Pages

Search This Blog

Saturday, April 14, 2012

வளமிக்க இந்நாட்டில் அறிவுக்குத்தானே பஞ்சம்?

பேரன்புமிக்க தலைவர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே! இந்தக் கூட்டம் திராவிடர் கழகத்தின் சார்பாக கூட்டப்பட்ட கூட்டமாகும்.

திராவிடர் கழகம் சட்டசபைக்கு நிற்பது அல்ல; கழகத்தின் பேரால் பொதுத் தொண்டால் வயிறு வளர்க்கும் ஸ்தாபனமும் அல்ல; பொதுமக்களுக்கு அறிவுப் பிரச்சாரம் செய்து வரும் இயக்கம் அறிவுறுத்த இவன் யார் என்று எண்ணலாம். நான் மக்களுக்கு அறிவுறுத்துவது எனது கடமையாகக் கொண்டவன்.

நமது மக்களுக்கு எந்தவிதமான குறையும் இல்லாத இயற்கை அமைப்பைக் கொண்ட நாடாகும், நமது நாடு. இப்படிப்பட்ட நாடு மற்ற நாட்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது காட்டுமிராண்டி நாடாக இருக்கக் காரணம் என்ன?

நாம் காட்டுமிராண்டியா என்ற அய்யம் பலருக்குப் பிறக்கும். சந்தேகம் இல்லாமல் நாம் காட்டு மிராண்டிகள்தான். இதை மெய்ப்பிக்க வேண்டுமா னால், உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதி நம் நாட்டில்தானே உள்ளது? கழுதை, நாய் இவற்றிடம் கூட இல்லாத ஜாதி நம்மிடையே தான் உள்ளது.

அடுத்து நாம் காட்டுமிராண்டிகள் என்பதற்கு நமக்கு இருக்கின்ற மாதிரி கடவுள்கள் உலகில் வேறு எங்காவது உண்டா? எத்தனை கடவுள்? எவ்வளவு ஒழுக்கம், நாணயம் அற்றதுகள் எல்லாம் கடவுள்கள்? எவ்வளவு மடத்தனம்?

எனவே, இப்படிப்பட்ட ஜாதி, கடவுள் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவது எவ்வளவு மகாமகா காட்டுமிராண்டித் தனம், நீங்கள் சிந்திக்க வேண்டும். நம் கடவுளோடு மட்டும் நிற்காதீர்கள். நமது மதம் எவ்வளவு முட்டாள்தனமான மதம்? மதம் என்றால் நாமம், சாம்பல் அடித்துக் கொள்ளத் தெரியும். இந்து மதம் என்றால் என்ன என்று எவனுக்காவது தெரியுமா?

இதுதான் நம் மதம், இதனை நாம் ஏற்றுக் கொண்டு இதன் பேரால் கீழ் ஜாதியாகவே உள்ளோம்.

அடுத்து நமது சாஸ்திரங்கள், நமக்கு இருக்கும் காட்டு மிராண்டி சாஸ்திரங்கள், புராணங்கள் உலகில் வேறு எங்காவது உண்டா?

பெண் ரொம்ப அழகுதான். 32 லட்சணத்தில் 30 இருக்கின்றது. மூக்கும், கண்ணும் இல்லாவிட்டால் என்ன பிரயோசனம்? அதுபோலத்தான் இவை ஆகும்.

இன்னும் சொல்லுகின்றேன், இந்த நாட்டில் உள்ள இத்தனைக் கோவில்கள் உலகில் எந்த நாட்டிலாவது உண்டா? இதன்பேரால் நடக்கின்ற மடத்தனம் உலகில் எங்காவது உண்டா? ஒவ்வொரு கோவிலிலும் 50 லட்சம்; 80 லட்சம்; கோடி இப்படிப் போட்டாலும் கட்ட முடியாது. இவைகளால் ஒரு காதொடிந்த ஊசி நன்மையாவது உண்டா?

தோழர்களே, நான் முன் கூறியதுபோல நமது நாடு எல்லா வளப்பமும் பொருந்திய இயற்கை அமைப்புடையது. ஆனால், அறிவு மட்டும்தான் குறைவாக உள்ளது. இதனை எடுத்துக் காட்டி பிரச்சாரம் செய்வதுதான் எங்கள் தொண்டாகும். நான் இன்று நேற்று செய்யவில்லை. காங்கிரசை விட்டு வெளிவந்த 30, 35 வருஷத்திய தொண்டு இதுதான். நம்மை மடையர்களாக காட்டுமிராண்டிகளாக ஆக்கி வைத்துள்ள இந்தக் கடவுள், மதம், சாஸ்திரம், ஜாதி இவற்றை எல்லாம் எதிர்த்துப் போராடுகின்றேன். 1926-இல் குடிஅரசுவில் என்ன கொள்கைகளை வைத்து எழுதினேனோ அதே கொள்கைப்படிதான் இன்றும் பாடுபடுகின்றேன். கொஞ்சங்கூட மாற்றிக் கொள்ளவில்லை.

இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படிப்பட்ட கேடானவைகளைப் பற்றி எடுத்துச் சொல்லி மாற்றவும், அறிவுப் பிரச்சாரம் செய்யவும் எவருமே முன்வரவில்லை. 2,500 ஆண்டுகளுக்கு முன் புத்தர் தோன்றி அறிவுப் பிரச்சாரம் செய்தார். அவருக்குப் பிறகு அவரது மார்க்கமும், அவரைப் பின்பற்றியவர்களும் பார்ப்பனரால் ஒழிக்கப்பட்டு விட்டனர்.

அப்படி அறிவுப் பிரச்சாரம் செய்த புத்தனையும், சமணனையும் ஒழித்துக்கட்ட தலைசிறந்து விளங்கி யதுதான் இந்த காஞ்சிபுரம் ஆகும். புத்தருக்குப் பிறகு எவரும் தோன்றவே இல்லை. நாங்கள்தான் துணிந்து அறிவுப் பிரச்சாரம் செய்கிறோம்.

எங்களைப் போல வேறு எவரும் இந்த கடவுள், மதம், சாஸ்திரங்கள், மூடநம்பிக்கைகள், காட்டுமிராண்டித் தன்மைகள் இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்றும், இதனால் நாம் அடைந்துள்ள காட்டு மிராண்டித் தனங்கள் ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றியும் எடுத்துப் பேச மாட்டார்கள்.
எந்த பெரிய மனிதன் அறிவாளி என்பவர்களை எடுத்துக் கொண்டாலும் முன்னோர்கள் சொன்னது, மகான் சொன்னது, அவதார புருஷர்கள் சொன்னது, அதற்கு மாறாக நடக்கக் கூடாது என்பதில் தான் கருத்தைச் செலுத்தி எடுத்துச் சொல்வார்களே ஒழிய, இவற்றைக் கண்டிக்க மாட்டார்கள்.

இவற்றை எல்லாம் சுத்த மடத்தனம், காட்டுமிராண் டித்தனம் என்பது இப்படிப்பட்டவர்களுக்குத் தெரியாது என்பதல்ல. தெரிந்தும் எடுத்துச் சொல்ல அஞ்சு கின்றார்கள்.

இந்த 20-ஆம் நூற்றாண்டில் 1961-ஆம் ஆண்டிலும் விஞ் ஞான, அதிசய அற்புதங்களை எல்லாம் கண்டுபிடித்து சந்திர மண்டலத்துக்குச் செல்லுகின்ற காலத்தில் இப்படிப்பட்ட 2,000, 3,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றி காட்டுமிராண்டிக் காலத்து கடவுள், மதம், சாஸ்திரம், நடப்புகள் இவற்றைக் கட்டிக் கொண்டு அழுவதா?

நாங்கள் இன்று எடுத்துக் கொண்டு பாடுபடும் துறையானது, இதுவரை எவனும் ஈடுபட்டு வெற்றி பெறாத துறையாகும். எவனும் ஈடுபட அஞ்சிய துறையாகும். இன்று நாங்கள் இந்தத் துறையில் துணிந்து பாடுபட்டு வரும் எங்கள் கொள்கைகள் வீண் போகவில்லை. நல்ல பலனை அளித்துத்தான் உள்ளது என்பதை நாங்கள் நன்கு உணருகிறோம்.

தோழர்களே, நான் அடுத்த அரசியலைப் பற்றி சில வார்த்தைக் கூற வேண்டும். அரசியலைப் பற்றி எனக் காகவோ, வேறு யாருக்காகவோ பேச வரவில்லை. உங்களுக்காகப் பேசுகின்றேன்.

எந்தக் கெட்டிக்காரனாக இருந்தாலும், யாராயி ருந்தாலும் உங்கள் மத்தியில் வந்து பேசுவார் களேயானால் பேசுவது எல்லாம் பேசிவிட்டு கடைசியில் தங்களுக்கோ, தங்கள் கட்சிக்கோ ஓட்டு கேட்பவர் களாகவே இருப்பார்கள்.

நான் பேசுகின்றேன் என்றால், நான் பேசிவிட்டு எனக்கோ, எங்கள் கட்சிக்கோ ஓட்டு கேட்கவில்லை. இப்படி இருக்க நீங்கள் யார் பேச்சைக் கேட்கணும்? எவன் ஒருவன் தனக்காகவோ, தங்கள் கட்சிக்காக வோ ஓட்டு கேட்காமல் ஓட்டுப் பற்றி பேசுகின்றானோ, அவனுடைய பேச்சைக் கேட்க வேண்டுமா அல்லது தனக்காக ஓட்டுக் கேட்பவர்கள் பேச்சைக் கேட்க வேண்டுமா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தனக்காக ஓட்டுக் கேட்காத நாங்கள் சுயநலம் இல்லாமல் நடுநிலையில் இருந்து பேசுபவர்கள். நாங்கள், இன்னாருக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறுவதுகூட இன்னாருக்கு ஓட்டுப் பண்ணி கெட்டு விடாதீர்கள் என்பதற்காகத்தான் ஆகும்.

நமது கையில் சரித்திர ஆதாரங்கள் எல்லாம் உள்ளன. நமது நாட்டை மூவேந்தர்கள், பல்லவர்கள், மராட்டியவர்கள், முஸ்லிம்கள், வெள்ளைக்காரர்கள் ஆண்டு இருக்கின்றனர். வெள்ளைக்காரன் போன பிறகு பார்ப்பான் ஆண்டு இருக்கின்றான். அவனுக்குப் பிறகு தமிழன் ஆள்கின்றான்.

இத்தனை பேர்கள் ஆண்டதில் மனிதனுக்கு அறிவு வளர வழி வகுத்துக் கொடுத்திருப்பார்களா? அறிவு ஏற்பட வேண்டும், மானம் ஏற்படச் செய்ய வேண்டும் என்பது மிக மிக முக்கியம். இந்த மூவேந்தர்கள் காலம் முதல் பார்ப்பான் ஆட்சி வருகின்றவரை இந்த அறிவு வளர்ச்சிப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ கவலைப்பட்டு ஆளப்பட்டு இருக்கின்றதா என எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் இந்த நாட்டை ஆளத் தொடங் கின காலத்துக்கு முன்வரை எந்த அரசனாவது எந்த நாயக்கன், முஸ்லிம், மராட்டிய ராசாவாவது ஒரு பள்ளிக்கூடம் மக்கள் படிக்க ஏற்படுத்தினார்களா என்றால் இல்லையே! மாறாக ஏராளமான சமஸ்கிருதப் பள்ளிகள், கோவில், குட்டிச்சுவர்கள் சோம்பேறி களுக்கு மடங்கள் கட்டினார்களே ஒழிய, எழுத் தறிவுக்கு வகை செய்யவில்லையே!

ஏதோ வெள்ளைக்காரன் ஆட்சியில்தான் கொஞ் சம் பள்ளிகள் ஏற்படலாயின. இதுவும் பார்ப்பான் படிக்கப் பயன்பட்டனவே ஒழிய, நமது மக்களுக்குப் பயன்படவில்லை. பார்ப்பானுக்கு வைத்த பள்ளியா னாலும் நம்மை புகாதே என்று தடுக்க முடியவில்லை. அதற்காக நாம் படிக்காது இருப்பதற்கு என்ன என்ன வழியோ அதுகளெல்லாம் செய்யப்பட்டன. நாம் 100-க்கு 6-7 படித்தவர்களாக இருக்கும்போதே பார்ப்பான் மட்டும் 100-க்கு 100 வெள்ளைக்காரன் பள்ளிகளால் படித்து இருந்தார்கள். இந்த வெள்ளைக்காரன் 200 ஆண்டு ஆட்சி செய்து விட்டு அவன் போகும் போது நாம் 100-க்கு 12-14 பேர்கள்தான் படித்து இருந்தோம்.

வெள்ளையன் இந்த நாட்டை விட்டுப் போன பிற்பாடும் காமராஜர் பதவிக்கு வரும் வரையிலும் கூட நாம் 100-க்கு 16 பேர்களே படித்து இருந்தோம். இன்று காமராசர் ஆட்சியில்தான் 100-க்கு 32 பேர்கள் படித்து இருக்கின்றோம் என்று எடுத்துரைத்தார்.

மேலும் பேசுகையில், இன்றைய காமராசர் ஆட்சி மீண்டும் ஏற்பட நாம் காங்கிரசை ஆதரிக்க வேண்டிய அவசியம் பற்றியும், எதிர்க்கட்சிகளின் பித்தலாட்ட பிரச்சாரங்கள் பற்றியும் விளக்கும்போது மழையின் காரணமாக கூட்டம் நிறுத்த வேண்டி வந்தது.

(10.9.1961 அன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 30.9.1961) http://viduthalai.in/e-paper/32040.html

No comments:


weather counter Site Meter