அண்மையில் வெளிவந்து கொண்டிருக்கும் பள்ளி மாணவர்கள் கடத்தல் என்கிற செய்தி அதிர்ச்சி தரக்கூடியதாகும். கோவை, அதனையடுத்து சென்னை என்று ஒரு வார இடைவெளியில் குருதியை உறைய வைக்கும் செய்திகள் இவை.
சென்னையில் பணத்துக்காக ஒரு சிறுவனைக் கடத்தியிருக்கிறார்கள். அப்படிக் கடத்தியவர்கள் சாதாரணமானவர்கள் அல்லர்.
இருவரும் பொறியியல் பட்டதாரிகள். ஒருவன் பி.டெக் படித்து, லண்டன் சென்று எம்.பி.ஏ.,யும் படித்துள்ளான். இன்னொருவனும் பொறியியல் பட்டதாரி; சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளான்.
இவர்கள் படித்த படிப்பு இவர்களுக்கு நல்ல புத்தியைக் கொடுக்கவில்லை. நம் நாட்டுக் கல்வியின் தரமும், உருவாக்கமும் எந்தத் திசையில் இருக்கின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
நம் நாட்டு ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், திரைப்படங்களும் கூடுமானவரை மக்கள் மத்தியில் நச்சு விதைகளைத்தான் வாரி இறைத்து வருகின்றன.
சென்னையில் சிறுவனைக் கடத்தியவர்கள் வறுமை யின் காரணமாக பணம் பறிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையாகவும் கருத முடியாது. குறுக்கு வழியில் பெரிய அளவு பணத்தைப் பெறவேண்டும்; அதனைக் கொண்டு கேளிக்கைகளில் மூழ்கவேண்டும் என்ற எண்ணமே இதன் பின்னணியில் இருக்க முடியும்.
இது உலகம் முழுவதும் இருக்கக்கூடியதுதான். அமெரிக்காவில் பள்ளி மாணவர்கள் கைகளில்கூட துப்பாக்கி இருக்கிறது. சக மாணவர்களைச் சுட்டுக் கொன்று இருக்கிறான் என்று சமாதானம் சொல்லித் தப்பிக்க முடியாது.
அமெரிக்காவில் அவ்வாறு நடப்பதால், இந்தியாவில் நடப்பதில் தவறு இல்லை என்று கூறுவது ஒரு குற்றத் துக்குத் தங்கப் பூண் போடும் ஆபத்தான வேலையாகும்.
கல்வி கற்கும் பருவம் என்பதேகூட இப்பொழுது கேளிக்கையை சார்ந்ததாகவே ஆகிவிட்டது. விடுதிகளில் தங்குவது, கல்லூரிப் பேருந்துகளில் பயணம் செய்வது, கல்லூரிக்குச் செல்வது, மாலை நேரங்களில் ஊர் சுற்றுவது, கையில் பசை உள்ளவர்கள் இரவு நேரங்களில் பிரபல ஓட்டல்களில் கூத்தடிப்பது என்பதெல்லாமே ஒரு ஜாலிதான் என்கிற ஆபத்தான மனோபாவம் பேருரு எடுத்துவிட்டது.
ஒரு பேருந்தில் மாணவர்கள் கும்பலாக ஏறிவிட்டார்கள் என்றால், பொதுமக்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடிவதில்லை.
கல்லூரிப் பேருந்துகளில் பயணம் செய்வதாக இருந்தாலும்கூட ஒரே அரட்டைக் கச்சேரிதான், கூச்சல்தான்!
இத்தகைய போக்குகள் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் உள்ளவரை பள்ளிப் பிள்ளைகளைப் பணத்துக் காகக் கடத்துவது போன்ற கொடுமைகள் நடந்தேதான் தீரும்.
உல்லாசங்களுக்கும், கேளிக்கைகளுக்கும் ஒரு வரையறை கண்டிப்பாகத் தேவை. ஊடகங்களுக்கும் மூக்கணாங்கயிறு அவசியம்தான்.
ஆனந்தவிகடன் போன்ற பாரம்பரிய இதழ்கள்கூட பெரும்பாலும் சினிமாவுக்குத்தான் முக்கியத்துவம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அனேகமாக அனைத்து வார இதழ்களின் அட்டைப் படங்கள் எல்லாம் அரைகுறை உடை அணிந்த நடிகைகளின் வண்ண வண்ணப் படங்கள்தான்.
உள்ளுக்குள்ளும் அவர்களின் பேட்டிகள்தான்; அந்தரங்க சமாச்சாரங்கள்தான்.
பண்டிகை நாள்களில் காலைமுதல் இரவு வரை நடிகர், நடிகைகள் எல்லாம் அறிவு ஜீவிகள் என்ற நினைப்பில் அவர்களிடத்தில்தான் நேர்காணல்கள்.
கல்வித் திட்டத்திலும் புத்தாக்க உணர்வு, பொதுநலத் தொண்டு, உழைப்பின் அருமை, சமுதாய பொறுப்புணர்ச்சி என்கிற வகையில் மாணவர்கள் உருவாக்கப்படுவதற்கான பாடத் திட்டங்கள் கிடையாது.
விளையாட்டு மைதானங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. திரையரங்குகளோ நிறைந்து வழிகின்றன.
ஏடுகளை எடுத்துக்கொண்டாலும் பெரும்பாலும் குற்றச் செய்திகள்தான் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திகளாகி விடுகின்றன.
தடுக்கி விழுந்தவன் அரிவாள்மனையில் விழுவது போல்தான் நிலைமைகள் இருக்கின்றன.
குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதிலும் அளவிறந்த காலதாமதங்கள்! (அண்ணா நகர் குற்றவாளிகளை மிகத் திறமையாக விரைவாகப் பிடித்த சென்னை மாநகரக் காவல்துறை மிகவும் பாராட்டுக்குரியது) இவற்றை யெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு இளைஞர்களை உருப்பட வைக்க ஏதுவானவைகள்பற்றிச் சிந்திக்கப்பட வேண்டும். இதற்கான சிந்தனைப் பட்டறை (கூமே-கூயமே) ஒன்று உருவாக்கப்பட்டால்கூட நல்லதுதான்.
உடனே ஆன்மிகம் பரவவேண்டும். அது பரவினால் சரியாகிவிடும் என்று யாரும் கரடிவிட ஆசைப்பட வேண்டாம். ஆன்மிகக் குருக்களான சங்கராச்சாரிகள், நித்தியானந்தாக்கள், பரமானந்தாக்களின் கதைகளே நாற்றம் எடுத்துக் குடலைப் புரட்டுகின்றன.
பகுத்தறிவையும், ஒழுக்கத்தையும் ஊட்டக்கூடிய தன் முயற்சியை மேலோங்கச் செய்யக் கூடிய கல்வி முறைபற்றி சிந்திப்பது நல்லது.http://www.viduthalai.periyar.org.in/20101104/news05.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment