Pages

Search This Blog

Friday, November 26, 2010

தியாகராயர் அரங்கில் வேட்டுச் சத்தம்! - மின்சாரம்

24.11.2010 அன்று சர்.பிடி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற ஆ.இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை - ஏன்? ஊடகத்துறை அறிஞர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பார்வையாளர்கள்


நாட்டைப் பீடித்த 5 நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்று தந்தை பெரியார் சொன்னாலும் சொன்னார் - அதனை நாள்தோறும் மக்கள் அனுபவித்துத் தீர வேண்டிய கட்டத்துக்குள் தள்ளப்பட்டு விட்டனர்.
யாரை வேண்டுமானாலும் இந்தப் பத்திரிகைப் பிர்மாக்கள் விமர்சிக்கலாம் - களிமண்ணைக் கடவுள் என்று கூறலாம்; கடலை வாய்க்கால் என்று வருணிக்கலாம். கூழாங்கல்லைக் கோமேதகம் என்று கூசாமல் சொல்லலாம் - கோமேதகத்தின் மீது எச்சில் துப்பலாம்.
கொலை வழக்கில் சிக்கிய ஆசாமியை ஜெகத்குரு என்று எழுதுவதற்கு அவர்கள் வெட்கப்படுவதில்லை. ஆனால், எந்தவிதத் திலும், எந்த ஆவணத்திலும் ஆ.இராசா குற்றம் புரிந்தவர் என்று சொல்லப்படாத நிலையில், ஸ்பெக்ட்ரம் ராஜா என்று முத்திரை குத்தி, பதவியைப் பறித்து மூலையில் ஒதுக்குவதற்கு முண்டியத்துக் கொண்டு நிற்பதைப் பார்க்க முடிகிறது.

இப்படி யாரையும் எடுத்தேன் - கவிழ்த் தேன் என்று விமர்சிக்கும் பத்திரிகைகள், மின்னணு ஊடகங்கள் எல்லாம் உத்தமப் புத்திர சிகாமணிகள்தானா? ஊழல் என்பதை ஊறுகாய் அளவுக்குக் கூடத் தொட்டுக் கொள்ளாதவர்கள்தானா?

ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களா? முதலாளிகளின் கையு றையாக இருக்க மறுப்பவர்களா?

இந்தக் கேள்விகள் இப்பொழுது மக்கள் மத்தியில் வெடித்துக் கிளம்ப ஆரம்பித்து விட்டன.

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச் சராகவிருந்த ஆ.இராசா விடயத்தில் ஊட கங்கள் நடந்துகொண்டுவரும் முறைகளைப் பார்த்ததற்குப் பிறகு - சாமான்ய மக்கள்கூட ஊடகங்கள் மீது வெறுப்பு நெருப்புத் துண்டு களைக் கக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டனர்.

இந்தப் பிரச்சினையில் ஊடகங்கள் நடந்து கொள்ளும் கீழிறக்கத்தைக் கண்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கூறும் அளவுக்கு ஏடுகளும், இதழ்களும், ஊடகங்களும் குப்பைத் தொட்டிகளாகி விட்டன.

ஊடகத்துறையை விமர்சிக்க முடியுமா? அப்படி விமர்சித்தால் அவர்களின் சாபத்துக் கும், சக்ராயுதத்துக்கும் பலியாக நேரிடுமே என்று எண்ணியிருந்த அச்ச மாயையை தமிழ் ஊடகப் பேரவைக் கிழித்து எறிந்துவிட்டது.

பத்திரிகைத் துறை என்பதும் ஒரு தொழில்தான் - அதிலும் ஏராளமான உருட்டல் - புரட்டல்கள், ஊழல் குப்பைகள் - உள் குத்துகள், முதுகுக் குத்துகள், கையுறைக் கையூட்டுகள் அச்சுறுத்திப் பணம் பறிப்புகள் (பிளாக் மெயில்) முதலாளிகளின் முகவர்கள் (ஏஜெண்ட்) மதத் தலைவர்களின் பினாமிகள் என்று ஏராளம் உண்டு.

சென்னையில் உள்ள இலங்கைத் தூதரக அதிகார வர்க்கத்துடன் உறவுகொண்டு, சிங்களவர்களின் ஏஜெண்டுகளாகப் பணி யாற்றி, அவர்கள் கொடுக்கும் சன்மான எச்சில் மூலம் மாட மாளிகைக் கட்டி வாழ்ந்து வருப வர்கள் யார்?

தமிழர்களைக் காட்டிக் கொடுத்து அவர்களின் ரத்தத்தையே சந்தனமாகக் குழைத்துத் தடவிக் கொண்டிருக்கும் பத்திரி கையாளர்கள்பற்றி அறியமாட்டோமா?

இதுவரை மற்றவர்களைப் பற்றி விமர் சிக்கும், சேறு வாரி இறைக்கும் இந்தப் பத் திரிகை உலகம் - விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல - விமர்சிக்கலாம் - நன்றாகவே விமர்சிக்கலாம் - நார் நாராகவும் கிழிக்கலாம் என்ற ஒரு தைரியத்தை தமிழ் ஊடகப் பேரவை ஊட்டிவிட்டது! (வாழ்க தமிழ் ஊடகப் பேரவை!).

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தியாகராயர் அரங்கத்தில் தமிழ் ஊடகப் பேரவையின் சார்பில் ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. (24.11.2010 மாலை). ஆ. இராசாமீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? என்ற தலைப்பில் தமிழ் ஊடகப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பொதுக்கூட்டத்திற்குத் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளரும், விடுதலை ஆசிரியரு மான (48 ஆண்டுகாலம் விடுதலையின் ஆசிரியர்) மானமிகு கி. வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார்.

இப்படி ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்ற விளம்பரம் வந்தது முதல் மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பும், எதிர்பார்ப்பும் இருந்தன. குற்றமுள்ள ஊடகக்காரர்கள் மத்தியில் ஒரு சொர சொரப்பும், குருதிக் கொதிப்பும் இருந்ததாகக் கேள்வி.

மாலை 6.30 மணிக்குக் கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாலை 5 மணிக்கே அரங்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது. இந்த மன்றத்தில் இதுவரையிலும் இந்த அளவு மக்கள் திரள் நிரம்பி வழிந்ததில்லை என்பது பத்திரிகையாளர்களின் கணிப்புக்கூட.

ஒரு பரபரப்போடு பல்துறைப் பெருமக்கள் கூடியிருந்தனர். தமிழ் ஊடகப் பேரவையின் நோக்கம் குறித்தும் கடந்த ஏழ ஆண்டுகாலத் தில் அதன் செயல்பாடுகள் குறித்தும், அதன் நிறுவனரான வளர்தொழில் ஆசிரியர் க. ஜெயகிருட்டிணன் தம் வரவேற்புரையில் எடுத்துக் கூறினார்.

மாதந்தோறும் இவ்வமைப்பு கூட்டங்களை நடத்தி வருகிறது - பல்வேறு பொதுப் பிரச் சினைகள் குறித்து விவாதங்கள், சிறப்புரை கள், காட்சி உரைகள் நிகழ்த்தப்பட்டு வந்திருக் கின்றன.

பத்திரிகையாளர்கள் மட்டத்தில் இருந்த இந்தப் பேரவையின் செயல்பாடு மக்கள் மத்தியில் இப்பொழுதுதான் முதன்முதலில் வெளிவந்திருக்கிறது - இனியும் வரும் என்று வரவேற்புரையில் தோழர் செயகிருட்டிணன் குறிப்பிட்டார்.

ரமேஷ் பிரபா

சன், கலைஞர் தொலைக்காட்சிகள்மூலம் நன்கு அறியப்பட்ட தோழர் ரமேஷ் பிரபா, தொலைக்காட்சியில் அவர் மேற்கொண்டு வரும் இயல்பான யதார்த்தமான மொழியில் சில கருத்துகளையும், தகவல்களையும் பதிவு செய்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறீர்களா? அதன் பாரதூர விளைவுகள் பற்றி யோசித்தீர்களா? என்று தம் நண்பர்கள் எழுப்பிய வினாக்களுக்கு எடுத்த எடுப்பி லேயே விடை பகன்றார்.

இதில் கலந்துகொள்வதால் என்னாகும் என்று நினைப்பது - யோசிப்பது - தயங்குவது என்பது வியாபாரக் கணக்காகும். இதில் கலந்துகொள்ளவேண்டும், நம் கடமையைச் செய்யவேண்டும் என்று நான் முடிவு செய்தது - நியாய உணர்வு - இன உணர்வு ஆகும் என்று அவர் சொன்னபோது மண்டபமே அதிரும் அளவுக்கு அப்படியொரு கையொலி!

(எல்லாவற்றையும் ரூபாய் அணா கண்ணோட்டத்தில் பார்த்துப் பாழாய்ப் போகும் இனவுணர்வற்ற தமிழர்கள் - ரமேஷ் பிரபாவின் இந்தப் பொறிதட்டும் உணர்வுக்குப் பிறகாவது, தங்கள் தங்கள் உடம்பைக் கொஞ்சம் கிள்ளிப் பார்த்துக்கொண்டு ரோஷம் பெறுவார்களாக!)

ஆ.இராசாமீது சொல்லப்படும் குற்றச்சாற்று ஒரு யூகத்தின் அடிப்படையில் கற்பனைக் குதிரையின்மீது சவாரி செய்யும் அற்பக் குற்றச்சாற்று என்பதற்கு ரமேஷ் பிரபா மாந்தோப்புக் கிளி திரைப்படத்திலிருந்து சுருளிராஜனின் விகடத்தை எடுத்துக் காட்டினார்.

பள்ளிக்குச் செல்லும் தன் மகனுக்குப் பேருந்து செலவுக்காக 5 ரூபாய் கொடுத்தார் அவனின் அப்பா.

மாலையில் பள்ளியிலிருந்து வந்த மகன் அப்பாவைப் பார்த்து அப்பா நீ கொடுத்த 5 ரூபாயை மிச்சப்படுத்தி விட்டேன் என்றான். என்னடா கதை விவரமாகச் சொல்லு என்றார் அப்பா.

நான் பேருந்தில் பயணம் செய்யாமல் பேருந்தின் பின்னாலேயே ஓடி பள்ளிக்குப் போய்விட்டேன் - 5 ரூபாய் மிச்சம் என்றான் மகன்.

அட மடையனே, பேருந்தின் பின்னால் ஓடாமல் ஆட்டோவின் பின்னால் ஓடியிருந்தால் 50 ரூபாய் மிச்சப்பட்டு இருக்குமே! (பலத்த சிரிப்பு) என்று சுருளிராஜன் சொல்லுவார். அந்தக் கதைதான் 2ஜி ஸ்பெக்ட்ரமில் இராசா ஊழல் செய்தார் என்பது என்று எடுத்துக் காட்டியது சுவையானது என்பதைவிட சுருக்கென்று புரிய வைக்கக் கூடியதாகும்.

மின்னணு ஊடகக்காரர்கள் கடைப்பிடிக்கும் சில வழிமுறைகளை - அத்துறையில் அவருக்கு அளப்பரிய அனுபவத்தின் காரணமாக எடுத்துரைத்தவர்.

தமிழ்த் தொலைக் காட்சிகளில் முக்கியத்துவம் வாய்ந்த சில செய்தியைத் திடீரென்று போடும்போது முக்கிய செய்திகள் என்று போடுவோம். ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் என்று போடுவார்கள். அதன் உண்மையான பொருள் பெரும்பாலும் உண்மைகளைத் தகர்ப்பதாகவே இருக்கும்.

ஆங்கில தொலைக்காட்சிகளில் பேட்டி காண்போர் கடைபிடிக்கும் ஒரு தந்திரம் - அதனையும் அம்பலப் படுத்தினார்.

யாரிடம் பேட்டி காண்கிறார்களோ, அவர்களைப் பெரும்பாலும் பேசவிடுவதில்லை. பாதி வார்த்தையைப் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கே இடையில் புகுந்து, மடக்குவதுபோல வேறு விஷயத்துக்குச் சென்று திணற வைப்பதுதான் அவர்களின் நோக்கம். கூடுமான வரை அடுத்தவர்களைப் பேச வைப்பதில்லை. மாறாக, இவர்களின் கேள்விகள்தான் ஆதிக்கம் செலுத்தும்.

முதலில் இதனை முறியடிக்க வேண்டும் - கேள்வி கேட்பவர்களைத் திருப்பிக் கேள்வி கேட்டுத் திணற அடிக்கவேண்டும். அந்த நிலை ஏற்பட்டால்தான் அவர்கள் அடங்குவார்கள் (நுனி நாக்கு ஆங்கிலம், மூச்சு முட்டப் பேசும் திறன் உள்ளவர்கள்தான் அறிவாளிகள் என்று நினைக்கும் அப்பாவித் தனத்திற்கும், மூடத்தனத்துக்கும் முடிவு கட்டவேண்டும்).

எல்லோரிடமும் இதே பாணியில் நடந்துகொள் கிறார்களா? தங்களுக்கு வேண்டியவர்கள் அல்லது தங்களுக்குச் சாதகமானவற்றை வரவழைக்கவேண்டும் என்று நினைத்து வேறு சிலரிடம் பேட்டி காணும்போது, எவ்வளவுப் பவ்யமாக அமர்ந்து, அவர்கள் கூறுவதைக் கடைசிவரைக் கேட்டு, அடுத்த கேள்விக்குப் போகிறார்கள். இது என்ன பத்திரிகை தர்மம்?

இன்னொரு தகவல் தோழர் ரமேஷ் பிரபா கூறியது கோடிட்டுக்கொண்டு படிக்கவேண்டியதாகும்.

ஒருவரைப்பற்றி செய்தி சொல்லும்போது, பக்கத்தில் அதற்குச் சம்பந்தமேயில்லாத வகையில் சம்பந்தப்பட்டவர் சாப்பிடுவது, நடப்பது, மூக்கு நோண்டுவது வரை படங்களாக (விஸுவல்) காட்டுவது நாகரிகமும் அல்ல - நேர்மையானதும் அல்ல - விஷமத்தனமானது.

இன்னொன்று, அமைச்சர் ஆ.இராசா டில்லியிலிருந்து ஊருக்கு வருவதை எப்படி செய்தியாக்குகிறார்கள்? ராஜா எஸ்கேப்!

ராஜா எஸ்கேப் ஆகி வெளிநாடு சென்றுவிட்டாரா? தலைமறைவாகி விட்டாரா? ஏனிந்த கேவலமான பிரச்சாரம்? ஒருவரை அசிங்கப்படுத்தவேண்டும் என்று அந்த வட்டாரம் நினைத்துவிட்டால், எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய கீழ்த்தரப் புத்திதானே இதில் நெளிகிறது?

(கொலை வழக்கில் சிக்கிய சங்கராச்சாரியார்பற்றி செய்தி ஒளிபரப்பியபோது அவர் நடப்பது, சாப்பிடுவது, கைப்பேசியில் பேசுவது (யாருடன் பேசினார் என்பதெல்லாம் ஊருக்கே தெரியும்!) என்பது போன்ற காட்சிகளைக் காட்டியதுண்டா?)

ஓர் அரிய புள்ளி விவரம்:

ரமேஷ் பிரபா சொன்ன ஒரு புள்ளி விவரம் ஒரு புதிய உலகத்தை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.

பல விஷயங்களை நாம் தெரிந்துகொண்டு இருப்ப தாகப் பாவலா செய்து கொண்டிருக்கிறோம் - உண்மை வேறு விதமானது என்பதற்கு இந்தப் புள்ளிவிவரம் அத்தாட்சி.

ஆங்கிலத் தொலைக்காட்சியில் வந்துவிட்டால் போதும், அதற்குமேல் என்ன வேண்டியிருக்கிறது? என்ற மனப்பான்மை இருப்பதுண்டு.

உண்மையிலேயே இந்த ஆங்கிலத் தொலைக் காட்சியைப் பார்ப்பவர்கள் யார் - எத்தனைப் பேர் என்கிற புள்ளி விவரத்தை (கூசுஞ) அவிழ்த்துக் கொட்டினார்.

உதாரணத்துக்குச் சில:

சி.என்.என். அய்.பி.என். மும்பையில் பார்ப்போர் 0.24

கொல்கத்தாவில் 0.06

டில்லி 0.21

சென்னை 0.03

பெங்களூரு 0.11

அய்தராபாத் 0.17

சராசரி விகிதம் 0.16.

என்.டி.டி.வி.

மும்பை 0.16

கொல்கத்தா 0.11

டில்லி 0.13

சென்னை 0.14

பெங்களூரு 0.07

அய்தராபாத் 0.06

சராசரி சதவிகிதம் 0.12

டைம்ஸ் நவ்

மும்பை 0.08

கொல்கத்தா 0.08

டில்லி 0.09

சென்னை 0.33

பெங்களூரு 0.19

அய்தராபாத் 0.12

சராசரி 0.13

இந்தப் புள்ளி விவரங்கள் உணர்த்துவது என்ன?

ஒரு சதவிகிதம் கூட இந்த ஆங்கிலத் தொலைக் காட்சிகளைப் பார்ப்பவர்கள் கிடையாது.

ஆனால், இவர்கள்தான் மக்கள் மத்தியிலே கருத்துத் தாக்கத்தை உருவாக்கக் கூடியவர்களாக இருக் கிறார்கள். தங்கள் கருத்தை மக்களிடம் திணிக்கிறார்கள்.

இவற்றை முறியடிக்கும் வகையில் ஓர் ஊடகம் நம் கைகளில் இருந்தால் ஒழிய, இந்த நச்சுத்தன்மையை நம்மால் முறியடிப்பது மிகவும் கடினமாகும்.

இந்த ஆங்கிலத் தொலைக்காட்சிகள் வெறும் செய்தியை மட்டும் வெளியிடுபவை. வேறு நிகழ்ச்சிகள் கிடையாது. விளம்பர வருமானங்களும் குறைவு. பெரும் பாலும் நட்டத்தில்தான் இயங்குபவை. ஆனாலும், இவர்களால் இவற்றை நடத்த முடிகிறது என்றால், அது எப்படி? இவர்களின் பின்ப(பு)லத்தில் இருப்பவர்கள் யார்? முதலாளிகள்! முதலாளிகள்! முதலாளித் திமிங் கலங்கள்!!!

அப்படியென்றால், இதன் பொருள் இவர்கள்தம் முதலாளிகளின் குரலை (ழளை ஆயளவநச ஏடிஉந)த்தான் ஒலிக்கிறார்கள். அதனை மக்கள் கருத்தாக மாற்ற முயலுகிறார்கள் என்பதுதானே உண்மை!

புதன் மாலை தியாகராயர் அரங்கில் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டம் படித்தவர்களையும் கண் திறக்கச் செய்து விட்டது - பாமர மக்கள் மத்தியிலும் உண்மைகளைக் கொண்டு செல்ல அவசியமான முயற்சிகள் தேவை என்பதையும் வலியுறுத்துகிறது. மக்களைச் சுற்றி ஓட்டை விழுந்த ஓசோன்கள்

ஆபத்தான ஆரிய வலைப் பின்னல்கள்! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!

(தொடரும்)

தியாகராயர் அரங்கில் வேட்டுச் சத்தம்! வரிப் புலிகளே புறப்படுக!
- மின்சாரம் -
நேற்றைய தொடர்ச்சி...
ஜெகத் கஸ்பார்
சென்னை தியாகராயர் அரங்கத்தில் தமிழ் ஊடகப் பேரவையின் சார்பில் (24.11.2010) நடைபெற்ற கூட்டத் தில் தமிழ் மய்யம் நிறுவனர் ஜெகத் கஸ்பார் ஆற்றிய உரை சற்று வித்தியாசமாகவே இருந்தது. கருஞ்சட்டைத் தோழன் ஒருவன் கர்ச்சனை செய்ததுபோலவே இருந்தது!
நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்லுவார் எம் பெரியார் என்றார் ஒரு கவிஞர். ஆம், அந்த நீதிமன்றத்திலேயே நேருக்கு நேர் சென்று, சிங்கத்தை அதன் குகைக்கே சென்று சந்தித்ததுபோல பார்ப்பன நீதிபதிகளுக்கு முன்பாகவே பார்ப்பான் நீதிபதியாய் வாழும் நாடு கடும் புலிகள் வாழும் காடு என்று கர்ச்சனை செய்தார்.
கஸ்பார் அவர்களும் நீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாதா? நீதிமன்றங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்ட வையா?
ஊடகத் துறைகள் ஊழல்களுக்கு அப்பாற்பட்ட வையா? என்ற அர்த்தமிக்க வினாக்களை எழுப்பி அசத்தினார்.
கதை ஒன்றும் சொன்னார். கோழி ஒன்றை அறுத் துக் கறி சமைத்து உறவினர்களுக்கு விருந்தளிக்கப் பட்டது.
அடடே, அந்த ஒரு கோழியை அறுத்துச் சமைக் காமல் இருந்தால் வருடத்துக்கு நூறு முட்டைகள் போடுமே, அதன்மூலம் 50 குஞ்சுகள் கிடைத்திருக்குமே, அந்தக் குஞ்சுகள் வளர்ந்து கோழிகள் ஆனால் 5000 ரூபாய் வருமானம் வந்திருக்குமே. ரூ.5000 வருமானம் வந்தால், மாடுகள் வாங்கி மாட்டுப் பண்ணையே வைத்திருக்கலாமே - மாட்டுப் பண்ணை வைத்து லட்சம் லட்சமாக சம்பாதித்து மாடி வீடு கட்டி மகிழ்ச்சியாக வாழலாமே என்பவனுக்கும், 2ஜி அலைக்கற்றையை ஏலம் மூலமாக விற்றிருந்தால், இப்படியெல்லாம் இலாபம் குவிந்திருக்குமே - ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அரசு கஜானாவுக்கு வந்து சேருமே என்று கூறும் பேர்வழிகளுக்கும், ஊடகங்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற வினாக் கணையை எய்தார்.
ஒரு பாட்டில் குடிநீர் விலை 15 ரூபாய். உண்மையி லேயே அதனை உற்பத்தி செய்பவர்களுக்கு அடக்கம் ஒரு ரூபாய்க்குமேல் கிடையாது. ஆனால், அதுபற்றி விளம்பரம் செய்வதற்கு நாலே முக்கால் ரூபாய் செலவு செய்கிறான்.
தனியார் குவிக்கும் இந்த லாபத்தை அரசே எடுத்து நடத்தினால் ஆண்டு ஒன்றுக்கு லட்சம் கோடி ரூபாய் கிடைக்காதா?
அரசுக்கு வருமானம் என்பதைவிட எவ்வளவு மக்களுக்குப் போய்ச் சேருகிறது என்பதுதான் முக்கியம்.
டிராய் என்பதுதான் இதுபற்றிய கொள்கை முடிவினை எடுக்கிறது. 60 கோடி மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்ற திட்டமிடப்படுகிறது.
இராசா பொறுப்பேற்றபோது 30 கோடி பேர்கள் பயனாளிகளாக இருந்தனர். அது 71 கோடியாக உயர்ந் தது ஆ.இராசா காலத்தில்தானே - இதுகுறித்து யாரா வது பேசுகிறார்களா? ஊடகங்கள் எழுதுகின்றனவா?
உண்மையைச் சொல்லப்போனால், அலைக்கற்றை கூட்டுக் கொள்ளைக் கூட்டத்தை ராஜா உடைத்தெறிந் தார் - அதற்கான விலையைத்தான் இராசா கொடுத்தி ருக்கிறார் என்று கஸ்பார் பேசினார்.
எங்கள் குரலை எவராலும் அடக்க முடியாது - உங்கள் சக்தி எதுவாக இருந்தாலும் என்ற ஆளுமையோடு உரையை நிறைவு செய்துகொண்டார்.
ஏ.எஸ். பன்னீர்செல்வம்
பேனாஸ் சவுத் ஏசியா ஊடக அமைப்பைச் சேர்ந்த வரும், ஆங்கில ஊடக உலகில் கொடிகட்டிப் பறப்பவரு மான ஏ.எஸ். பன்னீர்செல்வம் அவர்களின் உரை ஓர் ஆய்வுரையாக அமைந்திருந்தது.
இந்தத் தணிக்கைத் துறை அறிக்கை என்பது 2004 முதல் 2010 ஆம் ஆண்டுவரைக்கானது. ஆனால், மற்ற ஆண்டுகளையெல்லாம் விட்டு விட்டு 2008 ஆம் ஆண்டை மட்டும் தேர்ந்தெடுத்து, அதற்கான அறிக்கையை அளிக்க வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் பளிச்சென்ற கேள்வி பகுத்தறிவு அடிப்படையிலானது.
தொலைத்தொடர்புத் துறையில் முதலீடு செய்வது என்பது சமூக நலனைச் சார்ந்தது (Social Investment).
தொலைத்தொடர்பு வசதிகள் அதிகரிக்க அதிகரிக்க மக்களின் பொருளாதார நிலை வளர்ச்சி அடையும் தன்மையைக் கொண்டது.
2003 ஆம் ஆண்டுவரை நட்டக் கணக்கு 36,993 கோடி ரூபாய்.
அதைப்பற்றி ஏன் யாரும் பேசுவதில்லை? எந்த ஊடகங்களும் மூக்கைச் சிந்துவதில்லை.
அமைச்சர் இராசா முறைப்படி சட்ட அமைச்சருக்கு எழுதுகிறார் - பிரதமருக்குத் தெரிவிக்கிறார் - டிராய் நிறுவனத்தின் வழிகாட்டுதலும் இருக்கிறது. இந்த நிலையில் எந்த இடத்தில் இராசா தவறு செய்துவிட்டார்?
இவை வினாக்கள் மட்டுமல்ல - வெடிமருந்துகளாகும். 2ஜி மூலம் இலாபம் என்பது தொடர்ந்து வந்து கொண் டிருக்கக் கூடாது. இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் சிந்திக்கவில்லை?
அவர்களின் நிலை குழப்பமானது என்று கூறினார்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன்
கருஞ்சட்டைத் தமிழர் இதழின் ஆசிரியர் பேரா சிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் பல அணுகுண்டு களைக் கொளுத்திப் போட்டார்.
மத்திய அரசு பல கொள்கைகளை, முடிவுகளை எடுக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் நிபுணர் குழுக்களை வைத்துக் கொண்டுள்ளனர்.
உணவுக் கொள்கை, தேசிய தொடர்புக் கொள்கை, தொழிற் கொள்கை என்று வகுத்துள்ளார்கள். அமைச் சர்களாக தனியே கொள்கைகளை வகுத்துக் கொள்ள முடியாது.
இது தெரியாதா? இராசாவை வீழ்த்தவேண்டும் என்பதுதான் இலக்கே தவிர உண்மையைப்பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலையில்லை.
ஓர் அருமையான நடைமுறை எடுத்துக்காட்டைச் சொன்னார். ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு தி.மு.க. ஆட்சியில் வழங்கப்படுகிறது.
அதனால் அரசுக்கு நட்டம்தான். அதற்காக அரசு தவறு செய்துவிட்டது, ஊழல் செய்துவிட்டது என்று சொல்ல முடியுமா? என்று கேட்டார். (உண்மைதானே. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்தது மாபெரும் ஊழல் என்று பொதுமக்களைப் பார்த்து இந்த ஊடகக் காரர்கள் சொல்லிப் பார்க்கட்டுமே - ஒரு வாழைப் பழத்தைக் கடிக்கக்கூட ஒருவருக்கும் பல் இருக்காது).
அமைச்சர் இராசா குற்றம் செய்தார் என்று சொன் னால், அது பிரதமர்வரை செல்லுமே - செல்ல வேண்டுமே!
இராசா செய்தால் மட்டும் குற்றமா? அவர் கறுப்பராக இருப்பதால் குற்றமா?
ஒரு பத்திரிகை எழுதுகிறது - இராசா கறுப்பு அடையாளத்தைக் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று. கறுப்பு அடையாளம் எங்கள் அய்யா கொடுத்துச் சென்றதடா! (பலத்த கைதட்டல்!).
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுதலையில் இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தெரு முனைக் கூட்டங்கள் எங்கும் நடக்கட்டும் - மக்கள் மத்தியில் உண்மைகள் போய்ச் சேரட்டும் என்று கூறி யிருக்கிறார். அதனை அப்படியே நான் வழிமொழிகி றேன் என்று சுப.வீ. அவர்கள் சொன்னபோது, கர வொலி அடங்க வெகுநேரமாயிற்று. (மக்கள் மத்தியில் இராசா பழிவாங்கப்பட்டுள்ளார் என்ற உண்மை தெரிய ஆரம்பித்துவிட்டது என்பது ஒரு நல்ல சைகையாகும்).
தமிழ் மக்கள் கிளர்ந்து எழவேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் பாய்ந்து கிளம்பட்டும்.
இராசாமீது சுமத்தப்பட்ட கறை நீங்கும்வரை நாம் ஓயப் போவதில்லை என்று கர்ச்சித்தார் சுப.வீ.
அமைச்சர் ஆ.இராசாவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அவரை வீட்டுச் சிறையில் வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் சு.சாமி.
அப்படியானால், இராசாவைக் கொல்லப் போகிறவர் யார் என்று இந்த சு.சாமிக்குத் தெரிந்திருக்கிறது. அந்த ஆள் யார் என்று அவர் தெரிவிக்கவேண்டும். இல்லா விட்டால் சு.சாமியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று சுப.வீ. சொன்னபொழுது, கைது செய்! கைது செய்!!. சு.சாமியைக் கைது செய் என்ற கோடை இடியென மக்கள் சமுத்திரத்திலிருந்து புறப்பட்டது.
(மாவீரன் பிரபாகரனை பறையா என்ற சொல்லைப் பயன்படுத்தி அழைத்தவர் இதே சு.சாமி.தான். எனவே, எப்பொழுதுமே சு.சாமிக்கு தனியே ஜாதிப் புத்தி உண்டு. வெட்ட வெளியில் சிலம்பம் ஆடும் இந்த அனாம தேயத்தை, அடேயப்பா இந்தப் பார்ப்பன ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கும் ஷமத்து இருக்கிறதே - கொஞ்சமல்ல, நஞ்சமல்ல - இந்த ஆளிடம் கவர் வாங்கிச் செய்தி போடும் ஊடகப் பெருச்சாளிகளும் உண்டு).
நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் அவர்களின் படத்திற்கு பிரதமர் உள்பட பலரும் மாலை அணிவித்துச் சென்றனர். அந்த நிகழ்ச்சிக்கு ஆ.இராசா அவர்களும் சென்றிருந்தார். பிரதமர், இராசாவின் முதுகைத் தட்டிக் கொடுத்துச் சென்றுள்ளார். இது குறித்து ஒரு பத்திரிகை பிரதமர் இராசா முதுகை எப்படி தட்டிக் கொடுக்கலாம் என்று எழுதுகிறது. இதற்காக தினமணி ஆசிரியர் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படவேண்டாமா? என்று கேட்டார் சுப.வீ.
தமிழர் தலைவரின் உரை வீச்சு
(முழு உரை நேற்றைய விடுதலையில் வெளி வந்துள்ளது).
1. இது ஏதோ இராசா என்ற தனி மனிதர் பிரச்சினை அல்ல. ஆரியர் - திராவிடர் போராட்டத்தின் ஒரு கட்டம்.
2. கலைஞர் தலைமையிலான சூத்திரர் ஆட்சி மீண்டும் வரக் கூடாது என்பதற்கான ஒத்திகை.
3. 2ஜி, 3ஜி என்பதெல்லாம் வெறும் புறத்தோற்றம் - உள்ளே இருப்பது மனுதர்மம்.
4. இராமாயணக் காலம் முதல் தொடர்ந்து வரும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு கட்டம் இது.
5. சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் மண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒன்றான பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தபோது, அதனை எதிர்த்து நந்தன்களை எரித்தார்களே - அதே கூட்டம் தான் இப்பொழுது ஒரு கறுப்பு இராசாவுக்கு எதிராகக் கச்சை கட்டி எழுந்துள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 151 ஆவது பிரிவு என்ன கூறுகிறது? தணிக்கை அதிகாரி (CAG) அறிக் கையைத் தயாரித்து குடியரசுத் தலைவரிடம் அளிக்க வேண்டும்; பிறகு நாடாளுமன்றத்தில் வைத்து விவா திக்கப்படவேண்டும்.
நாடாளுமன்றத்தில் அறிக்கை வைக்கப்படாத நிலையில், அந்த அறிக்கையில் இருப்பதாகக் கூறப் பட்டவை எப்படி வெளியில் கசிந்தது?
இதற்கு யார் பொறுப்பு?
இதற்கொரு விசாரணை தேவையா, இல்லையா?
7. இராசா முதுகில் பிரதமர் தட்டிக் கொடுத்தார் என்றால், அதன் பொருள் என்ன? இராசா குற்றமற்றவர் என்றுதானே பொருள்? (பலத்த கைதட்டல்).
8. அடுத்து தமிழர் தலைவர் வெளிப்படுத்திய தகவல் முக்கியமானது இந்த வார ஜூனியர் விகடனில் வெளிவந்துள்ள செய்தி அது.
பூனைக்குட்டி வெளியே வந்தது!
ஜூனியர் விகடன் வார ஏட்டில் (28.11.2010) வெளியான செய்தி (பக்கம் 44).
....இந்த அடிப்படையில் இந்திய தபால் மற்றும் டெலிகாம் துறையின் ஆடிட்டர் இயக்குநர் ஜெனரல் ஆர்.பி. சிங்கை சந்தித்தோம்.
பொதுமக்கள், பத்திரிகைகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல அரசு சார்பற்ற அமைப்புகள் எல்லாம் எங்களிடம் வந்து, இந்த முறைகேடு தொடர்பான பல தகவல்களைச் சொன்னார்கள். இதன் அடிப்படையில்தான் எங்களது விசாரணையே நடந்தது. எங்களால் அறிக்கை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால், சி.பி.அய். போன்ற அமைப்புகளே தவறு செய்தவர்கள்மீது சட்டப்பூர்வமான நட வடிக்கை எடுக்க முடியும். அந்த நடவடிக்கைக்கு இந்த அறிக்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்... என்றார்.
2ஜி விவகாரத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த இவர்கள் இருவரும் இதுதொடர்பான ஆவ ணங்களைத் திரட்டுவதில் இன்னமும் மும்முரமாக வும் இறங்கி இருக்கிறார்கள்.
- சரோஜ்கண்பத், டெல்லி,
இதன்மூலம் என்ன தெரிகிறது? திட்டமிட்டு ஏற் பாடுகள் நடந்திருக்கின்றன என்று தெரியவில்லையா?
தந்தை பெரியார் ஒன்றைக் கூறுவார், பூனைக் குட்டி வெளியில் வந்துவிட்டது என்பார் - அதுதானே இது!
தணிக்கை அதிகாரி என்ன அரசியல்வாதியா? அமைச்சரா? அவர் பேட்டி கொடுக்கலாமா? மக்களிடம் மனுக்கள் வாங்கலாமா? எல்லாம் திட்டமிட்டு நடந் திருக்கின்றன என்று கருதுவதில் என்ன தவறு?
தமிழர் தலைவரின் இந்தக் கருத்து மிகவும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது.
ஒரு பெரிய ச(ா)திப் பின்னல் இதன் பின்னணியில் இருக்கிறது என்று கருதுவதற்கு இடம் இருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் கைப்புழக்கம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அப்படியென்றால், தனக்குத் தெரிந்த உண்மையை அவர் தெரிவித்தாகவேண்டும் - இல்லையேல் சட்டப்படியாக லாயர் நோட்டீஸ் வழங்கப்படவேண்டும் - வழங்கப்படும் என்று தெரிவித்தார். தமிழர் தலைவர்.
இராசா ஒரு தனி மனிதர் அல்லர். ஒரு இனத்தின் தளபதி என்று தமிழர் தலைவர்தானே சொல்ல முடியும்! அதைச் சொல்லவேண்டியவர் சொல்லவேண்டிய முறையில் சொல்லியிருக்கிறார்.
இராசா பிறக்கும்போதே மந்திரியாகப் பிறக்கவில்லை. மந்திரியாக இல்லாவிட்டாலும் மக்கள் மத்தியிலே என்றென்றும் ராஜாவாகவே ஜொலிக்கிறார் என்றபோது, மக்கள் கடல் துள்ளிக் குதித்தது.
இங்கே வந்திருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் நூறு பேருக்கு உண்மையை எடுத்துக் கூறவேண்டும் என்ற வேண்டுகோளையும் தமிழர் தலைவர் வைத்தார்.
யார் யார் கைகளில் எல்லாம் கைப்பேசிகள் உள்ள னவோ, எந்தக் காலம் வரை உள்ளதோ அந்தக் காலம் வரை ராஜாதான் தொலைத்தொடர்புத் துறை மந்திரி (பலத்த ஆரவாரம்!).
கைதட்டி வெறும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது.
தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் பார்ப்பன ஊடகங்களைப் புறக்கணிக்க உறுதி கொள்ளவேண்டும். வெறுக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுவான் என்றார் தந்தை பெரியார். அதனை நினைவுபடுத்துகிறேன்.
ஊழலில் திளைத்த அம்மையார்கள் எல்லாம் ஊழலைப் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார்கள்.
தனித் தமிழர் ஆட்சியை - சூத்திரர் ஆட்சியை ஒழிப்பதே எதிரிகளின் நோக்கம். அதற்கு இல்லாத ஊழலைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளனர்.
உடலால் பலராயினும் உள்ளத்தால் நாம் தமிழர்கள் என்ற உணர்வு பெறவேண்டும். அதுதான் இராசாவுக்கு நாம் அளிக்கும் உண்மைப் பரிசு என்றார் தமிழர் தலைவர்!
சூத்திரர்களின் அரசு என்று சட்டப்பேரவையில் சூளு ரைத்தார் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள்.
அந்தச் சூத்திர ஆட்சியைக் காப்பாற்றிட, மீண்டும் அரியணையில் ஏற்றிட உறுதி கொள்வோம். உறுதி கொள்வோம் என்று தமிழர் தலைவர் சொன்னபோது மக்களின் உணர்ச்சிப் பிரவாகம் அலைமோதியது.
1971 இல் இருந்த அதே சூழல் இப்பொழுதும் ஏற்பட்டுவிட்டது.
இதுகுறித்து முதலமைச்சர் கலைஞர் கூறியது இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.
கேள்வி: தினமணி என்ற பத்திரிகை அண்மைக் காலமாகத் தொடர்ந்து தி.மு.க.வுக்கு எதிரான செய்திகள் - கார்ட்டூன்கள் வெளியிட்டு வருகின்றதே அது தி.மு.க.வின் தேர்தல் வெற்றியைப் பாதிக்குமா?
கலைஞர்: 1971 தேர்தலில் தினமணி காட்டிய தி.மு.க. எதிர்ப்பு. திரிபுரம் எரித்த சிவனின் நெற்றிக் கண்ணின் தீப்பொறிகள்போல் இருந்தது. ஆனால், அப்போது தி.மு.கழகம்தான் வெற்றி மாலை சூடியது. இப்பொழுதும் திராவிடர் கழகம் நம்முடன் இருக்கிறது - நமக்கு ஆதரவாக - அருந்துணையாக! அன்றுபோல் இன்றும் தினமணி நம்மை எதிர்த்தே இயக்கம் நடத்துகிறது.
அதனால் 1971 என்பது திரும்பவும் நடக்கும் என நம்பி, தினமணியாருக்கு நன்றி கூறுவோமாக.
(முரசொலி, 5.5.2006).
கலைஞரின் கணிப்புத் தப்பப் போவதில்லை.
தமிழர்களே, 1971 இல் தி.மு.க.வுக்குக் கிடைத்த அதே 183, 2011 லும் கிடைக்கக் கிளர்ந்தெழுக! கிழக்குச் சூரியன் - சாகா அந்தக் கிழவரின் கீர்த்திமிகு வரிகளை வரித்துக் கொண்டு வரிப்புலியாய்ப் புறப்படுக! புறப்படுக!!


http://www.viduthalai.periyar.org.in/20101125/news16.html
http://www.viduthalai.periyar.org.in/20101126/news27.html

No comments:


weather counter Site Meter