Pages

Search This Blog

Sunday, April 22, 2012

மணியனுக்குத் தம்பி சோ.ராமசாமியா?

ராமன் பாலம் பற்றி நாஸா சொன்னது என்று கயிறு விடும் சோ ராமசாமி மறைந்து போன ஆனந்த விகடன் மணியனுக்குத் தம்பி என்பதைவிட அண்ணன் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு ஆரிய வர்த்தத்துக்குச் சேவகம் புரிய பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டுவதில் ஆகாய மண்டலம் வரை பூணூல் வாலை முறுக்கித் தாவிக் குதிக்கிறார்.

இப்படித்தான் ஆனந்தவிகடன் மணியன் என்று ஒரு பார்ப்பனர் இருந்தார். ஞானபூமி என்ற ஒரு மாத இதழையும் நடத்தி வந்தார். அதில் ஒரு கற்பனைக் கரடியை அவிழ்த்து விட்டு இருந்தார்; இதோ! நான் சென்ற வெளிநாடுகளிலெல்லாம், விஞ்ஞான வளர்ச்சி பெற்ற அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாம் நம் மதத்தின் தத்துவங்கள் வேரோடிப் போயிருப்பதைக் கண்டு வியந்தேன். கலிபோர்னியாவில் உள்ள ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்துக்கு சங்கரா (Sankara) என்று பெயரிட்டிருப்பதைக் கண்டு அவர் களிடம் விசாரித்தபோது, உங்கள் சங்கரரின் ருத்ர தாண்டவத் தத்துவத்தின் அடிப்படையிலேயே பெரிய விஞ்ஞானத் தத்துவம் அமைந்திருக்கிறது என்றார்கள். ஒரு விஞ்ஞானி சொன்னார்: உங்கள் மெய்ஞ்ஞானம் ஏற்கெனவே தேடிக் கண்டிருப் பதைத்தான் (Search) நாங்கள் மீண்டும் கண்டுபிடிக் கிறோம் (Research) என்றார்.

உண்மை என்ன?

அறிவியக்கத்தின் உண்மை நாடுவோர் ஒருவர் செயலில் இறங்கினார். சோமனூர் வழக்குரைஞர் மானமிகு பத்மநாபன் என்னும் அத்தோழர் முத லில் டெல்லியிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பொறுப்பாளருக்கு இதுபற்றிய விளக்கம் கேட்டு எழுதினார். தூதரகத்திலிருந்து அந்த மடல் சென்னையிலுள்ள அமெரிக்கச் செய்தி நிறுவனத்திற்குத் திருப்பி விடப்பட்டு, அந்நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி தோழர் பத்மநாபன் அவர்கட்கு மடல் எழுதினார்.

திரு. ஜே.எம். கோர்ஃப் எனும் அவ்வதிகாரி வரைந்த மடலில்,

கலிஃபோர்னியாக்காரன் என்ற முறையில் ஓரளவு உறுதிப்பாட்டோடு நான் கூற முடியும், அந்த மாநிலத்தில் சங்கரா என்ற பெயருடன் எந்த விண்வெளி ஆய்வு நடுவணும் நிறுவப் படவில்லை என்பதாக எனக் குறிப்பிட்டுவிட்டு, மேலும் இப்பொருள்பற்றித் தொடர்வதற்கு வாய்ப்பாக அமெரிக்க முகவரிகள் இரண்டினை அவர் கொடுத்தார்.

கோர்ஃப் அவர்களின் மடல் ஒன்றே. போதும் என்பதாக உள நிறைவு எய்திவிடவில்லை தோழர் பத்மநாபன்!

கிடைத்த முகவரிகளில் ஒன்றான கலிஃபோர்னியா மாநில லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழுக்கு எல்லாவற்றையும் விளக்க மாக எழுதிய நம் அறிவியக்க வழக்குரைஞர்க்கு, அவ்விதழின் அறிவியல் பகுதி ஆசிரியர் திரு ஜியார்ஜ் அலெக்சாண்டர் என்பவர் கீழ்க்கண்டவாறு விடையெழுதினார்.

ஹிந்து மதத்தின் அழிப்புக் கடவுள் சங்கரனுக்கான எல்லா மதிப்புடனும், கலிஃபோர்னியாவிலோ அல்லது அமெரிக்காவில் வேறெங்கிலுமோ எந்த ஆய்வுக் கூடமும் அவ்வாறு சங்கரன் பெயர் சூட்டப் பெறவில்லையென்பதை முழு உறுதியோடும் உங்கட்கு நாள் சொல்ல முடியும்.

- இப்படிக் கூறிவிட்டுக் கலிஃபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த லிவெர்மூர் எனுமூரிலுள்ள ஆய்வுக் கூடத்துடன் தொடர்பு கொள்ளுமாறு லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழின் அறிவியல் எழுத்தாளர் எழுதினார்.

நம்முடைய வழக்குரைஞரின் உண்மை நாடும் உயர்ந்த குறிக்கோள் ஓய்ந்து போகாமல் ஊன்றி, நின்றமையால் லிவர்மூர் ஆய்வுக் கூடத்துடனும் தொடர்பு பூண்டார்.

அவ்வாய்வுக்கூட அதிகாரி திரு ஸ்டீஃபென்ஸன் என்பவரோ,

கலிஃபோர்னியாவிலோ அல்லது அமெரிக்க மாநிலங்களிலோ சங்கரா எனும் பெயரில் எந்த விண்வெளி ஆய்வுக்கூடமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை என எழுதியதுடன் விட்டுவிடவில்லை. ஹிந்து மத நம்பிக்கைகளிலும் பழக்கங்களிலும் பற்றார்வம் தெரிவிப்பதில் விரும்பி ஈடுபடுவதற்கு அமெரிக்க அறவியலார்க்கு எந்தத் தேவையுமில்லை என்று ஓங்கி அறையவும் செய்தார். ஆம்; அந்த அறை, மானம் எனும் ஒரு பொருளிலா மணியன் கூட்டத்திற்குத்தான்!

அறிவியக்கத்தின் முயற்சியால் மணியனின் திருட்டும் புரட்டும் கண்டுபிடிக்கப்பட்டது; உண்மை வெளிக் கொணரப்பட்டது!

சென்னையின் அமெரிக்கச் செய்தியக அதிகாரி செப்புகிறார்; நான் ஒரு கலிஃபோர்னியன் என்னால் ஓரளவு உறுதியுடன் சொல்ல முடியும்! அங்கே சங்கரா எனும் பெயரிலே விண்வெளி ஆய்வுக்கூடம் கிடையாது என்று.

கலிஃபோர்னிய மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இதழின் அறிவியல் பகுதிப் பொறுப்பாளர் புகலுகிறார்: முழுமையான உறுதியோடு கூறுவேன். இங்கு எங்கும், எந்த விண்வெளி ஆய்வுக் கூடத்திற்கும் சங்கரா என்ற பெயர் சூட்டப்பட்டி ருக்கவில்லை என்று.

அதே கலிஃபோர்னிய லிவர்மூர் ஆய்வுக் கூடத்தின் அதிகாரி அறிவிக்கிறார்: சங்கரா எனும் பெயரிடப்பட்ட எந்த விண்வெளி ஆய்வுக்கூடம் பற்றியும் எனக்குத் தெரியாது என்று. இந்த மூன்று கலிஃபோர் னியாக்காரர்களும் தெரிவித் துள்ளதற்கு நேர்மாறாக, புராணப் புளுகர்களின் வழித்தோன்றல் மணியன் எனும் வணிகர், கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத் துக்குச் சங்கரா என்ற பெயரிட் டிருப்பதைக் கண்டதாகக் கதைக்கிறார்! கலிஃபோர்னியாவில் எந்த ஊரில் அந்த ஆய்வுக்கூடம் உள்ளதென்பதைக் குறிப்பிட வில்லை அவர்.

அவர்களிடம் விசாரித்த போது என்று மட்டும் எழுதும் மணியன் எவர்களிடம் என்று பெயர்கள் கொடாமல் ஏய்க்க முயல்கிறார்.

ஒரு விஞ்ஞானி சொன்னார் எனப் பெருமையடித்துக் கொள்ளும் மணியன் அந்த விஞ்ஞானியின் பெயரைக் கூற முடியவில்லை.
எதனால்?...

உண்மையிலேயே கலிஃபோர்னியாவில் சங்கரா எனும் பெயரில் ஒரு விண்வெளி ஆய்வுக் கூடத்தை கண்டதில்லை!

உண்மையிலேயே அமெரிக்க அறிவியலாளர்களிடம் மணியன் சங்கராவைப் பற்றிக் கேட்டதில்லை!

உண்மையிலேயே எந்த அமெரிக்க அறிவியலாரும் மணி யனிடம் Search - Research சொல்லாடல் புரிந்தது கிடையாது!

என்றாலும் மணியன் துணிச்சலாகப் புளுகித் தள்ளுகிறார். எத்துணை பெருமை பெற்றது நம் மதம்! என்பதாக. எவ்வளவு திருட்டுத்தனம்! எத்தனை புரட்டு தன்மை!

அவர் எண்ணிவிட்டார் இந்துமதப் பற்றாளன் எவன் போய் இவையெல்லாம் மெய்யாவென்பதைச் சரிபார்க்கப் போகிறான் என்று. மதப்பற்றாளர்கள் அப்படியே நம்பிக் கொண்டார்கள்; ஆனால் மாந்தப் பற்றாளர்கள் உண்மையைக் கண்டுபிடியாமல் விடமாட்டார்களே!

மணியனின் பொய்மையை - புன்மையை பித்தலாட்டத்தை வெளிப்படுத்த அயரா முயற்சிகள் மேற்கொண்ட தோழர் பத்ம நாபன் அவர்கள் பகுத்தறிவாளர் உண்மை நாடுவோர் மாந்தப் பற்றாளர் அனைவரின் பாராட்டுக்கும் உரியர். அவரின் விடா முயற்சி பார்ப்பனியக் கயமையை நாட்டுக்குக் காட்டுதற்குப் பயன் பட்டிருக்கிறது. மணியன் இன்னும் என்னென்ன மணியம் பண்ண முற்பட்டாலும் அறிவியக்கம் கடமையாற்றுவதில் ஓயவே ஓயாது.

(பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ. இறையன் உண்மை 15.6.1982 பக்கம் 28-_31)
மணியன் மறைந்துவிட்டார். அந்தப் பொய்யின் வாரிசாக அவர் தம்பியாக அண்ணனாக இதோ திருவாளர் சோ ராமசாமி கிளம்பி விட்டார்!
http://viduthalai.in/page6/32481.html

No comments:


weather counter Site Meter