Pages

Search This Blog

Sunday, November 21, 2010

ஞானசூரியன் - 2

ஞானசூரியன்
(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு
முதல் பதிப்பு : 1928
(19ஆம் பதிப்பு : 2008) முன்னுரை, சிறப்புரையில் திருவாளர் வ.உ.சி, எம்.எல்.பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் எழுதியவை மற்றும் குடிஅரசு செய்திகள்.
ஞான சூரியன்

முதல் அத்தியாயம்
சக்தி சத்தர் சனாதனப் பேரொளிச்
சித்தர் முத்தர் திருமிகு மேனியர்
சுத்த நெஞ்சுறுத் தூய்மைகண் டுய்ந்திடப்
பத்தி யாலவர் பாதம் பணிகுவாம்
செழுந்தமிழ்க் குடித்தீரரே; வீரரே;

எழுந்து மின்னே இழிதகை யோர்ந்துநாம்
அழுந்தி நாளும் அடிமைசெய் காரணம்
கொழுந் தறிவினிற் கூர்ந்துணர் வாமரோ.
நமது நாட்டின்கண் தமிழர்களாகிய (திராவிடர்கள்) நம்மவர்கள் கல்வி கற்பதில் சிறிது காலமாகவே ஊக்கங்கொண்டு உழைத்து வருகின்றனர். அதன் பயனாக, நம்மவர்களின் மனக்கண்ணை மூடியிருந்த அறியாமை என்னும் மாசு சிறிது சிறிதாக நீங்கிற்று. நீங்கவே, இதுவரையிலும் நம்மை ஏமாற்றி வந்த ஆரியப் பார்ப்பனர்களின் சமய நூற்களாகிய, சிரவுத, ஸ்மார்த்த தருமங் களின் மேற்பூச்சு விளங்கலாயிற்று. அதனால், அந்நூற்களில் நமக்கிருந்த மதிப்பு குறையலாயிற்று. எதிர்காலத்தில் நம்மவர்கள் அடையும்படியான மேல் நிலையைக் குறிக்கிற இத்தருணத்தில், ஆரிய சமாசத்தினர், இந்து சபையார், பிரம்மசமாசத்தினர் முதலிய பல குழுவினரும் மேற்சொன்ன நூற்களின் பழைய பூச்சைத் துடைத்துப் புதிதாகப் பூசி மினுக்குமாறு, வேஷத்துடன் நம்மவர்முன் காட்டி, நம்மவர்களை ஏமாற்ற முயன்று வருகிறார்கள். எனவே, இவர்களின் எண்ணத்தை உற்று நோக்குமிடத்து, மேற்குறித்த சமய நூல்களிலுள்ள மூட நம்பிக்கைகளை நம்மவர்களின் உள்ளத்தில் தழைத்தோங்கி வளரச் செய்து, நம்வர்களை என்றென்றைக்கும் அடிமைப் படுகுழியினின்றும் கரையேற வொட்டாமல் தடுக்க வேண்டுமென்பதேயல்லாது வேறில்லை என்றே கொள்ளக் கிடைக்கும். இவர்களின் முயற்சியும் சிறிது சிறிதாகப் பயன்கொடுத்துக் கொண்டே வருகிறது. இம்மைக்குரிய பயன்களுள் சிலவற்றை இவர்களின் வயப்பட்ட (சூத்திரர் என்று அழைக்கப்படுகிற) நம்மவர்கள் அடைகின்றார்களெனினும், பார்ப்பன நூற்களாகிய வேதம், ஸ்மிருதி முதலியவைகட்கு இவர்கள் சொல்லுகிற யுக்தி வாதங்களும், உரைகளும் அந்தந்த நூற்களுக்கு1 மகீதரர் முதலிய பழைய உரையாசிரியர்களின் கருத்திற்கு ஒத்திட்டுப் பார்த்த பிறகே ஒப்புக்கொள்ளத் தக்கவை. இதற்காக முயற்சிப்போர், தயானந்த திமிர பாஸ்கரம் முதலிய நூற்களின் ஆசிரியரான2 பண்டித ஜ்வால்ப்ரஸாத் மிஸ்ரஜி முதலிய மேதாவிகளைப்போல் இவர்களைக் கண்டிக்க முற்படுவார்கள். நாம் இங்கு எதைக்குறித்து ஆராயப்போகிறோம் என்றால், நமது நாட்டில் யாவராலும் பிராமணங்களாகக் கொள்ளப்படுகின்ற வேதம், ஆகமம், ஸ்மிருதி இவைகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங் களையும், அவைகளின் உண்மைக் கருத்துகளையுமேயாம். பகவான் புத்தன் அவதரிப்பதற்கு முன்னும் அதன் பின்னரும் உள்ள நமது தேச சரித்திரத்தைப் பதினாறு ஆண்டுகளாக ஆராய்ந்தவுடன், நமது தேசம் முழுவதும் நேபாளம், காஷ்மீரம், சிலோன் முதலிய பல தேசங்களிலும் சஞ்சரித்து, அந்தந்த தேசத்தார்களின் முற்கால, தற்கால வழக்கங்களையும் ஒழுக்கங்களையும் அறிஞர்களிடத்தும், சரித்திர வாயிலாகவும், நேரில் கண்டும் கேட்டும் அறிந்ததன் பயனாகத் தமிழ் மக்களாகிய நம்மவர்கள் நெடுநாட்களாகவே அடிமைப்படுகுழியில் தள்ளப்பட்டிருப் பதையும், கரையேற முயற்சி செய்யாதிருப்பதையும், அறிந்த யான் நம்மவர்களின் முன்னேற்ற வழியை எடுத்துக் கூறத் துணிந்தனன். இதனால் நம்மவர்கள் அறியாமை என்னும் நித்திரையை விட்டெழச் செய்து, சமய நூல்களில் மனத்தை ஒருமுகப்படுத்திக் கீழ்க் கூறுகின்ற பொருட்களைப் படித்தறியும்படி மன்றாடி வேண்டிக் கொள்ளுகிறேன். ஆராய்ச்சி இல்லாமல் ஒருவரை யொருவர் ஆட்டு மந்தையைப்போல் பின்பற்றி நடக்கும் இயற்கையுள்ள நம்மவர்களுக்கு, உண்மையை அறிய வேண்டுமென்னும் விருப்பமும், அதற்குரிய ஆற்றலும் மேன்மேலும் பெருகி வளரும்பொருட்டு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
உயிர்களுக்கு உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற விருப்பம் இயற்கையிலேயே எற்பட்டுள்ளது. இதன் பொருட்டே முயற்சியும் நடைபெற்று வருகின்றது. ஆனால், அதற்கு எதிர்மறையான பலனை அனுபவிக்க நேருவதும் உண்டு. ஆயினும், எல்லா உயிர்களும் மேன்மையைத்தான் விரும்புகின்றன. இந்த மேன்மையும் இம்மைக்குரியது, மறுமைக்குரியது என இருவகைப்படும். மனிதன் தன்னால் பழக்கப்பட்ட எந்த விஷயத்திலும் நிறைந்த சுகத்தை அனுபவிக்காததனால், உயிர்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் முதன் முதலாக மனிதனது உள்ளத்தில் எழுந்தன. இவ்வாறு எழுந்ததன் பயனாகவே இப்போது பல வேற்றுமைப்பட்ட கொள்கையுடைய பல்வேறுவகைச் சமயங்களைக் காண்கிறோம். அவைகளில் இவ்வேற்றுமையினால் சமூக முன்னேற்றத்தில் மாறுபட்டிருந்தாலும், மேற்சொன்ன பிரிவினையானது எல்லாச் சமயத்தினராலும் பொதுவாக ஒப்புக்கொள்ளத் தக்கதேயாகும். இதில் சமுதாயத்தை (ளுடிஉயைட), கல்வித்துறை (நுனரஉயவடியேட), ஒழுக்கம் (ஆடிசயட), அரசியல் (ஞடிடவைஉயட) ஆகிய நான்கு வகையான முன்னேற்றங் களையும் இம்மைக்குரியது என்கிற முதலாவது இனத்திலும், தவம், யோகம், ஞானம், இவைகளை மறுமைக்குரியது என்கிற இரண்டாவது இனத்திலும் சேர்க்க வேண்டும். இம்முன்னேற்றங்கள் எல்லாச் சமயங்களுக்குள்ளும் ஒரே தன்மையா யிருப்பின், வேற்றுமைகளுக்கு வழியேயில்லை. ஆனால், உருவங் களுள் வேற்றுமை காணப்படுவதுபோலச் சமுதாய விஷயங்களிலும் வேற்றுமை காணப்படுகின்றது. மேற்கூறிய வேற்றுமைகளால்தான் மத வேற்றுமைகளும் உண்டாயின.
சமயங்களின் காலம்

இந்து சமயம் உற்பத்தியாகி இன்றைக்கு நூற்றுத் தொண்ணூற்றாறு கோடியே எட்டு லட்சத்து அய்ம்பத்திரண்டாயிரத்துத் தொள்ளாயிரத்தெழுபத்தாறு (196,08,52,976) ஆண்டுகள் ஆகின்றனவென்று, ஆரிய சமாசத் தலைவரான சுவாமி தயானந்த சரஸ்வதி கணக்கிட்டுக் கூறுகிறார். அதற்கு அவர் ஏழு மனுக்களையும் அவர்களின் அரசாட்சிக் காலத்தையும் ஆதாரமாகக் காட்டுகிறார். இவ்வளவு காலப் பழக்கமுள்ள இந்தச் சமயத்தைத் தங்கள் சமயமென ஒத்துக் கொள்வோரின் தொகை இருபத்தொன்றரைக் கோடியாகும். முகம்மதிய மதம் எற்பட்டு 1372 ஆண்டுகளாகின்றன. முகம்மதியர்களின் தொகை முப்பத்துமூன்று கோடியாகும். கிறிஸ்து மதம் உண்டாகி 1956 ஆண்டுகளாகின்றன. கிறிஸ்தவர்களின் தொகையோ அய்ம்பது கோடியாகும். 2498 ஆண்டாகப் புத்தரையும், திரிபீடக நூலையும் நம்புகின்றவர்கள் அறுபதுகோடி மக்கள் இருக்கிறார்கள்.
இனி இருபத்தொன்றரைக் கோடி இந்துக்களுள் ஒன்றரைக்கோடி மக்கள் பார்ப்பனர்களாவார்கள், ஏனையோர் பார்ப்பனரல்லாதவர்கள். இந்தக் கணக்குப்படி பார்ப்பனரல்லாதவர்களுள் பதினெட்டுப் பேர்களுக்கு ஒரு பார்ப்பனப் புரோகிதன் ஆகின்றான் என்று கணக்கிடலாமன்றோ? மேற்கூறிய ஒன்றரைக் கோடி பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதாரின் இனத்திலிருந்து ஒவ்வொரு காலங்களில் பார்ப்பனர் களாக மாற்றப்பெற்றவர்களும், தாங்களாகவே மாறினவர்களுமாவார்கள். குமாரில பட்டர், சங்கராச்சாரியார், இராமாநுசர், மத்துவர் முதலிய மதாச்சாரியார்கள் அநேக தடவைகள் சூத்திரர்களைப் பார்ப்பனராக்கியதாகச் சங்கர திக்விஜயம் முதலிய நூல்களாலும் தேச சரித்திரங்களாலும் அறியக் கிடக்கின்றது. உண்மையில் பார்ப்பனரல்லாதார் இந்துக்களல்லரென்றும், பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு, இவர்களையும் இந்துக்க ளென்றும் கூறி ஏமாற்றிய தாகவும் கொள்ளவேண்டும். இப்படிக்கிருந்தால், உண்மை இந்துக்கள் (ஒன்றரைக் கோடி) எவ்வளவு குறைவு என்பதைக் காரணத்துடன் ஆராய்வோம்.
இந்துக்கள் தவிர, மற்ற எல்லா மதத்தினருக்கும் தங்களுக்கெனச் சொந்தமான ஒரு மதத்தலைவரும், அத்தலைவரால் பரம்பரையாக வெளியிடப்பட்ட மதக் கொள்கைகளும், இவைகளடங்கிய மத நூலும் அம்மதத்தைச் சார்ந்த அனைவருக்கும் பொதுவாக உண்டு. விளக்கமாகக் கூறுங்கால், முகம்மதியர் களுக்கு முகம்மதுநபி என்ற சமயத் தலைவரும், குரான் என்ற மத நூலும் அம்மதத்தில் பொதுவாக இருக்கின்றன. இவர்களுள் ஒவ்வொரு ஆண் மகனும், பெண்களும் தங்கள் குருவையும் மத நூலையும் மதத் கொள்கைகளையும் முறையே அன்புடன் வணங்கியும், போற்றியும் வருகிறார்கள். புத்த சமயிகளுக்குப் புத்தர் என்னும் மதத்தலைவரும், திரிபீடகம் என்னும் மத நூலும் இருப்பது யாவரும் அறிந்ததே. இவ்வாறே கிறிஸ்தவர்களுக்கும் கிறிஸ்து என்னும் மதத் தலைவரும் பைபிள் என்னும் மத நூலும் இருக்கின்றது. இந்துக்கள் நீங்கலாக மற்ற சமயத்தினரும் ஆண், பெண் வேற்றுமையின்றி ஒவ்வொருவருக்கும் தங்கள் மத நூல்கள் எந்தெந்த மொழியில் எழுதப்பட்டிருக்கின்றனவோ, அந்தந்த மொழியிலேயே அதைப் படிக்கவும், அதில் சொன்னபடி ஒழுகவும் அதிகாரமுண்டு. இதில் உயர்வு - தாழ்வு என்கிற வேற்றுமை காட்டப்படுவதேயில்லை. இவ்விதம் சமய நூற்களைக் கற்று, அதன்படி ஒழுகாத ஒருவனை நிந்திக்கவும் செய்கிறார்கள்.

No comments:


weather counter Site Meter