Pages

Search This Blog

Wednesday, November 17, 2010

மீண்டும் அமைச்சரவையில் ஆ.ராசா காங்கிரஸ் உறுதி -ராஜினாமாவின் நிஜ பின்னணி


எந்த நாடாளுமன்றத்தில் இந்தியாவின் பெருமை பற்றி ஒபாமா பேசிவிட்டுச் சென்றாரோ, அவர் சென்ற மறுநாளிலிருந்து அதே நாடாளுமன்றம் எதிர்க்கட்சியினரின் அமளியால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.

அதேசமயத்தில்தான், ஆ.ராசாவை பதவி நீக்குவதன் மூலம் மத்திய அரசுக்கு தி.மு.க. தன் ஆதரவை விலக்கிக்கொண்டால், காங்கிரஸை அ.தி.மு.க. ஆதரிக்கும். 18 எம்.பி.க்களின் ஆதரவை என்னால் பெற்றுத்தர முடியும் என ஜெ. பேட்டி கொடுத்து பரபரப்பைக் கிளப்பிப் பார்த்தார். இதன்பின், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் செய்தித் தொடர்பாளருமான திரிவேதி, ""தி.மு.க. வுடனான எங்கள் உறவு நீடிக்கிறது'' என்றவர், ""பதவி நீக்கம் பற்றிய கேள்விக்கு, அசோக்சவானும் கல்மாடி யும் காங்கிரஸ்காரர்கள் என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ராசா, தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்பதால் அந்தக் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும்'' என்றார்.

வியாழனன்று மத்திய நிதியமைச் சர் பிரணாப்முகர்ஜியை தி.மு.க. எம்.பி. கனிமொழி சந்தித்தார். நாடாளு மன்றத்தை ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடக்கிப் போட்டிருப்பது பற்றி இருவரும் பேசினாலும், இந்தச் சந்திப்பின்போது ஆ.ராசாவின் ராஜினாமா பற்றிய கேள்வி எழவில்லை என்கின்றனர் உண்மை நிலவரம் அறிந்தவர்கள். திங்களன்று எதிர்க்கட்சியினரின் கேள்விகளை எதிர்கொள்வது, பா.ஜ.கவும் இடதுசாரிகளும் ஒரே அணியில் நிற்பதை எப்படி தவிர்க்கச் செய்வது என்பது போன்ற வியூக முறைகளே இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டுள்ளது.

மீடியாக்கள் பலவித வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தன. சோனியா சொல்லித்தான் ஜெ. அப்படியொரு பேட்டியே கொடுத்திருக்கிறார் என்கிற அளவுக்கு வதந்திகள் உச்சத்தை எட்டின. காங்கிரஸ் வட்டா ரத்தில் உண்மையாக என்ன நடக்கிறது என்பதை நேரில் விசாரித்து தெரிந்துகொள் ளும் பொறுப்பை டி.ஆர். பாலுவிடமும் கனிமொழி யிடமும் ஒப்படைத்தது தி.மு.க. தலைமை.

வெள்ளியன்று டெல்லியில் மீடியாக்களை சந்தித்த ஆ.ராசா, ஸ்பெக்ட் ரம் ஒதுக்கீடு சட்டப் படிதான் நடைபெற்றுள் ளது என்பதையும், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நீதியின் முன் நிரூபிப்பேன் என்றும் ராஜினாமா செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரி வித்தார். அன்று மாலையில் சென்னை திரும்பிய ராசா, சி.ஐ.டி காலனியில் கலைஞரை சந்தித்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் சட்டப்படி நடந்திருப்பது தொடர்பான விவரங்களை வரிசையாகத் தெரிவித்ததுடன், பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அதே நடைமுறைதான் இப்போதும் செயல்பட்டி ருக்கிறது என்பதையும் விளக்கினார். அத்துடன், "நான் பதவியில் நீடிப்பதால் நமது கூட்டணிக்கோ கட்சிக்கோ நெருக்கடி என்று தலைவர் கருதினால் இப்போதே ராஜினாமாவுக்குத் தயாராக இருக்கிறேன்' என்று சொல்ல, ராஜினாமா முடிவை நிராகரித்துவிட்டார் கலைஞர். ஆங்கில மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்த கலைஞர், ராசாவின் நிலையை முழுமையாக ஆதரித்தே பேசினார்.

சனிக்கிழமையன்றும் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மீடியாக்களில் பரபரப்பான செய்தியாக வெளியிடப்பட்டது. காரணம், ஜி-20 மாநாடு முடித்துத் திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தற்போது வலுவாக இருப்பதாகச் சொன்னதோடு, ஜெயலலிதாவின் அழைப்பு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், அதுபற்றி கட்சி மேலிடம்தான் முடிவு செய்யவேண்டும் என்றும் சொன்னார். மீடியாக்களிலும் தி.மு.க. வட்டாரத்திலும் இது விவாதத்தைக் கிளப்பியது. காங்கிரசை நம்பி தி.மு.க.வின் கூட்டணிப் பயணம் தொடர முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், சோனியாவின் அரசியல் ஆலோசகரான அகமது பட்டேல் தரப்பிட மிருந்து மீடியாக்களுக்கு கசிந்த செய்தியில், பிரணாப் முகர்ஜி சென் னைக்கு வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டது. டெல்லியின் உண்மை நிலவரம் என்ன என் பதை அறிந்துகொள் வதில் டி.ஆர்.பாலுவும் கனிமொழியும் தீவிர மாயினர். சென்னைக்கு பிரணாப் வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கப் படவில்லை என்பது அவர்களுக்குத் தெரிய வந்ததுடன், ராகுல் காந்தியின் ஆதரவாளர் களான மாணிக்தாக்கூர் போன்றவர்களும் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் போன்ற சீனியர்களும் கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம் என்ன நினைக்கிறது என்பதை இருவரிடமும் விளக்கியுள்ளனர்.

தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்பது சோனியாவின் உறுதியான நிலை. பிரச்சினையில்லாத அலையன்ஸ் பார்ட்னராக தி.மு.க. இருப்பதை சோனியாவும் மூத்த தலைவர்களும் உணர்ந்துள்ளனர். ஜெ.வையும் அவர் பக்கம் இருக்கும் குமாரசாமியையும் நம்பி கூட்டணி அமைக்கமுடியாது. அவர்களின் டிமாண்ட் எக்கச்சக்கமாக இருக்கும் என்று தான் மேலிடம் நினைக்கிறது என தெரிவித் துள்ளனர். அதேநேரத்தில், ராசாவின் ராஜினாமா குறித்து தி.மு.க.வே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என காங்கிரஸ் நினைப்பதும் தி.மு.க. தரப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படியே அலைக்கற்றைகள் ஒதுக்கப் பட்டிருப்பதால் ராஜினாமா செய்ய வேண்டியதில்லை என்பதுதான் தி.மு.க. தலைமையின் முடிவாக இருந்தது.

நவம்பர் 14 ஞாயிறன்று தமிழக அமைச்சர் துரைமுருகன் சட்ட ஆலோசனை தொடர்பாக டெல்லிக்குக் கிளம்ப, ஏர்போர்ட்டிலேயே மீடியாக்களின் பரபரப்பு அதிகமாகிவிட்டது. விரைவாக பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிவிட்டார் அமைச்சர். நேரு பிறந்தநாளையொட்டி நாடாளு மன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நாடாளுமன்றத்திலேயே காங்கிரசின் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டம் நடந்தது. சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், பிரணாப்முகர்ஜி, அகமது பட்டேல் ஆகியோர் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் நாடாளுமன்றம் முடங்குவது பற்றி ஆலோசிக்கத் தொடங்கினர். 15 நிமிடங்கள் மட்டுமே இந்தக் கூட்டம் நடந்தது.

இப்போதைய நிலையில் நமக்கு வேறு வழியே இல்லை. ராசா பதவி விலகுவது ஒன்றுதான் எதிர்க்கட்சிகளை சமாளிக்கவும், நாடாளுமன்றத்தை நடத்தவும் உள்ள ஒரே வழி என்று சீனியர்கள் சொல்ல, அப்படியென்றால் இதை நமது கூட்டணியின் மூத்த தலைவரான கலைஞரின் மனம் புண்படாதபடி தெரிவிக்க வேண்டும் என்ற சோனியா, நாம் அவரை பிரஷர் பண்ணுவதாக நினைத்து விடக்கூடாது. ரொம்ப கவனம் என்று, தகவலைத் தெரிவிக்கும் பொறுப்பை பிரணாப் முகர்ஜியிடம் ஒப்படைத்திருக்கிறார் சோனியா.

பழைய தலைமைச் செயலகத்தில் இருந்தார் முதல்வர் கலைஞர். ஆ.ராசாவும் உடனிருந்த நேரத்தில்தான் பிரணாப் முகர்ஜியிடமிருந்து போன். பார்லிமென்ட்டை நடத்துவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதனால் ராசா ராஜினாமா செய்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியலை. கேஸை சீக்கிரம் முடித்துவிட்டு, குற்றமற்றவர் என நிரூபித்து அவரே திரும்ப வும் அந்த இலாகாவை எடுத்துக்கொள்ளட் டும். அதுவரை பிரதமர் வசமேதான் ராசாவின் துறை இருக்கும் என்று பணிவான குரலில் பேசியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. ஸாரி.. தவறாக எடுத்துக்க வேண்டாம். வேறு வழியே தெரியலை என்று அவர் திரும்பத்திரும்பச் சொல்ல, இதை எதிர்பாராத கலைஞருக்கு ஷாக். ""டயம் கொடுங்க.. யோசித்து முடிவெடுத்துச் சொல்கிறேன்'' என்று பதில் சொன்ன கலைஞர், சி.ஐ.டி. காலனிக்குத் திரும்பி, டெல்லித் தகவல் பற்றி டி.ஆர்.பாலுவிடமும் ஆ.ராசாவிடமும் பேசுகிறார்.

அவர்கள் சென்றபிறகு, டெல்லியிலிருந்து மீண்டும் அதே குரலில் பிரணாப் முகர்ஜி பேச, கலைஞர் மூட் அவுட்டாகிவிட்டார். ராசாவை மட்டும் ராஜினாமா செய்யச் சொல்வதா தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் பதவிவிலகி, வெளியிலிருந்து அரசுக்கு ஆதரவளிப்பதா என்றெல்லாம் தி.மு.க. தலைமையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்பின், பிரதமருக்கு கலைஞரின் கடிதம் தயாரானது. நல்ல ஆங்கில நடையில் 2 பக்க அளவில் இருந்த அக்கடிதத்தில், 2004-ல் கூட்டணி அமைந்ததிலிருந்து இன்றுவரை அது வலுவாக இருப்பதையும், மத்திய அரசில் இணக்கமான கூட்டாளியாக தி.மு.க. செயல்பட்டு அரசின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் அதில் குறிப்பிட்ட கலைஞர், ""ஆ.ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என்பதுதான் தி.மு.க.வின் நிலை. கூட்டணி தர்மம் கருதியும் அரசுக்கு எங்களால் நெருடல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும்தான் ராஜினாமா முடிவை எடுக்கிறோம். இதன்பிறகும் கூட்டணிக் கட்சியாக இணக்கத்துடன் இருப்போம். காங்கிரசும் அதேபோல் செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என அதில் தெரிவித்திருந்தார். இதேபோல ஒரு கடிதத்தை சோனியாவுக்கும் எழுதினார் கலைஞர்.

இந்தக் கடிதங்களுடன் ஞாயிறு மாலை 5.30 மணி ஜெட் விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டார் கனி மொழி. 6.30 மணி விமானத்தில் டி.ஆர்.பாலுவும் ஆ.ராசாவும் புறப் பட்டனர். விமானநிலையத்தில் மீடியாக்கள் சூழ்ந்தபோது, ராஜினாமா செய்வதற்கான அவசியம் இல்லை என்றே தெரிவித்தார் ஆ.ராசா. டெல்லியில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்த கனிமொழி, கலைஞரின் கடிதத்தைக் கொடுத் ததுடன், கலைஞரின் மன நிலையையும் விவரித்திருக் கிறார். பிரதமர் தனக்கு எதிர்க்கட்சிகளால் சூழ்ந் துள்ள நெருக்கடிகளை விவரிக்க, ராஜினாமா என்பது இறுதியானது.

சோனியாவிடமும் கலைஞரின் கடிதத்தைக் கொடுத்த கனிமொழி, டெல்லி வந்த ஆ.ராசாவிடம் நிலவரங்களைத் தெரிவித்து, ரிசைன் பண்ணும்படி தலைவர் சொல்கிறார் எனச் சொன்னதுடன், தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப் படுவதுதான் என் கடமை. நான் தலைவரிடம் வெள்ளிக் கிழமையே சொல்லிவிட்டேனே.. என்ற ராசா, உடனடியாக பிரதமரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார். பிறகு மீடியாக்களிடம், ""அரசுக்கு நெருக்கடி உருவாகக்கூடாது என்று எங்கள் தலைவர் கலைஞர் எடுத்த முடிவினால் ராஜினாமாவை அளித்துள்ளேன். இதனால், என் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாக ஆகாது. சட்டப்படிதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப் பட்டுள்ளது'' என்பதை மீண்டும் அழுத்தமாக வலியுறுத்திச் சொன்னார்.

தன்னுடைய நியாயத்தை நிலைநாட்ட ஆ.ராசா மேற்கொண்ட உறுதியான போராட்டம் எதிர்பாராத முடிவை நோக்கிச் சென்ற அடுத்த விநாடியே, அவருக்குப் பதில் யார் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராவார் என்ற யூகங்கள் கிளம்ப ஆரம் பித்துவிட்டன. தயாநிதி மாறனுக்கு மீண்டும் அந்தப் பதவி தரப்படும் என்றும், கனிமொழிதான் அடுத்த அமைச்சர் என்றும் ஊடகங்களில் செய்தி பரவ, கனிமொழி உடனடியாக அதை மறுத்தார். ராசாவின் கேபினட் அந்தஸ்துக்குப் பதில் இரண்டு இணையமைச்சர்கள் பதவி தி.மு.க.வுக்கு வழங்கப்படும் என்றும் ராசா வுக்குப் பதிலாக தலித் இனத்தவரான ஏ.கே.எஸ். விஜய னுக்கு ஒரு பதவியும், டி.கே.எஸ்.இளங்கோவ னுக்கு ஒரு இணை யமைச்சர் பதவியும் கிடைக்கும் என்றும் யூகங் கள் பரவியபடி இருந்தன. அதேநேரத்தில், அழகிரி மகன் திருமணத்தை யொட்டி நடந்த நலங்கு விழாவிற்காக ரெயின்ட்ரீ நட்சத்திர ஓட்டலில் மாறன் சகோதரர்கள் ஏற்பாடு செய்திருந்த விருந்து வைபவத்தில் குடும்பத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.

சி.ஐ.டி. காலனியில் அப்செட்டாக இருந்த கலைஞர் அங்கே பேராசிரியர், ஆற்காட்டார், மு.க.ஸ்டாலின், துரை முருகன் உள்ளிட்டோரை அழைத்து ராசாவின் ராஜினாமா குறித்த தனது மன அழுத்தத்தை வெளிப்படுத்தியதுடன், உடனடியாக அறிக்கையும் எழுதினார். (கலைஞர் அறிக்கை-பெட்டிச் செய்தியில்). ராசாவின் பதவி விலகல் அவரது சொந்த மாவட்டமான பெரம்பலூரில் கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியும் கவலையும் கொள்ள வைத்தது. சில தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டதுடன், ஒரு பஸ்ஸுக் கும் தீவைக்க முயன்றனர். ராசாவின் நீலகிரி தொகுதிக்குட்பட்ட மேட்டுப் பாளையத்திலும் 2000 தொண்டர்
கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறுநாள் நாடாளுமன்றம் கூடியபோது, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. ராஜினாமா மட்டும் போதாது என்றதுடன், ஆதர்ஷ் வீடுகள்-காமன்வெல்த் விளையாட்டு- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு நட வடிக்கைக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வலியுறுத்தினர். இதை காங்கிரஸ் நிராகரித்துவிட்டதால், அமளி தொடர்ந்தது. இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

ஆ.ராசா வகித்துவந்த தொலைத்தொடர்புத் துறையை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கியதால் அடுத்தகட்ட பரபரப்பு உருவானது. தி.மு.க.விடமே இத்துறை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாற்றம் குறித்து நம்மிடம் பேசிய ஆ.ராசா தரப்பினர், ""ராஜினாமா கடிதத்துடன் பிரதமரை ராசா சந்தித்தபோதே, இந்தத் துறையை கபில்சிபலிடம் ஒப்படைத்தால், சட்டவல்லுநரான அவரால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டப்படிதான் நடைபெற்றிருக்கிறது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும் என்பதைத் தெரிவித்திருக்கிறார்'' என்றனர்.

டெல்லி காங்கிரஸ் தரப்பினரோ, ""ராசாவின் யோசனையைப் பரிசீலித்த பிரதமரும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கும் வகையில் சட்டரீதியாக வெற்றிபெறவேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார். கபில்சிபலிடம் இந்தத்துறை சென்றதன் பின்னணி இதுதான். 6 மாதத்தில் வழக்கு விசாரணை முடியும் வகையில் இதனை வேகப்படுத்தி, ஆதாரங் களை முன்வைத்து வெற்றி பெற்றபின், மீண்டும் ராசா இந்தத் துறைக்குப் பொறுப்பேற்பார். இது உறுதி என்பதுடன், ""டெலிகாம் துறைக்குப் பொறுப் பேற்ற யாரும் முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்ததில்லை. ராசா எப்படியும் நிறை வேற்றிவிடுவார் என்று நினைத்திருந்தோம். இப்போது கபில்சிபல் வந்திருக்கிறார். மீண்டும் ராசா வருவார்'' என்கின்றனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடைப்பிடித்த நிலைப்பாடு சரியானதுதான் என்பதில் உறுதியாக இருக்கும் ஆ.ராசாவை பதவி விலகச் செய்ததில் பல சதிவலைகள் இருப்பதை டெல்லி அரசியல் வட்டாரத்தினரும் உறுதி செய்கின்றனர். இந்த சதிவலைகள் பற்றி தொடர்ந்து எச்சரித்து வந்த தி.க. தலைவர் வீரமணி, ""கொள்கைப்பற்றுமிக்க ஆ.ராசா மாண்புமிகுவாக இருந்து மானமிகு ஆனதில் எங்களுக்குப் பெருமைதான். அதேநேரத்தில், அவருக்கு எதிராக சதிவலை பின்னி, தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையை முன்கூட்டியே வெளியிட்டது யார் என்பதை விசாரிக்கவேண்டும்'' என அறிவித்த துடன், மானமிகுவாக சென்னை திரும்பும் ஆ.ராசாவுக்கு தி.க சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து, விமானநிலையத்தில் ராசாவை வரவேற்க தி.க.வினரும், தி.மு.க.வினரும், திராவிட இயக்கக் கொள்கைகளில் பற்றுள்ளவர்களும் திரண்டனர். வி.பி.சிங்கிற்குப் பிறகு, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழகத்திற்கு வந்து பலத்த வரவேற்பைப் பெற்றிருப்பவர் ஆ.ராசாதான்.

-காமராஜ்
சகா
மூலம்:நக்கீரன் -17-11-2010

3 comments:

vijayan said...

எமெர்ஜென்சியின் போது எவ்வளவு மிதி வாங்கியபின்பும் கடைசியில் இந்திரா காலில் விழுந்த ஜாதி தானே நாங்க.அன்னைக்கு தரையை கூட்ற துண்டை எடுத்த நாங்க திரும்ப போட்டமா .நம்ப தொழில்லே இதெல்லாம் ஜகஜம் பாஸ்.

அசுரன் திராவிடன் said...

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.நிரந்தர நண்பனும் இல்லை.இருப்பினும் ஆதரவு நான் தருகிறேன் என்று கூறி வழிய சென்ற ஜெயலலிதாவின் கழுத்தை பிடித்து தள்ளியதை பற்றி என்ன நினைகிரிர்கள்?

நீங்கள் சொல்வது போல் அவர்கள் காலில் விழுந்து கிடந்தால் அவர்கள் அம்மையாரின் ஆதரவை பெற்று கொண்டு தி.மு.க வை வெளியேற்றி இருக்க வேண்டுமே?

காங்கிரஸ்ஐ யாரும் வற்புறுத்தி கூட்டணியில் இருக்க சொல்லவில்லை.

guna said...

is it correct


weather counter Site Meter