Pages

Search This Blog

Thursday, February 17, 2011

கூட்டணிக் கட்சியே களத்தில் குதித்துவிட்டது

தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்த பிரச்சினையில் தமிழ்நாடு பலவகைகளிலும் எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தி வந்துள்ளது.

மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தி வந்துள்ளது. ஒரு மாதத்துக்குள் இரு தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் கடுமையான எச்சரிக்கையையும், சந்திப்புகளையும் தொடர்ந்து இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் நிரூபமா இலங்கை சென்று பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். இனி தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று உறுதி அளிக்கப்பட்டது.

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற பழமொழிப்படி இப்பொழுது 106 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை சிறைப்பிடித்துச் சென்றுள்ளது.

106 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு எதிராகத் தமிழ்நாட்டில் கொந்தளிப்புப் பீறிட்டுக் கிளம்பியுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 21 பேர் சிங்களக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர் - தாக்கப்பட்டனர் என்று ஒரு சேதி இன்று காலை வெளி வந்துள்ளது.

இனி மேலும் மத்திய அரசிடம் விண்ணப்பம் போடுவதில் பயனில்லை     என்ற நிலையில் தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திமுகவே களமிறங்கிப் போராடும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இலங்கைத் தூதரகத்தின்முன் ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி உள்பட 5000 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளி மாவட்டங்களில் துறைமுக அலுவலகங்களுக்கு முன்பும் ஆளும் திமுக ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாகவும், மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாகவும் இருக்கக் கூடிய திமுகவே போராட்டத்தில்  ஈடுபட வேண்டிய நிலை என்பது அசாதாரணமானது.

இதைப்பற்றிக்கூட விமர்சனம் வெடிக்கக் கூடும். ஆனாலும் இந்த நிலை ஏற்பட்டதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு என்பது குறித்து மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அலுவலகம் தாக்கப்பட்டது என்றவுடன் டில்லியில் உள்ள இலங்கைத் தூதர் சென்னைக்கு ஓடோடி வருகிறார். அந்தவுணர்வு - தமிழக மீனவர்கள் கடலில் சிங்களக் கடற்படையால் தாக்கப்படும்பொழுது உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஏற்படாதா - ஏற்படக் கூடாதா? என்ற கேள்வி எழத்தான் செய்யும்.

அதுவும் இந்தியாவோடு ஒப்பிடும்பொழுது ஒரு சுண்டைக்காய் நாடான இலங்கை எந்தத் தைரியத்தில் இந்திய அரசின் வேண்டுகோளை நிராகரிக்கிறது - இந்திய அரசின் எச்சரிக்கைகளைமீறி தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லுகிறது?

சீனா கொடுக்கும் தைரியமா? பாகிஸ்தான் பக்க பலமாக இருக்கும் என்ற நினைப்பா?

இந்தியாவின் சுயமரியாதைக்கே விடப்படும் சவாலாக இதனை எடுத்துக் கொள்ள வேண்டாமா?

கொஞ்ச நஞ்ச இழப்பா? 1983 தொடங்கி இதுவரை சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 572, காயம்பட்டவர்கள் 1200; அழிக்கப்பட்ட விசைப் படகுகள் 300, சேதப்படுத்தப்பட்ட படகுகள் 600, இதில் காணாமற் போனவர்கள் என்ற ஒரு பட்டியலும் உண்டு; தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் இந்தக் கொடுமையைப் போல் சீக்கியர்களுக்கு வெளிநாட்டில் ஏற்பட்டு இருந்தால் இந்நேரம் ரத்த ஆறு ஓடியிருக்குமே!

ஒரு ஜனநாயக முறையில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்கென்று ஓர் அங்கீகாரம் கிடையாதா?

மாறாக வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டால்தான் மத்திய அரசின் தேக்கம் உடைபடுமா? இது போன்ற வன்முறைகள் வெடிப்பதற்கே காரணம் மத்திய அரசில் சரியான அணுகுமுறையும் செயல்பாடும் இல்லாமைதான்.

இனிமேல் தமிழக மீனவர்கள் தாக்கப்பட மாட்டார்கள் என்று அரசின் சார்பில் ஓர் உத்தரவாதம் கொடுக்கப்பட்டால் அதன்படி நடக்க வேண்டாமா?

அப்படி நடக்கவில்லையென்றால் இலங்கை அரசை உரிய முறையில் இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டாமா? அய்.நா.வில் புகார் கூற வேண்டாமா?

போர்க் குற்றவாளியான ராஜபக்சேமீது நடவடிக்கை எடுக்கக் கோரும் அய்.நா. தீர்மானத்திற்கு எதிராக இந்தியா கை தூக்கும் போது, இலங்கை அரசின் மனோ பாவம் எத்தகையதாக இருக்கும்? என்ன செய்தாலும் இந்தியா தன் பக்கமே இருக்கும் என்ற ஒரு மனப்பான்மை இலங்கை அரசுக்கு இந்தியா ஏற்படுத்தி விட்டது. அந்தத் தைரியத்தில்தான் அப்பாவி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை சுண்டைக்காய் நாடான இலங்கை அரசு தொடர்ந்து தொடுத்துக் கொண்டே வருகிறது.

கூட்டணியில் உள்ள கட்சியே வெளிப்படையாகக் களத்தில் இறங்கிப் போராடும் ஒரு நிலையை திமுக மேற் கொண்டதானது - அரசியலில் ஓர் எச்சரிக்கை மணியின் ஓசையாகும்.

இதனை மத்திய அரசு புரிந்து கொண்டு உரிய முறையில் செயல்படத் தவறுமேயானால், அதன் விளைவை வட்டியும் முதலுமாக இந்தியா சுமக்க நேரிடும் என்பது கல்லுப் போன்ற உண்மையாகும்.

இந்தியா செயல்படுமா? எங்கே பார்ப்போம்!
http://viduthalai.in/new/page-2/3608.html 

No comments:


weather counter Site Meter