Pages

Search This Blog

Wednesday, November 3, 2010

ஏழ்மையான எளிமையான ஜெயலலிதா - கலைஞர் பெருமிதம்!!!

முதல்வர் என்ற பதவி வழங்கிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கிய ஜெயலலிதா; இன்றைக்கு ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவது எந்த வகையைச் சார்ந்தது என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் பொதுவாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நேர்மையைப் பற்றியும், நாணயத்தைப் பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றியும் ''சாத்தான் வேதம் ஓதுகிறது'' என்ற பாணியில் அறிவுரைகளையும், அறவுரைகளையும் வழங்கியிருக்கிறார்.

பல மடங்கான ஜெயலலிதாவின் திடீர் சொத்துக்கள்:

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 1.7.1991 அன்று அவரிடமிருந்த சொத்துக்களின் மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். ஐந்தாண்டுகள் அவர் முதலமைச்சராக ஆட்சி செய்ததற்குப் பிறகு, 30.4.1996ல் அவருடைய சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்.

ஆக, ஐந்தாண்டுகளில் மட்டும், ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களின் மதிப்பு 64 கோடியே 42 லட்சத்து 89 ஆயிரத்து 43 ரூபாய். இதுதான் ஜெயலலிதாவின் அகராதியில் ''நாணயம்'' என்பதற்கான அர்த்தமா?

சொத்து வழக்கை இழுத்தடிப்பதில் கின்னஸ் சாதனை:

ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சட்டத்தின் சந்துபொந்துகளிலெல்லாம் புகுந்துகொண்டு, 'கின்னசில்' இடம் பெறக் கூடிய அளவுக்கு, தனது சொத்துக் குவிப்பு வழக்கை கீழ்கோர்ட்டிலிருந்து சுப்ரீம் கோர்ட் வரை, பிறகு சுப்ரீம் கோர்ட்டில் இருந்து கீழ்கோர்ட் வரை ''பரமபத சோபன படத்தில்'' பார்ப்பதைப் போல; மேலும் கீழும் இழுத்தடித்து, தனது ''நேர்மை''யை குறித்த காலத்தில் நிரூபிப்பதற்கு திராணியின்றி தாமதம் செய்து வருகிறாரே; இதுதான் ``ஜெயலலிதா பிராண்ட்'' நேர்மைக்கு அடையாளமா?.

சிறுதாவூரில் நிலத்தை வளைத்து சுகவாசம்:

சென்னைக்கு அருகில் சிறுதாவூர் என்ற இடத்தில் 17 ஏக்கர் நிலப்பரப்பில், 30 ஏக்கர் அரசு நிலத்தையும் வளைத்துப் போட்டு, 108 குளுகுளு வசதிகளுடனான அறைகளுடன் கட்டப்பட்டுள்ள ஆடம்பர பங்களாவிற்கு அடிக்கடி சென்று சுகவாசம் செய்கிறாரே! இதுதான் ஜெயலலிதா சொல்லும் ''நேர்மை''க்கான குறியீடா?

டான்சி மகா ஊழல்:

முதல்வராக இருந்தபோது, அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை, குறைந்த விலையில் வாங்கிக் கொண்டாரே, இதுதான் ''நேர்மை''க்கான அறிகுறியா?

டான்சி நிலபேர வழக்கில்; டான்சி நில சம்மந்தமான ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு; வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, நீதிமன்றத்தில், தான் போட்ட கையெழுத்தையே தன்னுடைய கையெழுத்து இல்லை என்று ''சத்தியப்பிரமாணம்'' செய்து சொன்னாரே, இதுதான் ''நாணயத்திற்கு'' ஜெயலலிதா வழங்கும் சான்றிதழா?

''ஜெயலலிதா தனது மனசாட்சிக்குப் பதில் சொல்லும் வகையில், டான்சி நிலத்தை அரசிடமே திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும்'' என்று டான்சி வழக்கில் உச்சநீதி மன்றமே ஜெயலலிதாவின் நேர்மைக்கும், நாணயத்திற்கும் சான்றிதழ் வழங்கியுள்ளதே!.

கொடநாடு ஆடம்பரம்:

கொடநாடு எஸ்டேட்டில், முறையான அனுமதி பெறாமல், பொய்யான தகவலை அளித்து, ஊராட்சி மன்றத்தின் அனுமதியைப் பெற்றதாகக் கூறிக்கொண்டு, சுற்றுச்சூழலை கெடுக்கும்வண்ணம், நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் ஆடம்பர பங்களாக்களையும், கட்டடங்களையும் கட்டிக்கொண்டுள்ள, சுகவாசியான ஜெயலலிதாவின் ''நேர்மை''க்கான இலக்கணம் இதுதானா?

எரிக்கப்பட்ட மாணவிகளுக்கு இரங்கல் கூட இல்லை:

கொடைக்கானல் ``பிளசன்ட் ஸ்டே'' ஓட்டலுக்கு விதிமுறைகளை மீறி அனுமதி கொடுத்தார் என்று தொடரப்பட்ட வழக்கில்; ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட போது; தர்மபுரி மாவட்ட அதிமுகவினர் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு; கோவையிலிருந்து தருமபுரிக்கு சுற்றுலா வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் பயணம் செய்த பேருந்தை தீயிட்டுக் கொளுத்தியதால், மூன்று மாணவிகள் உயிரோடு எரிக்கப்பட்டு, துடிதுடித்துச் செத்தார்களே!.

அப்போது, அந்த மாணவிகளுக்காக ஓர் இரங்கலைக்கூட தெரிவிக்காத மனசாட்சி இல்லாத ஜெயல லிதா, இன்றைக்கு ``அரசியல் நேர்மை''யைப் பற்றி இலக்கியம் எழுதத் தொடங்கியுள்ளாரே!.

காலில் விழுந்த சபாநாயகர்:

ஜெயலலிதா முதல்வசராக இருந்த போது, சட்டப்பேரவையில் எதையும் விவாதித்து, கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிற பக்குவம் இல்லாமல்; எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் பொறுமை இல்லாமல்; ஆணவப் போக்குடன் நடந்து கொண்டாரே, இதுதான் ஜெயலலிதா எடுத்துக்காட்டும் ''ஜனநாயக''த்திற்கான வழி முறையா?.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவைத் தலைவர், பொறுப்பேற்ற உடனேயே, முதல் பணியாக சட்டப்பேரவையிலேயே ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய அநாகரிகப் போக்கும், அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டதும், சட்டப்பேரவையிலேயே ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய கலாச்சாரக் கேடும் அரங்கேற்றப்பட்டனவே, இதுதான் ஜெயலலிதா வழிகாட்டும் ''ஜனநாயக''த்தின் பாதையா?.

இப்படி சட்டப்பேரவையை மாசுபடுத்திய ஜெயலலிதா; லட்சக்கணக்கான அரசு ஊழியர்களையும், அரசுப் போக்குவரத்து ஊழியர்களையும் இரவு நேரத்தில் கைது செய்து, கொடுமைப்படுத்தி; மக்கள் நலப்பணியாளர்கள் 10 ஆயிரம் பேரையும், சாலைப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேரையும், கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் 20 ஆயிரம் பேரையும், எந்தக் காரணமும் சொல்லாமல், அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி; பட்டப்பகலில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களைக் கைது செய்து, சிறையில் அடைத்து, ஊடகங்களின் கேமராக்கள் உள்ளிட்ட சாதனங்களைச் சேதப்படுத்தி, நூற்றுக்கும் மேலான பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் தொடுத்து;

நீதிபதி உறவினர் மீது கஞ்சா வழக்கு:

சட்டப் பேரவையிலேயே நீதிமன்றத்தையும், நீதியரசர்களையும் இழிவுபடுத்திப் பேசியதோடு, நீதியரசர் ஒருவரது உறவினர் மீது ''கஞ்சா'' வழக்கு போட்டு; ஜனநாயகத்தின் தூண்கள் எனக் கருதப்படும் சட்டப்பேரவை, நிர்வாகத்துறை, நீதித் துறை, பத்திரிக்கைத்துறை என அனைத்தும், மிகவும் சாதாரணமானவை, தனது காலடியில் உள்ளவை என்ற எண்ணத்தில்; குலைத்து, குழப்பத்தில் ஆழ்த்திய ஜெயலலிதாவின் ஜனநாயகத்தைப் பற்றி தமிழ்நாடும், இந்தியத் திருநாடும் நன்றாகவே அறிந்திருக்கிறது!.

முன்னாள் முதல்வர் என்று கருதாமல், நள்ளிரவில் தாக்குதல் நடத்தி அப்படியே தூக்கிச் சென்று என்னைக் கைது செய்ததோடு; நீதியரசர் வழங்கிய அறிவுரைகளுக்கு மாறாக என்னை சென்னைப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்ற ஜெயலலிதா,

வளர்ப்பு மகன்-செரீன் மீது கஞ்சா கேஸ்:

முன்னாள் மேயர் ஸ்டாலினை மேம்பாலம் கட்டியதிலே முறைகேடு என்று வேண்டுமென்றே பழிசுமத்தி இரவிலே கைது செய்து, மதுரை சிறையிலே அடைத்த ஜெயலலிதா; தனது வளர்ப்பு மகனும், நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டு மாப்பிள்ளையுமான வி.என்.சுதாகரனை, தூங்கிக் கொண்டிருந்த போது தட்டியெழுப்பி, 16 கிராம் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் கூறி, சிறையிலே அடைத்த ஜெயலலிதா; கஞ்சா கடத்தியதாக மதுரையைச் சேர்ந்த இளம்பெண் செரினாவை கைது செய்து, கொடுமைப்படுத்திய ஜெயலலிதா,

மதமாற்ற தடை சட்டம்:

இந்தியத் திருநாடு ஒரு மதச்சார்பற்ற நாடு என்ற உண்மையை காற்றிலே பறக்கவிட்டு; தமிழகத்தில் உள்ள கிறித்துவச் சிறுபான்மை மக்களுக்கு எதிராக மதமாற்றத் தடைச் சட்டத்தைச் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய ஜெயலலிதா,

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு:

''முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளித்தால், நாளை கிறித்துவர்களும் இடஒதுக்கீடு கேட்பார்கள். பிறகு மற்ற சிறுபான்மையினரும் கேட்பார்கள். எனவே, இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது இயலாத ஒன்றாகும். அரசியல் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். பெரும்பான்மைச் சமூகத்தினர் அந்தச் சலுகைகளையெல்லாம் அனுபவிக்கவில்லை'' என்று சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிரான தனது எண்ணத்தை வெளிப்படுத்திய ஜெயலலிதா,

''போனஸ்'' என்பது ஒரு நல்லெண்ணத்தின் அடையாளமாக, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு, அவ்வளவு லாபத்தை ஈட்டித்தந்த ஊழியர்களுக்கு, அந்த லாபத்தில் பங்கு தருவதுதான் ''போனஸ்''. ஆனால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கினாலும் பரவாயில்லை. எங்களுக்குத் தந்தே ஆக வேண்டும் என்று கேட்டால், அது எப்படி நியாயமாகும்'' என்று; போனசுக்கு எதிராக - போனசை உரிமையாகக் கொண்டாடும் தொழிலாளர்களுக்கு எதிராகப் பேசிய ஜெயலலிதா,

கேவலப்படுத்திய ஜெயலலிதா:

''நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அதிகாரிகளிடம் வேலை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது குறித்து, அதிர்ச்சியடைந்தேன்! நான் இப்போது ரிங் மாஸ்டர் செய்வது போல சாட்டையடி கொடுத்து வேலை வாங்கி வருகிறேன். எவ்வளவு அடி கொடுத்தும் அதிகாரிகளுக்கு வேலையில் சிரத்தை இல்லை. அதை நானே ஒப்புக் கொள்கிறேன். அதிகாரிகளிடம் இழந்துவிட்ட பணியார்வத்தை மீண்டும் ஏற்படுத்த சாட்டையடி கொடுத்து வேலை வாங்கிக் கொண்டு வருகிறேன்'' என்று அரசு ஊழியர்களை சட்டப் பேரவையிலேயே கேவலப்படுத்திய ஜெயலலிதா,

முதல்வர் என்ற பதவி வழங்கிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்கிய ஜெயலலிதா; இன்றைக்கு ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவது எந்த வகையைச் சார்ந்தது என்பதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டாமா!.

இப்படி நேர்மைக்கும், நாணயத்துக்கும் ஜெயலலிதா கொடுத்துவரும் அர்த்தத்தைப் பற்றியும், ஜனநாயகத்தைப் பற்றிய அவரது அணுகுமுறையைக் குறித்தும் ஏராளமான நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டலாம்.

ஜனநாயகத்துக்கும், நாணயத்துக்கும் அவர் கொண்டிருக்கும் அர்த்தமும், அவர் பின்பற்றும் அணுகுமுறையும் கண்டு- ஜனநாயகத்திலும், நேர்மை- நாணயத்திலும், குறைந்தபட்ச நம்பிக்கை கொண்டவர்கள்கூட, அதிகபட்சமாக நகைப்பார்கள்!.

''செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க
செய்யாமை யானும் கெடும்'', என்ற அய்யன் திருவள்ளுவரின் குறளில் கண்டுள்ளவாறு; செய்ய வேண்டியதைச் செய்யாமலும், செய்யக் கூடாததைச் செய்தும்; முதலமைச்சர் பொறுப்பையும், அதிகாரத்தையும் சொந்த சுயநல வேட்டைக்காகப் பயன்படுத்திய ஜெயலலிதா; இன்றைக்கு ஜனநாயகம், நேர்மை, நாணயம் இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதை நமது ஜனநாயக மாண்புகளிலே அக்கறையும், ஆர்வமும் உள்ளவர்கள் கவனித்து, கணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! இவை அனைத்திற்கும் காலம்தான் பதில் சொல்லும்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
http://thatstamil.oneindia.in/news/2010/11/03/karunanidhi-spectrum-jaya-minister-raja.html#cmntForm

No comments:


weather counter Site Meter