Pages

Search This Blog

Saturday, November 6, 2010

நாத்திகம் பரவுதல் எப்படி?

கடவுள் இல்லை என்பதை உணர்வது எப்படி?

அறியாமை என்ற இருள் அகல்வது எப்பொழுது?மதத்தின் பயனாய் ஏற்பட்ட முட்டாள்தனத்தின் காரணமாய் கோவிலின் பேரால் பாழாகின்ற பணம் இவ்வளவு என்று உங்களுக்குத் தெரியாதா? பணம் சேரச்சேர மண்ணால் கட்டின கோவிலை இடித்து கல்லால் கட்டுகின்றான். பிறகு சலவைக் கல்லால் கட்டுகிறான், சித்திர வேலைகள் செய்கிறான், தங்க ஓடு போட்டுகோவில் கூரையை வேய்கின்றான். இந்த மூட மக்களைக் கொண்ட நாட்டிற்குப் பணம் மிச்சமாவதால் என்ன பயன்? இந்த சொற்பொழிவினை திருச்செங்கோட்டில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஆற்றினார். (06.09.1931 குடிஅரசு இதழிலிருந்து எடுக்கப்பட்டது).

ஆம். கடவுள், கோயில் பற்றி நமது நாட்டில் உள்ள மக்கள் எவ்வளவு மூட நம்பிக்கை உடையவர்களாக உள்ளார்கள் - இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நன்றாக உணரப்படுகிறது. தந்தை பெரியார் தொலைநோக்குப் பார்வையுடன் கூறிய பொன்மொழிகளை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். திருப்பதி கோயிலுக்கு வைரக் கிரீடம், மேலும் பொன்னாலான நகைகள் இன்னும் சாற்றப்பட்டு வருகின்றன. கோயில்களில் மக்கள் பணத்தை வாரி இறைக்கின்றனர். ஏழை மக்கள் கூட, வேண்டுதல் என்று நிறைய பணம் செலவழிக்கிறார்கள். மண்சோறு உண்ணுதல் என்றும், அங்கப் பிரதட்சணம் என்றும் பல வகையான வேண்டுதல்கள் செய்து கொண்டு, அங்கே பூணூல் போட்ட பார்ப்பன பூசாரியிடம் பூ போட்டுப் பார்த்துச் சொல்லுங்கள் சாமி என்று கேட்கும் பெண்கள் கூட்டத்தை இன்றும் நாம் காண்கிறோம். முட்டாள் தனத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது! பார்ப்பானுக்குக் கொடுத்தால்தான் புண்ணியம் என்று நினைத்து, இன்றும் நமது முன்னோர்களுக்கு திதி என்ற பெயரில் அள்ளி அள்ளிக் கொடுக்கின்ற மக்களின் அறிவின்மை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது! சொர்க்கம், நரகம் என்றெல்லாம் கட்டுக் கதைகளை சிறிய வயதிலேயே குழந்தைகளுக்குச் சிலர் கூறி பயமுறுத்தி வருகிறார்கள். தேர்வுகளுக்குப் போகும்முன்னர் சாமி கும்பிடுவது, பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது, வெற்றி பெற்றால் உண்டியலை நிரப்புவது போன்ற மூட நம்பிக்கைகளை நாம் தினசரி காண்கிறோம்! முயற்சி செய்து படித்தால் முன்னேற முடியும் என்பதை விடுத்து, எதற்கெடுத்தாலும் சாமி! சாமி!! என்று வேண்டுதல் செய்வதை நிறுத்தினால்தான் நாடு உருப்படும். பகுத்தறிவாளர்கள் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் கேட்கவேண்டுமல்லவா? பெற்றோர்கள்தான் தமது பிள்ளைகளுக்கு பகுத்தறிவை எடுத்துச் சொல்ல வேண்டும். நமது அறிவு ஆசான் தந்தை பெரியாரின் நூல்களைப் படிக்கச் சொல்ல வேண்டும். கடவுள் ஒரு பொய்மை என்று அறிஞர், ஆசான்(அண்மையில் இயற்கை எய்தியவர்) எழுதிய நூலைக் கொடுத்து இளைஞர்களைப் படிக்கச் சொல்ல வேண்டும். பகுத்தறிவுக்குச் சிறிதும் ஒவ்வாத கடவுள் நம்பிக்கையை ஒழிக்க வேண்டும்! புராண இதிகாசப் புரட்டுகளை நாள்தோறும் விடுதலை நாளேட்டில் ஒற்றைப் பத்தியில் எழுதி வருகிறார் நமது மானமிகு மயிலாடன் அவர்கள்! அவற்றைப் படிக்க வேண்டும். கோயில்களில் நடக்கும் கொடுமைகளை, தேவநாதன் என்ற பார்ப்பன பூஜாரியின் காமக் களியாட்டங்களைப் பற்றி அவ்வப்போது நமது மானமிகு முனைவர் வீரமணி அவர்கள் பொதுக் கூட்டங்களில் எடுத்துச் சொல்லுகிறாரே! அதையாவது புரிந்து கொண்டு கோயில்களுக்குச் செல்வதைப் பெண்மணிகள் நிறுத்துவார்களா? பிள்ளையார் சிலைக்கு முன் போய் நின்று தோப்புக் கரணம் போடுவது, இரண்டு கன்னங்களிலும் கைகளால் தப்புபோல் போட்டுக் கொள்வது, தேங்காய் உடைத்தல் இவை போன்ற மூட நம்பிக்கைகளை ஒழித்து, இளைஞர் முன்னேற அறிஞர்களின் நூல்கள்தான் பயன் தருவன என நாம் எண்ணுகிறோம்.

வள்ளுவர் தம் திருக்குறள் என்ற ஒப்பற்ற உலகப் பொது மறையில் ஆதி பகவன் என்ற சொல்லுக்கு அருமையான விளக்கம் கூற வந்த நமது பகுத்தறிவாளர் நாவலர் மானமிகு நெடுஞ்செழியன் அவர்கள், ஆதி பகவன் என்றால் ஆவதற்குக் காரணமான அறிவன் என்று பொருள் படும்; பகவன் என்பதற்கு மனித சமுதாயம் ஆக்கம் பெறக் காரணமாக அமையும் அறிவன், ஆசிரியர், அருகன், புத்தன் போன்ற பொருள்கள் உணர்த்தப்படுகின்றன என்றும், எழுத்துக்கள் எல்லாம் எவ்வாறு அறிவுடைய மனித முயற்சியால் உண்டானவையோ, அவ்வாறே, செயற்கை உலகியலின் சிறப்புக்களும் அறிவுடைய மனித முயற்சியால் உண்டானவையாகும் என்பதை முதல் குறளான அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்று உணர்த்தப்படுவதாகும் என்று நாவலர் தம் உரையில் கூறுகிறார். நாவலர் அவர்களின் திருக்குறள் பொழிப்புரை நூல்களை அன்றாடம் படித்துப் பயன் பெற இளைஞர் சமுதாயம் முன்வரவேண்டும். தினம் ஒரு குறள்என்று படித்தால் கூடப் போதுமானது. திருக்குறளில் வள்ளுவர் இயற்கையான நிகழ்வுக்கோ, உலகியல் நடைமுறைக்கோ, பகுத்து அறிந்து பார்க்கும் நெறிமுறைக்கோ, உண்மைக்கோ முரண்பாடாக விளங்கும் எந்த ஒரு கருத்துக்கும் அவர் எந்த ஓரிடத்திலும் ஆதரவு அளிக்கவே இல்லை. மனித வாழ்க்கைக்கு எவ்வகையிலும் பயன்பட்டு வராத சமயக் கோட்பாடுகளும், வடமொழியாளரின் கற்பனைப் புராணக் கதைகளுக்கும் , அறிவாராய்ச்சிக்கு அறவே பொருந்தி வராத கற்பனை கடவுள் கொள்கைகளுக்கும், தமிழர் பண்பாட்டிற்கு ஒத்து வராத சாத்திர சம்பிரதாயங்களுக்கும், வடமொழியாளரின் சுருதிகள் - சுமிருதிகள் - வேதங்கள் போன்றவற்றிற்கு வள்ளுவப் பெருந்தகையாளர் மதிப்பு அளிக்கவே இல்லை என்று டாக்டர் நாவலர் அவர்கள் தமது திருக்குறள் உரையில் கூறியுள்ளார்கள். நயம் பட நன்றாக நமது தமிழ் மக்கள் மனதில் பதியும்படி எடுத்துக் கூறியுள்ளார்கள் என்பது மிகவும் அறிவு பூர்வமாக உள்ள விளக்கமாக உள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். தீபாவளி, சரசுவதி பூஜை, விஜயதசமி, ஆயுதபூஜை, நவராத்திரி, பிள்ளையார் பிறந்த நாள், ராமநவமி என்று ஆண்டு முழுவதும் பண்டிகைகள் என்று திராவிடர் இனத்தைக் கெடுத்தது இந்தப் பார்ப்பனக் கூட்டமே. புதிய உடைகள், பட்டாசு வெடிக்கும் ஆசை போன்றவற்றில் ஆவல் கொண்டு தமிழர்களும், பொங்கல் ஒன்றுதான் நமது விழா என்பதை மறந்துவிட்டு பார்ப்பனரோடு சேர்ந்து கொண்டு கூத்தடிப்பதை நிறுத்த வேண்டும். எப்படி இவை சாத்தியம்? இளைஞர்தாம் வழி காட்ட வேண்டும். பெற்றோரும் அறிவுரை கூற வேண்டும். அறிஞர்களின் நூல்களைப் படிக்க வேண்டும். எல்லாம் அவன் செயல் என்று கூறிக் கொண்டு வெட்டி வேதாந்தம் பேசிக் கொண்டு திரியக் கூடாது. வான வெளிக்கு போகின்ற இந்த விஞ்ஞான உலகில் கடவுளாவது, பக்தியாவது? தொலை நோக்காளரான தந்தை பெரியார் பாதையே சரியான பாதை. அவர் வழியே திராவிட மக்களின் வழி. அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவோமாக!

பெரியார் வாழ்க! அவர் கொள்கைகளை இன்று வரை பின்பற்றி வாழ்ந்து வரும் மானமிகு விடுதலை ஆசிரியர், அவருடைய தோழர்கள், தொண்டர்கள் யாவரும் பல்லாண்டு, பலப்பல தொண்டுகள் செய்து வாழ்ந்திடுக!

ஒரு பகுத்தறிவுவாதி

விடுதலை வாசகர்

1 comment:

yasir said...

திருக்குறளில் வரும் "திங்களை பாம்பு கொண்டற்று","பெய்யென பெய்யும் மழை" போன்ற வரிகள் அறிவியலுக்கு முரணாகவும் மூடநம்பிக்கை குறிப்பதாக உள்ளதாக பலர் எழுதி வருகிறார்கள் . முக்கியமாக ஆன்மீகவாதிகள் இதைத் தான் சுட்டிக்காண்பித்து வருகிறார்கள் இக் கருத்து உண்மையா?


weather counter Site Meter