முக்கியமாகத் தகர்க்க வேண்டும் என்ப திலே தந்தை பெரியார் அவர்களுடன் கை கோத் தார். நூல்களைத் தேடித் தேடி படிக்கும் நூலகத் தேனீ அவர். அவர் வீட்டில் அவர் வைத்திருந்த நூலகம் பற்றி பெரிதாகப் பேசப் பட்டது.

அவருடைய சிந்தனை களுக்கு வடிகாலாக தந்தை பெரியார் அவர்களின் குடிஅரசு இதழ் விளங் கியது. தங்குத் தடையின்றி அவர் கருத்துகளை குடி அரசில் எழுதிட முழு உரிமையையும் அளித்தார், தந்தை பெரியார்.

தம் கருத்துக்கு மாறாக இருந்தவற்றைக்கூட வெளியிட தந்தை பெரியார் சுதந்திரம் அளித்தார் என் றால், தந்தை பெரியார் அவர்களின் கருத்துச் சுத ந்திர  பெருமித உணர்வை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

சிங்காரவேலனாரின் கருத்துக்கு மறுப்புக் கட்டு ரையையும்கூட பகுத் தறிவு இதழில் (30.9.1934) தந்தை பெரியார் எழுதி யதுண்டு. அப்படியொரு ஆரோக்கிய நிலையைப் பயிர் செய்தவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தைபெரியார்.

ம.சி. என்று சுருக்க மாகக் கூறப்படும் சிங்கார வேலரின்   வாழ்க்கை யில் பல முக்கியமான நிகழ்வு கள் உண்டு. 1902 உலகப் புத்தமத மாநாட்டுக்கு லண்டன் பயணம்; 1918 சென்னைத் தொழிலாளர் சங்கத்தைத் தோற் றுவித்தது; 1925இல் காஞ்சீ புரம் காங்கிரஸ் மாநாட்டில் கொடியேற்றியது; 1928இல் ஜாம்ஷெட்பூரில் ஏ.அய். டி.யூ.சி. தலைவர் முகுந் தலால் சர்க்காருடன் கிளர்ச் சியில் ஈடுபட்டு பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக் கப்பட்டது;

1932இல் (டிசம்பர் 28,29) ஈரோட்டில் தந்தை பெரியார் அவ ர்களுடன் இணைந்து சம தர்மத் திட்டத்தை சுய மரியாதைத் தொண்டர்கள் முன் வைத்தது.  1935-இல் புதுஉலகம் இதழ் துவக் கப்பட்டது போன்ற நிகழ்ச் சிகள் குறிப்பிடத்தக்கவை யாகும்.

1925ஆம் ஆண்டில் யானை கவுனிப் பகுதியி லிருந்து சென்னை மாநக ராட்சி உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். மனச்சாட்சியின்படி என்று உறுதிமொழி எடுத் துக் கொண்டார்.

சுயமரியாதைச் சிறுவர் களுக்கு வாய்ப்பாடம்  என்று குடிஅரசில் (15.1.1933) 10 அம்சங் களைக் குறிப்பிடுகின்றார்.

அதில் ஒன்று ஒரு வருஷத்துக்குள் குடி அரசுக்கு பத்து சந்தாக் களைச் சேர்க்கிறேன் என் பதுதான் அதில் முதல் கட்டளையாகும்.

பொதுவுடைமை - சுய மரியாதைக் கொள்கை களை முன்னெடுத்துச் சென்ற சிங்காரவேலரைப் போற்றுவோம். குறிப்பாக கம்யூனிஸ்டுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எந்த அளவுக்கு அவரின்  பகுத்தறிவுக் கொள் கைகளை நடைமுறையில் பின்பற்றுகிறார்கள் என்பதை அவர்களின் முடி வுக்கே விட்டு விடுவோம்!
- மயிலாடன்
http://viduthalai.in/new/page1/3703.html

சிந்தனைத் துணுக்குகள் -சித்திரபுத்திரன்

எது நிஜம்?
இறந்தவர்களுக்குத் திதி கொடுக்க வேண்டு மென்றால் இறந்து போனவர்களின் ஆத்மாவைப் பற்றி மூன்று விதமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.
1. இறந்துபோகும் ஜீவனின் ஆத்மா, மற்றொரு சரீரத்தைப் பற்றிக்கொண்டு விடுவதாக,
2. இறந்துபோன ஜீவனின் ஆத்மா இறந்தவுடன் பிதிர்லோகத்தில் அங்கு இருப்பதாக, (பிதிர்களாய் இல்லாத ஆத்மா எங்கிருக்குமோ!)
3. இறந்துபோன ஜீவனின் ஆத்மா அதனதன் செய்கைக்குத் தகுந்தபடி மோட்சத்திலோ நரகத்திலோ பலன் அனுபவித்துக் கொண்டிருப்பதாக,
ஆகவே இந்த மூன்று விஷயத்தில் எது நிஜம்? எதை உத்தேசித்து திதி கொடுப்பது?
இதுதவிர ஆத்மா என்பது கண்ணுக்குத் தெரியாதது என்றும், சரீரம் உருவம், குணம் இல்லாதது என்றும் சொல்லப்பட்டிருக்கிறதே? சரீரம், குணம் இல்லாததற்கு நாம் பார்ப்பானிடம் கொடுக்கும் அரிசி, பருப்பு, செருப்பு, விளக்குமாறு ஆகியவை எப்படிப் போய்ச் சேரும்? அவற்றை ஆத்மா எப்படி அனுபவிக்க முடியும்?
வெட்கம், புத்தி இல்லையோ?
குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக் கதை சொல்லுகிறது. குசேலர் பெண்ஜாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக் குழந்தைக்கு ஒரு வருஷமாவது இருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27ஆவது வருஷமாவது இருக்கும். ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள். இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்?

20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிச்சைக்குப் போக குசேலருக்கு வெட்கமிருந் திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக் காவது என்ன, பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப் பயல்களாட்டமாய் வைத்துக்கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமாக இல்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?

குஜராத் கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகள் மாற்றம்

மாற்றுவது அரசின் உரிமை என்கிறது சிறப்பு விசாரணைக் குழு   - 7

கலவரங்களுக்கு ஆதரவாக இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு எவ்வாறு பரிசுகள் அளிக்கப்பட்டன என்பதை மட்டும் சிறப்பு விசாரணைக் குழு பதிவு செய்து இருக்கவில்லை. அதிர்ச்சி தரத்தக்க பல வழக்குகளில், நேர்மை யான காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் செய்ததற்காக உடனடி யாக, வேறு தக்க காரணங்களின்றி தண்டிக்கப்பட்டது ஓர் எச்சரிக்கை செய் தியை அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதாக இருந்தது.  அரசு தவ றான நோக்கம் கொண்டிருந்தமைக்கு இது அடையாளம் இல்லையென்றால், வேறு எதனைத்தான் கூறமுடியும்?

1991 பேட்ச் அய்.பி.எஸ். அதிகாரி யான ராகுல் சர்மாவின் வழக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். 2002 இல் பவநகர் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தபோது, மத உணர்வுகளைத் தூண்டிவிட்ட இந்து மதத் தலைவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, கலவரத்தைக் கட்டுப்படுத்தி, பாராட்டத் தக்க செயலை அவர் செய்தார். 

இந்து கலவரக் கும்பல் ஒன்று  ஒரு மசூதியை எரிக்க முயன்றபோது, தான் தடுத்து நிறுத்தியதாகவும், பல டஜன் முஸ்லிம் குழந்தைகளை அதனால் காப்பாற்ற முடிந்தது என்றும், அதன் பிறகு மூன்று நாட்கள் கழித்துதான் மாற்றப்பட்டதாக வும் ராகுல் சர்மா சிறப்பு விசாரணைக் குழுவிடம் தெரிவித்தார். அமைச்சர் ஜடாபியா தன்னை அழைத்துப் பாராட் டியபோது, காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம்களை விட அதிக எண்ணிக்கையில் இந்துக்கள் இறந்தது முறையற்றது என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

1989 பேட்ச் அய்.பி.எஸ். அதிகாரி யான விவேக் சிறீவத்சவா குட்ச் மாவட்ட கண்காணிப்பாளராக இருந்த போது, ஒரு முஸ்லிம் குடும்பத்தைத் தாக்கிய தற்காக பா.ஜ.க. தலைவர் ஒருவரைக் கைது செய்ததற்காக மாற்றம் செய்யப் பட்டார்.

உள்துறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் அலுவலகங்களிலிருந்து தனக்கு சில தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், இந்த வழக்கின் விவ ரத்தைக் கேட்டதுடன், குற்றம் சாற்றப் பட்டவர்களுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் உள்ளனவா என்றும் கேட்கப் பட்டதாகவும், போதுமான சாட்சியங்கள் உள்ளன என்று தான் கூறியதாகவும் சிறீவத்சவா தெரிவித் தார் என்று சிறப்பு விசாரணைக் குழுவி அறிக்கை தெரிவிக்கிறது. 2002 மார்ச் கடைசி வாரத்தில் சிறீவத்சவா மாற்றப்பட்டு, அகமதாபாத் வட்ட மது விலக்கு துணை ஆணையராக நியமிக்கப் பட்டார்.

மற்றொரு  அய்.பி.எஸ். அதிகாரியான ஹிமான்சு பட், பனஸ்காந்தா மாவட்ட கண்காணிப்பாளராக இருந்தவர் 2002 மார்ச்சில் மாற்றப்பட்டு காந்திநகர் மாநிலப் புலனாய்வுத் துறையில் நியமிக்கப்பட்டார். கலவரக் கும்பலுக்கு உதவி செய்த ஓர் உதவி ஆய்வாளருக்கு எதிராக அவர் நடவடிக்கை மேற்கொண்டதே இதன் காரணம்.

அந்த உதவி ஆய்வாளருக்கு முக்கியமான அரசியல் தொடர்புகள் இருந்ததால், அவர் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டது மட்டுமன்றி, அவர் முன்பிருந்த காவல் நிலையத்திலேயே பணி செய்ய அனுமதிக்கப்பட்டார். அதன் பின்பு, பட் வெளி நாடு சென்று அங்கேயே தங்கிவிட்டார். சிறப்பு விசாரணைக் குழு வினரால் அவரை விசாரிக்க முடிய வில்லை.

கலவரங்களின்போது குச்-பூஜ் எல்லைப் பகுதிகளில் உதவி காவல் துறைத் தலைவராக இருந்த சதீஷ் சந்திர வர்மா, கலவரங்களில் ஈடுபட்டு இரண்டு முஸ்லிம்களைக் கொன்றதற்காக சங்கர் சவுத்திரி என்னும் பா.ஜ.க. சட்ட மன்ற உறுப்பினரைக் கைது செய்ய உத்தர விட்டார். உடனடியாக அவர் மாற்றப்பட்டு, ஜுனாகட் சிறப்பு ரிசர்வ் காவல் துறை பயிற்சி நிலைய முதல்வராக நியமிக்கப் பட்டார்.

இந்த அதிகாரிகளில் எவர் ஒருவரும் இம் மாறுதல்களால் தாங்கள் பாதிக்கப் படவில்லை என்று தெரிவித்ததாக விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா குறிப்பிட்டுள்ளார்.  மாறுதல் என்பது அரசின் உரிமை என்று அவர்கள் அனை வருமே கூறினார்களாம். இந்த மாற் றங்கள்  வழக்கத்திற்கு மாறானவையாக சந்தேகத்திற்கிடமானவை யாக இருந்தன என்று குறிப்பிட்டதோடு மல்ஹோத்ரா நிறுத்திக் கொண்டார். ராகவனும் அவற்றின் முரண்பட்ட, கேள்விக்குரிய தன்மையைப் பற்றி ஒப்புக் கொண்டுள் ளார். ஆனால், அவர்கள் இருவரில் எவர் ஒருவரும் கலவரங்களில் மாநில அரசுக் குப் பங்கு இருந்ததா என்பதைக் கண் டறிய மேற்கொண்டு விசாரணை நடத் தும் நியாயமான முடிவுக்கு வரவில்லை.

கலவரங்களுக்கு உதவி செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு செல் வாக்கும், ஆதாயமும் உள்ள பதவிகள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்ளும் சிறப்பு விசாரணைக் குழு இதன்மீது மேலும் விசாரணை நடத்துவது என்ற தர்க்க ரீதியான முடிவை மேற்கொள்ள மட்டும் தவறி விட்டது.

தங்கள் கடமைகளைச் செய்த நியாயமான காவல்துறை அதிகாரி களின் இறக்கைகள், மோடி அரசால் ஒடிக்கப்பட்டன. அதே நேரத்தில், தாங்கள் அணிந்திருந்த சீருடையையும், மக்கள் தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் கேவலப்படுத்திய தங்களது நியாயமான கடமைகளைச் செய்யத்  தவறிய அதிகாரிகளுக்கு பாராட்டிப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அகமதாபாத் இரண்டாம் பகுதியில் இணை காவல் துறை ஆணையராக இருந்த எம்.கே.டாண்டனின் பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கலவரங் களுக்குப் பிறகு அவர் சூரத் வட்ட காவல்துறைத் தலைவராக நியமிக்கப் பட்டார். 2005 ஜூலையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைவராக மாநிலக் காவல்துறை தலைமை அலுவ லகத்தில் நியமிக்கப்பட்டார். டாண்டன் மாநிலம் முழுவதும் அதிகார எல்லை கொண்ட இந்தப் பதவியிலிருந்துதான் ஓய்வு பெற்றார்.

மிகவும் பயங்கரமான படுகொலைகள் நடந்து கொண்டிருந்த குல்பர்க் சொசைடி, நரோடா காவுன், நரோடா பாடியா ஆகிய இடங்களிலிருந்து பாது காப்பு கேட்டு வந்த அவசர அழைப்புகள் பற்றி டாண்டன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதை சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது. இந்தக் கலவர இடங்களுக்குச் செல்லாமல், அகமதாபாத் நகரின் வேறு பகுதிகளில் போலியான வழக்குகளைப் பதிவு செய்துவிட்டு தானும், தனது அலுவலர்களும் அந்த இடங்களுக்குச் சென்று இருந்ததை நியாயப்படுத்தினார். நடோடா காவுன், நரோடா பாடியா பகுதிகளில் படுகொலைகளை ஏற்பாடு செய்து நடத்திய ஜெய்தீப் படேல் மற்றும் மாயாபென் கோட்னானி ஆகியோருடன் டாண்டன் கலவரங்களின் போது தொலைபேசியில் தொடர்பு கொண்டி ருந்தார் என்பதையும் சிறப்பு விசா ரணைக் குழு கண்டுபிடித்துள்ளது.

டாண்டனின் உதவி அதிகாரியான பி.பி.கோண்டியா என்பவர் அப்போது நான்காவது வட்ட துணை ஆணைய ராக இருந்தார். அவர் இப்போது அதி காரம் மிகுந்த பதவியான மாநில ரகசியப் பிரிவு காவல்துறைத் தலைவர் பதவியில் இருக்கிறார். மல்ஹோத்ரா கூறுகிறார்: நரோடா பாடியாவில் கலவர நிலை மிகவும் மோசமாகவும், கட்டுக்குள் அடங்காமலும் இருந்த பிற்பகல் 2.20 மணி அளவில் கோண்டியா பாதிக்கப்பட்டவர்களின் தொலைப்பேசி அழைப்புகளை ஏற்று கலவரப் பகுதிகளுக்குச் செல்லாமல்,  தனது தலைமையிடத்தை விட்டு வேறு இடத்திற்கு ஓடிப்போய் விட்டார் என்றே கூறவேண்டும்.

இந்த காவல்துறை அதிகாரிகள் மட்டுமன்றி, களங்கம் நிறைந்த செயல் களைச் செய்த இதர அதிகாரிகளும் கூட அரசின் உயர்ந்த  ஆதரவைப் பெற்றிருந்தனர்.அவர்களுள் முன்னாள் தலைமைச் செயலாளர் ஜி.சுப்பாராவ், முன்னாள் உள்துறை தலைமைச் செயலர் அசோன் நாராயண், மோடியின் முன்னாள் தனிச் செயலாளராக இருந்த பி.கே. மிஸ்ரா, அகமதாபாத் மாநகரக் காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே, அப்போது வடோதரா வட்ட காவல் துறைத் தலைவராக இருந்த தீபக் ஸ்வரூப்,  முன்னாள் உள்துறைச் செய லாளர் நித்யானந்தம், தற்போதைய வடோதரா மாநகரக் காவல் துறை ஆணையர், என்கவுண்டர் கொலை களை ஏற்பாடு செய்ததற்காக தற்போது சிறையில் இருக்கும் டி.ஜி.வன்ஜரா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

பெஸ்ட் பேக்கரி வழக்கு விசாரணை நடந்தபோது அப்போதைய வடோதரா மாநகர இணை மாநகரக் காவல்துறை ஆணையராக இருந்த கே.குமாரசாமி, வடோதரா மாநகர உதவி ஆணையராக இருந்த ராம்ஜிபாய் பார்கி ஆகியோர் நீதியை வளைக்க முயற்சி செய்ததற்காக பம்பாய் பெருநகர கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதியால் கடுமையாகக் குற்றம் சாற்றப்பெற்று கண்டனமும் செய்யப்பட்டனர். இவ்வாறு முஸ்லிம் மக்கள் மீது பாகுபாடு காட்டப்பட்டு, வெறுப்பு காட்டப்பட்டு கொடுமைகள் நடத்தப் பட்டமைக்கு தேவைக்கு அதிகமான இத்தகைய சாட்சிகளைப் பற்றி  சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் பதிவு செய்து  இருந்தபோதும், மாறுதல் களும், நியமனங்களும் அரசின் ஏகபோக உரிமை என்று சாக்கு கூறி முடித்துக் கொண்டது.
நன்றி: தெகல்கா, 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்
http://viduthalai.in/new/page-2/3724.html

இராமாயண காலம் - பொய்

இராமாயணம் நடந்த காலம் திரேதாயுகம். திரேதா யுகம், துவாபர யுகம் இரண்டிற்கும், முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம்.

புத்தர் பிறந்து இன்றைக்கு 2500 ஆண்டுகள்தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப்பற்றி திரேதா யுகத்தில் (21,00,000 ஆண்டு களுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:-
(சி.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு)

1. ராமனைப் பார்க்கவந்த பரதனிடம் ராமன் கேட்கும்போது பவுத்தன், சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங் களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல், கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும் பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அயோத்தி காண்டம் 100ஆம் சர்க்கம், 374ஆம் பக்கம்)

2. ராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்போது திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும் நாஸ்திகனுக்கும் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(மேற்படி காண்டம் 109ஆம் சர்க்கம், 412ஆம் பக்கம்)

3. சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்கு சற்று தூரத்திற்கப்பால் புத்தரின் ஆலயம் போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.

(சுந்தர காண்டம் 15ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

4. வாலியிடம் ராமன் கூறும்போது, பூர்வத்தில் ஒரு பவுத்த சன்யாசி உன்னைப் போல் கொடிய பாபத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

(கிஷ்கிந்தா காண்டம் 18ஆம் சர்க்கம், 69ஆம் பக்கம்)

5. இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள் புத் தரின் ஆலயங்கள், மதிற்சுவரின் மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்..... முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும், கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் கட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.

(அயோத்தி காண்டம் 6ஆம் சர்க்கம், 23, 24ஆம் பக்கங்கள்)

21 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப்பற்றிக் கூறுகிற சேதியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆதலால் இராமாயண காலம் என்பது பொய்யேயாகும்.

Thursday, February 17, 2011

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் கால்டுவெல் பாதிரியார்

தமிழ் மொழிக்கு அருந் தொண்டு ஆற்றிய - திரா விட மொழிகளின் ஒப்பிலக் கணம் தந்த அறிஞர் கால்டுவெல் பாதிரியார் 50 ஆண்டு காலம் வாழ்ந்த நெல்லை மாவட்டம் இளை யான்குடி வீட்டினைப் புதுப் பித்து மானமிகு கலைஞர் தலைமை யிலான தி.மு.க. அரசு நினைவுச் சின்னமாக நாட்டுக்கு அர்ப்பணித் துள்ளது.

முதல்வர் கலைஞர் காணொலிக் காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். தமிழுக்கு உழைத்தவர் களையெல்லாம் வரலாற் றில் வாழ வைத்த பெருமை தி.மு.க. அரசுக்கு உண்டு.

அதிலும் குறிப்பாக கால்டுவெல் அவர்களுக் குச் செய்யப்பட்டுள்ள சிறப்பு மிகமிகப் போற்று தலுக்கு உரியது.

கால்டுவெல் பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் கூறுகிறார்:

மொழி நூலானது உலக மொழிகள் எல்லாவற் றையும் தழுவும் ஒரு பொதுக் கலை. உலக மொழிகள் எல்லாவற்றை யும் ஆரியம் (Aryan) , சேமியம் (Semitic), துரேனியம் (Turanian) என்னும் முப்பெருங் குலங்களாகப் பிரித்துள் ளார் மாக்கசு முல்லர். அவற்றுள் துரேனியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் திராவிடக் குடும்பத்தின் மொழிகளைத் திறம்பட வகுத்துக் காட்டியவர் கால்டுவெல்.

இங்ஙனமே பிறரும் பிற குடும்பங்களை வகுத்துக் காட்டி உள்ளனர். மேற்கூறிய முக்குலங்கட் கும் உள்ள தொடர்பை ஆராய்வதே இந்நூலின் நோக்கம்.

அவற்றுக்கொரு தொடர்புண்டென்று; அஃதாவது அம்மூன்றும் ஒரு குலத்தினின்றும் கவைத்திருக்க வேண்டு மென்று சென்ற நூற்றாண் டிலேயே மாக்கசு முல்லர் (Max Muller) திடமாகக் கூறிவிட்டார்.  அம்மூலத்திற்குத் திரா விடம் மிக நெருங்கிய தென்று கால்டுவெல் கூறியுள்ளார்.

இக்கூற்றை என்னாலியன்ற வரை முயன்று மெய்ப்பித்திருக் கிறேன் - என்று மொழி ஞாயிறு அவர்களின் உயர்ந்த படைப்பான ஒப் பியன் மொழி நூல் எனும் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார் என்றால் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்திசையில் சிந் தனையை செலுத்திய ஒரு வெளிநாட்டு அறிஞரை- அயர்லாந்துக்காரரை - அதுவும் வெளிநாட்டு மதத்தைச் சேர்ந்த கிறித் துவப் பாதிரியாரை - தமிழர் கள் எவ்வளவுத் தூரம் தூக்கி வைத்தும் புகழ வேண்டுமே!

தெலுங்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பும், கன்னடம் 1500 ஆண்டு களுக்கு முன்பும், 750 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளமும் ஆரிய மொழியான சமஸ்கிருத கலப்பால் பிரிந்தன என்பது தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து சொன்ன அதே கருத்தை தந்தை பெரியார் அவர் களும் கூறியிருக்கிறார் என்பது சுட்டிக் காட்டத் தகுந்ததாகும்.

கிறித்துவப் பாதிரியார் கள் செய்துள்ள தமிழ்த் தொண்டில் கால்டுவெல் இயற்றிய திராவிட மொழி களின் ஒப்பிலக்கணம் அடிக்கோடிட்டுக் குறிப்பிடப் பட வேண்டிய பொன்னே டாகும்.

ஓவியக் கல்லூரியில் பயின்றவர்; 1838 முதல் மரணத்தின் வாயிலில் புகும் வரை (1891 ஆகஸ்ட் 28) தமிழ்த் தொண்டாற்றிய பெருமகனாரை நன்றி உணர்வோடு பேற்றுவோம்!
- மயிலாடன்
http://viduthalai.in/new/e-paper/3615.html

கூட்டணிக் கட்சியே களத்தில் குதித்துவிட்டது

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த பிரச்சினையில் தமிழ்நாடு பலவகைகளிலும் எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தி வந்துள்ளது.

மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளது. ஒரு மாதத்துக்குள் இரு தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் கடுமையான எச்சரிக்கையையும், சந்திப்புகளையும் தொடர்ந்து இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் நிரூபமா இலங்கை சென்று பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இனி தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டது.

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற பழமொழிப்படி இப்பொழுது 106 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது.

106 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு எதிராகத் தமிழ்நாட்டில் கொந்தளிப்புப் பீறிட்டுக் கிளம்பியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 21 பேர் சிங்களக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர் - தாக்கப்பட்டனர் என்று ஒரு சேதி இன்று காலை வெளி வந்துள்ளது.

இனி மேலும் மத்திய அரசிடம் விண்ணப்பம் போடுவதில் பயனில்லை     என்ற நிலையில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகவே களமிறங்கிப் போராடும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இலங்கைத் தூதரகத்தின்முன் ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி உள்பட 5000 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளி மாவட்டங்களில் துறைமுக அலுவலகங்களுக்கு முன்பும் ஆளும் திமுக ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகவும், மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாகவும் இருக்கக் கூடிய திமுகவே போராட்டத்தில்  ஈடுபட வேண்டிய நிலை என்பது அசாதாரணமானது.

இதைப்பற்றிக்கூட விமர்சனம் வெடிக்கக் கூடும். ஆனாலும் இந்த நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு என்பது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் தாக்கப்பட்டது என்றவுடன் டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் சென்னைக்கு ஓடோடி வருகிறார். அந்தவுணர்வு - தமிழக மீனவர்கள் கடலில் சிங்களக் கடற்படையால் தாக்கப்படும்பொழுது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஏற்படாதா - ஏற்படக் கூடாதா? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

அதுவும் இந்தியாவோடு ஒப்பிடும்பொழுது ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கை எந்தத் தைரியத்தில் இந்திய அரசின் வேண்டுகோளை நிராகரிக்கிறது - இந்திய அரசின் எச்சரிக்கைகளைமீறி தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லுகிறது?

சீனா கொடுக்கும் தைரியமா? பாகிஸ்தான் பக்க பலமாக இருக்கும் என்ற நினைப்பா?

இந்தியாவின் சுயமரியாதைக்கே விடப்படும் சவாலாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கொஞ்ச நஞ்ச இழப்பா? 1983 தொடங்கி இதுவரை சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 572, காயம்பட்டவர்கள் 1200; அழிக்கப்பட்ட விசைப் படகுகள் 300, சேதப்படுத்தப்பட்ட படகுகள் 600, இதில் காணாமற் போனவர்கள் என்ற ஒரு பட்டியலும் உண்டு; தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் இந்தக் கொடுமையைப் போல் சீக்கியர்களுக்கு வெளிநாட்டில் ஏற்பட்டு இருந்தால் இந்நேரம் ரத்த ஆறு ஓடியிருக்குமே!

ஒரு ஜனநாயக முறையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்கென்று ஓர் அங்கீகாரம் கிடையாதா?

மாறாக வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டால்தான் மத்திய அரசின் தேக்கம் உடைபடுமா? இது போன்ற வன்முறைகள் வெடிப்பதற்கே காரணம் மத்திய அரசில் சரியான அணுகுமுறையும் செயல்பாடும் இல்லாமைதான்.

இனிமேல் தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று அரசின் சார்பில் ஓர் உத்தரவாதம் கொடுக்கப்பட்டால் அதன்படி நடக்க வேண்டாமா?

அப்படி நடக்கவில்லையென்றால் இலங்கை அரசை உரிய முறையில் இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டாமா? அய்.நா.வில் புகார் கூற வேண்டாமா?

போர்க் குற்றவாளியான ராஜபக்சேமீது நடவடிக்கை எடுக்கக் கோரும் அய்.நா. தீர்மானத்திற்கு எதிராக இந்தியா கை தூக்கும் போது, இலங்கை அரசின் மனோ பாவம் எத்தகையதாக இருக்கும்? என்ன செய்தாலும் இந்தியா தன் பக்கமே இருக்கும் என்ற ஒரு மனப்பான்மை இலங்கை அரசுக்கு இந்தியா ஏற்படுத்தி விட்டது. அந்தத் தைரியத்தில்தான் அப்பாவி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை சுண்டைக்காய் நாடான இலங்கை அரசு தொடர்ந்து தொடுத்துக் கொண்டே வருகிறது.

கூட்டணியில் உள்ள கட்சியே வெளிப்படையாகக் களத்தில் இறங்கிப் போராடும் ஒரு நிலையை திமுக மேற் கொண்டதானது - அரசியலில் ஓர் எச்சரிக்கை மணியின் ஓசையாகும்.

இதனை மத்திய அரசு புரிந்து கொண்டு உரிய முறையில் செயல்படத் தவறுமேயானால், அதன் விளைவை வட்டியும் முதலுமாக இந்தியா சுமக்க நேரிடும் என்பது கல்லுப் போன்ற உண்மையாகும்.

இந்தியா செயல்படுமா? எங்கே பார்ப்போம்!
http://viduthalai.in/new/page-2/3608.html 

குஜராத் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச்சர்கள்

அதன் நோக்கம் என்ன?

தீவிரவாதத் தாக்குதல் அல்லது மதக் கலவரங்கள் போன்ற நெருக்கடி நேரங்களில், காவல்துறை கட்டுப்பாட்டு அறை ஒரு போர் அலுவலகம் (War Office) போன்று இருப்பதாகும். கலவரப் பகுதிகளுக்குக் காவல்துறையினரை அனுப்புவது, வெவ்வேறு இடங்களில் உள்ள காவல்துறைக் குழுக்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைப்பது, சம்பவ இடங்களிலிருந்து அறிக்கை களைப் பெறுவது ஆகிய பணிகளை காவல்துறை செய்வது இந்தக் கட்டுப் பாட்டு அறைகளில்தான்.

2002 பிப்ரவரி 28 ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் கலவரங்கள் வெடித்தவுடன், தனது இரு அமைச்சர்களையும் அவர்களது அலுவலர்களையும் காவல் துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் மோடி இருக் கச் செய்த செயல் சட்டத்தினை மீறி யதும், மிகுந்த கருத்து வேறுபாட்டுக்கு இடம் கொடுப்பதுமாகும்.

அகமதாபாத்தின் நரோடா காவுன், நரோடா பாடியா மற்றும் குல்பர்கா சொசைட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி அளவில் தொடங்கிய கலவரங் கள் இரவு எட்டு மணி வரை தொடர்ந்து நடைபெற்றன. பாதிக்கப்பட்டவர்கள் தங்களைப் பாதுகாக்கக் கோரி காவல் துறையினரைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டபோதும், காவல் துறை அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிவிட்டது. இத்தகைய சூழ்நிலைகளில், காவல்துறைக் கட்டுப் பாட்டு அறையில் இரண்டு அமைச்சர் கள் இருந்தது பெருத்த சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது.

காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இரு அமைச்சர்கள்

சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையின் 30 ஆம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது: புலனாய்வுத் துறை யின் துணை ஆணையராக இருந்த சஞ்சீவ் பட் 28-2-2002 காலை முதல மைச்சர் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில், காவல்துறைத் தலைவர் மற்றும் புலனாய்வுத் துறை கூடுதல் தலைவர் ரெய்கருடன் (ரெய்கர் தனது விடுப்பை ரத்து செய்துவிட்டு பணிக்கு 28 ஆம் தேதி காலையில்  திரும்பிவிட்டார்) தானும் கலந்து கொண்டதாகக் கூறி னார்.

கூட்டம் முடிந்தபிறகு போலீஸ் பவனின் இரண்டாவது மாடியில் உள்ள தனது அலுவலகத்திற்கு காலை 11 மணி அளவில் திரும்பிய சிறிது நேரத்திற்குப் பின், அதே கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த காவல்துறைத் தலைவரின் அலுவலகத்திற்கு அவரைச் சந்திக்கச் சென்றதாகவும், முதல்வர் கூட்டத்தின் முடிவில் அறிவுறுத்தப்பட்டபடி குஜராத் மாநில அமைச்சர்கள்  அசோக் பட் மற்றும் ஜடேஜா இருவரும் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்து அங்கு உட்கார்ந் திருந்ததைக் கண்டதாகவும் சஞ்சீவ் பட் கூறினார். புலனாய்வுத் துறைத் தலைவர் ராய்கரும், சட்டம் - ஒழுங்கு பிரிவின் தலைவர் மணிராமும் அப்போது அங்கி ருந்ததாகவும் அவர் கூறினார்.

காவல் துறைத் தலைவருடன் பேசிவிட்டு, தேநீர் அருந்தி விட்டு பட் தன் அலுவலகத் திற்குத் திரும்பி விட்டார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சில ஆவணங் களைப் பெறுவதற்காக சஞ்சீவ் பட் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்ற போது, அமைச்சர் ஜடேஜாவும் அவரது அலுவலர் களும் கட்டுப்பாட்டு அறையில் இருந் தனர்.

இது ஒரு சங்கடமான கேள்விக்கு வழி வகுத்தது. மேற்கண்ட சஞ்சீவ் பட்டின் வாக்குமூலம் உண்மைதான் என்று கண்டறிந்த விசாரணை அலுவலர் மல்ஹோத்ரா, காவல்துறைக் கட்டுப் பாட்டு அறையில் அமைச்சர் ஜடேஜா இருந்ததை மெய்ப்பிப்பதற்கு அவரது சாட்சியத்தைப் பயன் படுத்திக் கொண் டார். 28-2-2002 காலை முதல் அமைச் சர் கூட்டிய கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டார் என்று அவர் கூறிய தையும் மல்ஹோத்ரா மறுக்கவில்லை.

அப்படி இருக்கும்போது, 27-2-2002 அன்று முதல் அமைச்சர் கூட்டிய கூட்டத் தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதாகக் கூறியது எவ்வாறு ஏற்றுக் கொள்ளப் படாமல் மறுக்கப்பட்டது. 28 ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு பட் பணியில் மூத்தவர் என்றால், 27 ஆம் தேதி கூட்டத்தில் கலந்து கொள்ளுவதில் மட்டும் அவர் எப்படி பணியில் இளையவர் என்று கூறப்பட்டார்.

அவரது மூத்த அதிகாரி பணிக்குத் திரும்பிய பிறகும், 28 ஆம் தேதி கூட்டத் தில் பட் கலந்து கொண்டதை வைத்துப் பார்க்கும் போது, 27 ஆம் தேதி தனது மேலதிகாரி ராய்கர் விடுப்பில் இருந்த தால், அங்கிருந்த அடுத்த மூத்த அதி காரியான  தான் முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதாக பட் கூறியது அதிக நம்பிக்கைக்குரியதாகவே காணப்படு கிறது.

அதிக குழப்பம்!

இதில் இன்னமும் அதிக குழப்பம் விளைவித்தது என்ன வென்றால், காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர் இருந்ததையே உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளரான அசோக் நாராயண் மறுத்ததுதான். சிறப்பு விசாரணைக் குழுவிடம் காவல் துறைத் தலைவர் சக்ரவர்த்தி கூறிய தாவது: 

28-2-2002 அன்று அமைச்சர் ஜடேஜா சில தகவல்களைப் பெறுவதற் காக மாநிலக் கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள காவல் துறைத் தலைவர் அலுவலகத்தில் இருப்பார் என்று  என்னிடம் அசோக் நாராயண் கூறினார்.

அது போலவே அமைச்சர் அசோக் பட் அகமதாபாத் மாநகரக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இருப்பார் என்றும் அசோக் நாராயண் என்னிடம் கூறினார்.

ஜடேஜா நகர வீட்டு வசதி அமைச்ச ராகவும், அசோக் பட் சுகாதார அமைச்ச ராகவும் அச்சமயத்தில் இருந்தனர்.  காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருப்பதற்கு அவர்களுக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டபோது, சக்ரவர்த் திக்கு இது போன்ற அறிவுரைகள் வழங் கியதையே அசோக் நாராயண் மறுத் தார்.

அகமதாபாத்  காவல்துறை ஆணை யராக இருந்த பி.சி.பாண்டேயும் மாநக ரக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறை யில் அசோக் பட் தொடர்ந்து இருந்ததை மறுத்தார். அமைச்சர் 10 அல்லது 15 நிமிடங்கள் மட்டுமே அங்கு இருந்தார் என்று அவர் கூறினார்.

ஆனால் அமைச் சர் ஜடேஜாவைக் கேள்வி கேட்டபோது,  மோடியின் உள்துறை உதவி அமைச்ச ராக இருந்த ஜடாபியாதான் தன்னை காவல் துறைக் கட்டுப்பாட்டு அறையில் இருக்கும்படி கூறியதாகத் தெரிவித்தார்.

(ஜடாபியா தற்போது மோடியின்  ஆதரவை இழந்துவிட்டு, தனியாக ஒரு கட்சி துவங்கி உள்ளார். அதனால் அனைத்து குற்றத்தையும் அவர் மீது சுமத்துவது மோடிக்கும், பா.ஜ.கட்சிக்கும் எளிதாகப் போய்விட்டது.)

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, குற்றத்தை மற்றவர் மீது தள்ளிவிடும் முயற்சியில் சக்ரவர்த்தியும், அசோக் நாராயணும், பாண்டேயும் பொய்களைக் கூறியும், ஒருவர் கூறுவதை மற்றவர் மறுத்தும் கூறியது தெளிவாகத் தெரிகிறது.

காவல்துறை அதிகாரியின் எதிர்ப்பு

நடந்தவைகளைக் கூறுவதில் சஞ்சீவ் பட் ஒருவர் மட்டும்தான் தொடர்ந்து ஒரே மாதிரி கூறி வந்துள்ளார் என்று தோன் றுகிறது. அமைச்சர்கள் கட்டுப்பாட்டு அறைகளில் இருப்பதைப் பற்றிய தனது ஆட்சேபத்தை காவல் துறைத் தலைவர் சக்ரவர்த்தியிடம் தான் பதிவு செய்த தாகவும், அவரது அனுமதியுடன் அமைச் சரையும் அவரது அலுவலர்களையும் அதே கட்டடத்தில் இருந்த காலி அறை ஒன்றுக்கு தான் மாற்றியதாகவும் விசா ரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அன்றும் அதற்கடுத்த இரண்டு மூன்று நாட்களில் ஜடேஜாவின் அலுவலர்கள் சிலர் மாநில புலனாய்வுத் துறையிட மிருந்து சில விவரங்களைக் கேட்டது பற்றி தனக்கு நினைவிருப்பதாகவும் பட் கூறினார். (இவ்வாறு பட் கூறியதை சக்ரவர்த்தி மறுக்கவில்லை).

மிகவும் முக்கியமான கேள்வி என்ன வென்றால்,  எதற்காக அமைச்சர்களும், அவர்களின் அரசியல் அலுவலர்களும், எங்கே எவ்வளவு காவல்துறையினர் கலவரத்துக்காக நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற உணர்ச்சி மிகுந்த தகவல்களை ஏன் கேட்டறிந்தனர் என்பதுதான்.

அங்கங்கே இருக்கும் கலவரக்காரர் களுக்கு இந்த தகவல்கள் அனுப்பப்பட் டனவா? எப்படியிருந்தாலும், காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் நகர்ப்புற வீட்டு வசதித்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் கூறுகிறார்:

2002 பிப்ரவரி 28 ஆம் தேதியிலிருந்து ஒரு சில நாட்கள் இந்த இரண்டு அமைச்சர்களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள் என் பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக் கப்பட்டுள்ளது என்றாலும், காவல் துறையின் பணிகளில் அவர்கள் குறுக் கிட்டனரா என்பதைச் சுட்டிக்காட்டும் தகவல்கள் ஏதும் இல்லை.

தான் கண்டுபிடித்தவைகளைக் கொண்டு மேலும் விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழு எவ்வாறு தவறிவிட்டது என்பதைத் திரும்பத் திரும்பக் கூறுவதில் பயன் ஏதுமில்லை. அதற்கு மாறாக, ஒரு மாறுபட்ட கேள்வியைக் கேட்க வேண்டிய நேரமிது.  நாட்டின் ஒரு மோசமான மதக் கலவரப் படுகொலைகளைச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறியும் வழி இதுதானா?

கலவரங் களில் ஏதேனும் ஒரு வழியில் தொடர்பு கொண்டிருந்த காவல்துறை அலுவலர் களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதன் மூலமாக மட்டுமே, அரசே முன்னின்று நடத்திய வன்முறைப் படு கொலைகளை பற்றிய ஒரு மாபெரும் சதித் திட்டத்தை வெளிக் கொண்டு வர முடியுமா?

நன்றி: தெகல்கா, 12.2.2011
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

weather counter Site Meter