Pages

Search This Blog

Thursday, November 25, 2010

ஞானசூரியன்-5

ஞானசூரியன்

(ஆக்கம்: சுவாமி சிவானந்த சரஸ்வதி)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு

முதல் பதிப்பு : 1928

(19ஆம் பதிப்பு : 2008)


வேதம் அபவ்ருஹஷேயம் (புருஷனால் செய்யப் படாதது) ஆகையால், குற்றமற்றதும் மற்றொரு பிரமாண நூலின் உதவியின்றிச் சுதந்திரமாகவும் இருப்பது என்பது வைதிகர்களுடைய கொள்கை. மேலும், எல்லா நூற்களும், ஒழுக்கங்களும் இதற்குக் கீழ்ப்படிந்தே இருக்கவேண்டும் என்பதாகக் கவுதம ஸ்மிருதியின் முதலில் வேதோ தர்மமூலம் என்ற சூத்திரத்தால் முடிவு கூறப்பட்டிருக்கிறது. வேத வாக்கியத்திற்கு முரண்படாத ஸ்மிருதி வாக்கியமும், ஸ்மிருதிக்கு முரண்படாத ஒழுக்கங்களும் பிரமாணங் களாகும்.

தத்விதாம்ச ஸ்மரணசீலே என்னும் சூத்திரத்தால் இக்கருத்தைக் கவுதமர் வெளியிட்டுள்ளார். ஆனால், இரண்டு, ஸ்மிருதிவாக்கியங்கள் ஒரு விஷயத்தைக் குறித்துக் கூறும்போது, ஒன்றுக்கொன்று முரண்பட்டால், இரண்டு பிரமாணங்களே இத்தருணத்தில் விகற்பமே கொள்ளத் தக்கது. சுருக்கமாகக் கூறுங்கால், மேற்சொன்ன ஸம்ஹிதை, பிரமாணம், உபநிஷத்துகள் இவைகளடங்கிய வேதம் தானே பிரமாணமும், தரும நூல் வேதத்தைக் கருதிய பிரமாணமும் இவைகளுக்கு முரண்படாத ஒழுக்கங் களாகும். ஆனால், வேத ஸ்மிருதிகளை ஒத்துக் கொள்ளாமல், இந்நூற்களுக்கு விரோதமான வேறொரு வசனம் யுக்திக்குப் பொருத்தமாய் இருந்தாலும் பிரமாண மென்று சொல்வது பெரிய குற்றமாகும் என்பது:

ஸ்ருதி ஸ்துவேதோவிஜ்ஞேயோ

தர்ம சஸ்த்ரம்து வைஸம்ருதி

தேஸர் வார்த்தேஷ்வமீமாம்

ஸ்யேதாப்யாம் தர்மோவிநிச்சித:

யோவமன்யேததேமூலே ஹேது

சாஸ்தராஸ் ரயாந்நர;

ஸஸாது பிர்பஹிஷ்கார்

யோ நாஸ்திகோ வேதநிந்தக - மனு

பொருள்: வேதங்களும், ஸ்மிருதிகளும் தருமத்திற்கு இருப்பிடங்களா தலால் இவைகளை யுக்தி வாயிலாக எவனாவது கண்டிக்க முயன்றால், அத்தகைய வேத நிந்தகனான நாஸ்திகனை நல்லோர்கள் ஊரைவிட்டுத் துரத்திடவேண்டும் என்றும் இதனால் அறியக் கிடக்கின்றது.

இவ்வேதங்களிலும், ஸ்மிருதிகளிலும் சொல்லப்படுவது தான் ஹிந்து சமயம் இந்நூற்களில் சொல்லுகிறபடி ஒழுகுகின்ற மனிதன், எல்லாவகையிலும் முன்னேற்ற மடைவான் என்று இந்துக்கள் நம்புகிறார்கள். அதனால், வேதத்திற்கு அதிகாரமில்லாத தமிழ்மக்கள் தங்களை இந்துக்கள் என்று வெட்கமில்லாமல் கூறிக்கொண்டும் நினைத்துக் கொண்டும் இருந்தாலும், இவர்களுக்கு வேத ஸ்மிருதிகளில் சற்றேனும் உரிமையோ, அதிகாரமோ இல்லை. ஆயினும், பார்ப்பனர்களும், இவர்களை (பார்ப்பனல்லாதாரை) இந்துக்கள் என்று சொல்லுகிறார்களே எனின், இது தங்கள் சுயநலத்தைப் பாதுகாக்கும் பொருட்டுப் பார்ப்பனரல்லாதாரை என்றென்றைக்கும் அடிமைப் படுகுழியிலேயே அமிழ்த்தி வைக்க வேண்டுமென்ற மோசக்கருத்தை உள்ளடக்கிக் கொண்டு மயக்குகின்ற பசப்பு வார்த்தை என்றறிந்து கொள்க.

சமய நூற்கள் இம்மைக்குரிய உயர்வுக்கும், மோட்சத் திற்கும் வழிகாட்டிகளன்றோ? ஆனால், இந்துக்களின் மதநூல்களில் மிகப் பழமையான இருக்கு வேதத்தில் மறுமையைப் பற்றிக் கூறுகிற பாகம் மிகக் குறைவே. இயற்கைப் பொருள்களை மேன்மைப்படுத்தித் தேவர் களாகக் கூறுவதும், அங்ஙனம் புகழ்ந்து கூறப்பட்ட தேவர்களிடம் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவிப்பதும் இதிலடங்கியிருக்கின்றன. இத்தகைய தேவர்களுக்கு இருப்பிடம் சுவர்க்கமும், அதை ஆட்சி புரிபவன் இந்திரனு மாவான். இதை எழுதி வைத்தவர் விரும்புகிற பொருள் களைத் தேவர்களும் விரும்புகிறார்கள். இவர்கள் வெறுக்கிறவர்களைத் தேவர்களும் வெறுக்கிறார்கள். (இதனால், பார்ப்பனர்கள் தங்களையே தேவர்களாக நினைத்துள்ளார்கள் என்று எண்ண இடந்தருகிறது. பூசுரர் என்ற பெயரும் இதற்குச் சான்றாகும்.) அருந்தல், பொருந்தல் முதலியவைகளிலும், பொழுதைப் போக்கும் மற்ற விளையாட்டுகளிலும், இவர்களுக்கும் தேவர்களுக்கும் வேற்றுமை இல்லை. இறந்து போகிற புண்ணியவான்கள் உயிருடனிருக்கும்போது, இங்குத் தேவர்களுக்குக் கொடுத்த சோமம், மாமிசம் (கள்ளு, இறைச்சி) இவைகளின் உயர்வு தாழ்வுக்கேற்றவாறு அங்கும் (சுவர்க்கத்திலும்) சோமம், அமிர்தம், அழகிய பெண்கள் இவைகளை அனுபவிப் பார்கள். புண்ணியம் முடிந்தவுடன் பழையபடியே பூமியில் பிறக்கின்றார்கள். இதுவே இருக்கு வேதத்தில் சொல்லப்பட்ட இன்பநிலையின் சுருக்கம். இத்தோத்திரங்களைப் பார்க்கிற வர்களுக்கு, அக்காலத்தில் இருந்த கொடியவர்களின் எண்ணங்கள் நன்கு புலப்படும். இந்நாட்டின் பழைய குடிகளாகிய நம்மவர்களை, இவர்கள் பலவிதத்திலும் துன்புறுத்தி வந்ததும், தங்களுக்கு உதவி செய்யும்படி இந்திரனையும் ஏனைய தேவர்களையும், அழைத்திருப்பதும் ஆகிய செய்திகளே அத்தோத்திரங்களில் மலிந்து கிடக் கின்றன.

இருக்கு வேதத்திலுள்ள மந்திரங்களையே வேள்வி புரியுங் காலங்களில், ஓதவேண்டிய முறைப்படிக்குக் கோவை செய்ததே யஜுர் வேதமாகும். அன்றியும், அத்வர்யு என்கிற ஓர் இனத்தாரின் (யாகத்தில் சம்பந்தப் பட்ட புரோகிதர்களுள் ஒரு வகையினர்) உபயோகத்திற் குள்ள சில நியமங்களும் இதில் அடங்கி இருக்கின்றன. ஸாம என்ற சொல்லிற்கே பாட்டு என்று பொருள். இதில் உத்காதா என்கிற புரோகிதக் கூட்டத்தாரால் யாக காலங்களில் பாடும் பொருட்டுப் பல ரிக்கு மந்திரங்கள் தொகுக்கப்பட்டிருக் கின்றன.

இருக்கு வேதம் போலவே, பல தோத்திரங்களும் அடங்கிய 1அதர்வ ஸம்ஹிதையில் கர்ம சம்பந்தமில்லாத தனால், மற்ற மூன்று வேதங்களோடு சேராமல் தனித்து நிற்கிறது. வேதத்தின் பயன் சுவர்ககாதி சாதனங்களான யாகம் முதலியவைகளில் மனிதர்களை ஏவுவதும், கருமங்களைச் செய்யுங்கால், பொருளை நினைப்பூட்டு வதைக் கொண்டு மந்திரங்கள் பயனையுடையன வென்றும் வைதிகர்கள் எண்ணுகிறார்கள். பிரமாணக் கிரந்தங்கள் அனைத்தும் கருமங்கள் செய்யும் முறைகளைக் கூறு கின்றன. புரோகிதர்களின் சொத்தாகிய இந்நூல் கருமங் களை விளக்கிக் காட்டுவதேயாகும். இத்துடன் முடி வடையாது, அனந்தாவை வேதா (வேதங்கள் எண் ணிறந்தன) அவைகளில் இப்போது கிடைத்துள்ளவைகள் தவிர, மற்றவை கற்றலும், கற்பித்தலும் இன்றி அறியப்படாமற் போயின. இவைகளின் (பல வேதங்களின்) பொருட்களை அறிந்த ரிஷிகள், பிறருக்கும் பயன்படுமாறு அவைகளை வெளியிட்டார்கள். அவைகளே ஸ்மிருதிகள். ஆதலால், ஸ்மிருதிகள் வேதத்தின் உரை நூற்களாம். ஸ்மிருதிகளில் சொல்லப்பட்ட எல்லா விதிகளும் வேதத்தில் இல்லை. ஆயினும், வேத சம்பந்தங்களும் பிரமாணங் களுமாகையால், அவைகளைப் பின்பற்றியே மனிதன் ஒழுக வேண்டுமென்பது வைதிகர் (ஆரியர்)களின் முடிவு.

1. இஃது பிற்காலத்தியதெனக் கருதப்படுகிறது. காரணம் வேதமத்ரயீ என்ற வசனத்தாலென்க. -(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101124/news09.html

No comments:


weather counter Site Meter