ஞானசூரியன் என்ற புத்தகம் இப்பொழுது தமிழ் நாட்டு மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. 1928 இல் தந்தை பெரியார் அவர்களால் வெளியிடப்பட்ட இந்த நூல் 19 ஆம் பதிப்பாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் 2008 இல் வெளிவந்தது.
இந்த நூலை எழுதியவர் ஆன்மிகவாதியான சுவாமி தயானந்த சரசுவதி என்பவர். மத விசாரணை எனும் புகழ்பெற்ற இன்னொரு நூலினையும் எழுதியுள்ளார்.
பார்ப்பனீயம் என்னும் கொடிய நச்சுப் பாம்பு எத்தகையது? அவர்களால் ஏற்றிப் போற்றப்படும் வேதம், உபநிஷத்துகள், மனுதர்மம், இராமாயணம், கீதை போன்றவை எப்படியெல்லாம் பிராமண ஆதிக்கத்தை வலுவாக நிலை நிறுத்தக் கூடியவை; அதேநேரத்தில் பெரும்பான்மை இன மக்களை சூத்திரர்கள் என்று கூறி, அவர்களை எப்படியெல்லாம் உள ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் ஒடுக்கியது என்பதை ஏனோதானோ என்ற முறையில் அல்ல; பார்ப்பனர்களின் ஆதார சுருதிகளான அவற்றிலிருந்து எடுத்துக்காட்டி நிரூபித்துள்ளார்.
அதை ஒருமுறை படித்தால் போதும் மரக்கட்டை தமிழன்கூட மானமிகு மனிதனாக எகிறிக் குதித்து எழுந்துவிடுவான்.
பொறாமையின்றி மூன்று வருணத்தாருக்கும் பணிவிடை செய்தலே சூத்திரனுக்குத் தொழில் என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். - மனுதர்மம்.
சூத்திரனிடத்தில் ஏதேனும் பொருளிருந்தால், அதைப் பிராமணன் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில், அவன் அடிமையாதலால், அவனுக்கென்று பொருள் சிறிதேனு மில்லை. - மனுதர்மம்
எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாயிருக்கின்றானோ, அந்த நாடு சேற்றில் முழுகின பசுவைப் போலப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அழிந்து போகும். எந்த இடம் சூத்திரர்களாலும், வேதத்தை நம்பாதவர்களாலும் நிறைந்து வேதியர்கள் இல்லாததாலும் இருக்கிறதோ - அந்த நாடு பஞ்சம், நோய் முதலிய கேடுகளால் விரைவில் அழிந்துபோகும்.
பிறவியினாலேனும் பிராமண குலத்தில் பிறந்த ஒருவனை அரசன் மந்திரியாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அறிவில் மிகுந்தவனாயினும் சூத்திரன் ஒருபோதும் அரச சபைக்கு உரியவனாகமாட்டான்.
இதுபோன்ற ஏராளமான எடுத்துக்காட்டுகளை மனுவிலிருந்து ஞானசூரியனில் எடுத்துக்காட்டப்பட் டுள்ளன.
இந்தக் கண்ணோட்டத்தைத் தெரிந்துகொண்டு இருப்பவர்களால் மட்டுமே, இன்றைய தினம் பார்ப்பன சக்திகளும், பார்ப்பனப் பத்திரிகைகளும், ஊடகங்களும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று பஞ்சகச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு புறப்பட்டுள்ளதன் தாத்பரியத்திற்கான அர்த்தம் புரியும்.
இதனைப் புரிந்துகொண்டவர் என்கிற முறையில்தான் முதலமைச்சர் மானமிகு கலைஞர் அவர்கள் இது நாலாந்தர மக்களுக்கான சூத்திரர்களின் அரசு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே (28.7.1971) கம்பீரமாக அறிவித்தார்.
பார்ப்பன வட்டாரம் தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதற்கு இதுதான் காரணம். மத்திய அமைச்சராக இருந்த மானமிகு ஆ. இராசா அவர்களை அந்தப் பதவியிலிருந்து விலகச் செய் வதற்குக் காரணமாக இருந்து வந்ததோடு, அடுத்த கட்டமாகவும் ஆவேசத்தில் நிர்வாணமாகக் கூத்தாடு வதற்கும் இந்தப் பார்வையே காரணமாகும்.
நேற்று (21.11.2010) ஈரோட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியிலும் சரி, பொதுக்கூட்டத்திலும் சரி, தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் எடுத்து விளக்கியபோது, மக்கள் மத்தியிலே பலத்த கரவொலி அடங்கிட வெகுநேரமாயிற்று.
முதலமைச்சர் கலைஞர் அவர்கள், ஞானசூரியன்பற்றி அறிமுகம் செய்து அதனை ஒவ்வொரு தமிழ் மகனும் கண்டிப்பாக படிக்கவேண்டும் என்று முரசொலியில் (20.11.2010) முதல் பக்கத்திலேயே எழுதியுள்ளார்.
ஈரோட்டில் ஒரு திருமண நிகழ்ச்சியிலேயே நூற்றுக் கணக்கான நூல்கள் விற்றன. மணமக்களுக்கே (தனமேநீ - ச. வீரமணி) ஞானசூரியன் நூலை திருமணப் பரிசாகத் தமிழர் தலைவர் அளித்தார்.
12,000 ரூபாய்க்கு ஞானசூரியன் நூல் ஈரோட்டில் விற்றுத் தீர்ந்தது என்பது சாதாரணமானதல்ல.
தமிழ்நாடு முழுவதும் இந்நூலினைப் பரப்புவதற்கான திட்டமும் உருவாகிவிட்டது. தமிழர் தலைவர் அவர்களின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி டிசம்பர் 6 இல் அந்தத் தொகையை அளிப்பது என்றும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
ஜெயலலிதா அவர்கள் ஒருமுறை முதல்வர் கலைஞரைப் பரம்பரைப் பகைவர் என்றும், பரம்பரை யுத்தம் என்றும் குறிப்பிட்டதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொண்டால், நாட்டில் நடைபெறுவது வெறும் அரசியல் போராட்டமல்ல - ஆரியர் - திராவிடர் போராட்டமே என்பதை உணரலாம்.
2011 இல் நடக்க இருக்கும் தேர்தல் அதனை யொட்டிதான் இருக்கும். தி.மு.க.வின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் மாண்புமிகு க. அன்பழகன் அவர்கள் சென்னைப் பெரியார் திடலில் 20.11.2010 மாலை நடைபெற்ற நீதிக்கட்சியின் 95 ஆம் ஆண்டு விழாவில் இதுகுறித்து குறிப்பிட்டதையும் கவனத்திலே கொள்ள வேண்டும். ஞானசூன்யத்தை ஒழிக்க ஞான சூரியனைப் படியுங்கள்! படியுங்கள்!!
http://www.viduthalai.periyar.org.in/20101122/news07.html
No comments:
Post a Comment