Pages

Search This Blog

Monday, November 8, 2010

வாழ்வியல் சிந்தனைகள்


சிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிக் கவிஞரின் சீடர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர் தில்ரூபா சண்முகம் அவர்கள் எழுதிய பட்டுக்கோட்டையார் என்னும் நூலிலிருந்து ஒரு முக்கிய பகுதியை தினமலர் 24.10.2010 ஞாயிறு இதழுடன் இணைப்பில் திண்ணை என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டிருக்கிறது!

அதை அப்படியே தருகிறேன்:

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த அய்யர் ஒருவர், பட்டுக்கோட்டையாரை ஒரு படத்துக்குப் பாட்டு எழுத ஒப்பந்தம் செய்தார். பாடல், ரிக்கார்டிங்கும் ஆகிவிட்டது. ஆனால், அதற்கான ஊதியத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார்.

ஒரு நாள் அய்யரின் வீட்டுக்குப் போனார் பட்டுக்கோட்டையார்; அய்யரும் இருந்தார். வணக்கம் சொல்லிவிட்டு முக்கியமான செலவுகளுக்காக சிரமப்படுகிறேன். இன்று எப்படியாவது பணம் கொடுத்தாக வேண்டும்..... என்றார்.

அய்யரோ, பணம் இன்னிக்கு இல்லே நாளைக்கு வேணும்னா வந்து பாருங்கோ.... என்றார். அய்யரைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார் பட்டுக்கோட்டையார்.

என்ன நின்னுட்டே இருக்கேள்.... போய்விட்டு நாளைக்கு வாங்கோன்னேன்! இல்லே நிக்கிறதா இருந்தா நின்னுண்டே இரும் என்று கூறிவிட்டு, அய்யர் உள்ளே போய்விட்டார்.

முதலில் நாளைக்கு வாங்கோ என்றிருந்த மரியாதை கடைசியில் நின்னுண்டே இரும் என்றும், வாரும் போரும் என்றும் குறையத் தொடங்கி விட்டதைப் புரிந்துகொண்டதும் வந்தது கோபம். பிறகென்ன, அது கவிதைக் கனலாக உருவெடுத்தது! உடனே சட்டைப் பையிலிருந்து தாளையும் பேனாவையும் எடுத்து, ஏதோ எழுதினார். மேஜையின் மீது வைத்துவிட்டு வீட்டுக்கு, விர்ரென்று வந்துவிட்டார். வந்து கொஞ்சநேரம் கழிந்ததும், அந்தக் கம்பெனியிலிருந்து ஒரு ஆள் பணத்துடன் வந்துவிட்டான். அவர் துண்டு சீட்டில் எழுதி வைத்த கவிதை இதுதான்:

தாயால் வளர்ந்தேன்.

தமிழால் அறிவுபெற்றேன்

நாயே....... நேற்றுன்னை

நடுத்தெருவில் சந்தித்தேன்.

நீ யார் என்னை நில்லென்று

சொல்ல

இதைப் படித்துவிட்டுத்தான் அந்த அய்யர் உடனே பணத்தைக் கொடுத்தனுப்பி விட்டார்!

தன்மானம் இழக்காத, தலைவணங்கா பாட்டுக்கோட்டை ஒரு புத்துலகம் காண விழைந்த தனிப்பெரும் புரட்சியாளன் அல்லவா?

கவிதை வரிகள் சாட்டை அடிகளாகி, அந்தச் சொடுக்குகள் உருவாக்கிய கைமேல் பலன் கண்டீர்களா? தினமலரின் திண்ணை இப்போது இது பற்றி பேசவும் முன்வந்துள்ளதே!

*******

தன்மானக் கவிஞர் பொன்னிவளவன் கவியரசர்-தனிப்பெரும் ஆற்றலாளர்-சுயமரியாதை முத்து-தவறான பழக்கத்தின் விளைவு. அவர் இன்று வரலாறாகிவிட்ட கொடுமை!

எங்களுடன் மிசா கைதியாக சிறைப்பிடிக்கப்பட்ட கவிஞர், எங்களுடன் மிகவும் பாசத்துடன் பழகுவார். தி.மு.க வில் சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகவும், தி.மு.க. முக்கியஸ்தருமாக இருந்த பண்பாளர், பழகுதற்குரிய நட்பாளர் பொன்.சொக்கலிங்கம், அவர்களும் மிசாவில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தார்!

அங்கே எங்களைக் கொடுமை செய்த ஜெயில் சூப்ரெண்டென்ட் வித்தியாசாகர், ஜெயிலர் கயூம் போன்ற பல அதிகாரிகள் இவரையும் கொடுமையுடன் நடத்தி (அடிக்கவும் செய்தவர்கள்) மிகவும் பயமுறுத்திவிட்டனர். இனிமேல் நீங்கள் இங்கிருந்து திரும்பிப் போகவே முடியாது; வாழ்நாள் முழுவதும் இங்கேதான் உங்கள் வாழ்க்கை என்பது போன்று பலருக்கு அச்சத்தை ஊட்டி, தி.மு.க.வை விட்டு விலகிவிட ஓர் ஏற்பாடு அந்த அதிகாரிகள் மூலம்.

பலவீனமும் பயமும் கவ்விக்கொண்டது பலரது மனதில். இயல்புதானே! எல்லோருக்கும் ஒரே மாதிரி உறுதியிருக்குமா? நண்பர் பொன்.சொக்கலிங்கம் அண்ணாவுடன் மெய்க்காப்பாளர் போல அந்தப் பகுதிக்கு வரும் போதெல்லாம் இருந்தவர்தான்.

என்ன செய்வது? நாள், மாதங்களாகிய நிலை. மனந்தளர்ந்து பக்தி வேஷம், பட்டை பூசி, குங்குமப் பொட்டு வைத்து நடைஉடை ஆகிவிட்டார்.

இதைக்கண்டு கவியரசர் பொன்னிவளவனுக்கு கடுங்கோபம்! நாங்கள் கோபப்படுவதில்லை- இத்தகையவர்களை சிறையில் பார்க்கும்போது; அனுதாபப்படுவது தவிர வேறு வழியில்லையே என்றுதான் நினைத்து அவர்களிடமும் பழகவே செய்தோம்!

கவியரசர் பொன்னிவளவன் திடீரென்று ஒரு கவிதை எழுதி, சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மதிய வேளையில் ஓங்கி உரக்க சத்தமாகப் படித்துவிட்டார்! அக்கவிதையில் அவரைச் சொடுக்கினார்.

பட்டையடித்தாலும் அதன் நடுவே நன்றாய்

பளபளக்கச் சிவப்பு நிறக் குங்கு மத்தில்

பொட்டு வைத்தாலும் தாடி வளர்த்திட்டாலும்

பொழுதெல்லாம் திருவருட்பா பாடினாலும்

விட்டுவிட முடியாது எனச்சிறைக்குள்

விடப்பிடியாய் வைத்துள்ளார் சொக்கலிங்கம்

பட்ட துயர் போதாதா? நாளைக்கும் நீ பற்ற வைக்க வேண்டுமா டீ அடுப்பு? -புலவர் பொன்னிவளவன்

14.4.1976இல் எழுதிய கவிதையை பொன்.சொக்கலிங்கம் கேட்டு சிரித்தார்! எல்லோருக்கும் இடுக்கண் வந்தபோது இது நகுவதற்கு மருந்தாகிவிட்டது! தன்மானப் பெரும்புலவன் பொன்னியை நினைக்கிறேன்; கண்கள் குளமாகிறது!

No comments:


weather counter Site Meter