Pages

Search This Blog

Sunday, November 21, 2010

ஒரு நாளில் இரு நிகழ்வுகள்

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் (18.11.2010) இரு முக்கிய நிகழ்வுகள் - மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பாராட்டத்தக்க அளவில் நிகழ்ந்துள்ளன.

திருவரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பார்ப்பனர்களைப் பல்லக்கில் வைத்துத் தூக்கிச் செல்லும் மனித உரிமை மீறல், வருணாசிரமக் கொடுமை நீண்ட காலமாக நடந்துகொண்டிருந்தது. இது குறித்து விடுதலை கடுமையாக எச்சரித்து வந்துள்ளது.

கடந்த 8.11.2010 அன்று திருவரங்கத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட திருச்சி மண்டல திராவிடர் எழுச்சி மாநாட்டில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மிகக் கடுமையாக எச் சரித்தார். இந்தக் கொடுமை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; இல்லையேல் திராவிடர் கழகம் போராட்ட நடவடிக்கையில் ஈடுபடும் என்று அறிவித்தார்.

அதற்குக் கைமேல் பலன் கிடைத்துள்ளது. திருவரங் கத்தில் முக்கியமாகக் கோயில் திருவிழா நடக்கும் கால கட்டம் இது. ஏகாதசி புராணங்கள் பாடும் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று, பார்ப்பனர்களுக்கு பிரம்ம ரத மரியாதையுடன் பல்வேறு பொருள்கள் அளிக்கப்பட்டு, யானைகள் முன் செல்ல, பல்லக்கில் ஏற்றி அர்ச்சகர்ப் பார்ப்பனர்களை வீடுவரை தூக்கிச் சென்று விட்டு வருவது வழக்கமாகும்.

இது தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்ற குரல் வலுவாக இழந்த நிலையில், பார்ப்பனர்கள் உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே திராவிடர் கழகத்தின் எச்சரிக்கைக்கும் போராட்ட அறிவிப்புக்கும் அஞ்சி பார்ப்பனர்களைப் பல் லக்கில் தூக்கிச் செல்லுவது கைவிடப்பட்டு, பார்ப்பனர்கள் பின்புறம் வழியாக ஆத்துக்கு (வீட்டுக்கு) நடையும் ஓட்டமுமாகச் சென்றுவிட்டனர்.

திருவாவடுதுறை ஆதினகர்த்தரைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் மனித உரிமைக்கு எதிரான செயலை - நேரடியான போராட்டத்தின்மூலம் திராவிடர் கழகம் முறியடித்ததுண்டு.

மடாதிபதிகளைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் கொடுமை முற்றிலும் ஒழிக்கப்பட்ட நிலையில், கோயில் அர்ச்சகர்கள் பல்லக்கில் வலம் வருவது எந்த வகையில் சரியானதாக இருக்க முடியும்?

வேறு எந்த ஊரிலாவது, இடத்திலாவது இத்தகைய கொடுமை நிகழுமானால், உடனடியாகக் கழகத் தோழர்கள் தலைமைக் கழகத்துக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்து அறநிலையத் துறையேகூட ஒரு சுற்றறிக் கையை அனைத்து கோயில்களுக்கும் இவ்வகையில் அனுப்பி வைப்பது அவசரமும், அவசியமுமாகும்.

திருவரங்கத்தைப் பொறுத்தவரையில் கோயில் அர்ச்சகர் பணிகளுக்கு வராமலேயே மாதச் சம்பளம் பெற்றுவருகின்றனர் பலர். திருச்சி - திருவெறும்பூர் பாரத மிகுமின் நிலையத்தில் (பெல்) பணியாற்றும் சில பார்ப்பனர் களும், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பார்ப்பனர்களும் கூட திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் அர்ச்சகர்களாகப் பணியாற்றுவதாகப் பதிவேடுகளில் உள்ளன. அந்த அடிப்படையில் மாத சம்பளம் பெற்றும் வருகின்றனர். இதனைத் தட்டிக் கேட்ட கோயில் ஆணையர் கவிதா என்ற அம்மையாருக்குப் பல வகைகளிலும் தொல்லைகள் கொடுத் தனர். இந்து அறநிலையத்துறை இதுகுறித்து நேரிடையாக விசாரணை நடத்தித் தவறு செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பது நமது வேண்டுகோளாகும்.

இரண்டாவதாக திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தாழ்த்தப்பட்டவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காகக் கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மாவட்ட ஆட்சித் தலைவரின் ஆணையின் பேரில் இடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த இரு நிகழ்ச்சிகளும் பாராட்டத்தக்கவை - வரவேற்கத் தக்கவையாகும்.

தந்தை பெரியார் தோன்றி சுயமரியாதை - பகுத்தறிவுப் பிரச்சாரம் முக்கால் நூற்றாண்டுக்குமேல் மேற்கொள்ளப் பட்ட தமிழ் மண்ணில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இது மாதிரி நடக்கும் நிகழ்வுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

கழகத் தோழர்கள் முறைப்படி மாவட்ட ஆட்சித் தலைவருக்குப் புகார் செய்து அதன் நகலைக் கழகத்தின் தலைமை நிலையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும்.

குறிப்பிட்ட அவகாசம் கொடுத்து நல்ல வகையில் சுற்றுவட்டாரத்தில் பிரச்சாரம் செய்து, கடைசிக் கட்டமாக நேரிடைப் போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.

இன்னும் கிராமங்களில் இரட்டைக் குவளை தேநீர்க் கடைகள் இருப்பது எந்த வகையிலும் அனுமதிக்கப்படக் கூடாத ஒன்றாகும்.

ஆண்டுக்கொருமுறை காந்தியார் பிறந்த நாளன்று சமபந்திப் போஜனம் நடத்துவதால், தீண்டாமை ஒழிந்து விடாது; - அப்படிப் பார்க்கப் போனால், உணவு விடுதிகளில் ஒவ்வொரு நாளும் சமபந்தி போஜனம்தான் நடந்து கொண்டு இருக்கிறது. அதனால் தீண்டாமை ஒழிந்து விட்டதா?

ஒரு பக்கம் கழகம் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கும் நிலையில், மறுபக்கம் அரசு கண்டிப்பான வகையில் சட்ட அமலையும் செயல்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

குறிப்பு: இத்தலையங்கம் எழுதப்பட்ட நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தில் திருவரங்கம் கோயில் அர்ச்சகர் - பார்ப் பனர்கள் தொடர்ந்திருந்த வழக்கில், மனித உரிமைக்குச் சாதகமாகவும், பார்ப்பனர்களுக்குப் பாதகமாகவும் தீர்ப்பு வந்த தகவல் கிடைத்துள்ளது மகிழ்ச்சியானதாகும்.

http://www.viduthalai.periyar.org.in/20101119/news07.html

No comments:


weather counter Site Meter