Pages

Search This Blog

Saturday, November 13, 2010

கல்கிக்கு வந்த எரிச்சல் (2)

கல்கி இதழ் கூறுவதுபோல் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்பது பழைய பெருங்காயம் இருந்த பாண்டம் என்பது உண்மையானால், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை எதிர்த்துப் பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்று கொண்டு இருப்பதேன்?

பிராமணர் சங்கம் வைத்துக்கொண்டு இருப்பது ஏன்?

அருந்தொண்டாற்றிய அந்தணர்கள் என்று நூல்களை எழுதுவானேன்? அதனை சங்கராச்சாரியார் (ஜெயேந்திர சரஸ்வதி) வெளியிடுவானேன்? கடவுளுக்கு மேலே பிராமணர்கள் என்று அந்த நிகழ்ச்சியில் ஜெயேந்திர சரஸ்வதி பேசினாரே - கல்கி கண்டித்ததுண்டா?

காஞ்சி மடம் ஏற்பாடு செய்துள்ள டிரஸ்டுகள் எல்லாம் பார்ப்பனர்களுக்காக மட்டுமே என்று வைக்கப்பட்டுள்ளதே - காஞ்சி மடம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி விடுதி நடத்துவது ஏன்?

பார்ப்பனர்களுக்கு வேதங்களும், மற்றவர்களுக்குப் புராணங்களும் சொல்லிக் கொடுக்கப்படும் என்று காஞ்சி மடம் விளம்பரம் செய்வது எந்த அடிப்படையில்?

காந்தியார் நேரில் கேட்டுக்கொண்டும் - தீண்டாமை க்ஷேமகரமானது என்றும், அனுஷ்டிக்கப்படத்தான் வேண் டும் என்று மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூற வில்லையா?

பிராமணன் ஸ்தூலமாக பிராமணரல்லாதாரோடு ரொம்பவும் ஒட்டி வாழ்ந்தால், அவனிடையே உட்கார்ந்து கொண்டு இன்னும் சாப்பிட்டால், அவனுடைய ஆகாராதி களை நாமும்தான் ருசி பார்ப்போமே என்று சபலம் உண்டாகத்தான் செய்யும். அந்தச் சபலம் அவனை இழுத்துக்கொண்டு போய் கடைசியில் இவன் தர்மத்துக்கு ஹானி விளைவிக்கிற அளவுக்கு ஆகிவிடும் என்று எழுதியவர்தானே அந்தச் சங்கராச்சாரியார்? (தெய்வத்தின் குரல், பாகம் 2, பக்கம் 600).

இப்படிச் சொல்லுவது தெய்வத்தின் குரலாம் - இப்படிப்பட்டவர்களைத் தலைமீது தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடும் கல்கிகள் கலைஞர் கூறிவிட்டாராம் - பார்ப்பனீயத்தைப்பற்றி, அடேயப்பா எப்படி நையாண்டி மேளம் அடிக்கிறது!

லாலா லஜபதி ஒருமுறை மிக நன்றாகவே அழுத்தம் திருத்தமாகவே சொன்னார்: தென்னாட்டுப் பார்ப்பனர்கள் எப்பொழுதும் துவேஷம் உடையவர்களாகவே இருந்து கொண்டு, அடுத்தவர்களைப் பார்த்து துவேஷிகள் துவேஷிகள் என்று சொல்லுவார்கள் என்று சொன்னாரே, அது ஆயிரம் டாலர் பெறுமே!

வெகுதூரம் போவானேன், இந்தக் கல்கியின் வரலாறு என்ன?

காமராசரை இழிவுபடுத்தி, ராஜாஜியைத் தூக்கிப் பிடித்து எப்படி எப்படியெல்லாம் இதே கல்கி கார்ட்டூன் போட்டது. பெரிய பதவி சின்னப்புத்தி என்று காமராசரைக் கரித்துக் கொட்டவில்லையா?

குயில் முட்டையிட்டு காகம் அடைகாப்பதுபோல திராவிடர் கழகத்தின் கொள்கை என்னும் முட்டையை காமராசர் அடைகாக்கிறார் என்று கல்கி கார்ட்டூன் போட்டது எந்த அர்த்தத்தில்?

இந்தியாவிலேயே ஒரு கறுப்புக் காக்கை தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனைக் கல்லால் அடிக்கவேண்டும் என்று ராஜாஜி சொன்னது யாரை? காக்கை என்றாலே கறுப்பு தான்; அப்படி இருக்கும்போது கறுப்புக் காக்கை என்று காமராசரை அழுத்திச் சொல்வானேன்? அதன் உள்ளீடு என்ன?

லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக வந்தபோது ராஜாஜி சுயராஜ்யா ஏட்டில் (1.2.1964) என்ன எழுதினார்?

ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் பெயருக்குப் பின்னால் வரும் சாஸ்திரி என்ற பட்டப் பெயர் அவருடைய ஜாதியைக் குறிக்கும் சொல்லாகவோ, குடும்பப் பெய ராகவோ சாதாரணமாகக் குறிப்பிடப்படவில்லை என்பதை யும், காசி வித்யா பீடத்தில் அவர் சாஸ்திரங்களைப் படித்துத் தேர்வு பெற்றதால் பெறப்பட்ட பட்டப் படிப்புப் பட்டமே என்பதையும் முதலில் மக்கள் அறியச் செய்யவேண்டியது அவசியமாகிறது.

அவர் சாதாரண லால் பகதூரே ஆவார். பி.ஏ., எம்.ஏ., போன்ற படிப்புப் பட்டங்களைப் பெற்றவர் போன்றே இவர் வித்யாபீட சாஸ்திரி ஆவார் என்று ராஜாஜி எழுதினாரே, எதற்காக?

பார்ப்பன சாஸ்திரியல்ல லால்பகதூர் என்று தெரியப் படுத்தத்தானே இந்த அறிக்கை?

1938 இல் இதே ஆச்சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக வந்தபோது விசுவகர்மா எனப்படுபவர்கள் ஆச்சாரி என்று போடக்கூடாது - ஆசாரி என்றுதான் பெயருக்குப் பின் போடவேண்டும் என்று ஆணை பிறப்பித்ததன் உள்நோக்கம் என்ன?

கடைசியாக ஒன்று - சென்னை சட்டப் பேரவையில் நடைபெற்றதுதான். ஓமாந்தூர் இராமசாமி (ரெட்டியார்) அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது கல்வி அமைச் சராக அவினாசிலிங்கம் இருந்தார். அப்பொழுது ராகவய்யா என்ற உறுப்பினர் கேள்வி ஒன்றைக் கேட்டார்: பிராமணர், பிராமணர் அல்லாதார் வேற்றுமையை சர்க்கார் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கிறதா? என்பது கேள்வி. அதற்குக் கல்வி அமைச்சர் சொன்ன பதில்: பிறப்புமுதல் இறப்புவரை இவ்வேற்றுமை இருக்கும் வரை அவற்றை சர்க்கார் எப்படி அங்கீகரிக்காமல் இருக்க முடியும் என்று எனக்குத் தெரிய வில்லை என்றாரே! (சட்டமன்ற நடவடிக்கை 21.4.1948).

அவினாசிலிங்கனார் என்ன திராவிடர் கழகத்துக் காரரா?

ஒரு காங்கிரஸ்காரரே இப்படி சட்டமன்றத்தில் பேசி இருக்கும்போது, திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் உணர்வு குறித்துப் பேசியதில் என்ன குற்றம்? கல்கியார் பதில் கூறுவாரா?
தொடர்புடைய முதல் பதிவு கல்கிக்கு வந்த எரிச்சல் (1)
http://www.viduthalai.periyar.org.in/20101113/news07.html

No comments:


weather counter Site Meter