காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியை முறிய வைக்க மத்திய அமைச்சர் இராசா குறி வைக்கப்படுகிறார்!
நீதிமன்றம், அமைச்சரை குற்றவாளி என்று கூறிவிட்டதா?
ஏகபோகக் கொள்ளையர்களின் பின்னணியில் ஊடகங்களை ஏவிவிடும் சூழ்ச்சி!
1971 தேர்தல்போல 2011 தேர்தலும்
தி.மு.க.வை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் தமிழர் தலைவர் அறிக்கை
மத்திய அமைச்சர் ஆ. இராசா அவர்களைப் பதவியிலிருந்து வெளியேற்றிட நடைபெறும் சூழ்ச்சிகளைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பதவி விலக வைத்து, அதன்மூலம் தி.மு.க.விற்குப் பழியை - களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது, வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சியினருக்கு அவலாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்படுவதாகும்.
இதில் உள்ள முக்கிய காரணம் - உயர்ஜாதி ஆதிக்கவாதிகளான அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொலைக்காட்சியினருக்கு மத்திய அமைச்சர் ஆ. இராசா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதேயாகும்.
தி.மு.க.வை - காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற்ற சதி
இரண்டாவது, தி.மு.க.வை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எப்படியாவது வெளியேற்றிவிட இதுவரை செய்த முயற்சிகள் - காங்கிரஸ் தலைமை, தி.மு.க.வின் நம்பகத்தன்மை, நாணயம் மிக்க நட்புறவு இவற்றை மதித்து - பலிக்க இடந்தராமல், தொடர்ந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க.வும், காங்கிரசும் நல்ல நட்புறவுடன் இருக்கும் என்று புரிய வைத்துவிட்டதால், காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் கூட்டுச் சேர தனது பல்லவி, அனுபல்லவி எல்லாம் முடிந்து சரணம் பாடியும் அ.தி.மு.க.விற்கு அழைப்பு வராது போலுள்ளதே என்று கருதிய ஜெயலலிதா, இப்படி இதை சாக்காக பிடித்துக்கொண்டு, ஊழலை ஒழிக்க திடீரென பரசுராம அவதாரியாக ஆர்ப்பரிக்கிறார்!
மற்ற அரசியல் கட்சிகளும் காங்கிரஸ் - தலைமையில் உள்ள கூட்டணியில் ஒரு களங்கத்தை ஏற்படுத்த இதுதான் சமயம் என்று கருதி, குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து மீண்டும் மீண்டும் ஒப்பாரி வைத்து அழுது நாடகம் ஆடுகின்றனர்.
நரியார்கள் - நாரியர்கள் வேலை
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கெனவே முன்வைத்துப் பிரச்சாரமும் செய்து - தோல்வி கண்ட ஓராண்டுக்குப் பிறகு, ஏன் திடீரென இராசாவின் பதவி ரத்தம் குடிக்க இந்த நரியார்கள் - நாரியர்கள் துடிக்கிறார்கள்?
மத்திய அமைச்சர் இராசா இதில் தனியே சொந்தமாக முடிவு எடுத்தாரா? எடுக்கத்தான் இயலுமா?
மத்திய அமைச்சர் இராசாவின் விளக்கம்
டிராய் என்ற தொலைத்தொடர்பு அமைப்புதானே இதனை முடிவு செய்தது - பிரதமர் ஒப்புதலுடன்தானே இத்தகைய நடவடிக்கைகள் நடந்துள்ளன?
இவற்றை நாடாளுமன்ற மக்களவையிலே அமைச்சர் இராசா மிகத் தெளிவாக, ஆணித்தரமாக விளக்கினாரே, அதை மறுக்க முடியுமா?
மராத்தியத்தில் ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என்றால், அது மத்திய நிதி அமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல இரு மாநிலங்கள் பிரச்சினை (மகாராஷ்டிரா, டில்லி) அதனைக் காங் கிரஸ் கட்சி ஆதாரபூர்வ மாகத் தெரிந்து அந்த முடிவை எடுத்தது அவர் களது உரிமை. கமிட்டி சொன்னதை வைத்து நடவடிக்கை.
ஆனால், இங்கே அமைச்சர் இராசா செய்யாத குற்றத்திற்காக ஜென்ம தண்டனை என்பதுபோல இப்போது ஏன் பதவி விலகவேண்டும் - அவர் வேறு இலாகாவிற்கு ஏன் செல்ல வேண்டும்?
குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டதா?
சி.பி.அய். வழக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இவர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளரா? குற்றம்சாற்றி நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பு வந்துள்ளதா?
ஆடிட்டர் - ஜெனரல் (GAG) அறிக்கைகூட அதிகார பூர்வமாக இன்னமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லையே? குடியரசுத் தலைவரிடம் சமர்ப் பிக்கப்பட்டது என்பதிலிருந்து காகிதப் புலிகளின் ரத்த வேட்டைதானே இப்படி ஆவேசங் காட்டச் செய்கிறது?
இதே இராசா 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல கோடி ரூபாய்கள் அதிகம் விட்டு, மத்திய அரசின் கருவூலத்திற்கு 66,980 ஆயிரம் கோடி ரூபாய் பெரு வருவாய் தந்தாரே - அதற்கு சிறு பாராட்டினை இவர்கள் யாரும் தெரிவித்தார்களா?
மத்திய அமைச்சரவை என்பது பிரதமரின் தலைமையில் கூட்டுப் பொறுப்பு(Collective Responsibility) உள்ள ஒன்று அல்லவா? இதில் தனியாக ஒருவரை பலிகடாவாக்க முயற்சிப்பது எந்த வகையில் ஜனநாயகம் - அமைச்சரவையின் அறம் ஆகும்?
ஊழலுக்கு அப்பாற்பட்டவரா ஜெயலலிதா?
ஜெயலலிதாவின் வழக்குகள் - ஊழல்கள் பலவும் மக்கள் மன்றம் அறிந்ததே! வெளிநாட்டிலிருந்து யாரோ அனுப்பிய நன்கொடையை தன் கணக்கில் வரவு வைத்தாரே - அளவுக்கு அதிகமான சொத்து சேர்ப்பு, டான்சி வழக்கில் நிலத்தை திருப்பித் தந்து வெளியே வந்தது எல்லாம் மக்களுக்கு மறந்துவிடுமா?
இராசாவை பதவி விலகல் கூச்சலில் பல உள்நோக்கங்கள் பலருக்கு!
இது பந்தலிலே பாவக்காய் என்ற ஒப்பாரி வைத்து அழுத பெண்கள் கதைபோல...
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு உள்நோக்கம்!
பின்னணியில் ஏகபோகக் கொள்ளையர்கள்
இதில் மற்றொரு முக்கிய பின்னணி - முன்பு ஏகபோகமாக அனுபவித்த கொள்ளையைத் தடுத்து, லாபக் குபேரர்களின் ஏகபோகமில்லாது - பலருக்கும் பிரித்தளிக்க பிரதமர் ஒப்புதல் முதற்கொண்டு பெற்று, அரசு கருவூலத்திற்கு ஏராள வருவாய் வரும்படி செய்த இராசாவின்மீது ரவுத்திரம் - கோபாக்கினி ஊடகங் களை ஏவிவிடுகின்றனர்!
2011 இல் புரிய வைக்கப்படும்!
தமிழ்நாட்டில் மீண்டும் 1971 தேர்தல் முடிவுகள் அபரிமிதமாக தி.மு.க.வுக்குக் கிடைத்ததே - அதுபோல இராசாபற்றி ஓங்காரக் கூச்சல் நிச்சயம் வெற்றிப் பாதைக்கு தி.மு.க.வை அழைத்துச் செல்லும் என்பது 2011 இல் புரிய வேண்டியவர்களுக்குப் புரியும். புரியாவிட்டால் புரிய வைப்போம்!
தலைவர்,
திராவிடர் கழகம்.http://www.viduthalai.periyar.org.in/20101111/news02.html
3 comments:
ராசா தாழ்த்தப்பட்ட ஜாதி என்பதால் அவரை குறி வைக்கறார்கள் என கலைஞர் சொன்னாரே அது போலத்தான் இது...
ராசா பதவி விலகி தன் மீது கறை இல்லை என நிரூபிக்கட்டும்...
தமிழர்களைக் குழப்பி, ஏமாற்றி,வஞ்சித்துப் பதவிக்கு வர வெறி பிடித்து அலையும் ந்டிகையின் ஆசை வலையில் மாட்டி அவமானப் பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.திருநாவுக்கரசரில் ஆரம்பித்து வை கோ, நெடுமாறன், கம்யூனிஸ்டுகள் என்று நீண்டு இப்போது காங்கிரசின் மானங்கெட்ட சிலருக்கும் வலை வீசப் பட்டுள்ளது. பணத்திற்கும்,பதவிக்கும் ஆசைப்பட்டு மானங்கெட்டு அலையும் நிலைக்குத் தள்ளப் பட்டவர்கள் தமிழ் மீதும்,தமிழினத்தின் மீதும் ஆழ்ந்த பற்றுள்ளவர்களாக இருந்தும் தங்கள் மரியாதையை இழந்து தவிப்பது பரிதாபம். அதுவும் இல்லாத காங்கிரசு தமிழினத் துரோகிகள் அவமானப் படும் போது தமிழர்கள் சிரிப்பார்கள், பரிதாபம் கூடப் படமாட்டார்கள்.
@ஆர்.கே.சதீஷ்குமார்
முழுசா படிங்க அறிக்கையை
//டிராய் என்ற தொலைத்தொடர்பு அமைப்புதானே இதனை முடிவு செய்தது - பிரதமர் ஒப்புதலுடன்தானே இத்தகைய நடவடிக்கைகள் நடந்துள்ளன?
இவற்றை நாடாளுமன்ற மக்களவையிலே அமைச்சர் இராசா மிகத் தெளிவாக, ஆணித்தரமாக விளக்கினாரே, அதை மறுக்க முடியுமா?
மராத்தியத்தில் ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என்றால், அது மத்திய நிதி அமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல இரு மாநிலங்கள் பிரச்சினை (மகாராஷ்டிரா, டில்லி) அதனைக் காங் கிரஸ் கட்சி ஆதாரபூர்வ மாகத் தெரிந்து அந்த முடிவை எடுத்தது அவர் களது உரிமை. கமிட்டி சொன்னதை வைத்து நடவடிக்கை.
ஆனால், இங்கே அமைச்சர் இராசா செய்யாத குற்றத்திற்காக ஜென்ம தண்டனை என்பதுபோல இப்போது ஏன் பதவி விலகவேண்டும் - அவர் வேறு இலாகாவிற்கு ஏன் செல்ல வேண்டும்?
மத்திய அமைச்சரவை என்பது பிரதமரின் தலைமையில் கூட்டுப் பொறுப்பு(Collective Responsibility) உள்ள ஒன்று அல்லவா? இதில் தனியாக ஒருவரை பலிகடாவாக்க முயற்சிப்பது எந்த வகையில் ஜனநாயகம் - அமைச்சரவையின் அறம் ஆகும்?
//
Post a Comment