Pages

Search This Blog

Friday, November 26, 2010

சு, சோ சாமிகளும்- குமூர்த்திகளும்!

மத்திய அமைச்சராக இருந்த ஆ. இராசா அவர்கள் பதவி விலகியதுபற்றி எழுத வந்த திருவாளர் சோ ராமசாமி, இராசா பதவி விலகலோடு இந்தப் பிரச்சினை முடிந்துவிடவில்லையாம்; இதன் பின்னணியில் வேறு யாரோ இருக்கிறார்கள் என்று எழுதுகிறார் (துக்ளக், 1.12.2010).

ஸ்பெக்ட்ரம் என்ற பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து விடக்கூடாது. இதனை நீட்டிக் கொண்டே போகவேண்டும்; தமிழ்நாடு தேர்தல்வரை வளர்த்துக் கொண்டே போகவேண்டும்.

செத்துப் போனதற்குப் பிறகுகூட திதி, திவசம் என்று சுரண்டும் கூட்டத்தைச் சேர்ந்தவர் அல்லவா! அந்தப் புத்தியில் அவர் எழுதியிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் பிரச்சினை வரும்போது அது ஆ.இராசா காலத்தில் மட்டும் தொடங்கப்பட்டதில்லை. பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரமோத் மகாஜன், அருண்ஷோரிவரை இந்தத் துறையின் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்களே - அவர்கள் காலத்தில் என்ன நடந்தது என்பதையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமே - அதனால், அதுபற்றியெல்லாம் அவாள் மூச்சுவிடமாட்டார்களே!

இதே தலையங்கப் பகுதி பக்கத்தில் எச்சரிக்கை-1 எனும் தலைப்பில் பெட்டிச் செய்தி ஒன்றும் துக்ளக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

கருநாடகத்தில் எடியூரப்பா தன் மகன்களுக்கு அரசு நிலங்களைத் தருவதில் சலுகை காட்டியிருக் கிறார் - என்ற புகாருக்கு, அவர் அளிக்கிற பதில்கள் திருப்தியாக இல்லை. அவர் பதவியில் தொடர்வது, பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல. இந்த நில முறைகேடு காரணமாக, அகில இந்திய அளவில் ஊழலை எதிர்ப்பதில் பா.ஜ.க. காட்டுகிற முனைப்புகூட பாதிக்கப்படும். கருநாடகாவில் பா.ஜ.க. தலைமை தலையிடவேண்டும் என்பதுதான் துக்ளக் வெளியிட்டுள்ள பெட்டிச் செய்தியாகும்.

பா.ஜ.க.வுக்குச் சொல்லும்போது வெறும் புத்திமதி; தி.மு.க.வுக்குச் சொல்லும்பொழுது மட்டும் குற்றச்சாற்று.

இதற்குப் பெயர்தான் பார்ப்பனர்களுக்கே உரித்தான மனுதர்மப் புத்தி என்பது. இந்தத் தலையங்கத்தில் மனுதர்மத்திலிருந்து சுலோகங்களையும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

எத்தனையாவது அத்தியாயம்? எத்தனையாவது சுலோகம்? என்றெல்லாம் கிடையாது. எப்பொழுதுமே அப்படியெல்லாம் ஆதாரப்பூர்வமாக வெளியிடவேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதில்லை. ஏதோ குத்து மதிப்பில் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா!

அரசன் செயலற்று இருக்கும்போது, அவன் இருள் (கலியுகம்) விழிப்புள்ளவனாக இருக்கும்போது அவன் தெளிவு (துவாபரயுகம்) ஒரு நற்செயலில் முனைகிறபோது அவன் மேன்மை (த்ரேதாயுகம்) அறச்செயல் புரிவதற்கு முனைந்து இயங்குகிறபோது அவன் சிறப்பு (பொற் காலமாகிய க்ருதயுகம்) என்று மனுஸ்மிருதி கூறுகிறது என்று கூறுகிறார்.

இந்த யுகங்கள் எல்லாம் இருக்கின்றனவா? இவற்றிற்கு ஆதாரங்கள் என்ன என்று கேட்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த யுகங்கள் எல்லாம் ஒரு யுகம் போய் அடுத்த யுகம் வரவேண்டும். சோ சொல்லுவதைப் பார்த்தால் கலியுகம் பூராவும் ஆட்சி செய்யும் அரசன் இருள்தானா? அதில் மேன்மையானவன் இருக்கவே முடியாதா? க்ருதயுகம் தான் பொற்காலம் - அதுதான் சிறப்பு என்றால், இந்த யுகத்தில் ஆளும் அரசன் எவனும் தவறே செய்யாதவனா?

அரசன் நல்லவனாக இருப்பதற்கும், கெட்டவனாக இருப்பதற்கும் அவன் பொறுப்பல்ல - அந்த யுகம்தான் பொறுப்பா?

இப்படி எழுதும் பைத்தியங்கள்தான் அவாள் பாஷையில் அறிவு ஜீவிகள்! வாய்விட்டுச் சிரிக்கக் கூடியவைகளா இவை?

இந்தத் தலையங்கத்தில் இடுக்கோடு இடுக்காக தங்களின் அபிமானி - இனமானியான ஜெயலலிதாவை ஒரு தூக்குத் தூக்கி விடுகிறார்.

ஜெயலலிதா, மத்திய அரசுக்கு அளிக்க முன்வந்த ஆதரவுக்குப் பிறகு இந்தக் கூட்டணி தர்ம புருடா எடுபடாது என்பது எல்லோருக்குமே தெரியும் என்று எழுதுகிறார்.

ஜெயலலிதாவைப்பற்றி தெரிந்தவர்களுக்கு, அவரின் வாக்கு நாணயம் என்ன என்பது எல்லோருக்கும் தெரியுமே! வெகுதூரம் போய் விசாரிக்கவேண்டாம். சோவின் அபிமான புருஷரான அடல்பிஹாரி வாஜ்பேயியைக் கேட்டாலே போதுமே. தான் அமைதியிழந்து இருந்த காலம் ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்திருந்த காலம்தான் என்று பேட்டி கொடுத்தாரே - வாஜ்பேயி!

ஜெயலலிதா மூக்கறுபட்டுப் போனார் என்பதைத் தலைகீழாகப் புரட்டுகிறார்.

ஏதோ ஜெயலலிதா பேட்டி கொடுத்துதான் இராசா வெளியேற்றப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை உண்டாக்கி அரசியலில் ஜெயலலிதாவுக்கு மரியாதையை ஏற்படுத்த முயலும் தந்திரம்தான் இதில் வெளிப்படுகிறது.

சு.சாமிகளும், சோ சாமிகளும், கு மூர்த்திகளும் எந்த உணர்வோடு அலைகிறார்கள் என்பதைத் தமிழ்மண் அறியும்.

காரணம், இது தந்தை பெரியார் பிறந்த இனமானம் செழித்த மண் - எச்சரிக்கை!
http://www.viduthalai.periyar.org.in/20101126/news03.html

No comments:


weather counter Site Meter