பல்லூழிகளாக நின்று நிலவி வரும் இந்து சமயத்தின் நற்பெயரைக் கெடுப்பான் பிற்காலத்தில் ஒரு சில அறிவிலிகளால் அதனுள் புகுத்தப்பட்ட தீண்டாமை என்னும் கொடிய பேயை நாட்டினின்றும் ஓட்டி, இந்து சமயத்தின் தூய தன்மையையும், மக்களின் உரிமைகளையும், சமத்துவத் தன்மையும் நிலைநாட்டவேண்டுமென்ற உயரிய எண்ணங்கொண்டு திருவாங்கூர் சமதானத்திலுள்ள வைக்கம் என்னும் ஊரில் சத்தியாக்கிரகம் தொடங்கப் பெற்று நடைபெற்று வருவது நேயர்கள் நன்கு அறிவார்கள். இவ்வுண்மைப் போர் ஓராண்டாக நடைபெற்று வருகிறது; இன்னும் வெற்றிபெறவில்லை; ஆனால், விரைவில் வெற்றியுறும் என்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. இச்சத்தியாக்கிரக நிகழ்ச்சியைப் பற்றி இவ்வொரு வாரமாக ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகள் வெளிப்போந்து ஒரு காலை இன்ப மூட்டியும் மற்றொரு காலை துன்ப மூட்டியும், இறுதியில் மக்களைப் பெருங்கவலையில் ஆழ்த்திவிட்டன என்பதே எமது கருத்து மக்களுக்குள் பிறப்பினால் உயர்வு, தாழ்வு எவ்வாறெனும் இல்லை என்ற உயரிய சிறந்த உண்மையை உலகினர்க்கு அறிவுறுத்தும் பெரும்பேறு-ஒரு பெண்ணரசிக்கும் வாய்க்கும் என்று யாம் கொண்டிருந்தபேரவா நிறைவுறுங்காலம் நீடிக்கப்பட்டமை காணக் கவற்சியுறுகின்றோம். இத்தகைய பெருமையினை திருவாங்கூர் பெண்ணரசியார் பெறுதற்கில்லாமற்போய் விடுமோ என்றும் அஞ்சுகின்றோம் இது கிடக்க இதுகாறும் வெளிப்போந்த செய்தி களில், சத்தியாக்கிரகிகள் காந்தியின் உடன்படிக்கையைப் புறக்கணித்து வரம்பு மீறி ஒழுகத் தலைப்பட்டுவிட்டனர் என்ற செய்தி பொய் ஆயினமை கண்டுமகிழ்ச்சி உறுகின்றோம்.
வைக்கம் சத்தியாக்கிரகத்தின் வரலாற்றினை ஈண்டுச் சுருக்கமாக நினைவு கூர்தல் இன்றியமையாதது. வைக்கம் கோவிலின் மதிற் சுவர்களைச் சுற்றிலுமுள்ள நான்கு வீதிகளிலும் தாழ்ந்தவகுப்பினர் எனப்படுவோராகிய ஈழவர் முதலானோர் செல்லுதல் கூடாதென்றிருந்த கொடிய சமூக வழக்கத்தை ஒழித்து, மக்கள் யாவருக்கும் பொதுவான பாதைகளில் எல்லாச் சாதியினரும், சமயத்தினரும் செல்லும் உரிமையை நிலை நாட்ட எழுந்ததாகும் இவ்வைக்கம் சத்தியாக் கிரகப் போர், இப்போரினை எதிர்த்து நின்ற வைதீகக் கூட்டத்தினருக்கு திருவாங்கூர் அரசினர் முதலில் துணை போந்து தலைவர்களைச் சிறைக்கனுப்பிவிட்டு, கோஷா வீதிகளுக்கும் கொண்டுவிடும் நான்கு வீதிகளையும் நடுவில் நடுவில் கழிகள்கொண்டு அடைத்து., போலீ காவலர்களைக் காவல் செய்யநியமித்து சத்தியாக்கிரகிகள் மேற் செல்லாவாறும் மறித்தனர். சத்தியாக்கிரகிகள் நாடோறும் கூட்டம் கூட்டமாகச் சென்று வழி மறித்துள்ள விடத்தில் நின்று மழையென்றும், வெயிலென்றும் கருதாமல் சத்தியாக்கிரகம் புரிந்து வந்தனர். வைதீகக் கூட்டத்தினரால் பல்வித அல்லல்களுக்கு ஆளாகியும் சத்தியாக்கிரகிகள் அன்பு நெறி அறநெறிகளினின்றும் ஒரு சிறிதும் வழுவாது காந்தியடிகளின் ஆணையின்படி ஒழுகி வந்ததும், வருவதும் பெரிதும் போற்றத்தக்கது. உள்ளன்புடனும், உண்மையாகவும் உழைத்து வரும் சத்தியாக்கிரகிகள் இறுதியில் வெற்றி பெறுவார்கள் என்பது திண்ணம்.
இவ்வாண்டின் தொடக்கத்தில், சத்தியாக்கிரகிகளுக்கு ஊக்கமும், உண்மை நெறியும் ஊட்ட காந்தியடிகள் வைக்கம் போந்தார். திருவாங்கூர் பெண்ணரசியையும் இளவரசரையும். நேரில் கண்டு வைக்கம் சத்தியாக்கிரகத்தின் உண்மையையும் அதனை அவர்கள் ஆதரிக்க வேண்டிய கடமையினையும் உள்ளத்தில் பதியும்படி எடுத்துரைத்தனர் வைக்கம் சத்தியாக்கிரகம் தற்காலம் உற்ற நிலைமைக்கு காந்தியடிகள் வைக்கம் போந்ததே ஆகும் எனக் கூறுதல் மிகையாகாது. திருவாங்கூர் அரசாங்கத்தின் போலீ கமிஷனர் பிட் என்பாருடன் காந்தியடிகள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். சத்தியாக்கிரகிகள் முன்னேறாவண்ணம் தடுப்பதற்கென வைக்கப்பட் டிருக்கும் போலீ காவலை அரசினர் எடுத்துவிடவேண்டுமென்பதும், சத்தியாக்கிரகிகள் அரசினர் அனுமதியின்றி முன்னேறுதல் கூடாதென்பதும் தான் அவ்வுடன்படிக்கையின் முடிவுகள். இம்முடிவுகள் இரு கட்சியினரும் ஏற்று அவ்வாறே நாளிதுவரை ஒழுகி வந்தனர்.
வைக்கம் கோவிலைச்சுற்றிலும் உள்ள நான்கு வீதிகளில் கீழ் வீதி ஒன்றினைத் தவிர மற்றை மூன்று வீதிகளிலும் தாழ்ந்த வகுப்பினர் எவ்வித தடையுமின்றிச் செல்லலாமென்று திருவாங்கூர் அரசினர் உத்தரவு செய்திருப்பதாக இதுகாலை யாம் அறிகின்றோம். இச்செய்தியில் யாம் ஒரு சிறிதும் மகிழ்ச்சி உறவில்லை. அது சத்தியாக்கிரகத்தின் வெற்றியுமாகாது. சத்தியாக்கிரகத்தின் உண்மையினை அறியாதாரே இதனை வெற்றியெனக் கொள்வர்.
சத்தியாக்கிரகத்தின் உண்மை யாது? சத்தியாக்கிரகம், உண்மை என்பன ஒரு பொருட் கிளவிகள். சத்தியாக்கிரகம் வெற்றிபெற்றதெனக் கூறின் உண்மை வெற்றி பெற்றதெனப் பொருள். உண்மை எக்காலத்தும் வெற்றி உறும் என்பதில் எட்டுணையும், ஐயமின்று; உண்மைக்குத் தோல்வி என்பது எக்காலத்தும் இல்லை. ஆதலால், சத்தியாக்கிரகத்தில் உண்மையில் ராஜி என்பதே கிடையாது. அரசினர் மூன்று வழிகளில் சத்தியாக்கிரகிகள் செல்லலாமெனக் கூறியது சத்தியாகிரகம் அவர்தம் உள்ளத்தைக் கரையச் செய்து விட்டது என்பதைக் காட்டுகிறதேயன்றிச் சத்தியாக்கிரகம் வெற்றிபெற்றது என்பதை ஒரு சிறிதும், குறிக்கவில்லை என்ற உண்மையை ஒவ்வொரு சத்தியாக்கிரகியும் உளத்தமைத்தல் வேண்டும்.
ஆகவே, உண்மை முழுவெற்றியுறும் வரை சத்தியாக்கிரகிகள் உழைத்தல் கடனாகும். சத்தியாக்கிரகத்தின் ஆற்றலை அறியாது. மயங்கினவர்கள் கண்முன் அதன் ஆற்றலைக் கண்டபின்னரும் எவ்வித மயக்கமும் உறுதல் வேண்டுவதின்று. அரசினர் குழாத்தினர் உளங்கரையைச் செய்த உண்மைப் போர் வைதிகக் கூட்டத்தாரின் உள்ளத்தையும் கரைத்து உண்மையை உணர்ந்து ஒழுகச் செய்யும் என்பதில் ஐயப்பாடில்லை. சத்தியாக்கிரகிகளின் பொறுப்பு முன்னைவிட இதுகாலை பெருகி நிற்கிறதென்றே கூறுவோம். சிறு வெற்றியினைக் கண்டு தலை தடுமாறிப் பேய்க்கூத்தில் வீழ்ந்து மாயாவண்ணம் சத்தியாக்கிரகிகள் தம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அன்பு நெறியையும், அறநெறியையும் ஒரு சிறிதும் கைநெகிழவிடாமல் காந்தியடிகளின் ஆணைக்கடங்கி நின்றும், காந்தி-பிட் உடன்படிக்கைக்கு உட்பட்டும் சத்தியாக்கிரகத்தை மிக்க ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் சத்தியாக்கிரகிகள் நடாத்திவரும்படியாகக் கேட்டுக்கொள்ளுகிறோம். உண்மையின் வலிமையை உணராமல் எள்ளி நகையாடி ஒதுங்கி நின்ற பொது மக்களும் தமது குறுகிய நோக்கத்தை அறவே நீக்கிவிட்டுச் சத்தியாக்கிரகி களுக்குத் தம்மாலியன்ற உடல் உதவியும், பொருள் உதவியும் புரிவார்களென எதிர்பார்க்கிறோம்.
- குடிஅரசு தலையங்கம் - 28.06.1925
http://www.viduthalai.periyar.org.in/20101121/news06.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment