Pages

Search This Blog

Monday, February 14, 2011

ஆவணங்களை திட்டமிட்டு அழித்த மோடி (2) - தெகல்கா அம்பலம்

2002 குஜராத் கலவரங்களை விசாரிக்க உச்ச நீதி மன்றம் நியமித்த சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையில் முதல்வர் நரேந்திர மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாற்று களில் உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டவை கீழ்வருமாறு:

(1) குல்பர்கா சொசைட்டியிலும், மற்ற பல இடங்களிலும் முஸ்லிம்கள் மீது பயங்கரமான வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்ற உண்மைக்குப் பிறகும், வன்முறைகள் பற்றி மாநில அரசின் பிரதிபலிப்பு எவர் ஒருவரும் எதிர் பார்க்கும் வகையில் அமைந்திருக்கவில்லை. ஒவ்வொரு செயலுக்கும், அதற்குச் சமமாக எதிர்வினை யாற்றும் செயல்கள் விளையவே செய்யும் என்று பேசியதன் மூலம், குல்பர்கா சொசைட்டி, நரோடா பாடியா மற்றும் இதர இடங்களில் நிலவிய வன்முறைக் கலவரச் சூழ்நிலையின் தீவிரத்தை நீர்த்துப் போகச் செய்யவே முதலமைச்சர் முயன்றார். (அறிக்கையின் 69 ஆம் பக்கம்). கோத்ரா மற்றும் அதற்குச் சுற்றுப் புறத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் குற்றவியல் மனப்பான்மை யைக் கொண்டிருந்தனர் என்று சிலர் மீது குற்றம் சாற்றி விடுக்கப்பட்ட மோடியின் அறிக்கை, ஒரு முதல் அமைச்சரிடமிருந்து, ஒரு பிரிவு மக்கள் மீது ஒட்டு மொத்தமாக குற்றம் சாற்றுவதாக அமைந்துள்ளது என்று சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவன் கூறியுள்ளார். (தலைவரின் குறிப்புகள்: பக்கம் 13)

விசாரணை அதிகாரி மேலும் குறிப்பிடுகிறார்: சிறுபான்மை இன அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி மோடி கூறியதை, கோத்ராவைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரங்களைப் பற்றி ஒரு கடுமை யான கண்டனத்தை அவர் தெரிவிக்காமல் இருந்ததுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், மாநிலம் கடுமையான மதக் கலவரங்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நெருக்கடியான ஒரு நிலையில் முதல்வர் ஒரு பாரபட்ச நிலையை மேற்கொண் டிருந்தார் என்பதையே சுட்டிக்காட்டுகிறது. (பக்கம் 153)

(2) மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான ஒரு செயலாக, கலவரங்களின் போது, அசோக் பட் மற்றும் ஜடேஜா ஆகிய இரு மூத்த அமைச்சர்களையும் மாநகரக் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையிலும், மாநில காவல்துறைக் கட்டுப்பாட்டு அறையிலும் மாநில அரசு இருக்கச் செய்துள்ளது. எந்தவித குறிப்பிட்ட செயல்திட்டமும் இன்றியே இந்த இரு அமைச்சர்களும் காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர் என்று சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். காவல்துறையின் பணியில் குறுக்கிட்டு, கள அலுவலர்களுக்கு தவறான முடிவுகளை, கட்டளை களை அளிக்கவே அமைச்சர்கள் கட்டுப்பாட்டு அறைகளில் இருக்கச் செய்யப்பட்டனர் என்று கூறப்படுவதற்கு இச்செயல் வலு சேர்க்கிறது. நரேந்திரமோடி உள்துறை அமைச்சராக இருந்தார் என்பதால், இந்த ஏற்பாட்டுக்கு அவரது ஆசி இருந்தது என்ற சந்தேகம் வலுப்படுகிறது. (தலைவரின் குறிப்பு பக்கம் 12)

(அசோக்பட்டின் செல்போன் அழைப்புகளைப் பரிசீலித்ததில், நரோடா காவுன் மற்றும் நரோடா பாடியா படுகொலைகளில் முக்கியமாக சம்பந்தப்பட்டவர் என்று கருதப்படும் விசுவ இந்து பரிசத் தலைவர் ஜெய்தீப் படேலுடன் அசோக்பட் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வருகிறது. அகமதாபாத் படுகொலைகளுக்குப் பொறுப்பான முக்கிய குற்றவாளியாக சிறப்பு விசாரணைக் குழு கருதும் முன்னாள் மாநில உள்துறை உதவி அமைச்சர் கோர்தான் ஜடாபியாவுடனும் அசோக் பட் தொடர்பு கொண்டிருந்தது தெரிய வந்தது.)

(3) கலவரங்களின் போது நடுநிலை வகித்து, படுகொலைகளைத் தடுத்த காவல் துறை அலுவலர்களை முக்கியத்துவம் அற்ற பணிகளுக்கு மாநில அரசு மாற்றியது என்பதை சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை உறுதிப் படுத்துகிறது. ஆளும்கட்சி உறுப்பினர்களை எதிர்த்ததாக அறியப்பட்ட நிகழ்ச்சிகளுக்குப் பின் உடனடியாக அந்த அலுவலர்கள் மாற்றப்பட்டனர் என்பதால், இந்த மாறுதல்கள் அனைத்தும் கேள்விக்கு உட்பட்டவை என்று விசாரணைக் குழுத் தலைவர் ராகவன் கருதுகிறார்.

(5) கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை நேரில் சென்று காண ஒரே நாளில் 300 கி.மீ. பயணம் செய்த மோடி. அதிக அளவிலான எண்ணிக்கை கொண்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்ட அகமதாபாத் கலவரப் பகுதிகளைச் சென்று பார்க்காததன் மூலம் வேறுபாடு காட்டியுள்ளார். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவ இடத்தை உடனே சென்று பார்த்த மோடி, அகமதாபாத் கலவரங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்க்காததற்கு மோடி எந்த குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று விசாரணைக் குழுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார். (விசாரணைக் குழுத் தலைவரின் குறிப்பு: பக்கம் 8)

(6) உணர்ச்சி மிகுந்த கலவர வழக்குகளில் விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்தவர்களையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களை அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞர்களாக குஜராத் அரசு நியமித்து உள்ளது என்பதை சிறப்பு விசாரணைக் குழு உறுதிப் படுத்தியுள்ளது. இது பற்றி அந்த அறிக்கை கூறுகிறது: அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை நியமிப்பதில் அரசியல் அமைப்புகளைச் சார்ந்த வழக்கறிஞர்களுக்கே அரசு முன்னுரிமை அளித்துள்ளது என்று தோன்றுகிறது. (பக்கம் 77). சிறப்பு விசாரணைக் குழுத் தலைவர் மேலும் கூறுகிறார்: இவ்வாறு அரசு குற்றவியல் வழக்கறிஞர் களாக கடந்த காலத்தில் நியமிக்கப்பட்டவர்களில் பலர் உண்மையில் ஆளுங்கட்சி அல்லது அதற்கு ஆதரவாக இருக்கும் அமைப்புகளின் அரசியல் தொடர்புடைய வர்களே. (தலைவரின் குறிப்புகள்: பக்கம் 10)

(7) 28-2-2002 அன்று சட்டத்திற்குப் புறம்பாக விசுவ இந்து பரிசத் அமைப்பு அறிவித்த முழு அடைப்புப் போராட்டத்தினை (பந்த்) தடுத்து நிறுத்த குஜராத் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்லா மல், அதற்கு மாறாக பந்துக்கு பா.ஜ.க. ஆதரவு அளித்தது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. (பக்கம் 69)
(பந்த் என்ற பெயரில் விசுவ இந்து பரிசத்தும், பா.ஜ.க. தலைவர்களும் திரட்டிய இந்து கொலைவெறிக் கும்பல்களே நரோடா மற்றும் குல்பர்கா சொசைட்டி ஆகிய இடங்களில் 2002 பிப்ரவரி 28 அன்று பயங்கரமான படுகொலை களைச் செய்தனர் என்பதை நினைவில் கொள்வது முக்கியம்.)

(8) நரோடாவில் 28-2-2002 இரவு 12 மணி வரையிலும், அகமதாபாத் நகரின் மேகானி நகரில் இரவு 2 மணி வரையிலும் காவல்துறை நிருவாகம் ஊரடங்கு சட்டத்தை பிரகடனப்படுத்தவில்லை என்பதற்கு எந்த விதக் காரணமும் கூறப்பட முடியவில்லை என்று விசா ரணை அறிக்கை தெரிவிக்கிறது. ஊரடங்கு சட்டம் அமல் படுத்திய நேரத்திற்கு முன்னமேயே இரண்டு இடங்களிலும் சூழ்நிலை கட்டுக்கடங்காமல் மோசமாகப் போய்விட்டது; படுகொலைகள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன.

(9) மத உணர்வுகளைத் தட்டியெழுப்பி, கலவரத்தைத் தூண்டிடும் விதத்தில் பத்திரிகைத் துறையினரில் ஒரு பிரிவினர் செய்திகளை வெளியிடுவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாநில புலனாய்வுத் துறை கள அலுவலர்கள் மோடிக்கு அறிக்கை அளித்த பின்னும், மோடியின் அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவிக்கிறது. இது மதக்கலவரச் சூழலை மேலும் மோசமாக ஆக்கிவிட்டது.

(10) சட்டமன்றத் தேர்தலை விரைவில் கொண்டு வரச் செய்யும் நோக்கத்துடன் 2002 ஆகஸ்ட் மாதத்தில் மத்தியத் தேர்தல் ஆணையத்திற்கு மோடி அரசு, மாநிலத்தில் மதக் கலவரங்கள் இன்னமும் புகைந்து கொண்டிருக்கும் நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலை சரியாக இருக்கிறது என்ற தவறான தகவல் அளித்து தவறாக வழிகாட்டியது என்று சிறப்பு விசாரணைக் குழு உறுதிபடத் தெரிவிக்கிறது.
(மாநில அரசின் ஆட்சிக் காலம் முடிவடைவதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே 2002 ஆகஸ்ட் 19 அன்று சட்டமன்றத்தை பா.ஜ.க. கலைத்துவிட்டு, விரைவில் தேர்தல் நடத்தக் கோரியது. கலவரங்களை அடுத்து மாநிலத்தில் மதவழியாக மக்கள் பிளவுபட்டுள்ள சூழ்நிலை யைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள பா.ஜ.க. விரும்பியது என்பது தெளிவாகத் தெரிகிறது.)

(11) நரோடா பாடியா மற்றும் குல்பர்கா சொசைட்டி படுகொலை வழக்குகளில் மாநிலக் காவல்துறை மோசமான கண்துடைப்பு விசாரணையை மேற்கொண்டது என்பதை சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது. கலவரத்தில் தொடர்பு கொண்ட சங்பரிவார் உறுப்பினர் கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் செல்போன் அழைப் புகள் பற்றிய ஆவணங்களை வேண்டுமென்றே காவல் துறை பரிசீலிக்காமல் விட்டுவிட்டது. அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் குஜராத் விசுவ இந்து பரிசத்தின் தலைவர் ஜெய்தீப் பட்டேல் மற்றும் பா.ஜ.க. அமைச்சர் மாயா கோட்னானி ஆகியோர். இந்த செல்பேசி அழைப்பு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டிருந்தால், குற்றங்களில் அவர்களுக்கு உள்ள தொடர்பை மெய்ப்பிக்கும் சாட்சிகளாக அவை பயன்படுத்தப்பட்டிருக்க இயலும். (பக்கம் 101-105)

(12) கலவரங்களில் பங்குபெற்றோர் என்று கருதப்படும் மூத்த காவல்துறை அதிகாரிகள் பற்றி சிறப்பு விசாரணைக் குழு இப்போது விசாரித்து வருகிறது. அகமதாபாத் மாநகர முன்னாள் காவல்துறை இணை ஆணையர் எம்.கே. தாண்டன் (அவரது பகுதியில்) 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (கலவரங் களுக்குப் பின் கண்டிக்கப்படவும், தண்டிக்கப்பட வும் வேண்டிய அவருக்கு செல்வாக்கு மிகுந்த பணி நியமனங் கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கிடைத்து, இறுதியாக அவர் 2007 ஜனவரியில் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரலாக ஓய்வு பெற்றார்.) அவருக்குக் கீழே காவல் துறை துணை ஆணையராகப் பணியாற்றிய பி.கே.கோண்டியா என்பவரும் படுகொலைகள் நிகழ்த்துவதை விருப்பத்துடன் அனுமதித்த குற்றத்தைப் புரிந்தார் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு அதிகாரிகளும் தங்கள் கடமையை மட்டும் ஒழுங்காகச் செய்திருந்தால் நூற்றுக் கணக்கான முஸ்லிம்களின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்க இயலும் என்று சிறப்பு விசாரணைக் குழு தெரிவிக்கிறது. (பக்கம் 48-50) இந்த அதிகாரிகளில் எவர் ஒருவரும் தங்கள் கடமை தவறுதலுக்காக மோடி அரசால் கேள்வி கேட்கப்படவில்லை.

(13) மோடிக்கு நேரடியாக தனது அறிக்கையை அளித்து வந்த, முன்னாள் உள்துறை உதவி அமைச்சராக இருந்த கோர்தான் ஜடாபியாவுக்கும் கலவரங்களில் உள்ள தொடர்பு பற்றிய சாட்சியங்களையும் சிறப்பு விசாரணைக் குழு கண்டுபிடித்துள்ளது. நரோடா பாடியா படுகொலை வழக்கில் ஏற்கனவே மற்றொரு பா.ஜ.க. அமைச்சரான மாயாபென் கோட்னானி என்பவரும் குற்றம் சாற்றப்பட்டுள்ளார். ( பக்கம் 168-169)

நன்றி: தெகல்கா
தமிழில்: த.க.பாலகிருஷ்ணன்
http://viduthalai.in/new/home/archive/3376.html

No comments:


weather counter Site Meter