Pages

Search This Blog

Sunday, November 21, 2010

1916 - திராவிட இயக்கத்தின் விடியல் தமிழர் தலைவர் ஏற்றிய எழுச்சித் தீபம்

சென்னைப் பல்கலைக் கழகத்தில் 20.11.2010 அன்று பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்களின் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய ஒரு மணி நேர உரை 95 ஆண்டு கால நீதிக்கட்சியின் வரலாற்றைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.
20.11.1916 அன்று தானே தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) பிறப்பெடுத்தது. அதனையொட்டி அதன் 95ஆம் ஆண்டு தொடக்க நாளில் 1916ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தின் விடியல் - எனும் தலைப்பில் அந்த உரை அமைந்திருந்தது.
சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் பார்ப்பனர் அல்லாத முக்கிய தலைவர்கள் கூடி, பார்ப்பனர் அல்லாதாருக்காக ஓர் அரசியல் கட்சியைத் தொடங்க வேண்டும் என்று முடிவு எடுத்தனர். கூடிய இடம் - சென்னை வேப்பேரி எத்திராஜ் முதலியார் வீட்டில் கூடி அத்தகைய முடிவு எடுக்கப்பட்டது என்ற தகவலும் இன்னொரு பக்கத்தில் உண்டு.
இந்த வரலாற்றுக் குறிப்பின் அடிப்படையில்தான் பேராசிரியர் அ. கருணானந்தன் அவர்கள் இந்த நாளில் திராவிடர் கழகத் தலைவரைக் கொண்டு மிகப் பொருத்தமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்.
எடுத்த எடுப்பிலேயே அறக்கட்டளை தோற்றுநருக்கு ஒரு வேண்டுகோளை முன் வைத்தார்.
இனி திராவிடர் இயக்கம் என்றே குறிப்பிடுங்கள்; திராவிட இயக்கம் என்றால் இடையில் திரிபுவாதங்கள் ஊடுருவ வாய்ப்பு உண்டு என்ற அபாயத்தை வெளிப்படுத்தினார்.
விடியல் தோன்றக் காரணம் என்ன?
இந்நாளை விடியல் என்று சொன்னால், விடியல் தோன்றுவதற்கான காரணத்தை நாம் சிந்திக்க வேண்டும். நம்மைச் சூழ்ந்த காரிருள் என்ன என்பதைச் சொன்னால் தானே விடியலுக்கான அர்த்தத்தின் முழு பரிமாணமும் தெரிய முடியும்.
ஒரு சிறுபான்மைக் கூட்டம் இந்த நாட்டுக்குரிய பெரும்பான்மை மக்களை மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் அடக்கி வைத்திருந்தனரே - அந்தக் காரிருளை விரட்டியடிக்க வரலாற்றுக் காரணங்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்டதுதான் திராவிடர் இயக்கம் என்ற பீடிகையோடு ஆசிரியர் உரையைத் தொடங்கினார்.
தன்னுடைய உரைக்கு முக்கிய ஆதாரமாக பிட்டி தியாகராயர் அவர்களால் வெளியிடப்பட்ட (1916 டிசம்பர் 20) பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையினை கையில் எடுத்துக் கொண்டார் தமிழர் தலைவர்.
அதில் உள்ள ஒரு பகுதி இதோ:
தற்போது சென்னை எக்சிகியூடீவ் கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும் மாண்புமிகு சர். அலெக்சாண்டர் கார்டியூ, 1913ஆம் ஆண்டில் பொதுப் பணிக் குழுவின் முன், சில சான்றுகளை அளிக்குங்கால், இந்த மாகாணத்தில் பிராமணர், பிராமணரல்லாதாரின் நிலை எவ்வாறுள்ளது என்பதை விளக்கமாகக் கூறியுள்ளார். பிராமணரல்லா தாருக்காகப் பரிந்து பேச வேண்டுமென்று அவர் கூறவில்லை, இருந்த நிலையை விளக்கினார். இண்டியன் சிவில் சர்வீசுக்கென, இங்கிலாந்திலும், இந்தியாவிலும் ஒரே சமயத்தில் வைக்கப்படும் தேர்வுகளில், பிராமணர்களே முழுதும் வெற்றி பெறுகின்றனர் என்றார். பிராமணர்களைப் பற்றிக் குறிப்பிட வந்த அவர், அவர்களை மிகச் சிறிய தனித்து வாழும் சாதியினர் என்கிறார். 1892ஆம் ஆண்டு முதல் 1904ஆம் ஆண்டு வரை நடைபெற்ற போட்டித் தேர்வுகளில், வெற்றி பெற்ற 16 பேர்களில் 15 பேர் பிராமணர்கள் ஆவர்; அது 100-க்கு 95 சதவிகிதமாகும். கடந்த 20 ஆண்டுகளில் மைசூர் மாகாணத்தில் மைசூர் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டித் தேர்வுகளில் பிராமணர்கள் 85 சதவிகிதம் இடத்தைக் கைப்பற்றினர். சென்னை மாகாணத்தில், உதவிப் பொறியாளர்கள் வேலைக்கு எடுக்கப்பட்ட போது, அதே 20 ஆண்டு காலத்தில், பிராமணர் 17 பேராகவும், பிராமணரல்லாதார் நான்கு பேராகவும் எடுக்கப்பட்டனர். கணக்குத் தணிக்கைத் துறையில் நடைபெற்ற தேர்வுகளிலும் இதே மாதிரி முடிவே இருந்தது. சென்னை மாகாணத்தில், உதவி கலெக்டர் 140 இடங்களில் பிராமணர்க்கு 77 இடங்கள்; பிராமணரல்லாதார்க்கு 30 இடங்கள்; ஏனைய இடங்கள் முகம்மதியர், இந்திய கிறித்தவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் முதலானவர்களுக்குக் கிடைத்தன. மற்றொரு வியப்பு என்ன எனில், போட்டித் தேர்வு வைக்காத ஆண்டுகளிலும்கூட ஆட்களை நியமிப்பதில் பெரும் பகுதி, பிராமணர் கையில்தான் இருந்தது என்பதாகும்.
இவ்வாறு சர். அலெக்சாண்டர் கார்டியூ குறிப்பிட்டு விட்டு, மேலும் குறிப்பிடுகிறார்:
1913ஆம் ஆண்டில் மாவட்ட நீதிமன்ற நடுவர்களுக்குரிய 128 நிலையான இடங்களுக்குப் பிராமணர்கள் 93 இடங்கட்கும், பிராமணரல்லாதார் 25 இடங்கட்கும், இந்திய கிறிஸ்தவர், அய்ரோப்பியர், ஆங்கிலோ இந்தியர் எஞ்சிய இடங்கட்கும் நியமிக்கப்பட்டனர் இந்தப் புள்ளி விவரங்களிலிருந்தும் பிறவற்றிலிருந்தும் இந்தியாவில் சிவில் சர்வீசுக்கென வைக்கப்பட்ட போட்டித் தேர்வு என்பது பெரும்பாலும் முழுதும் பிராமணர்களின் ஆதிக்கத்துக்குட்பட்டு இருந்தது என்றும், பிராமணரல்லாதார்கள் அதிலிருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதும் வெளிப்படையாகின்றது என்று அவர் ஒரு முடிவுக்கு வந்தார். சென்னை அரசிற்கு உட்பட்ட சுதேச சமத்தானங்களில் என்ன நிலை இருந்து வருகின்றது என்பதை சர். அலெக்சாண்டர் குறிப்பிடவில்லை. அங்கும் பிராமணர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்து வருகின்றது. இது தவிர அதிகாரிகள் தங்கள் மனம்போல் நியமிக்கும் கீழ்நிலை உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பது தெரிய வரும்.
இப்பொழுது அரசாங்க அலுவல்களின் நிலைமையைத் தெரிந்து கொள்ள நாம் புள்ளி விவரங்களைப் பார்க்க வேண்டாம். இந்தியர்களுக்குக் கொடுக்கப்படும் மிக உயர்ந்த பதவிகள் எந்த அடிப்படையில் கொடுக்கப்படுகின்றன என்பதை நாம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆளுநரின் ஆட்சிக் குழுவிற்கு இந்தியர்களும் நியமிக்கப்படலாம் என்று முடிவு செய்தபின் மூன்று பேர்கள் வரிசையாக நியமிக்கப் பெற்றனர். அதில் கடைசி இருவர் பிராமண வழக்கறிஞர்கள், அய்ந்து இந்திய உயர்மன்ற நீதிபதிகளில் நால்வர் - அதாவது இந்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் - அனைத்திலும் பிராமணர்களே நியமிக்கப் பெற்றனர். 1914ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு ஒரு புதிய செயலாளர் பதவியைத் தோற்றுவித்து, அதில் ஒரு பிராமணரை நியமித்தனர். ரெவினியூ போர்டின் (வருவாய்த்துறை வாரியம்) இந்தியச் செயலாளர் ஒரு பிராமணர். அரசாங்க அலுவலர்களிலிருந்து மாவட்டக் கலெக்டர்களாக (ஆட்சித் தலைவர்களாக) இருவர் நியமிக்க வேண்டிய பொழுது பிராமணர்களே நியமிக்கப் பெற்றனர்.
மேற்கண்ட தகவலை பிட்டி தியாகராயரின் அறிக்கை யிலிருந்து தமிழர் தலைவர் எடுத்துக்காட்டியபோது கற்றறிந்த பேராசிரியர்ப் பெருமக்களும், ஆராய்ச்சி மாணவர்களும் இப்படியுமா? இந்த அளவிலா? பார்ப்பனர்களுடைய ஆதிக்கம் இருந்ததை உணரக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. நிசப்தமாக அந்தப் புள்ளி விவரங்களைச் செவி மடுத்தனர்.
பார்ப்பனப் பத்திரிகைகள் அன்றும் - இன்றும்
பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கு குறித்து பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையிலே தியாகராயர் தெரிவித்திருந்த கருத்தினை எடுத்துக் காட்டினார்.
பொது நிறுவனங்களில் பிராமணர்களின் ஆதிக்கம் மிகுதியாயிருப்பதைக் கருதி பிராமணரல்லாதாரின் (பிரதி நிதியாக) சார்பாளராக யாரேனும் நியமிக்கப்பட்டால், பிராமணப் பத்திரிகைகள் அவரைக் கடுமையாகக் கண்டிக்கும் என்பதை எடுத்துக்காட்டி, அன்று முதல் இன்றைய இராசா வரை இதே நிலைதான் என்று போகிற போக்கினை தமிழர் தலைவர் குறிப்பிட்ட போது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும், கரவொலியும் ஏற்பட்டன.
இந்த உண்மையான நிலவரங்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சமூக வரலாறு நமக்கு அவசியம் தேவை.
காங்கிரஸ் தொடக்கப்பட்ட கால கட்டத்தில் முதல் பத்து ஆண்டுகளுக்கான வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஓர் உண்மை தெரிய வரும் வெள்ளைக்காரர்களுக்குத் துதிபாடும் தீர்மானம்தான் இருக்கும் இந்தியருக்கு உத்தியோகம் தேவை என்று கூறி அவற்றைப் பார்ப்பனர்களே பெற்று அனுபவித்தனர்.
நாம் ஏன் படிக்கவில்லை?
முதல் இந்திய நீதிபதி என்றால் சர். முத்துசாமி அய்யர் என்றுதான் இருக்கும். காரணம் என்ன? நம் மக்கள் படிக்கவில்லை. ஏன் படிக்கவில்லை? கல்வி நமக்கு மறுக்கப்பட்டது. மனுதர்மப் படி சூத்திரன் படிக்கக் கூடாதே! மேலும் இங்கிலீஷ் என்றால் மிலேச்சபாஷை என்று ஒரு பக்கத்தில் சொல்லி வைத்தார்கள். ஆனால் அப்படிச் சொன்னவர்கள் மட்டும் இங்கிலீஷ் படித்துக் கொண்டார்கள்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் இந்திய உறுப்பினர் களில் பெரும்பான்மையோர் பிராமணர்களாயிருந்தபடியால், பல்கலைக் கழகத்திலிருந்து, சட்டமன்றத்திற்கு உறுப்பினர் களைத் தேர்ந்தெடுப்பதில், பிராமணரல்லாதார் எப்போதும் வெற்றி வெற்றி பெறுவது இல்லை.
1914ஆம் ஆண்டுக்குரிய சென்னை சட்டமன்ற மேலவைக் கூட்டத்தில் காலஞ் சென்ற குஞ்ஞராமன் நாயர் கேட்ட கேள்விக்கு சென்னைப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில் பிராமணர்கள் 452 பேர். பிராமணரல்லாத இந்துக்கள் 12 பேர்; பிற இனத்தவர் 74 பேர் என்று பதில் கூறப்பட்டது. (பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையிலிருந்து)
இவற்றை எல்லாம் எடுத்துக்காட்டினார் தமிழர் தலைவர். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் - திராவிடர் இயக்கம் விடியலாக வரலாற்றில் தோன்றியதற்கான நியாய உணர்வின் அலைகள் இதன் மூலம் பாய்ந்து எழுந்தன.
அண்ணா பேசுகிறார்
அறிஞர் அண்ணா அவர்கள் சென்னை திருவல்லிக் கேணியில் (30.6.1950) ஆற்றிய உரை - அண்ணா கண்ட தியாகராயர் எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து ஒரு பகுதியை கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எடுத்துக் காட்டினார்.
அந்த நாளிலே டாக்டர்களிலே சிறந்தவர் யார் என்றால் டாக்டர் ரெங்காச்சாரி சிறந்தவர் என்று கூறப்பட்டது. இப்பொழுது டாக்டர்களிலே சிறந்தவர் யார்? டாக்டர் குருசாமி. இதைக் கேட்டு நாம் பூரிப்படைகிறோம். அந்த நாளிலே ஆங்கிலத்தில் பேசுவதிலே யார் சிறந்தவர் என்றால், ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார் என்று மயிலையும், திருவல்லிக்கேணியும் சொல்லிற்று. இன்று நம் திராவிடப் பெருங்குடி மக்களிலே சிறந்த பேச்சாளர் யார் என்றால், சர்.ஏ. இராமசாமி முதலியார் என்று யாவரும் கூறுவர். சிறந்த பொருளாதார வல்லுநர் யார்? என்று அன்று கேட்டால் யார் யாரையோ கூறுவர். இன்று சர்.ஆர்.கே. சண்முகம்தான் அங்ஙனம் யாராலும் போற்றப்படுபவர். அல்லாமலும் தமிழிலே சிறந்த பாடகர் யார்? அன்று எஸ்.ஜி. கிட்டப்பா, (பிரபல தமிழ்ப்பாடகி கே.பி. சுந்தரம்பாள் கணவர்) என்று கூறப்பட்டது. இப்பொழுது எம்.கே. தியாகராஜ பாகவதர். நகைச்சுவையிலே மன்னன் யார்? அன்று ஒரு சாமண்ணா. இன்று நம்முடைய என்.எஸ். கிருஷ்ணன். இந்து பத்திரிகையிலே எழுதப்படும் தலையங்கங்களை விட, சிறந்த தலையங்கங்களை ஆங்கிலத்தில் தீட்ட நம்மிடையே டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி இருக்கிறார்.
அண்ணாவின் இந்த உரையை ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எடுத்துக் காட்டியதற்குக் காரணம் என்ன?
நம்மிடையே திறமையானவர்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், வாய்ப்புக் கொடுக்கப்பட்டால்தானே அந்தத் திறமைகள் வெளிப்படும்?
மளமளவென மலர்ந்தன!
தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதைப் பார்ப்பனர்கள் மறுத்து வந்ததும், நீதிக்கட்சி கல்வி நீரோடையைத் திறந்து விட்ட காரணத்தால் - வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வந்ததால் மாற்றங்கள் மளமளவென மலர ஆரம்பித்தன.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தியாகராயர் - டாக்டர் டி.எம். நாயர் வாழ்விலே நடைபெற்ற சுவையான அதே நேரத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய ஒரு நிகழ்வை மன்றத்தில் அனைவரின் கண் முன்னாலும் கொண்டு வந்து நிறுத்தினார்.
கட்டித் தழுவியதால் ஏற்பட்ட விடியல்
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரன் கோயில் குடமுழுக்கு அதற்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை அளித்தார் சர்.பிட்டி தியாகராயர். குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு தியாகராயர் சென்றார் குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி வெளியில் நிறுத்தப்பட்டார். அதே நேரத்தில் அவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்க்கும் பார்ப்பனர். முக்கிய இடத்தில் அமர்த்தப்பட்டார்.
இதனைக் கண்ட பொறுமைசாலியான தியாகராயருக்கு சினம் சீறி எழுந்தது. கோயில் கட்டிய தமிழன் ராஜராஜசோழன் உள்பட வெளியில்தானே நிற்க வேண்டும் (பலத்த கைதட்டல்).
அதுவரை எலியும் பூனையுமாக இருந்தவர்கள் தியாக ராயரும், டாக்டர் நாயரும். இனமான உணர்வால் உந்தப்பட்ட பிட்டி தியாகராயர் மயிலாப்பூர் குடமுழுக்கு சம்பவத்தின் எதிரொலியாக நேராக டாக்டர் டி.எம். நாயர் வீட்டுக்குக் காரை ஓட்டச் சொன்னார்.
ஆச்சரியம், ஆனால் உண்மை. டாக்டர் நாயரும், பிட்டி. தியாகராயரும் ஒருவரை ஒருவர் தழுவினர் - கட்டிப் பிடித்து கொண்டனர்.
அந்தத் தழுவல்தான் - கட்டிப் பிடித்தல்தான் பார்ப்பனர் அல்லாதாருக்கு, திராவிடருக்கு விடியல் ஏற்படக் காரணமாயிற்று (பலத்த கைதட்டல்).
டாக்டர் டி.எம். நாயர் முழக்கம்
டாக்டர் டி.எம். நாயரின் சேத்துப்பட்டு ஸ்பர்டங்கு சாலை உரையும், விக்டோரியா பப்ளிக் ஹால் உரையும் புகழ் பெற்றவை.
காங்கிரஸின் தலைவராக இருந்த மஜும்தார் என்ற பார்ப்பனர் ஏற்கெனவே படித்தவர்கள் இருக்கிறார்கள்; அவர்களை நிருவாகத்தில் வைத்து காரியங்களைச் செய்ய வேண்டியதுதானே - மற்றவர்களை ஏன் படிக்க வைக்க வேண்டும்? என்று காங்கிரஸ் தலைவரான பார்ப்பனர் கூறியபடி டாக்டர் நாயர் எடுத்துக் கூறிக் கர்ச்சனை செய்தார்.
ஆச்சாரியார் என்ன செய்தார்?
இதுதான் பார்ப்பனர்களின் மனப்பான்மை. அதுவும் பார்ப்பன அறிவு ஜீவிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஆச்சாரியார் ராஜாஜி இருமுறை நமது மாநிலத்தில் முதல் அமைச்சராக வந்தார்.
முதல் முறை 1937இல் சென்னை மாகாண பிரதமராக வந்தபோது கிராமப்புறங்களில் இருந்த 2500-க்கும் மேற்பட்ட பள்ளிகளை இழுத்து மூடினார். கள் ஒழிப்பால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு கட்ட கல்விக் கூடங்களை மூடுவதாகக் கூறினார். கள் ஒழிப்பு என்பது வேறு ஒன்றும் அல்ல, கல்வி ஒழிப்பே என்றார் தந்தை பெரியார்.
1952இல் இரண்டாவது முறையாக முதல் அமைச்சராக வந்தபோதும் ஆறாயிரம் ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடி, மீதிப் பள்ளிகளிலும் அரை நேரம் கல்வி; மீதி அரை நேரம் அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
தந்தை பெரியாரும் திராவிடர் கழகமும், போர்க்கோலம் பூண்டனர். குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்காவிட்டால் ஆட்சியைவிட்டு வெளியேறு என்ற முழக்கம் வீதிகளில் எல்லாம் கேட்டது. ஆச்சாரியார் பதவியை விட்டு ஓடினார்.
திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் ராஜாஜி என்ன பேசினார் தெரியுமா?
சலவைத் தொழிலாளர்களே, உங்களுக்கு ஏன் படிப்பு?
நீங்கள் படிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளீர்கள். நீங்களெல்லாம் ஏன் படிக்க வேண்டும்? துணியைக் கிழிக்காமல் வெளுப்பது எப்படி என்று தெரிந்து கொண்டால் போதாதா என்று பேசினாரே என்றார் திராவிடர் கழகத் தலைவர். பார்ப்பனர்கள் பதவிக்கு வரும்பொழு தெல்லாம் சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற மனுதர்மச் சிந்தனை கோலோச்சுவதை தன் உரையின் மூலம் தமிழர் தலைவர் தெளிவுபடுத்தினார்.
புத்தரைப்பற்றி
இந்த அறக்கட்டளை புத்தர் கொள்கைகளையும், திராவிட இயக்கத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
சென்னை எழும்பூர் கென்னட்ஸ் லேன் என்னும் இடத்தில் உள்ள மகாபோதி சங்கத்தில் (15.5.1957) தந்தை பெரியார் உரையாற்றினார். அய்யா அவர்கள் உரையாற்றுவதற்கு முன்பாக நான் பேசினேன் - இரண்டாவது புத்தர் தந்தை பெரியார் என்று பேசினேன். எனக்கு அடுத்து உரையாற்றிய தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். நான் மட்டும் புத்தன் அல்ல; புத்தியைப் பயன்படுத்தும் எல்லோருமே புத்தன்தான்! (பலத்த கரவொலி) என்றாரே பார்க்கலாம் - இதனைத் தமிழர் தலைவர் சுவையாக எடுத்துக் கூறினார்.
ஜாதி ஒழிப்பு ஆன்மிக மறுப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமத்துவம் என்கிற கொள்கைக் கண்ணோட்டத்தில் புத்தரும், தந்தை பெரியார் அவர்களும் ஒரே சிந்தனை உடையவர்கள்தாம். 1958இல் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியையும் எடுத்துக் கூறினார்.
வடநாட்டில் சுற்றுப் பயணம் செய்தார் தந்தை பெரியார். டெல்லியில் தங்கி இருந்தபோது பத்திரிகையாளர் பர்டினாக்ஸ் என்பவர் தந்தை பெரியாரை சந்திக்க வந்தார். (பர்டினாக்ஸ் என்றால் வேறு யாருமல்லர் - ஏ. இராமசாமி அய்யங்கார்தான்) பெரியாரிடம் ஒரு கேள்வியை முன் வைத்தார்.
புத்தம் சரணம் கச்சாமி!
நீங்கள் மதம் கூடாது - ஒழிக என்கிறீர்கள். புத்தம் மதம் அல்லவா! அவர்கள் புத்தம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி என்கிறார்களே, இது சடங்குதானே என்று கேள்வி கேட்டார்.
தந்தை பெரியார் சிரித்துக் கொண்டே சொன்னார். புத்தம் சரணம் கச்சாமி என்றால் தலைவருக்குக் கட்டுப்பட்டு நடப்பேன். தம்மம் சரணம் என்றால் கொள்கையில் உறுதியாக இருப்பேன். சங்கம் சரணம் கச்சாமி என்றால் நான் இருக்கும் அமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் - இது எப்படி மதச் சிந்தனையாகும்?
இன்னும் சொல்லப் போனால் எல்லா அமைப்புகளுக்கும் இம்மூன்றும் முக்கியமானவை என்று கூறினார். வந்தவர் மிகவும் வியந்துபோனார்! முத்திரையாக தமிழர் தலைவர் சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.
அயர்ந்தால் மீண்டும் மனுதர்மம் - எச்சரிக்கை!
1916-இல் விடியல் தோன்றியது என்றாலும், இன்னும் அந்த விடியல் முழுப் பரிமாணத்தில் கிடைக்கவில்லை - முற்றுப் பெறவில்லை கொஞ்சம் அயர்ந்தால், எச்சரிக்கை இல்லாமல் இருந்தால் மீண்டும் இருள் சூழ்ந்து விடும்; மனுதர்மம் பறக்க ஆரம்பித்து விடும்.
புரட்சிக் கவிஞர் சொன்னாரே இருட்டறையில் உள்ளதடா உலகம் என்ற நிலைதான் ஏற்பட்டு விடும்.
விடியலுக்குத் தேவை வெளிச்சம்! அறிவு வெளிச்சம் பெற வேண்டும். சமுதாயம் வெளிச்சம் பெற வேண்டும் வெறும் அரசியல் வெளிச்சம் மட்டும் போதாது!
என்று குறிப்பிட்டார். பல்கலைக் கழகம் என்பதால் ஆசிரியர் பாடம் நடத்தினாரோ என்ற உணர்வோடுதான் எல்லோரும் கலைந்து சென்றனர்.
இயற்கைச் சீற்றம், மழை பெய்த நிலையிலும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பெரியார் அரங்கமும் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.viduthalai.periyar.org.in/20101121/news18.html

No comments:


weather counter Site Meter