Pages

Search This Blog

Saturday, April 28, 2012

தோழர் இரவிக்குமாருக்கு

திராவிட இயக்கத்தின் மீது அவ தூறுகளை அள்ளி வீசிட பார்ப்பனர்கள் மடி கட்டி நிற்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டே பார்ப்பனர்கள் திராவிடர் இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தலைவர்கள் மீதும், ஆத்திர நெருப்பை அள்ளிக் கொட்டுகின்றனர்.

அதில் ஒன்றுதான் உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும், அந்நிய தலையீடும் என்ற அதற்குப் பதிலடி கொடுத்து உடையும் இந்தி யாவா? உடையும் ஆரியமா? என்ற அரிய வரலாற்றுக் கருவூலத்தைக் கொடுத் துள்ளார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

இந்தப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு, கூட்டத்தில் கோவிந்தா போடும் ஒரு கூட்டம் கிளம்பி இருக் கிறது. அதுதான் தமிழ்த் தேசி யவாதிகள் எனப்படுவோர். பார்ப் பனர்களின் தொடையில் உட்கார்ந்து கொண்டு எரியீட்டி பாய்ச்சிக் கொண்டு திரிகிறார்கள்! பார்ப்பன ஊடகங்கள் நன்கு காற்றடைத்து வானில் பறக்க விடுகின்றன - அத்தகையவர்களை.

தைமுதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை ரத்து செய்து - ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் அடிப்படையில் - கிருஷ்ணனுக்கும் நாரதனுக்கும் பிறந்த அறுபது பிள்ளைகள்தான் தமிழ் வருடங்கள் (ஒரு ஆண்டுக்குக் கூட தமிழ்ப் பெயர் கிடையாது.) என்ற அடிப்படையில் சித்திரை முதல் தேதிதான் தமிழ் வருஷப் பிறப்பு என்று பார்ப்பன அம்மையார் முதல்-அமைச்சராக இருந்து சட்டம் இயற்றிய இந்தக் கால கட்டத்தில், அய்ம்பொறிகளையும் அடக்கி ஆமையாக ஒடுங்கிய போதே இந்தத் தமிழ்த் தேசியவாதிகளின் ஆரிய முகவரி அவிழ்ந்து தொங்கி விட்டதே!

இப்பொழுது இன்னொரு பக்கத்தி லிருந்தும் இட்டுக்கட்டும் வேலை.

கொஞ்ச நாளில் சொந்தக் காரணங்களுக்காகவும் அரசியல் போக்கிற்காகவும் பதுங்கி இருந்தது போல காட்டிக் கொண்ட தோழர் ரவிக்குமார் மறுபடியும் தன் முகத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்.

சண்டே இந்தியன் (20.-4.-2012) இதழில் திராவிட இயக்கத்தின் மீதும் அதன் ஒப்பற்ற தோற்றுநர் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் மீதும் அபாண்டமான அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார். இது அவருக்குத் தேவையிலலாத வீண் வேலை.

பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து தியாகராயர் ஒரு வார்த்தையும் பேசவில்லை, பிராமணரல்லாதார் என்பதில் தாழ்த்தப்பட்டோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர் என நம்புவதற்கு ஒரு ஆதாரமும் அந்தப் பிரகடனத்தில் இல்லை என்று அடித்துக் கூறி, திராவிடர் இயக்கத் திற்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் எந்த விதப் பாத்தியமும் இல்லை. அந்த இயக்கத்தால் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எந்த ஒரு பயனும் கிடையாது என்று மங்களம் பாடி முடித்துவிட்டார்.

தியாகராயரின் அந்த அறிக்கையைப் பற்றி இந்து ஏடு என்ன தலையங்கம் தீட்டியிருக்கிறது தெரியுமா? தேசிய நலனுக்கு ஆபத்து (Perilous to the National Cause) என்று எழுதியது! பார்ப்பானுக்கு ஆபத்து என்றால் - அது தேசிய நலனுக்கு ஆபத்துதானே! - பார்ப்பனருக்குத் தெரிந்தது நம் மக்களுக்குத் தெரிய வில்லையே. என்ன செய்வது!

ஜாதி ஒழிப்பு சிந்தனை திராவிட இயக்கத்தவரிடம் இல்லை என்றெல் லாம் மனம் போனபோக்கில் எழுதித் தள்ளியுள்ளார்.

வரலாற்றில் எல்லா வகையான ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தி - இந்நாட்டின் பெரும்பான்மையான மக்களை சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் இழித்துத் தள்ளி, உரிமைகளற்ற வெறும் கூடாக ஆக்கிய ஆரியத்தை எதிர்த்து போர்கள் பல இதற்கு முன் நடந் திருந்தாலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் தோற்றுவிக் கப்பட்ட திராவிடர் இயக்கம் மிகப் பெரிய எழுச்சியையும், மாற்றத்தையும் மலர்வித்தது என்பதை மனச்சாட்சி உள்ளவர்களும் வரலாற்றைக் கோண லாகப் பார்க்காமல் நேர்மையாகப் பார்ப்பவர்களும் அறிவார்கள்.

பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனர் அல்லாதாரை ஒன்று திரட்டும் நோக்குடைய ஓர் அறிக்கையில் அனைத்தும் தாம் நினைப்பதெல்லாம் இடம் பிடித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியானதுதானா?

அந்த இயக்கத்தின் பிற்காலச் செயல்பாடுகளில் செறிந்திருந்த நடவடிக்கைகளை நாணயமான கண் கொண்டு பார்த்து எடை போட வேண்டாமா?
1917 இல் சென்னையில் நடைபெற்ற மாகாண முதல் ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டு உரையில் வெள்ளுடை வேந்தர் என்ன பேசினார்?

பிறப்பினால் உயர்வு, தாழ்வு கற்பிப்பது திராவிட மரபன்று; திருவள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்துதித்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்றத் தாழ்வு கற்பித்தோரும், நால்வகைச் சாதி இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே! அவ்வருணாசிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றிய புத்தர் முயன்றார். முடியவில்லை. பின்னர் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர்; தோற்றனர். இராமானுஜரும் புரோகிதர் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழி முயன்றார். தோல்வியே கண்டார். பார்ப்பனர் பிடி மேன்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை - அண்டாமை - பாராமை முதலிய சமுதாயச் சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய சாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம்; இதுவே தக்க வாய்ப்பு- _ இப்படிப் பேசியவர்தான் வெள் ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்.

ஜாதி பற்றிய சிந்தனை அவருக் கில்லை என்று எழுதுவது அசாத்திய கற்பிதமே!

எத்தனையோ எடுத்துக் காட்டு களைச் சொல்ல முடியும்.

கோயில்களில் எல்லாச் சாதி யினரும் குருக்களாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிகளைப் பிராமணர் அல்லாதார் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆகமப் புரோகித பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டு, திராவிட பாஷையிலேயே புத்தகங் களும் எழுதிப் பயிற்றுவிக்கப் படவேண்டும் என்று தம் கருத்தைத் திராவிடனில் எழுதி மக்களிடையே சமுதாயச் சமநிலை உணர்வைத் தூண்டினார்.

வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு - பக்கம் 86)

பிராமணர்கள் கடவுளின் முகத்திலிருந்து தோன்றியவர்கள். மற்ற இனத்தார் பிற உறுப்புகளில் இருந்து தோன்றியவர்கள் என்று கூறப்படும் மனுநூலைக் கண்டித்துத் திராவிடர் பண்பாடு இதற்கு மாறுபட்டது என்பதை விளக்கினார். திருவள்ளுவர், அவ்வையார் போன்றோரின் கருத்துக் களை எடுத்துக் கூறி மக்கள் அனை வரும் சமம் என்ற கருத்தை வலியு றுத்தினார்.

(வெள்ளுடை வேந்தர் தியாக ராயரின் வாழ்வும், பணியும் - முனைவர் பி.அரசு - பக்கம் 85)

இதற்கு மேலும் தியாகராயரின் சமூகச் சிந்தனைக்கும், ஜாதி பற்றிய அவரின் கோட்பாட்டுக்கும் எடுத்துக் காட்டுகள் தேவைப்படாது.

ஒரு வேடிக்கை. ஜாதி ஒழிப்புச் சிந்தனையாளர்களை ஜாதிச் சிறையில்அடைத்து அவர்களைச் சிறுமைப்படுத்துவதனால், ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட நம் சமுதாய மக்கள் எந்தப் பலனைத் தட்டிப் பறிக்கப் போகிறார்களாம்? வேறு எதைத்தான் சாதிக்கப்போகிறார்கள்? எந்தப் பார்ப்பனராவது தன் சொந்த இனத்தின் தலைவர்களைக் காட்டிக் கொடுக்கிறார்களா? கொலைகாரரையே ஜெகத்குரு என்றுதானே தூக்கிக் கொண்டு ஆடுகிறார்கள்?

நண்பர்கள் யார்? பகைவர்கள் யார்? என்பதை அடையாளம் காண்பதில் கூட நம் தோழர்களுக்குத் தடுமாற்றம் இருக்கலாமா?
இன்னும் எத்தனை பெரியாரும் அம்பேத்கரும் தோன்ற வேண்டுமோ தெரியவில்லையே!

ஓர் அபாண்டம்

நீதிக்கட்சிக்குத் தலைமை வகித்த பி.தியாகராஜ செட்டி மேலும் ஒரு துரோகத்தையும் செய்தார். 1821 செப்டம்பரில் கடிதமொன்றை பிரிட் டிஷ் ஆட்சியாளருக்கு எழுதினார்! ஆதி திராவிடத் தொழிலாளர்களை நகரை விட்டு அப்புறப்படுத்தி விடலாம் என்று பிரிட்டிஷ் அரசுக்கு அந்தக் கடிதத்தில் தியாகராஜ செட்டி ஆலோசனை தெரிவித்திருந்தார் என்று தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் முண்டமாக எழுதியுள்ளார். எம்.சி. ராஜாவை சாட்சி போட்டு எழுதியுள்ளார்.

எப்பேர்ப்பட்ட மனிதர் இவருக்குச் சாட்சியாகக் கிடைத்துள்ளார்? அண்ணல் அம்பேத்கரின் முதுகில் குத்திய புண்ணியவான்தான் இவருக் குக் கிடைத்த அக்மார்க் சாட்சியோ!

இன்னும் சொல்லப்போனால் நீதிக்கட்சிதான் முதன் முதலாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கு அமைச்சர்பதவியை அளித்து மகிழ்ந்தது. அந்த வாய்ப்பினைப் பெற்றவர்தான் இந்த மயிலை சின்னத்தம்பி ராஜா (எம்.சி.ராஜா).

இவரும், ஜான் ரத்தினமும் சேர்ந்து ஏற்பாடு செய்த கூட்டம்தான் பிரசித்தி பெற்ற சென்னை சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலை பொதுக்கூட்டம் (7-.10.-1917). பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அது. நாயரின் புகழ் பெற்ற உரையாக அது என்றும் பேசப்படும்.

டாக்டர் நாயர் தொடங்கும் போதே எப்படிப் பேசினார்? என் மாபெரும் - முதுபெரும் தலைவர் பிட்டி தியாகராயச் செட்டி யார் வள்ளலார் அவர்களே! என் ஆதி திராவிடர் தோழர்களே!, தோழி யர்களே! உங்கள் அனைவருக்கும், உங்கள் மாலை மரியாதைகளுக்கும், உங்கள் உற்சாக ஆரவாரங்களுக்கும் என் தாழ்மையான நன்றி கலந்த வணக்கம்.

உங்களை ஆதி திராவிடர்களென பெருமையோடு விளித்தேன். காரணம் இந்நாட்டில் இரு இனங்களுண்டு. ஒன்று இந்நாட்டின் சொந்தக்காரர் களான நம் திராவிடர் இனம். மற்றொன்று நாம் அசட்டையாய்த் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டுக்குள் நுழைந்துவிடும் திருடன் போன்ற ஆரியர் இனம் என்றெல்லாம் பேசினார்.

நான்காம் ஜாதியான சூத்திரர்களும், அவர்ணஸ்தர்களான பஞ்சமர்களும் தான் இந்நாட்டின் கறுப்பர்களான திராவிடர்கள் என்றார்.

1917 இல் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசிய சென்னை ஸ்பர்டாங் சாலையில் கூடியிருந்த பஞ்சமர்களைப் (ஆதி திராவிடர்களை) பஞ்சைகள் என்றும், இழிசினர் என்றும், வீணர்கள் என்றும் இந்து ஏடு எழுதியுள்ளதைக் கண்டித்து நான்பிராமின் ஏடு எழுதியது (14-.10.-1917).

மாநகராட்சியின் ஆளுகைக் குட்பட்ட முறையில் பல பள்ளிகள் தொடங்கப்பெற வேண்டுமென்றும், அவற்றில் இலவசக் கல்வி அளிக்க வேண்டுமென்றும் தியாகராயர் பலமுறை எடுத்துக் கூறி வந்தார். அதன் விளைவாக மாதிரிப் பள்ளிகள் பல ஏற்படுத்தப்பட்டன. 1915_-16 ஆம் ஆண்டுகளில் பல பள்ளிகள் சிறப்பாகத் தாழ்த்தப்பட்ட (பஞ்சமர்) மக்களுக்காக நடத்தப்பட்டன. அவற்றில் அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. மாதிரிப் பள்ளிகளில் பாடத்திட்டம் வகுத்தல், பள்ளிகளைச் சீர்படுத்துதல் ஆகிய வற்றைக் கவனிக்க அமைக்கப் பட்ட குழுவில் தியாகராயர் உறுப்பினராக இருந்து அரும் தொண்டாற்றினார்.

முதன் முதலாக பள்ளிகளில் இலவச உணவை அறிமுகப் படுத்தியது நீதிக்கட்சித் தலைவரான தியாகராயர் மாநகராட்சித் தலைவராக இருந்தபோதுதானே!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அறிமுகப் படுத்தப்பட்டு, பிறகு வேறு சில இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

இந்த உணவுத் திட்டத்தால் பலன் பெற்றவர்கள் பெரும்பாலும் யாராக இருக்க முடியும்? இந்தத் திட்டத்தால் மாணவர்கள் வருகை 3075 லிருந்து 3705 ஆக உயர்ந்ததே!

பஞ்சமர் என்று அந்தக் காலக் கட்டத்தில் அழைக்கப்பட்ட ஆதி திராவிடர்களின் பிள்ளைகளை சென்னை மாநகராட்சி தன் மாதிரிப் பள்ளிகளில் சேர்க்க முனைந்தது. இதைக் கண்டித்தும், தாழ்த்தப் பட்டவர் குழந்தைகளுக்குத் தனிப் பள்ளிக் கூடம் அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்து நேசன் என்ற தேசிய ஏடு எழுதியது (18-.1.-1918)

உண்மைகள் இவ்வாறு இருக்க வாய் புளித்ததோ, மாங்காய் புளித் ததோ என்று சகட்டு மேனிக்கு எழுத லாமா? நிதானம் தேவையில்லையா?
- கவிஞர் கலி. பூங்குன்றன்
- (சந்திப்போம் மீண்டும்.)
விடுதலை ஞாயிறு மலர் 29-04-2012
http://viduthalai.in/page-1/32942.html 

No comments:


weather counter Site Meter